விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து
விகடன் பிரசுரம் வெளியிட்ட
அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து...
சாம்ராஜ்ய காலம் முதல் நாயக்கர் காலம் பிறகு அங்கிருந்து இப்பொழுதுவரை என இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் நடந்த மாற்றங்கள் பற்றிய பெரிய ஆய்வை எழுதியிருக்கிறார் தோழர் அருணன்.
மத நல்லிணக்கம் பேணுவோர், நாத்திகம் பேணுவோர் தவிர மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.
முகலாயர்கள் ஆண்டபொழுது முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமானது தான்.
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கிறித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது தான்.
இரு மத ஆட்சியாளர்களும் வைதீக நெறி மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அரவணைத்திருக்கின்றனர்.
சைவ வைணவ என்ற வைதீக நெறி மதங்களைப் பின்பற்றியோரை ஹிந்து என அழைத்தவர்கள் முஸ்லீம்கள் என்பது போன்ற தரவுகளை அருணன் வழங்கியிருக்கிறார்.
அந்த கால இஸ்லாமியர் எண்ணிக்கை, கிறித்தவர்களின் எண்ணிக்கை என புள்ளிவிவரத்துடன் வழங்குவது அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் அதிகமாக நடக்கவில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்.
கிறித்தவ மிஷனரிகள் கல்வி தானம், மருத்துவதானம் செய்ததற்குக் கைமாறாகக் கண்டிப்பான மதமாற்றத்தை முன்மொழியவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்.
முதல் ஆலய நுழைவு மதுரை மீனாட்சி கோயிலுக்குள் நிகழ்ந்த நிகழ்வையொட்டி அருணன் ஏற்கனவே "கடம்பவனம்" என்ற நாவலை எழுதியிருக்கிறார். அந்தச் சம்பவத்தை இங்கும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்கு இஸ்லாமியர்களின் தியாகம் குறிப்பாக மதுரை அருகே அபிராமத்தைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா 1943ல் நேதாஜியின் ஆஸாத் ஹிந்த் சர்க்கார் க்கு அப்பொழுதே இரண்டுலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் தந்திருக்கிறார் போன்ற தரவுகளும்,
காயிதேமில்லத் போன்றோரின் உழைப்பையும் ,
கிறித்தவர்களின் சுதந்திர போராட்டங்களையும் குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜார்ஜ் ஜோசப் காங்கிரஸின் ஹரிஜன சேவா இயக்கத்தில் பங்குகொண்டதையும், காந்தியின் ஆலய நுழைவு போராட்டத்திலும் குறிப்பாக வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்க பெரியாரை அழைத்ததையும்,
ஜேஸி குமரப்பா அவர்களது உழைப்பையும் அருணன் இந்தத் தொகுப்பில் குறிப்பிடுவதன் மூலம், இந்தியாவின் சுதந்திரம் அனைத்து மதத்தினராலும் ஒரு சேர இணைந்து உழைத்து போராடி பெற்றது என்பதை உணரவைக்கிறார். இந்தியா இந்துக்களுக்கானது என்ற இந்து மத வெறியாளர்களின் பொய்பிரச்சாரத்தை அருணனின் ஆய்வுகளும் அவர் எடுத்துரைக்கும் உண்மைகளும் தவிடுபொடியாக்குகின்றன.
இந்தத் தொகுப்பின் கடைசி பாகங்கள் நீதிக்கட்சியிலிருந்து காங்கிரஸ், காமராசர், இந்திரா காந்தி, அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, விபிசிங், மோடி என இப்போதுள்ள காஷ்மீர், சிஏஏ, என்பி ஆர் என்பது வரை பேசுவது சமகால அரசியல் சூழலில் மதம் எவ்வாறு போகப்பொருளாக மடைமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அருணன் எழுதிச்செல்கிறார்.
பொதுவாக வரலாறும், மனிதர்கள் கடந்து வந்த அனுபவங்களும் ஒன்றோடன்று இணைந்தவை. எவ்வளவு வன்மங்கள் சூழ்ந்தாலும் பொய்கள் கட்டவிழ்க்கப்பட்டாலும் உண்மையும் வரலாறும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
வரலாறு தெரியாமல் உண்மைகளை உணர்ந்து கொள்ளாமல் தன் மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் அறியாமைகொண்டவர்களுக்கு நடுவில் வாழும் சூழலில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தம் வரலாற்றையும் தாம் வாழ்ந்த வாழ்வியலையும் மதங்களைக் கடந்த தமிழர் பண்பாட்டையும் படித்து அதை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் இந்தச் சூழலில் , அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள்" புத்தகம் முக்கியமானது.
அனைவரும் வாசிக்கலாம்.
"தமிழரின் சமயங்கள்"
மதங்களைத் தாண்டியது.
பழனிக்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக