விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6

பழனிக்குமார்
மதுரை

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 6

அது ஒரு பிரச்சினை.
என்ன பிரச்சினை என்பதைச் சொல்கிறேன். ஏன் பிரச்சினையானது என்பதையும் அடுத்துச் சொல்கிறேன். 

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளாகச் சேர்ந்து கிரிக்கெட் ஆடினார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லை. முதலில்
ஐந்து நபர்கள் சேர்ந்தார்கள். பிறகு பத்தானது. பிறகு இருபது ஆனது. 

ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று அணிகள் எனப் பிரிந்து ஆடினார்கள். அணியில் சேர்க்கமுடியாமல் நிறைய பிரதிநிதிகள் நின்று வேடிக்கை பார்த்தனர். 
ஏன் அணியில் சேர்க்கமுடியவில்லை என்று கேட்பீர்கள் தானே?
ஆம், அந்தத் தெருவிற்குள் அப்படி எத்தனை பேரை சேர்த்துக்கொண்டு ஆடுவது?!

என்னது தெருவா? என்பீர்கள் தானே?

ஆம், இதற்கே இப்படி அதிர்ச்சி ஆனால் எப்படி, ஆடும் நேரம் எப்பொழுது தெரியுமா, நடு இரவு ஒரு மணிக்குத்தான் இந்த ஆட்டம் எல்லாம். 
ஒரு குறிப்பிட்ட நாளில் இத்தனை பேரும் குழுமி கிரிக்கெட் விளையாடினால் என்னாகும்?
அப்படி ஒரு நாள் இரவு ஆடும்பொழுது பேட் செய்த ஒரு பிரதிநிதி மும்மரத்தில் பந்தை  ஓங்கித் தூக்கி  அடிக்க, அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டின் கண்ணாடியைப் பதம் பார்த்தது. 

குறிப்பிட்ட தேதியில் ஆயிரக் கணக்கான மருந்துவிற்பனைப் பிரதிநிதிகள் அந்தத்தெருவில் நடு ராத்திரியில் கூடுவது அந்தத் தெரு மக்களைக் கலவரமாக்கியதை உங்களால் நம்பமுடியாது.

காவல் துறைக்குப் பிரச்சினை போனது. கூப்பிட்டு விசாரித்தார். 

ஆம், அந்தத்தெருவில் ஒரு பிரபல மருத்துவரின் மருத்துவமனை இருந்தது. அவரைப் பார்க்க மருந்து கம்பெனிகளின் விற்பனைப் பிரதிநிதிகள் அலைமோதுவார்கள். 

எனக்குத் தெரிந்து அந்தச் சமயத்தில் குறைந்தது ஆயிரம் கம்பெனிகளின் ரெப் கள் முயற்சி செய்வார்கள். 

தொடர்ச்சியாய் ரெப் கள் வந்து குவியத் துவங்கியதும், மருத்துவர் ஒரு சிஸ்டம் கொண்டு வந்தார். 
தினம் ஐந்து கம்பெனிகளின் ரெப் கள் மட்டும் தான் பார்க்கப்படும் என்று ஒரு போர்ட் வைத்தார். 

முதலில் வரும் ஐந்து கம்பெனிகளுக்கே முன்னுரிமை என்று இருந்தது, இரவு பத்து மணிக்கு மருத்துவமனை போய் கார்ட் கொடுத்து அப்பாயின்மெண்ட் வாங்கி, நோயாளிகளை மருத்துவர் பார்த்துமுடித்தப்பின் தங்கள் கம்பெனி மருந்துகளைப் புரோமோட் செய்வார்கள்.

சீக்கிரம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டுமென மாலை ஆறு மணிக்கே போய் விசிட்டிங்க்கார்ட் கொடுத்து அப்பாயின்மெண்ட் வாங்கினார்கள். 

அதிலும் போட்டி அதிகமாகி காலை பத்துமணிக்கே போய் கார்ட் கொடுத்து அப்பாயின்மெண்ட் வாங்கினார்கள். 

பிறகு முதல் நாளே போய் நின்று அடுத்த நாளிற்கு கார்ட் கொடுத்தார்கள். அதை மறுக்க எந்த நாள் பார்க்கவேண்டுமோ அன்றைய அதிகாலை மெடிக்கல் ரெப் கள் போய் நிற்பார்கள். 

காலை ஒன்பது மணிக்கு செவிலியர் டூட்டி வரும்பொழுது ஒரு ரெப் ஐந்து கார்டுகளை வாங்கி வைத்து அப்பாயின்மெண்ட் வாங்குவார். அது ஒரு கட்டத்தில் காலை ஐந்து மணிக்கெல்லாம் அப்பாயின்மெண்ட் வாங்க முதல் ஆளாக போய் நிற்க வேண்டிய போட்டி வந்தது. 

