கனவில்

அது ஒரு கடுமையான
மணல் தேசமாயிருந்தது....

எண்ணிக்கைகள் பல வைத்துத்
தேடிக்கொண்டாலும்
கிட்டாத
புவியின் திறந்த மார்பு அத்தேசம்...

தாபசுரத்துடன்
அலைந்தலைந்து
தவழ்ந்தழும்
யாத்ரீகங்களுக்கான
அருகதையற்ற தேசமது....

அது ஒரு கடுமையான
வனத் தேசமாயிருந்தது....

அரவங்களை விரும்பாத
அமைதியை
மாத்திரம்
இரைச்சலாய் உற்பத்தி
செய்யும்
வனாந்திரத்தின் தேசமது....

நோக்குங் கண்களற்று
பச்சைய உதிரிகள்
செறிந்து வீழும்
உதிர்வன தேசம் தான் அது.....


அது ஒரு கடுமையான
வார்த்தைகளின் தேசமாயிருந்தது.....

சொல்லும் சொல்லும்
புணர்கையில்
குருதி கொட்டும்
வாய் தேசத்தின் எச்சமது....

மெய் முழுதும்
அமிலந்தெறிக்கும்
மெய்யற்ற எழுத்து கொண்ட
சொல்லாலான தேசம்......

அது ஒரு கடுமையான
வாழ்வியலின் தேசமாயிருந்தது....

வெற்றுப் புன்னகைக்கான
நிழலுதலையே
வாடிக்கையாக்கிக் கொள்ளும்
வாழ்வற்றத் தேசம் தான் அது.....

தொலைதலும்
தொலைதலின் நிமித்தமும்
ஆகச் சிறந்த
தொலைந்த தேசமாய்த்தானிருந்தது
அந்தக் கனவில்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....