என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

கல்லூரியில் படிக்கையில் நடந்த நிகழ்வுகளும் அதை நினைப்பதும் பெரிய வரம்.

ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு விதம். physical chemistry ஆச்ரியர் t.k. ஜெனார்த்தனன் சார். பாடம் நடத்துறதே வித்தியாசமா இருக்கும். பல்லைக் கடித்து சொல்வது போலிருக்கும். குட்டையாயிருப்பார். சிவப்பாயிருப்பார். சாதுவான குணம். அவரது குரல் மெலியதாயிருக்கும். அந்தக் குரலில் பஞ்ச் பேசுனா எப்படியிருக்கும் அப்படி. அவர் பாடம் நடத்துற அழகே அந்தக் குரல் அந்த தொனி.ஒருமுறை ஒரு சாதித்தலைவர் கார் விபத்தில் இறந்தார். அது நடந்த இடம் அவர் வீடு அருகே. ஒரு லாரியும் காரும் மோதிய விபத்து. அடுத்த நாளில் ஜெனார்த்தனன் சார் எங்களுக்கு எப்படி பாடம் நடத்துவாரோ அப்படியே அந்த விபத்தை சக ஆசிரியர்களுக்கு விவரித்தார். இப்பொழுது வரும்  கேப்பிட்டல் ஆங்கிலத்தை பல்லைக் கடித்து வாசித்துப் பார்க்கவும் ( that LOrry Came FRom that side, this FEllOE's car came from this side....big TERRIFIC  bombarded...) இதைத்தான் அவர் சொன்னார். அங்கு சென்ற என் காதுகளுக்கு அவர் பாடம் நடத்தியது தான் கேட்டது ( THat atom comes FRom that orbit and Another ATom comes from opposite side, Both ATOMS Bombarded.....)  அவரது தொனியே ஒரு physical chemistry reaction  தான்....

எம்.எஸ். மகாதேவன் (இன் ஆர்கானிக் கெமிஸ்டிரி) ஜீனியஸ். சம்பந்தமில்லாத சட்டை, பேண்ட், பெரிய மூக்குக் கண்ணாடி, கலைஞ்ச முடி. பிஞ்ச செருப்பு. ஒரு பழைய டி.வி.எஸ் 50 வண்டி. அது டிவி.எஸ். கம்பெணி தானா னு அந்த கம்பெனிக்காரனுக்கே சந்தேகம் வரும். அப்படி இருக்கும். ஓங்கி மிதிச்சா அந்த வண்டி நாலா போய் விழும். ஆனா பாடம் அப்படி நடத்துவார். எதிர்தாப்புல இருக்குற சுவத்த பாத்துத்தான் பாடமே நடத்துவார். அதனால் பசங்க நாங்க அப்பப்ப பேசுவோம். திடீருனு போன ஜென்மத்துல குறைஞ்சது நூறு குடியாவது கெடுத்துருப்பேனு நினைக்கிறேன்னு எங்கள பாத்து சொல்வார். ஏன் னு நீங்க கேக்கணும். ஏன்னா எங்களுக்கு பாடம் நடத்துறாராம். அது தண்டனையாம்.

கெமிஸ்ட்டிரி துறைத் தலைவர் சோமநாதன் சார். நாங்க படிக்கிறப்ப டெரர் சார். இறுதியாண்டில் தான் அவர் எங்களுக்கு பாடம் நடத்த வந்தார். ஆர்கானிக் கெமிஸ்டிரி. அவரது வகுப்பு 10 நிமிடம் தான். ஆனால் அந்த 40 நிமிடமே மயான அமைதியாயிருக்கும். ஆரம்பித்த நொடியிலிருந்து அமைதியாயிருக்கு. எப்பொழுது வருவாரெனத்தெரியாது. மூச்சுக்காற்றைக் கூட பிடித்துவைத்த அமைதியிலிருப்போம். தடாரென வருவார். கரும்பலகை ஒட்டி அங்கும் இங்குமாய் நடப்பார். அவரையே என்னமோ டென்னிஸ் மேட்ச் பாக்குற மாத்ரி கழுத்தத் திருப்பி திருப்பி பார்ப்போம்.அவரது வகுப்பிற்கு திகில் பட நிகழ்வு மாதிரி லேப் அட்டென்டர் வந்து கரும்பலகையை சுத்தம் செய்வார். வேற யாருக்கும் அவர் வரமாட்டார்..... திடீரென கணீர் குரலில் structure of Benzene னு ஆரம்பிப்பார். ஆறு கோடுகள் கொண்ட பென்சீன் வளையத்தை மனுஷன் கைய எடுக்காமலே போடுவார்...டெரர் டீச்சர்.