ஏன் இவ்வளவு கூத்து என்றால், அவ்வளவு வேலை அழுத்தம் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. விற்பனை அழுத்தம் ( Sales pressure) வேலை அழுத்தம் (work pressure)  என்பது வேறு வேறு.


இதை எல்லாம் புரிந்துகொண்ட மருத்துவர் ஒரு நோட்டைக் கொடுத்து மாதத்தின் முதல் நாளே மாதத்தின் எல்லா நாட்களுக்கும் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொள்ளுங்கள் . ஒரு நாளைக்கு ஐந்து கார்ட்கள் தான். நோட்டில் எப்பொழுது எல்லாம் தேதி காலியாக இருக்கிறதோ, மெடிக்கல் ரெப்கள் அந்த நோட்டில் வேண்டிய நாளில் அவர்களது கம்பெனி பெயரை எழுதிவைத்துவிட்டு பார்க்கலாம் என்றார்.  அப்படி மாதத்தின் முதல் நாள் ஆயிரம் ரெப்கள் காலை ஒன்பதரை மணிக்கு மருத்துவமனைக்குப் படையெடுத்தனர். 

மாதத்திற்கு ஒரு முறை தான் பார்ப்பார் அந்த மருத்துவர். 

மாதத்தின் முதல் நாள் அந்த அப்பாயின்மெண்ட் வாங்காவிட்டால், ஒரு மெடிக்கல் ரெப்பிற்கு அவரது ஏரியாமேனேஜர், ஜோனல் மேனேஜர் என்று பல நிலைகளிலிருந்தும் கேள்வியும் அழுத்தமும் வரும். 

அதில் மாதக் கடைசியே ஒரு மெடிக்கல் ரெப் தன்னோட உயர் அதிகாரிகள் சென்னை பெங்களூரு கோவைக்காரர்களாய் இருந்தால் அவரகளது நிகழ்ச்சி நிரலைக் கேட்டு அவர்கள் மதுரை வரும் நாளாய் பார்த்து அந்த நோட்டில் அப்பாயின்மெண்ட் எழுத வேண்டும். 
யோசித்துப்பாருங்கள், ஒரு தெருவிற்குள் ஆயிரக்கணக்காய் ரெப்கள் நடு ராத்திரியில் ஆங்காங்கே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பைக்கை நிறுத்திவிட்டு வாசலில் அமர்ந்தும் பேசிக்கொண்டும் இருப்பார்கள், சிலர் வீட்டு திண்ணைகளில் படுத்திருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன்.  எல்லாம் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்காக. கொசுக்கடியில் பைக்கில் சென்ட்ரல் ஸ்டாண்ட் போட்டு இருபக்கமும் கால்போட்டு அமர்ந்து பெட்ரோல்டேங்கில் உடலை வளைத்துப் படுத்திருக்கிறேன். 


இப்பொழுது வாருங்கள் கதைக்கு. அந்த நோட்டைக் கைப்பற்ற தான் இத்தனை ரெப்கள் .
 படுத்த்தால் அசதியில் தூங்கிவிடுவோம், அதிகாலை எழ முடியாது என்றுவிட்டு நைட் ஷோ முடித்துவிட்டு கிரிக்கெட் ஆட ஆரம்பித்து காலை நாலரை மணிக்கு நோட்டை மருத்துவமனையில் வாங்கி அப்பாயின்மெண்ட் எழுதினார்கள். 

காவல்துறை தலையிட்டு, மருத்துவரிடம் விசயம் போனதும், மெடிக்கல் ரெப்களுக்கான அசோசியேசன் தலையிட்டது. அக்கம் பக்கம் சமூகத்திற்கு நம்மால் தொந்தரவு வந்துவிடாது என்பதால் , மருத்துவர் அந்த மாதத்தில் எந்த நாட்களில் விடுமுறைக்குப்போவார் என்று மாதக் கடைசி நாள் ஒரு பிரதிநிதி மருத்துவமனை போய் அந்த நோட்டைக் கைப்பற்ற வேண்டும். காலண்டர் வரைந்து ஒவ்வொரு நாளுக்கும் ஐந்து ரெப் கள் தான். ஞாயிறு தவிர்த்து சராசரியாக 25 நாட்கள். 125 கார்ட்கள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். யார் முதல் வருகிறார் என்ற போட்டி தானே பிரதிநிதிகளை நிலைகுலைய வைக்கிறது என்று அனைவரும் கூடி பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். ஆம், ஒரு காகிதப் பையில் வந்த அனைத்துக் கம்பெனிகளின் கார்டுகளையும் போட்டு குலுக்கி ஒவ்வொரு ரெப்பாக அழைப்பார்கள். 125 கார்டுகள் வரை குலுக்கல் நடைபெறும், அதிர்ஷ்டமிருந்தால் அந்த மருத்துவரைப் பார்க்கலாம்.

