விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 3

பழனிக்குமார்
மதுரை

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் இரண்டு பாகங்கள் எழுதியதில், சில நண்பர்கள் மிகவும் கனமாய் எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். 
மகிழ்ச்சியான தருணங்களை எழுதிவிடலாம் தான். 

ஆனால், துறை சார்ந்த நகைச்சுவைகள் அந்தந்தத் துறையினருக்கு மட்டுமே புரியும். அதையும் மீறி சில நிகழ்வுகள் உணரப்படலாம்.ஆனால் எழுத மனம் லயிக்கவேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பின் அப்படி எழுதலாம். 


நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில்  கிராமப்புறத்தில் ஒரு மருத்துவமனைக்குத் தொழில் நிமித்தமாகப் போயிருக்கிறேன். சித்தா ஆயுர்வேதம் மற்றும் மிக முக்கியமாக வர்மக் கலை மூலமாக நோய்களை நீக்கும் சிகிச்சை மையம் அது. ஆயுர்வேதச் சிகிச்சைக்கு மக்கள் வரத்தயங்கும் காலகட்டத்தில் அங்கு உள்நோயாளிகள் பிரிவோடு அந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 

 தூரப் பிரதேசங்களுக்கு இரண்டு மூன்று கம்பெனிகளின் ரெப் கள் சேர்ந்து ஒன்றாய் போவது வழக்கம். அப்படி ஒரு முறை அந்த மருத்துவமனைக்குப்  போனால் , நோயாளிகளைப் பார்க்கத் தாமதம் ஆகும் என நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே என்னையும் இன்னொரு கம்பெனி ரெப்பையும் உள்ளே அழைத்துவைத்துப் பேசிக்கொண்டிருந்தார் மருத்துவர். 

ஒரு கிராமத்து நோயாளிக்குடும்பம் மருத்துவரைப் பார்க்க வந்திருந்தது.
ஒரு பாட்டியை, அவரது மகள், மருமகன் அழைத்துவந்திருந்தார்கள். 
பாட்டிக்கு வயது   அறுபதோ அதற்கு மேலோ இருக்கலாம். உத்தேசம் இல்லை. 
நெஞ்சுக்குழி குத்துகிறது . எதைச் சாப்பிட்டாலும் புளிச்ச ஏப்பம் வருது. நைட்டு படுத்தா நெஞ்சு வலிச்சுட்டே இருக்குனு பாட்டி சில கம்ப்ளைண்டுகளை அடுக்கியது. 

மருத்துவர் பல்ஸ் பார்த்தார். (அது நாடி எனப் பின்னாளில் தெரியவந்தது)

பாட்டியைத் திரும்பி உட்கார வைத்து பின்னந்தலையில் முடிகளுக்குள் விரல்களை நுழைத்து, பாட்டி பின்னியிருந்த முடியை அவரே பிரித்தார். சட்டென தலை முடிக்குள் விரலை நுழைத்து,  கபாலத்தில் ஒரு நரம்பை பிடிச்சு இழுப்பது போல் இழுத்தார். பாட்டி எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவர் அப்படியே கண்களை மூடிக்கொண்டது. நான் என்னுடன் வந்த இன்னொரு கம்பெனி ரெப் அண்ணனின் முழங்காலை டாக்டருக்குத் தெரியாமல்  தட்டி, ' என்ன நடக்கிறது' என்று சிக்னலில் கேட்டேன். அந்த அண்ணன், கண்களால் இரு இரு என்றார். 

வலது கபாலம், இடது கபாலம் எனச் சுண்டி இட்டவர் எப்படி இருக்குனு பாட்டியிடம் கேட்டார். நல்லாருக்கு சாமினு கண்களை மூடிக்கொண்டே பாட்டி சொன்னது.  

மருத்துவர் பாட்டியின் மகளை அருகில் அழைத்து பாட்டியின் முதுகு பக்கம் ப்ளவுஸை தூக்கிப்பிடிக்கச் சொன்னார். அந்த அக்கா தூக்கிப்பிடித்தது. 

மருத்துவர், பாட்டியிடம் , ' ஆத்தா, மூச்ச நல்லா இழு என்றார்.
 பாட்டி மூச்சை இழுத்தது. 
"நெஞ்சுக்குழி வலிக்குதா ஆத்தா" என்றார். 
'ஆமாம் சாமி' என்றது பாட்டி. 

