இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கைகளைக் கொடேன்

கைகளைக் கொடேன்.. ஏன் இப்பொழுது எல்லாம் உன் கைகளைத் தர மறுக்கிறாய்... தூரங்களைத் தூரமாகவே வைத்துக்கொள்ளும் உன் இயல்பை மாற்றிக்கொள்ள நீ கைகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும்.. சிறு தாவரங்களுக்கு அப்பால் வளர்ந்த ஒருவனின் நுனிவிரலில் நரம்புமுடிச்சுத் தூண்டல்களை உணர்ப்பிக்க நீ கைகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும்.. கைகளைப் பற்றிக்கொண்ட முந்தைய தருணத்தில் ரேகைகளில் ஒன்று இன்னொருவரின் கைகளுக்குப் புலம் பெயர்ந்திருக்கலாம்... ஞாபகங்களை  மீட்டெடுப்பதைப் போல ரேகைகளுக்கென ஒரு வலசை செய்து கொடுக்கலாம்.... உனக்கு ஒரு மழையை ஞாபகப்படுத்த ஒரு பாடல்  தேவைப்படலாம்.. ஒரு சிறுதாவரம் போதுமானதாயிருக்கலாம்... உன் கைப்பிடி அளவு மட்டுமே எனக்கு இருக்கிறது.. கைகளைப் பற்றுதல் என்பது பெருஞ்சத்தத்திற்கு அடைக்கலம் நாடும் ஒரு நாய்க்குட்டியின் பாதுகாப்பு உணர்வு... கைகளிலிலிருந்து விடுபட்ட நூலைப் பிடித்த மாத்திரத்தில் வானை மீட்டெடுக்கும் பட்டமாகுதல் அது... "கூடவே இரு" என்பதை பத்தாயிரம் முறை சொல்வதற்கு  ஒரு முறை கைகளைப் பற்

'கண்ணே கலைமானே' 2.0

'கண்ணே கலைமானே' பாடலை ஒலிபரப்புவதாக வானொலியில் சொல்கிறார்கள். மழையில் நனைவதைவிட மழை ஞாபகங்கள் உன்மத்தமாயிருப்பதைப் போலவே ஜேசுதாஸ் பாடுகிறார்.. 'ஆண்டவனிடம் இதைத் தான் கேட்கிறேன்' எனத் தெருவில் போகும் ஒரு வாலிபன் குரல் கேவி அழுகிறான்... யாருமற்ற வீதிகளில் நிறைந்தழுகும் உருபனியாகவே வழிகிறது 'உனக்கே உயிரானேன்' என்ற குரல்... யாருக்காகவோ யாராவது ஒருவர் அழும் இந்தப் பிரபஞ்சத்தில் ஜேசுதாஸ்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்... நெடிய ப்ரார்த்தனைகளின் முடிவில் சொட்டிக்கொள்ளும் வாதையின் கண்ணீரை ஒரு குரல் இப்படித்தான் தழுவிச் செல்லும்... பெரும் மன்றாடல்களை இறைஞ்சும் கூப்பிய கைகளைப் பிடித்தபடி அந்தக் குரல் ஆசுவாசம் தருகிறது... நேற்றைக்குப் பிறந்த குழந்தையின் உள்ளங்கைகளுக்குள் அகப்பட்ட வெம்மையானப் பிடிப்பாய் பிரவாகம் எடுக்கிறது குரலைத் தாங்கும் ப்ரியமானவர்களின் ஞாபகம்... வானொலியில் பாடல் முடிந்தவுடன் இரக்கங்களை இரவலாகக் கேட்கும் ஒவ்வொருவரின் குரலிலும் ஜேசுதாஸ்கள் அழ ஆரம்பிக்கிறார்கள்... 27/05/2020 11.15