பிறகு, ரெப் அசோசியேஷன் காலை இதை ஐந்து மணிக்கே செய்வதில் என்ன இருக்கிறது என்று கூறி, மருந்துவிற்பனைப் பிரதிநிதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாதம் முதல் தேதி காலை எட்டு மணி என்று நிர்ணயித்தார்கள். மருத்துவமனையில் தொந்தரவு வேண்டாம் என்று அலுவலகம் போல் செயல்பட்ட கல்லூரி பேராசிரியர்களின் சங்க கட்டிடத்தில் வைத்து இதைச் செய்வார்கள். 
இதில் மருத்துவர் திடீரென்று ஏதாவது விடுமுறை எடுக்க நேரிடும். ஆனால், மெடிக்கல் ரெப்களின் இத்தனைக் கடினங்களைப் புரிந்துகொண்ட மருத்துவர், தான் இல்லாமல் போகும் நாளில் எந்தெந்த மருந்துவிற்பனைப் பிரதிநிதிகள் அப்பாயின்மெண்ட் எழுதியிருக்கிறார்களோ, அவர்களை அலைபேசியில் அழைத்து மருத்துவரின் உதவியாளர் வேறொரு நாளில் வரும்படியும் அதற்கான நேரத்தையும் மருத்துவர் தந்திருப்பதாகவும் சொல்வார். முழுக்க முழுக்க மனிதாபிமான செயல் அது. 

இத்தனைக்குப் பிறகு, அந்த மருத்துவரைப் பார்க்க போக வேண்டும்.
அவரை எழுத வைக்க வேண்டும். 
அவர் எழுதாவிட்டால், கம்பெனியில் மீட்டிங்கில் ஒரு கேள்வி வரும். நீ ஒழுங்கா பாத்திருந்தா, அந்த டாக்டர் எழுதியிருப்பாரே, எழுதலாட்டினா,  நீ சரியா பாக்கல தான என்று ஒரு கேள்வி வரும். 
இல்ல சார், இந்த மருத்துவருக்கு அப்பாயின்மெண்ட் வாங்குறதே இவ்ளவு கஷ்டம் என்று கூறியதற்கு , இகழ்ச்சியாய் ஒரு சிரிப்பு சிரித்து, அதுக்குத்தானே உனக்குச் சம்பளம் தரோம் என்பார்கள். 

அப்படி அந்த மருத்துவரைப் பார்க்க அவர் நோயாளிகளை எல்லாம் முடித்துவிட்டு, மெடிக்கல் ரெப்  பார்க்க இரவு 12 வரை ஆகும். 

ஒரு மெடிக்கல்ரெப் ஒருமுறை  இரவு 11 மணிக்கு மேல் பார்த்துவிட்டு , அவரது  வீடு, ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்ததால், போய்க்கொண்டு இருந்திருக்கிறார். வழிப்பறியாளர்களால் தாக்கப்பட்டு, தலை காயத்திற்கு  உள்ளானார். இதைக் கேள்விபட்ட அந்த மருத்துவர், அன்றிலிருந்து மாலை ஆறு மணிக்கு நோயாளிகளைப் பார்ப்பதற்கு முன் மெடிக்கல் ரெப் களைப் பார்த்துவிடுகிறேன். அவங்களும் பாவம், நாலு இடத்துக்குப் போவாங்க என்று முடிவெடுத்தார். 

மாலை ஐந்து ஐம்பதுக்கு அவரது கார் மருத்துவமனைக்குள் நுழையும். அவரைப் பார்க்க ரெகுலர் செக் அப் நோயாளிகளூம், தினம் ஐந்து மெடிக்கல் ரெப்களூம் காத்திருப்போம், ரூம் க்குள் சென்றதும் ரெப்களை அழைப்பார். 
அப்படி ஒரு முறை பார்த்துவிட்டு வரும்பொழுது, காத்திருந்த ஒரு நோயாளியின் அட்டெண்டர், ஏம்ப்பா, சொகுசா டாக்டர பாக்கப்போறதுக்கு எங்களுக்கு அப்புறம் போகவேண்டியது தான, சும்மா  எல்லா இடத்திலயும் நிண்ணுக்கிட்டு அரட்ட தான அடிச்சிட்டு இருப்பீங்க, உங்களுக்கு என்ன கேடு என்று நேரடியாகவே கேட்டார்...

##விற்பனைப்பிரதிநிதியின்தனிக்குறிப்புகள் 6

##medicalrepnotes6

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....