என்னை வளர்த்த ஆசிரியர்கள்..


ஒரு முறை தர தரவென இழுத்துக்கொண்டு போனது நியாபகம் இருக்கிறது. I A க்ளாஸ். லூரிமேரி டீச்சர். கையைப் பிடித்துக்கொண்டு அமர வைத்தது நியாபகம் இருக்கிறது.
 பிறகு ஏதோ ஒரு நாள் மழை பெய்த மாலை. நான் தான் கடைசி வரிசை. ஓட்டுக்கட்டிடம். மழை வழிந்து என் முதுகு முழுதும் ஈரம்.
டீச்சர் என்னை அழைத்து கரும்பலகைக்கு அருகில் அமரவைத்தது நியாபகம் இருக்கிறது.
புது வீடு வாங்குவதற்கு எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டைப் பார்க்க வந்தபொழுது எங்கள் அம்மா அவர்களையும் அவர்களது கணவரையும் வீட்டிற்கு அழைத்த நியாபகம்.  அவர் என்னை அழைத்து மடியில் அமர வைத்துக்கொண்டார். டீச்சர் மடியில் உட்காரலாமா....வா என்று அப்பா என்னை அதட்டினார்.

இரண்டாம் வகுப்பு காந்திமதி டீச்சர். நான் படித்தது மதுரை கரிமேடு மார்க்கெட் பகுதியிலுள்ள மதுரை முத்து ஆரம்பப்பள்ளி.
தரையில் தான் அமர வேண்டும். ஓட்டுக் கட்டிடம் பாதி பள்ளிக்கூடம்.
காந்திமதி டீச்சர் எங்களுக்குள் குறுக்கே சென்று தான் கரும்பலகை அருகே வர முடியும். அப்படி ஒருமுறை வரும்பொழுது என் கையை மிதித்து விட்டார். பயந்து கொண்டு நான் கத்தக் கூட வில்லை.
திடீரென காந்திமதி டீச்சர் நன்றாய் வியர்த்து பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே மயங்கி கீழே விழுந்து விட்டார். பக்கத்து வகுப்பறை ஆசிரியை அதைப் பார்த்து அனைத்து ஆசிரியைகளும் வந்து அவரைத் தூக்கிச் சென்றனர்.
மறுநாள் அவர் வந்துவிட்டார். ஏன் விழுந்தார் எனத் தெரியவில்லை. மறுநாள் முதல் வரிசையில் என்னை அமரச்செய்துவிட்டான் ஒரு நண்பன். அனேகமாக டீச்சர் மறுபடியும் விழுந்துவிடுவார் என்ற பயமாய் கூட இருந்திருக்கலாம்.

மூன்றாம் வகுப்பு கனகா டீச்சர். கணக்கைத் தப்பாய் சொல்லிக்கொடுத்திருந்தார். அப்பா பார்த்துவிட்டு , அதே நோட்டில் அவர் கைப்படக் கணக்கைத் திருத்தி இதை உங்கள் டீச்சரிடம் காட்டு எனச் சொல்ல, எனக்குப் பயம். டீச்சர் நோட்டைப் பார்த்து பிறகு தெரிந்துகொண்டார் என் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள் என்று.