கண்ணே கலைமானே

ஜேசுதாஸின் குரலில் தான் 'கண்ணே கலைமானே' என்றபடி ஒரு மௌனத்தின் பிரவாகத்தில் நெருங்கியிருந்தேன்.. அந்திப்பகல் உன்னைப் பார்ப்பதையும் ஆண்டவனிடம் அதைக் கேட்பதையும் கூட அவரும் அப்படியேதான் மொழிபெயர்த்திருந்தார்... வார்த்தைகளற்றவனின் அமைதியையும் ஏதுமற்றவனின் அமைதியையும்.. கிளிப்பேடுகளின் பாரத்தையும் இழக்க எத்தனிக்காத ஒருவனின் மன்றாடலாகவே ஜேசுதாஸ் உருமாற்றியிருந்தார்.. காதல் கொண்டதையும் கனவை வளர்த்ததையும் ப்ரியங்களில் நான் உயிரானதைப் போலவே எந்நாளும் எனை நீ மறவாதே என இறைஞ்சுகையில் ஜேசுதாஸ் என் குரலில் பாடுவதாகவே கேட்கிறது... நீயில்லாமல் எது நிம்மதியெனச் சொல்கையில் மட்டும் குரல்களுக்கப்பாலான உணர்வெளியில் யாரோ ஒருவர் அழுவதாய் தெரிகிறது... ஒவ்வொருவருக்குமான 'கண்ணே கலைமானே'க்களில் ஜேசுதாஸ்கள் அழுகிறார்கள்... 25/05/2020 21.20

உன் பெயர்

இப்பொழுது உன் பெயரில் நீ மட்டும் தான் இருக்கிறாயா? என் இரவிற்குள் உன் பெயர் ஒரு வெளிச்சக் கவிதையாய் மின்னிக்கொண்டிருக்கிறது... உன் பெயரில் ஒரு கவிதை எழுதி பட்டாம்பூச்சியொன்று கிறங்கித் தவிக்கிறது... பூக்களின் மேல் திளைத்து விழுந்த 'மது'வென உன் பெயரில் வண்ணம் நிறுத்திப் பறக்கிறது.. யாரோ அழைத்ததும் மேகத்துண்டாய் காற்றிலலையும் உன் பெயரில் ஒரு மழை இந்தப் பிரபஞ்சத்தை நனைக்கிறது... சாலையில் ஒரு குழந்தை காகித கப்பலை மிதக்கவிடுகிறது... உன் பெயரைக் கொண்டே ஒரு மழை கப்பலைக் கரையேற்றுகிறது... குழந்தைகளின் பூரிப்பிற்குக் கவிஞனொருவன் உன் பெயர் வைக்கிறான்.... சந்தங்களில் உன் பெயரேற்றி வீணையின் நரம்பதிர விரல்களில் இசை தருவிக்கிறான் இசைக்காரனொருவன்... பாடத் தெரிந்த பறவைகளுக்கெல்லாம் உன் பெயரில் ஒரு குரல் கிடைக்கிறது... நாட்காட்டியில் மழை பெய்யும் சுபயோகதினத்தை உன் பெயரில் குறித்திருக்கிறார்கள்.. மலைகளுக்கப்பால் புகைவண்டி ஒன்று உன் பெயரொலியில் ஓடிக்கொண்டிருக்கிறது... ஞாபகங்களை இழந்த மறதிநோய் முதியவனுக்கு உன் பெயர்- தான் என்றோ ர

ட்ரோன் - க்வாரண்டைன் சிறுகதை.

ஹலோ..வணக்கம் சார்! நீங்க சொன்னமாதிரி தகரத்தை வச்சு இரண்டு பக்கமும் அடைச்சுட்டோம். அந்த இரண்டு வழியிலும் யாரும் ஏறி குதிச்சுக்கூட வரவும் முடியாது போகவும் முடியாது. இந்த ஒரு வழில மூணு பேரி கார்ட போட்டோம் சார். கம்பி வச்சு கட்டிருக்கோம். தண்ணிலாரி ஆம்புலன்ஸ் எதாச்சும் வந்தா நகர்த்திக்கிரலாம். நீங்க சொன்னமாதிரியே வச்சுட்டோம் சார். ஃபோட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்பிட்டேன் சார்" என்று தன்னோட மேலதிகாரிக்கு ரிப்போர்ட் கொடுத்தார் மாநகராட்சி அலுவலர். கொரொனோ ஊரடங்கு வந்ததிலிருந்து அழகரை எல்லாப் பக்கமும் வேலை வாங்குகிறார்கள். தினம் ஒரு வார்டு. இன்று 30ம் நம்பர் வார்டு. பேரிகார்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மேஜை போட்டார்கள். இரண்டு சேர்கள். ஒரு நோட்டு. ஒரு பேனா. அழகர் அதில் உட்கார்ந்துகொண்டார். பக்கத்தில் இருந்தசேரில் காவல் துறை எஸ்.ஐ உட்கார்ந்துகொண்டார். காலை மணி ஏழு. ரெண்டு பக்கம் அடைச்சுட்டானுக, ஒரு பக்கம் தான் திறந்திருக்குனு அந்த முன்னூறு வீடும் அல்லோலப்பட்டது. அந்தத் தெருவில் குடியிருந்த ஒரு பட்டாளத்துக்காரர் வேகமாக வந்தார். பேரிகார்ட் பக்கத்துல யாரும் இருக்காங்களா எனப் பார்த்தார்.

