என்னை வளர்த்த ஆசிரியர்கள் 2

அதுவரை 5 வருடங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு 6ம் வகுப்பிற்கு ஒரு மேனிலைப்பள்ளி உள் வருவது ஒரு பதட்டமானச் சூழ்நிலையாகவே எனக்கு இருந்தது.

ஒரு நுழைவுத்தேர்வு வைத்துத்தான் எடுப்பார்கள் என்பதால் 5ம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வு விடுமுறை எப்படி இருந்திருக்கும்.
அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், அண்ணன் ஒரு பக்கம். அண்ணன் அதே பள்ளியில் 10ம் வகுப்பு நுழைய இருந்தான்.
ஒரு வழியாய் 6ம் வகுப்பு நுழைந்தேன்.
பெரிய பள்ளிக்கூடம்.
குறிப்பாய் பழைய பள்ளிக்கூடம் போல் இல்லாமல் மைதானம் இருக்கிறது. விளையாட்டுப் பாடம் உள்ளது. நல்லொழுக்கம் வகுப்பு இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர். அது எனக்குப் புதிது. பழைய பள்ளியில் 5 வருடங்கள் 5 ஆசிரியைகள். இப்பொழுது அப்படியல்ல..

அது ஒரு  கிறித்தவ பள்ளி. பாதி ஆசிரியர்களின் பெயர்கள் ஆங்கில வடிவமாகவே இருந்தன. அதைச் சொல்வதில் எனக்குப் பெருமையாயிருந்தது.

6ம் வகுப்பு க்ளாஸ் டீச்சர் பீட்டர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல். கணக்குப் பாடம் ஞானப்பிரகாசம். முதல் இடைத் தேர்வில் நான் கணக்குப் பாடம் பெயில். 32 மார்க். அப்பொழுதெல்லாம் விடைத்தாளைக் கையில் கொடுத்து விடுவார்கள். மார்க் கை வீட்டில் காண்பித்து அப்பாவிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டும். 32 வாங்கிய கணக்குப்பேப்பரைக் காண்பித்த எனது அந்த மாலை நினைவில் இல்லை. ஆனால் அடி வாங்கியதும், இரவில் நெடு நேரத்திற்கு தூங்காததும் நினைவிருக்கிறது. இதிலொரு சிக்கலென்றால் ஒவ்வொரு பேப்பரையும் ஒரு நாள் கொடுப்பார்கள். தினமும் திட்டு கிடைக்கும்.  பிறகு ரேங்க் கார்டு கொடுப்பார்கள். அது கொஞ்சம் அதிகம். 22 வது ரேங்க்.அடுத்தத் தேர்வில் அப்பா கொஞ்சம் அதிகமாய் என்னை கவனித்தார். கணக்குப் பாடத்தில் 95. மற்றுக் க்ளாஸ் ரேங்க் 2. அரையாண்டிற்குப் பிறகு பீட்டர் சார் என்னை ஆங்கில கட்டுரைகள் திருத்தும் வேலையை என்னிடம் கொடுத்தார்.

7ம் வகுப்பு அறிவியல் சார் ஜேம்ஸ் ஸ்டீபன். வெகு உயரம். அப்பொழுது பிரபலமாயிருந்த tvs champ ல் வருவார். உட்கார்ந்து கொண்டே ஸ்டாண்ட் போடுவார். அதைப் பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டமிருக்கும். அவர் பக்கத்து க்ளாஸில் இருக்கிறாரென்றாலே அந்த வரிசை முழுதும் அமைதியாயிருக்கும். அவர் நமக்கு வரமாட்டாரா என்ற ஏக்கம் 6ம் வகுப்பிலிருந்தது. 7ம் வகுப்பில் அறிவியலுக்கு வந்தார். அடி பம்ப் எப்படி வேலை பார்க்கிறது என்ற பாடம். ஒரு பையனை வாயில் தண்ணீர் ஊற்றி வாயில் சேகரித்து வைத்துக்கொண்டு குனியச் சொன்னார். முதுகில் அடித்தார். அவன் வாயிலிருந்த தண்ணீர் கொட்டியது. இது தான் என்றார். அவரது வகுப்பு மாணவர்கள் முடி அதிகம் வைத்திருக்கக்கூடாது. நகம் வெட்டியிருக்க வேண்டும் செருப்பு அணிய வேண்டும். சட்டை சுத்தமாயிருக்க வேண்டும். இப்படி சுத்தத்தை , ஒரு ஆளுமையை உள் செலுத்தினார்.

