கொரோனாவும் சார்ந்துவாழும் சாபமும்...

மருந்து உணவுப்பொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இயங்கலாம் என்பது ஊரடங்கின் முதல் நாளிலிருந்தே சொல்லப்பட்டது.. இது செய்தி.

இப்பொழுது ஒரு சம்பவம். நேற்று நடந்தது.

மதுரை தூத்துக்குடி நான்குவழிச்சாலை. கிட்டத்தட்ட தூத்துக்குடி மாவட்ட எல்லை ஆரம்பம்.
மாசார்பட்டி சோதனைச்சாவடி.

வண்டியை நிறுத்தச் சொல்கிறார் ஒரு பயிற்சிக் காவலர்.
காரைப் பரிசோதிக்கிறார்.
மருந்து அவசரம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டக் கார். வண்டியை ஓட்டியவரிடம் விசாரிக்கிறார்.
காரில் ஓட்டுனரைத் தவிர யாரும் இல்லை. மூன்று மருந்துப் பெட்டிகள்.
மருந்து மட்டும் தானா...எனக் கேட்கிறார். ஆம். வந்து எண்ட்ரி போட்டு போங்க என்கிறார்.

எண்ட்ரி போட சோதனைச்சாவடி முன் வளையம் ஓரடி தூரத்தில் போட்டுள்ளார்கள்.

அங்கு போகையில் மூன்று இளைஞர்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இரண்டு பைக்கில் வந்தவர்கள்.

ஒரு இளைஞன் தாங்கள் எதற்காகப் போகிறோம் என ஒரு மருத்துவர் எழுதி அனுப்பியக் கடிதத்தைக் காட்டுகிறார்.

இன்னொரு இளைஞர் தங்களுக்கு வந்த அழைப்புக்கடிதத்தைக் காட்டுகிறார்.

பசங்க சொல்வதிலிருந்து மூன்று மாணவர்களும் மருத்துவம் படித்து நீட் டிற்கு முயற்சி செய்பவர்கள்போல் இருக்கிறார்கள். பகுதி நேரமாக வேலைபார்ப்பவர்கள். நிறைய மருத்துவர்கள் விடுப்பு என்பதால் அவர்கள் மதுரையோ திருச்சியோ கிளம்பி தூத்துக்குடி நோக்கிச் செல்கிறார்கள்.
பின் வரிசையில் நின்ற மருந்துவண்டி ஓட்டிவந்தவருக்குப் பாதிவிசாரனையில் இப்படி புரிகிறது.
அங்கு இருந்த பயிற்சிக் காவலர் மூவருக்குப் புரிகிறது.
ஆனால் காலை வயிறுமுட்டச் சாப்பிட்டு தொப்பை பட்டன் திறந்து தொப்பியும் போடாமல் மாஸ்க் பதிலாக கர்சிப் கட்டி அதையும் கழுத்திற்கு இழுத்துவிட்டு இருக்கையில் உடலைக் கிடத்தி ஒய்யாரமாய்ச் சாய்ந்திருக்கும் உதவி ஆய்வாளருக்குத் தெரியவில்லை.

ஹாஸ்பிடல் டூட்டி சார் என்கிறார். சும்மா பேசாதீங்க..ஓரமா தள்ளி நில்லுங்க என்று மருந்து வண்டி ஓட்டுனரைக் கேட்கிறார்...

எங்க போற (எங்க போற.....ஒருமை)
மதுரைல இருந்து தூத்துக்குடி சார்.
மருந்து கொண்டு போறேன் என்று மதுரை மொத்த மருந்து விற்பனையாளர் சங்க அடையாள அட்டை நீட்டுகிறார்...

பெர்மிஷன் இருக்கா...
மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அளித்த அனுமதிக் கடிதமும் எந்தக் கடைகளுக்கு எந்த மருந்து என இன்வாய்ஸ்ம் இருக்கு சார்....

அதுலாம் தேவை இல்ல...தூத்துக்குடிகலெக்டர்
பெர்மிஷன் இருக்கா...
நான் மதுரை சார்..
கலெக்டர் பாஸ் கொடுத்தா போங்க இல்லாட்டி ரிட்டன் போயிருங்க....என்றபடி அடுத்தக் கார் வருகிறது. அதை நிறுத்தச் சொல்கிறார்.

