கொரோனாவும் அப்பாவி மக்களும்..
அனைவருக்கும் வணக்கம்.
அனைவரும் நலமா.
தனிமைப்படுத்துதலின் போது வாழ்க்கை எப்படிப் போகிறது?
சுகம் தானே?
வெகு இயல்பாக கட்டுரை ஆரம்பிக்கிறது என்பது மகிழ்வு தானே.
சிலருக்கு இந்தக் காலகட்டத்தில் அரசு என்னசெய்கிறது என்றால் தினந்தோறும் மாலை கொரோனோ ஸ்கோர் சொல்லும் என்கிறார்கள். அதுதான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும்.
சரி. விசயத்திற்கு வரலாம்.
தண்ணீர் மாறி மாறிக் குடித்து தொண்டை கட்டி இருமல் வருகிறது.
இல்லை வேண்டாம். ஒருவர் புகை பிடித்து இருமல் வருகிறது. அவசரத்திற்கு இருமல் மருந்து இல்லை. என்ன செய்யலாம் என்று உங்களிடம் ஆலோசனை கேட்பேன்.
நீங்கள் என்ன சொல்வீர்கள். மருந்துக்கடை சென்று வாங்கு என்பீர்கள்.
உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
மருந்துக்கடையில் இப்பொழுது அது தரமாட்டார்கள்.
உங்களுக்கு ஊரடங்கில் வியாபாரம் படுத்துவிட்டது. ஒரே தலைவலி. தீராத தலைவலி. ஒரு பேராசிட்டமால் போட்டால் தேவலை என்பீர்கள்.
கடைக்குச் சென்று வாங்கிக்கொள் என்பீர்கள். மறுபடியும் பரிதாபமாக இருக்கிறது உங்களைப் பார்க்க.
ஏனென்றால் உங்களுக்கு பாரசிட்டமாலும் கடையில் கிடைக்கப்போவதில்லை.
கொரோனோ நோய்தொற்று நேரத்தில் ஊரடங்கின் போது நிறைய மருத்துவர்கள் தங்களது வேலை நேரத்தைக் குறைத்துக்கொண்டார்கள். சிலர் சிகிச்சை அளிக்கவும் வரத் தயங்குகிறார்கள்.ஏனென்றால் சிகிச்சை அளிக்க வந்து அவர்களுக்கும் நோய் தொற்றுபரவி நமக்காகச் செத்தால் நாம் பிணத்தை புதைக்கவிடமாட்டோம். ஆதலால் அவர்கள் வருவதில்லை.
இந்நேரத்தில் மருந்துக்கடைகளை அணுகி மருந்தை வாங்கிக்கொள்ளும் நுகர்வு கலாச்சாரம்தான் நம் கலாச்சாரம். அப்படியான சட்டத் தகவமைப்பில் தான் இந்திய மருந்து வணிகம் செயல்படுகிறது. ஆதலால் தான் பல வெளிநாட்டு முதலைகள் இங்கு மருந்து விற்பனைக்கு வருகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் அரசு ஒரு சுற்றறிக்கை மருந்துக்கடைகாரர்களுக்கு அனுப்புகிறது.
யாராவது பேராசிட்டமாலோ இருமல் மருந்தோ கேட்டால் கொடுக்காதே.
அரசு கொரோனோ பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு அழைத்து அப்படிக் கேட்பவரைக் காண்பிக்கவும். அப்படிச் சம்பந்தப்பட்ட நபர் வரும்வரை அந்த நோயாளியை இருத்தி அவர் வந்தவுடன் அந்த அதிகாரியிடம் பிடித்துக்கொடுக்கவேண்டும்.
இப்போதைக்கு அந்த மருந்தைக் கேட்டுப் போனால் உங்களைக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவார்கள்.
தலை சுற்றுகிறதா?
நீங்கள் கடன் வாங்கி அரசை ஏமாற்றி வெளிநாடு போனால் கூட உங்களை விட்டுவிடுவார்கள். பேராசிட்டமால், இருமல் மருந்து கேட்டால் முடிந்தது.
அப்படியான நோயாளி சாதாரணத் தலைவலி காய்ச்சல் உடல்வலி என பேராசிட்டமாலோ அல்லது இருமல் மருந்தோ கேட்டால் எதுவும் கொடுக்காமல், நோயாளியின் முகவரி, அலைபேசி எண் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு சுகாதாரத்துறைக்கு அனுப்பவேண்டும்.
அவர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை நேராய்பார்த்து பிரிஸ்க்ரிப்ஷன் வாங்கி வருகிறார் என்றாலும் ப்ரிஷ்கிரிப்ஷன் கொடுத்த டாக்டர், அவரது பதிவு எண், நோயாளி முகவரி அலைபேசி எண் இவற்றைக் குறித்து அதைத் தினமும் அரசு மருந்தாய்வாளருக்கு அனுப்பவேண்டுமாம்.