அக்கா பாட்டியின் முதுகுபக்கம் துணியைத் தூக்கிப்பிடிச்சதும் , மருத்துவர் பாட்டியின் முதுகில் விரல்களால் எதையோ துழாவி ஒரு நரம்பைப் பிடிச்சு இழுத்தார். பாட்டி 'இஸ் இஸ் இஸ்'என மிளகாயைக் கடித்தபடி இழுத்தது. 

" ஆத்தா, மூச்ச இழு ஆத்தா" என்றார் மருத்துவர். 
பாட்டி, மூச்சை இழுத்தது. 

" வலிக்குதா, ஆத்தா,,"
" இல்ல சாமி, இல்ல சாமி.." எனக் கத்தியது பாட்டி..

இப்பொழுது மருத்துவர் நரம்பை விட்டார். 

"இப்ப மூச்ச இழுத்து வலிக்குதானு சொல்லு ஆத்தா" என்றார்.
பாட்டி மூச்சை இழுத்து ஆமாம் சாமி வலிக்குது என்றது.

மறுபடியும் மருத்துவர் நரம்பைப் பிடித்து இழுத்தார், 
" இப்ப ஆத்தா...."
" வலிக்கல சாமி...வலிக்கல..சாமி" என்று கத்தியது.

இந்தச் செய்முறையை மருத்துவர் இரண்டு மூன்று முறை மகளையும் மருமகனையும் பார்த்தபடி செய்துகாட்டினார். மருமகன் பயபக்தியுடன் கைகளைக் கூப்பினார். 

"இந்த இடத்துல தான் வாயு பிடிச்சிருக்கு, எடுத்துரலாம்" என்றபடி மாத்திரைகளை எழுதினார். 

வெளியே வந்த நான், கூட வந்த அண்ணனிடம், " "அண்ணே...ஜகதலப்ரதாபனா இருக்கார்ண்ணேய்...கரெக்டா நரம்ப கண்டுபிடிச்சு இழுத்ததும் பாட்டிக்கு நெஞ்சுவலி நின்றுருச்சேண்ணே...உங்களுக்கு கூட முழங்கால் வலினு சொன்னீங்களே...காட்டுங்கண்ணே..சரி பண்ணிருவார்னு" சொன்னேன்..
" யோவ் நீ வேற, டாக்டர் பிடிச்சு இழுத்ததும் பாட்டி கத்துனத பாத்தேல..அதுக்கு நெஞ்சு வலிய விட அவர் பிடிச்சு இழுத்த நரம்பு வலி ஜாஸ்தியாயிருச்சு போல..அதான் நெஞ்சுவலி தெரியல னு கத்திருக்கு..." னார்...

"இருக்காதுண்ணே...டாக்டர்ட்டயே கேட்போம்ண்ணே...இவருக்கு மூட்டு வலி, வலிக்காம இவருக்கு ஏதாவது நரம்ப பிடிச்சுவிடுங்கனு கேட்போம்ண்ணே.." என்றேன்..
அவர், " பழனி , உனக்கு ஆர்டர், கீர்டர் வேணும்னா வாய பொத்திட்டு நடக்குறத வேடிக்க மட்டும் பாத்துட்டு வா, ஏதாவது எளவ கூட்டனும்னா, என்னைய விட்டுட்டு தனியா போய் கூட்டு" என்றார். 


"அண்ணே..உங்க முழங்கால் வலி...ய சரி பண்ணிரலாம்னு..." இழுத்தேன்..
" ஐயா, சாமி எனக்கு முழங்கால் வலியே போதும்...நரம்புவலிய இழுத்து வச்சுக்கவிரும்பல....னார்.

இதில் ஒரு தொழில் ரகசியம் வேறு இருந்தது. அந்த மருத்துவர் எங்க கம்பெனி தயாரிப்பில் வலி மாத்திரையைப் பரிந்துரைப்பவர். 

"அண்ணே! நீங்க மட்டும் அவர்ட்ட கால காட்டுனா, எனக்குக் கொஞ்சம் ஆர்டர் கிடைக்கும்னு பாத்தேன்.."னு சிரித்தேன்.

அந்த அண்ணன் மிக நல்லவர். அந்த மருத்துவமனைக்கு அதற்குப் பிறகு என்னுடன் வரவில்லை..

##விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 3
##medicalrepnotes


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....