பிறகு இப்பொழுதும் நான் தொடர்பிலிருக்கும் கணேசன் சார். ஆர்கானிக் சார். சில டாக்டர்கள் ஊசி போடும்பொழுது குத்துவதும் தெரியாது மருந்து ஏறுவதும் தெரியாது. ஆனால் குணமாகும். அப்படி தான் கணேசன் சார். வகுப்பு எப்படி ஆரம்பிக்கும் எப்படி முடியும் என்று தெரியாது. ஆர்கானிக் கெமிஸ்டிரினா இருக்கும் பயத்தைப் போக்கியவர். அவர் தான் நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர். ஆதலால் அதில் ஈடுபாடும் அதிகரிக்கக் காரணம் அவர்தான். ஒருமுறை மதுரை அருகே உள்ள ராசாக்கூர் கிராமத்திற்கு முகாமாய் 7 நாட்கள் சென்றோம். பல்கலைக்கழகத்திலிருந்து பணம் வரத் தாமதமாக கைக் காசு செல்வழித்து உணவிற்கு ஏற்பாடு செய்தார். சமைக்க வந்த சமையல் காரர் கையில் ஒரு நோய் தொற்று வர, மாணவர்கள் நாங்கள் பார்த்து சொல்ல. அந்த முதியவரை நோகாமல் காசு கொடுத்து அனுப்பி அடுத்த நாள் கைலியை ஏத்திக்கட்டி அவரே சமைக்க ஆரம்பித்தார். நாங்களும் சேர்ந்தோம். இன்னைக்கு சமாளிங்க சார். நாளைக்கு கலக்கிருவோம்..என்று எங்களைப் பார்த்து அவர் சொன்னது நியாபகம் இருக்கிறது. கல்லூரியிலிருந்து எவ்வளவு பணம் வந்தது அதன் கணக்கு வழக்கு எல்லாவற்றையும் மாணவர்களே கையாண்டோம். அந்த நிர்வாகத்திறமையை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர். ஒரு குழு மேம்பாடு மற்றும் குழு முயற்சியாய் பணம் கையாளுதலில் தேவைப்பட வேண்டிய வெளிப்படையாதிருத்தல் அங்கிருந்து ஆரம்பமானது எங்களுக்கு.
சில சமயங்களில் கல்லூரி முடிந்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக மைதானத்தைச் சுத்தப்படுத்தும் வேலை நடக்கும். 20 மாணவர்களைத் திரட்டி அவர் முன் நிற்போம். மாணவர்களுக்கு தேனீர் ஏற்பாடு செய்யச்சொல்வார். 20 பேருக்கு 15 தேனீர் போதும் சரியாயிருக்கும் என்று சொல்வேன். 20ஏ வாங்குங்க நல்லா சாப்பிடட்டும் பசங்க என்று சொல்லியிருக்கிறார். இப்பொழுது அவர் வேண்டுமானால் அவர் என்னை மாணவராகப் பார்க்காமல் ஒரு குடும்ப நண்பராய் பார்க்கலாம். அவர் எப்பொழுதும் எங்கள் ஆசிரியர்.

ஆசிரியர்களுக்கு உரியவராயிருத்தல் நம் கடமை.
ஆசிரியர்களுக்கு நன்றியுடன் இருத்தல் மிகப்பெரிய கடமை.....

                                                                   முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....