ஏன் என்றால் கொரோனோ நோய்க்கு அறிகுறி காய்ச்சல் இருமல். அதற்காக மருந்து வெளியே கிடைத்தால் நோயாளி இருப்பது வெளியே தெரியாது என்று ஒரு பதில்.
அப்படியானால் நோய் தொற்று உள்ளூருக்குள் பரவிவிட்ட அச்சம் தானே இப்படி மருந்துக்கடைகளை நோக்கி சட்டம் ஏவத் துணிகிறது?
மூன்று நாளில் தொற்று இருக்காது என்று கூறியது பொய் தானே...
தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது என்பதும் பொய் தானே?
தொற்றுதல் தீவரம் இல்லாமல் இப்படியான அறிக்கை வரக் காரணம் என்ன.
சரி விடுங்கள்.
நான் ஒரு மருத்துவரைப் பார்க்கிறேன். காலில் அடிபட்டு வலி. அந்த வேதனையில் காய்ச்சல். டாக்டர் பேராசிட்டமால் எழுதுகிறார்.
வெளியே மருந்து வாங்க முகவரி ,அலைபேசி எண், டாக்டர் முகவரி ,அவரது பதிவு எண் தந்து மாத்திரை வாங்குகிறேன்.
பிறகு ஒரு கொரோனோ நோய் தொற்று இருப்பவரைத் தெரியாமல் பழகி எனக்கு நோய் தொற்று வருகிறது.
மாத்திரை கொடுத்தவரையும் எழுதிய மருத்துவரையும் ' ஏன் தொற்றுநோயாளிக்கு மருந்து கொடுத்த' னு கேள்வி வருமா வராதா. இந்தப்பயம் மருத்துவருக்கு வருமா வராதா.
காய்ச்சல் இருமல் இருந்தால் சிகிச்சை அளிக்கப்படமாட்டாது எனத் தனியார் க்ளினிக்குகள் அனைத்தும் மூட ஆரம்பித்தால் பொதுமருத்துவமனைகளை நோக்கி எத்தனை பேர் செல்வார்கள்.
இல்லை அப்படியானக் கட்டமைப்பு நம் மாநிலத்தில் இந்த நேரத்தில் இருக்கிறதா.
அதாவது, மக்கள் சாதாரண ஜன்னி வந்து சாகலாம். நாங்கள் அனுமதிப்போம்.
பல்வலி வந்து சாகலாம்.. டிபி வந்து சாகலாம்.
மூக்கிற்கு கீழ் அடினாய்டு சுரப்பி வீங்கி சிறுகுழந்தைகள் இருமி இருமி வயிறுவலித்துச் சாகலாம், டான்சில் சளி தொற்றுபிடித்து இருமிச்சாகலாம். சாதாரண காய்ச்சல் வந்து சாகலாம். ஆனால் கொரோனாவால் சாகக்கூடாது என்ற மூடத்தனமானக் கொள்கைப்பிடிப்பு தான் இப்போதைக்கு இருக்கிறது.
அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பேய் கணக்கில் இருமல் மருந்து வாங்குபவன் எல்லாம் கொரோனோ நோயாளி என்றால் அரசு எந்த மனநிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கொரோனோ பற்றியதான வெளிப்படையான அணுகுமுறையை அரசு கடைபிடிக்கவில்லை என்பதற்கு மருந்துக்கடைகளை இறுகப் பிடிப்பதே சாட்சி.
மருந்துகளைக் கட்டுப்படுத்தி மருந்தை எளிதான முறையில் மக்களைச் சேரமுடியாதபடி செய்வது மக்களை உளவியல் ரீதியாக மறுபடியும் தாக்குகிறது அரசு.
சாதாரண இருமலுக்குப் போய் நிற்பவனுக்கு மருந்து நிராகரிக்கப்படுதலும் கண்காணிக்கப்படுதலும் தேவையற்ற உளவியல் பிரச்சினைகளைத் தரும்.
விற்பனை இல்லாதக் காலகட்டத்தில் சளி இருமல் நோய்களுக்கு மருந்தை விற்கும் பல்லாயிரக்கணக்கான மருந்துக்கடைகளைச் சிறிதேனும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது வன்மத்தை வீசியிருக்கிறது அரசு.
மருத்துவர்கள் தாக்கப்பட்டபோதே வன்மையாய் எதிர்த்து மருத்துவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டாமல் அமைதி காத்த அரசின் மீது மருத்துவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
இந்நிலையில் இப்படியான மருந்துகளின் அதுவும் சாதாரண மருந்துகளின் மீதான இந்தக் கெடுபிடிகள், மருத்துவர்களையும் மருந்து விற்பவர்களையும் யோசித்து அவற்றிலிருந்து விலகி நிற்கவைக்கும்.
இது எதுவுமே தெரியாமல் தமக்குரிய வாதைகளுக்கு ஏன் மருந்து கிடைக்கவில்லை
என்று புரியாமல் அப்பாவி மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே பைத்தியம் ஆவார்கள்..
21/04/20
கருத்துகள்
கருத்துரையிடுக