பெரண்டை - க்வாரண்டைன் சிறுகதை

சுதாகருக்கு இது மூன்றாவது ஃபோன். கொரோனா ஊரடங்கில் நோய் தொற்று உள்ள இடங்களைக் கண்டெயின்மெண்ட் பகுதியாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். சுதாகரை ஒரு பகுதியில் வாலண்டியராக நியமித்துவிட்டார்கள். யாரையும் அனுமதிக்கக்கூடாது. எந்த நேரத்தில் ரிப்போர்ட் யாருக்குக் கொடுக்கவேண்டும் . எந்த நேரத்தில் யார் யார் வருவார்கள் என்று ஒரு பட்டியல் தந்திருந்தார்கள். குடியிருப்புப்பகுதியில் யார் யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு மருந்து எதுவும் தேவையா என்று ஒரு சர்வே எடுக்க மறுநாள் ஹெல்த் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஒரு ஆள் வந்தான். கிட்டத்தட்ட சுதாகரனின் வயது தான் அந்த ஆளும். அது பல இடங்களில் ஒத்துப்போனது. சுதாகருக்கு மாஸ்க் கட்டி கட்டி காது ஓரத்தில் தடம் விழுந்து தோலைக் கிழித்திருந்தது. ஆதலால் கர்சிப்பைக் கட்டிருந்தான். ஹெல்த் டிபார்ட்மெண்ட்காரருக்கு மூஞ்சியைக் காட்டிலும் மாஸ்க் பெருசாயிருந்தது. ஹெல்த் டிபார்ட்மெண்ட் காரர்க்கும் ஒவ்வொரு கண்டெயின்மெண்ட்டாக நியமித்திருப்பார்கள் போல. ஆள் பார்க்கவே பத்துநாள் சாப்பிடாத ஆள் மாதிரி வீக்காக இருந்தார் என சுதாகருக்குப்பட்டது. "பாஸ் சாப்டீங்களா" 'இ

சித்ரா பௌர்ணமி மழை

சித்ரா பௌர்ணமி "சித்ரா பௌர்ணமிக்கு மழ வரும்ல" என்றபடியே அங்கலாய்த்தது தங்கம் ஆச்சி. எப்பொழுதும் ஆச்சி இப்படித் தான்- தன் விருப்பங்களை எல்லாம் அனுமானங்களாக அவிழ்த்து விடும்... செம்பருத்தி செடியைப் பதியம் போட்டு மண்ணை உதறிய உள்ளங்கை நிறத்தில் தங்கம் ஆச்சி இருக்கும். ஒருமுறை மடியில் போட்டு தலை கோதுகையில் அந்த வாசம்தான் வந்தது. அரைநெல்லி இலை பருமனில் தான் என்றைக்கும் ஆச்சி சேலை உடுத்தும்... ஒரு "சித்ரா பௌர்ணமி" மழை மதியத்தில் நனைந்துவிட்டு வந்த என் "கரிசல்"கால்களை அந்தச் சேலையில்தான் ஒற்றியெடுத்தது... பூமிநாதன் கோயில் கிணற்று வாளி சத்தத்தில் ஆறுகால பூசையுமென அள்ளி இறைத்தத் தண்ணீரை ஆச்சி சேலை உள்வாங்கி விரவிக்கொண்டது... கால்களை ஒற்றி நகப்பதம் பார்த்து ஒருமுறை முகத்தைத் தடவி "மகாராசாவா போப்பா" என்றது.. ஆச்சி சேலை போலவே மிருதுவான ப்ரியங்களை விரவியபடி நமக்கும் கொஞ்சம் பரிமாறும். பேரன் வரும் விடுமுறை நாட்களில் மட்டும் நல்லெண்ணெய் விட்டு புளிக்குழம்பு சமைத்து ஒவ்வொரு வாய்க்கும் "உரைக்குதா&