சார் மதுரைல மருந்து விற்பனையாளர்களோட கமர்ஷியல் வண்டிகளுக்குத் தான் பாஸ் தராங்க( குட்டி யானை, வேன் போன்று) சொந்தக் கார் களுக்கு பாஸ் தரல சார்...கேட்டதுக்கு மருந்துனா உங்க டிபார்ட்மெண்ட் பெர்மிட் இருக்கும்ல னு சொல்லிட்டாங்க..( மதுரையில் அந்த வாகன பாஸ் வழங்கும் ஆன்லைன் வசதி சரிவர வேலை செய்யவில்லை. நேரடியாக கலெக்டர் அலுவலகம் சென்று கேட்டதற்கு இரு சக்கர வாகனப் பாஸ் கொடுக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் அலுவலகம் மறுபடியும் வீடு இப்படி..ஒரு மருந்து சப்ளை செய்யும் சேல்ஸ்மேன் சராசரியாக ஐம்பது கடை பார்ப்பான்...இதற்கு எங்கு பாஸ் கொடுப்பதென்று சங்கங்கள் அடையாள அட்டை கொடுத்துவிட்டன...காரைப் பொறுத்தவரை தவறுதலாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் சொந்தக்கார்களுக்குப் பாஸ் வழங்கப்படுவதில் சிக்கல். மருந்து சப்ளை செய்ய எனக் கேட்டதற்கு கமர்ஷியல் வண்டி தான் பாஸ்க்கு, சொந்தக்காருக்கு துறை அனுமதி வச்சுக்கோங்க என்றுவிடுகிறார்கள்)
இதைச் சொல்வதற்குள் அடுத்தக் காரிலிருந்து ஒரு பெண் அவரது தம்பி வருகிறார்கள். பின் சீட்டில் வயதானவர்கள். அமர்ந்துள்ளார்கள்.
மருந்து வண்டி ஓட்டுனரைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு , அவர்களை எங்க போறீங்க என்றார்...

இங்கதான் என ஏரியா சொல்கிறார்...
இங்க அங்கலாம் சொல்லக்கூடாது. ஊர் பெயர் போலிஸ் ஸ்டேஷன் லிமிட் எதுலாம்னு போலிஸ்ட்ட கரெக்டா சொல்லனும்...பாக்க படிச்சவங்க மாறி இருக்கீங்கள...அப்படி பேசுங்க...
அந்தப் பெண் தழுதழுத்துச் சொல்கிறாள்...ட்ரீட்மெண்ட்க்கு போயிட்டு வரோம் சார்....
சென்னைல இருந்து....
கலெக்டர் பாஸ் இருக்கா..
இல்ல சார்...னு காரில் இருந்து ஒரு ஸ்கேன் ரிப்போராட்டைத் தம்பி எடுத்துவருகிறான். உள்ளிருந்து வயதானவர் கைக்குழந்தையுடன் வெளியே வந்து பார்க்கிறார்..
சார் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்திருச்சு..சென்னை போகச் சொன்னாங்க...அங்க போய் பாத்துட்டு ஊருக்குத் திரும்பிட்டு இருக்கோம்....
எதற்கும் உபயோகமாய் இருக்கட்டுமென சென்னை மருத்துவரிடம் ஒரு கடிதம் வாங்கி வந்ததைக் காட்டுகிறார்.
இவர் அரசு மருத்துவர் கூட இல்லை. ஒரு ப்ரைவேட் டாக்டர் சொன்னா நான் கேட்டு உங்கள விடனுமா.....
ஆன்லைன் பாஸ் வாங்கிட்டு கிளம்பவேண்டியது தான...
(இது நடக்கும்போதே பின்னாடி நின்ற மருந்துவண்டி ஓட்டுனர் ஆன்லைன் பாஸ் விண்ணபிக்க ஓடிபி வரவே இல்லை)
இல்ல சார் எங்க சொந்தக்காரங்க எம்எல்ஏ வோட...னு அந்தப் பெண் இழுத்தார்..
எம் எல் ஏ எம் பி கணக்குலாம் இங்க எடுபடாது. கலெக்டர் சொன்னா போங்க...இல்லாட்டி ரிட்டர்ன் போங்க...( எங்க பதினைஞ்சு கிமீ தூரத்துல இருக்குற குழந்தையோட சொந்த ஊருக்கா இல்ல மருத்துவம் பாக்கப்போன ஐநூறு கிமீ தூர சென்னைக்கா...இப்படிலாம் சாமான்யன் கேட்கமுடியுமா..)
அந்தப் பெண் பையிலிருந்து நெடுநேரமாக வைத்திருந்தக் கடிதத்தை அப்பொழுது தான் வாங்கிப் பார்த்தார்...அது எம் எல் ஏவிடம் வாங்கிய அனுமதிக் கடிதம்..
எம் எல் ஏட்ட வாங்குறவங்க கலெக்டர்ட்ட வாங்கவேண்டாமா என்று கடிந்துகொண்டு அவர்களை அனுப்பிவைக்கிறார்..