விளையாட்டு டீச்சர் அந்தோணி. பொதுவாய் PET  டீச்சர் என்றாலே ஒரு பயம் இருக்கும். அந்தோணி டீச்சர் பயங்கரம். பொதுவாய் விளையாட்டுப் பாடபிரிவில் கால்பந்தை வாங்கிவிட்டு வருவோம். மைதானத்திற்கு வரவேமாட்டார். திடீரென ஒரு நாள் வந்து நாளை புல் அப்ஸ் டெஸ்ட் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
புல் அப்ஸ் என்றால் என்ன......ஒரு இரும்பாலான போஸ்ட் இருக்கும். அதன் பக்கவாட்டு கம்பியில் ஏறி குறுக்கு நெடுக்குமாயிருக்கும் கம்பியில் தொங்கி , உடல் எடையை கம்பிக்கு மேல் இழுத்து தலையை கொண்டுபோக வேண்டும்.
இந்த விசயத்தில் கடைசி பெஞ்ச் பசங்க கெட்டி. நானுலாம் அந்தகாலத்தில் தயிர்சாதம் ரேஞ்ச். 20 திருக்குறளை அப்படியே சொல்வேன். ஆனால் கம்பியில் ஏறுறது தொங்குறதுலாம் தெரியாது. ஆனால் அந்த கடைசி பெஞ்ச் பசங்களால் என்னைப் போன்றோரைப் பழிவாங்கும் நேரம் இதுதான். "போச்சுடி...புல் அப்ஸ் எடுக்கலாட்டி நாள் முழுக்க அந்தோணி உன்ன தொங்கவிடுவார்டி.......தொங்கவிட்டு கால்ல பிரம்பால அடிப்பாருடி..." னு கத விட்டானுக....
பள்ளி முடிந்ததும் 3 முறை ஏற முயற்சித்து ஒரு முறை ஏறி தொங்கத்தான முடிந்தது.
அடுத்த நாள் விடிந்தது. விளையாட்டுப் பாட்வேளை னாலே ஓடும் எனக்கு அன்று அவ்வளவு பதட்டம். ஏதாவது காய்ச்சல் வந்து லீவு போடலாம்னு பாத்தா காய்ச்சலும் வல்ல....விளையாட்டு பாடவேளை வந்தது...அந்தோணி சார் ஒரு பெரிய நோட்டுடன் வந்தார். நாங்களெல்லாம் மைதானத்தில் புல் அப்ஸ் போஸ்ட் அருகில் வரிசையாய் அமர்ந்திருந்தொம். நல்ல வேல அவர் கையில் பிரம்பு இல்ல னு நினைக்கிறப்ப....கடைசி வரிச லெட்சுமணன் ன்ற பையன் வேப்ப மரக் குச்சியை உடைச்சுக்குவாரு பாருனான்....
முதல் முறையாய் புல் அப்ஸ் எடுக்காம் இருக்குற பையனுக்கு என்னா ஆகும்னு பாத்தேன்....நல்ல வேல அடிக்கல...தப்பிச்சேன் அந்தோணி சார்ட்ட....

8ம் வகுப்பு கிறிஸ்டோபர். கணக்கு டீச்சர். அந்த வருடத்திற்கு முந்தைய வருடம் தான் வேலையில் சேர்ந்தார். நெடு உயரம். கருப்பு கலர். நல்ல முடி. அமைதியான ஆள். திட்டமாட்டார். புரியவில்லை என்ற பேச்சுக்கே அர்த்தமில்லை. அப்படி நடத்துவார். அதிகமாய் 100 மார்க் கணக்கில் எடுத்தது அப்பொழுதுதான். சென்ற வாரம் ஆரப்பாளையத்தில் வண்டியில் குறுக்கிட்டார். நானும் வளைந்து அவரைப் பின் தொடர்ந்து சென்று பேசிவிட முயன்றேன். சிக்னலில் தவற விட்டுவிட்டேன்.  எனக்குப் பிடித்த சின்சியர் ஆசிரியர்.