பூ தொடுத்தல்

"தொடாதீர்கள்; அருகில் தும்மாதீர்கள்" என்கிறார்கள். "ஒரு அடி விட்டு நில்லுங்கள்; வீட்டிற்குள்ளேயே தங்குங்கள்" என ஒலிப்பெருக்கி வைத்து கொட்டாவி விடும் வசனங்கள் ஒலிபரப்புகிறார்கள்.. இது எதுவும் புரிபடாத தங்கம் ஆச்சிக்கு "பூ" வரத்துக் குறைந்த கவலை. "பூ தொடுத்தல்" தங்கம் ஆச்சிக்கு வியாபாரம் அல்ல... அது ஒரு "பசி போக்கல்"; தன்னையே சுற்றிச்சுற்றி வரும் நாய்க்குட்டிக்கு-அது "கொஞ்சம் பாலும், ரொட்டித்துண்டுகளும்". சமூகம் வழங்க மறுக்கும் இளம் கைம்பெண்ணுக்குக் கூடுதலாக ஓர் இணுக்கு பூ தொடுத்தல்- அவ்வளவே... 10/5/2020 22.18

குட்டிமழை

ஒரு சிறு தாவரத்தை, ஒரு சிட்டுக்குருவியை, சாளரவழி நீட்டிய ஒரு குழந்தையின் கைகளை, சன்னமாய் நனைத்துக் காணாமல் போன ஒரு குட்டிமழையாய் வந்துபோயிருக்கிறாய்... 11/5/2020 14.15

தானியக்குருத்து

தானியக்குருத்து இறகுகள் இல்லை இருந்தபோதும் மனமேறியமரும் நினைவுப்பறவைக்கு தானியக்குருத்தாய் துளிர்க்கிறதுன் வாசம்.... 14/02/20 22.15

உன் பெயரில் ஒரு மிடறு

உன் பெயரில் ஒரு மிடறு இப்படித்தான் அசாத்தியப்படுமென்ற பிரக்ஞைகள் அற்ற ஒருவனின் தருணங்களில் கடைசியாக முத்தமிட்டுப் பிரியும் பிரிவுபச்சார நொடியில் விரசமற்ற நெற்றிமுத்தமொன்றை அவிழ்த்திருக்கலாம்... மணிக்கட்டைப் பிடித்தபடி வெறுமனே கண்களைப் பார்க்கும் வைபவம் நிகழ்த்தியிருக்கலாம்... இன்னுமொரு காப்பி இன்னுமொரு மதிய உணவு இன்னுமொருபயணமென இன்னுமொருமுறை வாழ்தலை உன்பெயரின் நீட்சியாய் விகசித்திருக்கலாம். சற்று நேரத்தில் கலைந்துவிடுவதாய் வளைந்துகொடுத்த வானவில்லின் தடம் பிடித்தலையும் நினைவுக்குருவியின் வண்ணரீங்காரமாய் அந்தி சாய அனுமதித்திருக்கலாம்.... கலைந்து கிடந்த ஆடைகளை ஒழுங்குபடுத்தி எங்கும் வியாபிக்கப்போகும் வாசனையின் ஆதிப்புள்ளியில் சற்று அயர்ந்தபடி இளைப்பாறியிருக்கலாம்.. வாழ்தலின்பொருட்டு நிரம்பிவழியும்படியான கனவுக்குவளைகளில் இப்படித்தான் அசாத்தியப்படுமென்ற பிரக்ஞைகளற்ற ஒருவனின் தருணங்கள் உன் பெயரால் ஒரு மிடறாகவுமிருக்கலாம்.... 02/03/20 23.20

நிகழ்தகவு

உன் திசைகளில் எப்பொழுதுமே இருள்வதேயில்லை.. நீயற்றத் தெருக்களில் சுவாரஸ்யங்கள் எப்பொழுதுமே நிகழ்வதில்லை.. நீயெழுதாதக் கவிதைகளில் எப்பொழுதுமே யாரும் குடிகொண்டதில்லை.. உன் பெயரில் நீயற்று யார் திரும்பினாலும் எப்பொழுதுமே பெயர்ச்சொல் வினைச்சொல்லாவதில்லை.. என்றாவது நிகழ்வது போல் எப்பொழுதுமே நிகழாத நிகழ்தகவு என முடிகிறது இந்தக் கவிதை 03/03/20