நான்காம் வகுப்பு வெங்கட்டம்மாள் டீச்சர். எங்கள் பக்கத்துத் தெரு. அவர்களது மகள் என் அப்பாவிடம் கணக்குப்பாடம் படித்தார். வகுப்பறை ஒரு என்சிசி முகாம் போல் இருக்கும். நான் என்ன செய்தாலும் வீட்டிற்குத் தகவல் கொடுக்கப்படும். மதிய உணவு இடைவெளி நேரத்தில் முந்தியடித்துக்கொண்டு ஓடக்கூடாது. நாளை விடுமுறை என்றால் கத்தக்கூடாது என எனக்கு நானே கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணமாயிருந்தார். ஒரு முறை வகுப்பறையில் கடுக்காப்பழத்தை மறைத்து வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் நானும் என் நண்பனும். டீச்சர் பார்த்து விட்டார். என்னை எழுப்பி என்ன சாப்டுற என்று கேட்டார். ஒண்ணும் இல்லையே என்றேன். அப்ப வாயில என்ன ஒட்டிருக்கு....என்ன கேட்டார். கடுக்காப்பழமா னு கேட்டேன்...(எவ்வளவு வெகுளி...) தலையில் ஒரு கொட்டு விழுந்தது...கடுக்காப்பழம் சாப்பிட்டதுக்கு அல்ல...பொய் சொன்னதுக்கு னு டீச்சர் சொன்னாங்க....கொட்டிய கொட்டில் கண் கலங்கியது. நான் கடைசி வரிசை..முதல் வரிசைக்கு தரையில் அமர்ந்து கொண்டிருந்த மாணவர்களுக்கிடையே நடந்து வந்து அந்த கொட்டை வாங்கியிருந்தேன். திரும்பி நான் அமர்ந்த இடத்திற்குச் செல்கையில் கண் முழுக்க கண்ணீர்...வழி தெரியவில்லை. ஒவ்வொரு மாணவனின் தலையைப் பிடித்து நடந்த நியாபகம்.

ஐந்தாம் வகுப்பு A section. ஆயுத லட்சுமி டீச்சர். அடுத்த ஹெச் எம் னு பார்க்கப்பட்ட டீச்சர். மொத்தம் 2 க்ளாஸ்கள். ஆயுத லட்சுமிடீச்சர், B section சகுந்தலா டீச்சர்.. சகுந்தலா டீச்சர் நல்ல டீச்சர் அந்த காலத்தில் நல்ல டீச்சர்னா என்ன அர்த்தம்....அடிக்கமாட்டாங்க....ஆனா நம்ம நேரம் ஆயுத லட்சுமி டீச்சர் க்ளாஸ் க்குத்தான் போனேன். காலை முதல் முக்கால் மணிநேரம் வாய்பாடு க்ளாஸ் நடக்கும். 1x2=2 ல் ஆரம்பித்து 16x16=256 வரை சொல்ல வேண்டும். ஒவ்வொரு வாய்பாடையும் ஒருவன் சொல்ல வேண்டும். அவன் சொல்ல A and B section மாணவர்கள் சொல்ல வேண்டும். இரு வகுப்பறைகளுக்கும் இடையே ஒரு மர ஸ்கீரின் மட்டும் இருக்கும். அப்படி ஒரு முறை 13ம் வாய்பாடு சொல்லும் பொழுது 7x13= 81 னு சொல்லிட்டேன். மொத்த வகுப்பறை மாணவர்கள் எல்லாம் சேர்ந்து 81 னு சொல்ல, ஒரே ரணகளம்.....சகுந்தலா டீச்சர் அடுத்த வகுப்பறையிலிருந்து உங்க அப்பாட்ட சொல்லவா..னு கேட்டுச்சு...அன்றைய மாலை அப்பாவிடம் சகுந்தலா டீச்சர் வீட்டிற்கு வந்து அப்பா அம்மாவிடம் சொல்லிருவாங்களோ னு பயந்து அன்று முழுக்க 13ம் வாய்பாட்டையே படிச்சேன். அடுத்த நாள் 14ம் வாய்பாடு சொல்லச்சொன்னாங்க.....
2004 ம் ஆண்டு ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்குக்காக மும்பை சென்றிருந்தேன். எல்லாக் கேளிவிகளும் கேட்கப்பட்டு தேர்வாயுமிருந்தேன். இருந்தாலும் அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் மட்டும் பார்க்கவேண்டும். சம்பிரதாயத்திற்கு சில் கேள்விகள் கேட்பார் எனத்தெரிவித்திருந்தார்கள். 
அவர் அறைக்குச் சென்றதும் என்னைப் பற்றி கேட்டு விட்டு அவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். 7x13 எவ்வளவு.....மனதிற்குள் 81 சொல்வதா 91 சொல்வதா என பதட்டம் 91 என உடனே சொன்னேன். அப்பாயின்ட்மெண்ட் லெட்டரைக் கொடுத்தார்.
சகுந்தலா டீச்சரின் குரல் கேட்டது....அப்பாட்ட சொல்லவா,,,
                                             
           
                                                         தொடரும்.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....