இப்பொழுது மருந்து ஓட்டுனர். சார் ஆன்லைன் பாஸ் வொர்க் ஆகல..

அத ஒங்க கலெக்டர்ட கேளுங்க..
போய் வேணும்னா எடுத்துரேன்...
அதுலாம் முடியாது. நீங்க கொரோனோ மருந்து கூட கொண்டு போங்க. பாஸ் இருக்கா...நான் டாக்டரையே நிப்பாட்டிருக்கேன்..நீங்க மருந்த தூக்கிட்டு வந்துட்டீங்க......ரிட்டன் போங்க...

(உண்மையில் இந்த ஊரடங்கிற்கான அர்த்தம் என்ன. மக்களைக் காப்பாற்றுவதா இல்லை அதிகாரத்தைச் செலுத்தி மக்களை முடக்குவதா...யாரை நிறுத்துகிறோம் என்று பாராமல் எல்லோரையும் நிறுத்தி கலெக்டர் பாஸ் கேட்டால் ஏன் பாஸ் களைச் சுலபமாய் கிடைக்க வழிசெய்யவில்லை. பிறகு எதற்கு மருந்துக்கட்டுப்பாட்டு துணை இயக்குனர் கடிதம் தருகிறார். அப்படியானால் அவரது கடிதமும் அவரது பதவியும் வீணா? கடந்த நாள் மருந்து பற்றாக்குறையைப் பற்றி நிருபர் கேட்க மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனரிடம் கேட்கிறோம் என சுகாதாரச்செயலர் சொல்வது பொய்யா...மருந்து தட்டுப்பாடு என்றால் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பதில் சொல்லவேண்டும். ஆனால் அந்தத் துறையின் அதிகாரப்பூர்வ மாவட்ட து.இயக்குனரின் அனுமதியை மதிக்கமாட்டீர். அப்படித்தானே)

போகவேண்டிய தூரம் 40 கிமீ. கடந்த வந்த தூரம் 80 கிமீ.

வண்டி ஓடாத ஒரு அவசரக்காலத்தில்
சொந்தமாய் செய்யும் தொழில்கள் முடங்கிப் போகும் தருணத்தில்
160 கிமீ வெட்டிப்பயணமா...

இப்பொழுது கூட அறிவிப்பு வந்துள்ளது.
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு.
மே 3 வரை நாடடங்கு.
ஏப்ரல் 20 க்கு மேல் சில தொழில்களுக்கு தளர்வு.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் கடுமையான விதிமுறை.
பிறகு ,எப்பொழுதும் போல் மருந்து பொருட்கள் உணவுப் பொருட்கள் சப்ளைலாம் நடக்கும்.
யார் சொல்றாங்கனா பிரதமர் முதல்வர் சுகாதாரத்துறைச் செயலர் கலெக்டர் டவாலி பிறகு விளம்பரத்துல பேசுற அக்கா...

ஆனால் நிதர்சனம் வேறு.

இங்கு அத்தியாவசியங்களைப் பரிசோதிக்க காவல்துறையினருக்குப் பயிற்சி தரலாம். ஏனென்றால் மருந்தைத் தூக்கிக்கொண்டு போகுபவன் கூட தொற்று பரவிக்கிடக்கும் சாலைகளில் புழுதிகளில் யாரோ ஒருவரின் துன்பத்திற்கான மருந்தைத் தான் எடுத்துச்செல்கிறான். உண்மை தானா எனப் பார்க்க சேல்ஸ்பில் மற்றும் நிறுவன டாக்குமெண்டுகள் போதுமானது. ஏன் இதில் இவ்வளவு சிக்கலாக்கிப் பார்க்கிறார்கள்...

எங்களுக்கு கொரோனா பிரச்சினையில்லை. தனித்திருந்து பிழைத்துக்கொள்வோம். இந்தச் சகமனிதன் தான் பிரச்சினை.. சார்ந்துவாழ்வதில் சாகடிக்கும் வல்லமை படைத்தவனாயிருக்கிறான்....

பழனிக்குமார்
மதுரை
16/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8