அருள்பாலிப்பு

உங்கள் வேண்டுதலின் படி அந்தக் கோயிலின் விநாயகர் அருள்பாலிப்பார். ப்ரியங்களைச் சுமந்தபடி ஆலய வாசலில் காத்திருப்பவனுக்கு வேண்டுதல் ஏதுமில்லை. இருந்தாலும் காய்ந்த சருகுகளை மிதிக்காத படி அவன் அருள்பாலிப்பான் அரச மரத்தின் வலிகளை. 15/3/20 22.20

நீயும் நானும்

உன் பெயரில் யார் யாரோ அழைக்கப்படுகிறார்கள். உன் பெயருக்கு யார் யாரோ திரும்புகிறார்கள். எந்தப் பெயரிலும் இல்லாத இந்தத் தேடலில் நீயும் நானும். 15/3/20 23.30

மழைப்பாத்திரம்

கனத்துப் போய் கிடக்கிறது ஏதுமற்ற என்றொரு நிலை. நீ மாத்திரம் நிரம்பும்படியான ஒரு மழைப்பாத்திரத்தில் தளும்புகிறது நிறைந்து கிடக்கும் உன்னாலான வெறுமை. 15/3/20 23.45

உங்கள் காட்டில் மழை தானே

உங்கள் காட்டில் மழை பெய்து கொண்டுதானே இருக்கிறது... உங்களது உத்தரவின் பேரில் தானே தடபுடலாய் தடைகள் அரங்கேறுகின்றன... காலணியின் அடியில் நசுக்கப்பட்டப் பூக்களை மறுமுறை பார்ப்பதற்கு ஒரு தைரியம் இருக்கிறது தானே... சாமான்யன் வெளிவரும்போது அணிந்திருந்த கேள்விக்கவசங்கள் அவிழ்க்கப்பட்டு யாசகக் கவசங்கள் வழங்கப்படுதல் ஒருவகையில் நல்லது தான்... ஏனெனில் முதுகெலும்பற்றவைகள் கவலையற்றவை... ஊர்ந்தாவது காணாமல்போக வழியுண்டு... நீட்டப்பட்ட ஒரு விரலை மட்டுந்தான் தேர்ந்தெடுக்கும் ஆகச் சிறந்தக் கருணை தரப்பட்டிருக்கிறது இப்படியானக் குறுஞ்செய்தியை நால்வருக்கு அனுப்பி பசியை மறைத்துக்கொள்ள முதுகெலும்பு தேவைதானே... இப்பொழுதும் கூட பல்லக்கைத் தூக்க ஒரு கூட்டம் வந்து நிற்கிறது.. பிறகென்ன உங்கள் காட்டில் மழை பெய்து கொண்டுதானே இருக்கிறது.... 14/4/20

தலைவலி

தலைவலி இப்போதைக்குக் கொஞ்சம் அமைதியாயிருங்கள். தலை வலிக்கிறது. வேறு எங்குமில்லை உங்களுக்குள் தான் ஆனால் பேரிரைச்சலுடன் இடி கண்களின் நடுவில் இருந்தபடி இரு காதுகளுக்கும் சமிக்ஞை தருகிறது... ரசிக்கப்பட்ட ஏதோ ஒன்று ரசனையின் பதங்கமாதல் புள்ளியைத் தாண்டி ஒரு சிட்டிகையளவு தள்ளி நின்று மேனி முழுதும் அழுத்துகிறது... இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வன்மம் இந்தத் தலைவலியென நீங்கள் உணர்கையில் தலைவலி உங்களை விழுங்கியிருக்கும்... மிகையாய் வழிந்த இரசனைகளைத் திகட்டியபடியே வெளிறிய மின்னலொன்று மூடிய கண்களுக்குள் இங்குமங்குமாய் பாய்கிறது..... கண்களை மூடிய இருளிமையில் தெரிகிறது தலைவலி உணர்வின் எதேச்சதிகார உரு.... தலைவலி மட்டுந்தான் மனிதனைச் சாகடித்துவிட்டு மறுபடியும் புணரமைக்கிறது... உங்களுக்குத் தேவையான ப்ரியங்களைப் பட்டியலிட்டு இப்போதே வைத்துக்கொள்ளுங்கள். தலைவலியென்பது