9ம் வகுப்பு. இப்பொழுதுதான் பல மாற்றங்கள். முதல் சந்தோசம்- முழுகால் சட்டை யூனிபார்ம். இரண்டாவது பார்ப்பதற்கு அப்பொழுது நடிகர் சுரேஷ் மாதிரி இருக்கும் எங்கள் லூயிஸ் சார். அவர் தான் ஆசிரியர். நல்லா படிக்கும் மாணவர் மட்டும் அவரது வகுப்பிற்கு லீடராயிருப்பான். வகுப்பாசிரியர் வேறொரு லீடரை நியமித்தாலும் அவரது வகுப்பிற்கு வேறொரு லீடர். அவரது வகுப்பிற்கு நான்.
 வகுப்பாசிரியர் சூசைமாணிக்கம் அய்யா. தமிழாசிரியர். எனக்கு அவரைப் பிடிக்கும் ஒரு விசயத்தைத் தவிர. ஒருமுறை விடைத்தாளில் பெற்றோர்கள் நேரில் வந்து கையொப்பமிடவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
என்னால் வர இயலாது. பேப்பரை வாங்கிவா..கையொப்பமிடுகிறேன் என்று அப்பா சொல்ல , எனக்கு அந்த அய்யாவிடம் சொல்ல பயம். அடுத்த நாள் அப்பாவை அழுத்த, அப்பாவும் அன்று மாலை பள்ளிக்கு வந்தார். வந்த பிறகு தான் தெரிந்தது. அப்பாவும் சூசைமாணிக்கம் அய்யாவும் தெரிந்தவர்கள் இருவரும் தமிழாசிரியர்கள் என்பதால். அவர் "ஏன் அய்யா வந்தீங்க .உங்க பையனு சொல்லியிருந்தா பேப்பர கொடுத்துவிட்டுருப்பேனே..னு சொல்ல...அப்பா தான் " இவன்ட சொன்னேன். இவன் கேக்கல...வந்தே ஆகனும்னு சொல்லிட்டான்..."
அப்பத்தான் சூசைமாணிக்கம் அய்யா ஒரு பஞ்ச் டயலாக் அடிச்சார்... "பழனிக்குமார்- உனக்கு சுய அறிவே இல்லை...."இது நடந்தது 1993. ஆனால் போனவாரம் கூட அப்பா இதை மேற்கோள் காட்டி திட்டினார்.....அந்த அளவிற்கு சூசை மாணிக்கம் அய்யா போட்ட நங்கூரம் வேலை செய்கிறது.

10ம் வகுப்பு வகுப்பாசிரியர் G.I அதாவது G. Irudhayaraj.  அதைச் சுருக்கி ஜி.ஐ. என்று சொல்வது வழக்கம். தினம் 5 வார்த்தைகள் ஆங்கில அகராதியைப் பார்த்து எழுதி வர வேண்டும். புதிய வார்த்தைகள் படிக்க அது வசதியாயிருந்தது. நான் படித்தது 10F.  அடுத்த வகுப்பறை 10G. அது ஆங்கிலமீடியம் வகுப்பறை. ஆங்கில மீடிய வழிப்ப்யிலும் ஒரே வகுப்பறை. அதுதான் முதல் பேட்ச் ஆங்கில வழியில் பொதுத்தேர்விற்குத் தயாராவாது. ஆதலால் அதற்கெடுத்த ஆசிரியர்களுக்குச் செல்லம்.  ஒரு தலைமை ஆசிரியர் 2 நாட்கள் விடுமுறை என்று அறிவிப்பு கொடுக்க பக்கத்து அறையில் பெஞ்சை தட்டி ஆரவாரம் செய்ய, அந்த சத்தம் ஆசிரியர் இல்லாத எங்கள் அறையிலிருந்து தான் வந்தது எனச் சொல்ல எங்கள் வகுப்பு மாணவர்களை நடு மைதானத்தில் முழங்கால் போடச் சொன்னார்கள். பொத்தாம் பொதுவாய் தலைமைஆசிரியர் மைக் மூலமாக அந்த அறிவிப்பு அளித்தது எங்களுக்கு வருத்தமாயிருந்தது.  நாங்கள் முழங்கால் போட்டிருந்தோம். எங்கள் வகுப்பாசிரியர் ஜி.ஐ வந்தார். செய்தீர்களா என்றார். இல்லை என்றோம். மன்னிப்பு கேட்காதீர்கள் என்றார். மன்னிப்பு கேட்காமல் அப்படியே இருந்தோம். விளையாட்டுத்துறை ஆசிரியர் வந்தார். மன்னிப்பு கேட்டுவிட்டு செல்லுங்கள் என்றார். நாங்கள் மறுக்க, பிறகுதமிழாசிரியர் அப்புறம் ஜி.ஐ சார் சொல்ல எழுந்து சென்றோம். ஜி.ஐ சார் எங்களுக்குப் பிடிக்கும்.

9ம் வகுப்பு 10ம் வகுப்பு படிக்கையில் தான் பள்ளிக்கூட வராண்டாவில் செருப்புச் சத்தம் கேட்காதபடி நடைபயில வேண்டும் என்பது தெரிந்துகொண்டேன்.
அந்த காலத்தில் I.I ( I. Irudhayaraj) என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு மாதிர்யானவர் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர் எங்கள் வகுப்பிற்கு வரவில்லை. ஆனால் அவருக்கு வணக்கம் சொன்னால் கூட அழைத்துத் திட்டுவார் என்று மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பலமுறை அவரை நான் நேரில் தனியாய் வராண்டாவில் செல்லும்பொழுது பார்த்திருக்கிறேன். வணக்கம் சொல்லியிருக்கிறேன். நல்ல சிரிப்புடன் மறு வணக்கம் சொல்வார்.
நமக்கு வராத ஆசிரியர்களுக்கும் வணக்கம் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதும், அவர்களும் ஆசிரியர்களே என அவர்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்பதை ஐ.ஐ சார் எனக்கு எந்த பாடமும் நடத்தாமல் நடத்திக்காட்டினார்.......

இன்னும் தொடரும்........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....