விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

 விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார்.
அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்...
மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து.
பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை.
உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்து புரோமோட் செய்வது தடை பட்டுள்ளது.
மார்ச் 24 ல் லாக்டவுன்.
சில மருத்துவர்கள் க்ளினிக்குகளை மூடினர். திறந்துவைத்து சிகிச்சை பார்த்த மருத்துவர்களில் சிலர் பாதிக்கப்பட்டனர். சில மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கூட நோயாளிகளைப் பார்த்தனர் என்பதும் உண்மை தான். சில மருத்துவர்கள் மெடிக்கல் ரெப்களையும் அனுமதித்து பார்த்தனர். ஆனால்
பல கிளினிக்குகளில் மெடிக்கல் ரெப்கள் தவிர்க்கப்பட்டனர். இன்னும் கூட தவிர்க்கப்படுகின்றனர். புரோமோஷன் க்கு வழியில்லாமல் போனது.
இப்பொழுது கொரோனோ தொற்று பரவும் விதமும் மக்களின் விழிப்புணர்வும் ஒரே அலைவரிசையில் வர, மக்கள் புழக்கம் அதிகமாகி உள்ளது. ஆனால் விழுந்த எட்டு மாத விற்பனை அவ்வளவு தான். மீட்டெடுக்க முடியாது.
இதில் மருத்துவத்துறையில் முக்கியமான விசயம், மருந்துகளின் காலாவதி ( expiry date) பிரச்சினை. ஒழுங்காய் விற்றுக்கொண்டிருந்த மருந்துகள் தேக்கமடைய , என் நிறுவனத்தில் என் கணக்கிற்கு ஆறு மாதத்திற்குள் விற்றாக வேண்டும் என்ற கணக்கில் சுமார் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மருந்துகள் இருக்கின்றன. திரும்பி அனுப்ப முடியாத (non refundable ) மருந்துகள் அவை. இந்த நான்கு மாதங்களில் விற்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். முயற்சி செய்தால் நட்டத்தைக் குறைக்கலாம்.
வேகமாகக் காலாவதியாகும் மருந்துகளின் பட்டியலை ஜூலை மாதத்திலிருந்து தான் பார்த்துக்கொண்டிருந்தோம். மருத்துவர்கள் இல்லாத / மருத்துவமனைகளைப் பார்க்கமுடியாதச் சூழ்நிலைகளில் என்ன செய்யமுடியும்.கையில் இருக்கும் மருந்துகள் போக, மூடிக்கிடக்கும் மருத்துவமனைகளிலிருந்து அழைத்து காலாவதியாகப்போகும் மருந்துகளைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் என் கிறார்கள்.
ஒரு மருத்துவரிடம் அவர் உபயோகிக்காத மருந்தை, எனக்கு அது காலாவதியாகும் என்ற நெருக்கடியில் அவரிடம் விற்கப்பார்க்கலாம் என்பது ஏற்கனவே அவர் வாங்கிக்கொண்டிருக்கும் விற்பனையைத் தடை செய்யும். இப்படியே ஒவ்வொரு மருத்துவருக்கும் எது பயன்படும், எந்த மருந்தை எந்த மருத்துவர் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று பல சூத்திரங்கள் எழுதிப்பார்த்தாலும் அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் சிலர் உளவியல் பிரச்சினைகளுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள்.
இப்பொழுது நிலைமை சீராகிக்கொண்டிருக்கிறது, அனைத்து வாடிக்கையாளர்களையும் விரட்டிப்பார்க்கவேண்டும். ஒரு வேகம் நமக்கு வேண்டும். ஓட வேண்டும். காலாவதி ஆவதற்குள் விற்றாக வேண்டும் என்ற வெறி ஏற்படும் நிலையில், ஒரு விற்பனைப்பிரதிநிதி , இந்தத் தொழிலே வேண்டாம் என்று நேற்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.
சரி போகவேண்டும் என்று போகுபவனை அதுவும் இந்தத் துறையே வேண்டாம் என்று முடிவெடுத்து வேறொரு துறை செல்பவனை நாம் நிறுத்தமுடியாது. நடப்பதைப் பார்க்கலாம் என , இன்னொரு விற்பனைப் பிரதிநிதி தேவை என்ற செய்தி பரவி எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் எட்டு நபர்கள் வேலை வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். ஒருவரை டிக் செய்து அடுத்தவாரம் பயிற்சி அளித்து நிறுவனத்தின் மருந்துகளுக்கும் நிறுவனத்தின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும்படியாய் மாற்றும் வரை களத்தில் மருந்துகளை விற்கவோ புரோமோட் செய்யவோ இயலாத காரியம். இது தான் நிதர்சனம்.
என்னுடன் பயணித்த, என்னைப் போன்ற சில நண்பர்களின் நிலைமை என்னை விட மோசமாகிவிட்டது என்பதைப் பார்க்கிறேன்.
விழப்போகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு மனமுதிர் நிலை வேண்டும். விழும் அடியை எதிர்கொள்வதற்கும், அதிகமாய் அடி விழாதபடிக்கு தற்காப்பு செய்வதற்கும் துணிவதும் தான் ஒரே வழி. கையைக் கட்டி வேடிக்கைப் பார்க்க எல்லாம் நேரம் இல்லை. வெற்றியைக் கொண்டாடும் மனம் போல் தோல்வியை ரசிக்கும் முரட்டுத்தனமான மலட்டுத்தனமான மனம் அமையாது தான். வற்புறுத்தினால் கைவசம் ஆகலாம்.
இந்தச் சாராம்ஸத்தை விவரமாய் எடுத்துச்சொன்னதும், எப்படி இதைக் கடந்துபோற என்று நண்பர் கேட்டார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போது கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். டோல் கேட் வந்தது.
கண்ணாடியை இறக்கிவிட்டு, கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம், ஃபாஸ்ட் டேக் கில் கழிக்கும்படிக்குக் கூறினேன். ஐம்பதைக் கடந்த அவர், உடனே, அவரது கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்து கேமராவில் ஸ்கேன் ஆகாததைக் கவனித்தப்படிக்கு, என்னிடம் திரும்பி, சிரித்த முகத்துடன், " சார், கொஞ்சம் லைட்டா முன்னாடி போங்க என்று அவர் தலையை வெளியே நீட்டி என் காரின் முன் பாகமும் முன் விழுந்திருந்த தடைக்கம்பையும் பார்த்துவிட்டு ஸ்கேன் செய்தார். " பச்சை விளக்கு எரிந்ததும், 'ரைட் சார் என்று அவரது கம்ப்யூட்டர் கீ போர்ட் என்டர் பட்டனை குதூகலித்து தட்டினார்.
" இத்தன வருசத்துல இப்படி சிரிச்ச முகத்தோட , சுறுசுறுப்பா இருக்குற ஒருத்தர இன்னைக்குத்தான் சார் பாக்குறேன் " என்றேன். அவருக்கு முகம் முழுதும் சிரிப்பு. நான் கடந்து வந்துவிட்டேன்.
இப்பொழுது என் நண்பனிடம் சொன்னேன், ' இப்படி தான் கடக்குறேன்" .
உள்ளுக்குள் இருப்பதை எல்லாம் வெளியே காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெளி என்பது பலவும் கலந்தது.
உள்ளம் கூட பெரும் வெளி போன்றது தான். கரைந்து விடவும் கலைந்துவிடவும் ஒரு பெரும்வெளி செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4