விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9

 பழனிக்குமார்

மதுரை

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 9

நான் வேலை பார்த்த நிறுவனம் மூடப்போகிற தருவாயில் இருந்தது. என் உடன் வேலைபார்த்தவர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திலேயே தஞ்சம் அடைய நானும் என் பயோடேட்டாவுடன் ஒரு வருட அனுபவத்தைக் குறிப்பிட்டு மும்பைக்கு ஃபேக்ஸ் செய்துவிட்டு, தமிழ்நாட்டு ரீஜீனல் மேனேஜருக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவரோ, மதுரையில் ஏற்கனவே இரு நபர்களை நியமித்துவிட்டோம். கோவைக்குப் போகிறாயா என்றார். முடியாது என்று மறுத்துவிட்டாலும் இரு நாட்கள் கழித்து மும்பையிலிருந்து ஃபோன். 


மூன்றாவது நபராக என்னை மதுரைக்குத் தேர்ந்தெடுத்து மும்பையில் பயிற்சி தந்தார்கள். பயிற்சி முடித்து நான் ட்ரெயின்ல் வந்துகொண்டிருக்கும்போது தான் தமிழ்நாட்டு மேனேஜருக்கு இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். 

அப்படி, என் நியமிப்பில் ஆரம்பமாகியது எங்கள் ரீஜினல் மேனேஜருக்கும் ( தமிழ்நாடு) ஜோனல் மேனஜருக்கும் வாய்க்கால் தகராறு. ஜோனல் மேனேஜர் என்பவர் ஆந்திரா தமிழ்நாடு கேரளா க்கு மேலதிகாரி. மதுரை க்கென ஏரியா மேனேஜர் இல்லை என்பதால், ரீஜீனல் மேனேஜரே எங்களுக்கு வந்துகொண்டிருந்தார். 

 அந்த மருத்துவர் மதுரையில் மிகப்பெரிய மருத்துவர். அவரிடம் என்ட் ரி வாங்குவது என்பது ஒவ்வொரு கம்பெனிக்காரனுக்கும் ஒரு பெரிய அஜெண்டா வாக இருக்கும். என் உடன் வேலைபார்த்த சீனியரும் எங்கள் மேனேஜரும் அந்த மருத்துவரை மாங்கு மாங்கு என்று மூன்று மாதங்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். 'இன்னும் ஒரு விசிட் தான்டா பழனி, அடுத்த விசிட் ல அனேகமா ஆர்டர் கிடைச்சிரும்' என்று சீனியர் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மாதம் எங்களுக்கு ஜோனல் மேனேஜர் விசிட். மேலதிகாரி வந்ததும் அவரை ப்ரைம் டாக்டர்களாய் கொண்டு போய் நிறுத்துவது வழக்கம். ஆதலால், என் சீனியர், அந்த மருத்துவரிடம் போய் நிறுத்த, மருத்துவர் அன்றைக்கு என்ட் ரி கொடுத்துவிட்டார். எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம். 

ஆனால் அந்த மாதம் நடந்த மேலாளர்களுக்கானக்கூட்டத்தில் ஜோனல் மேனேஜர், எங்கள் ரீஜினல் மேனேஜரிடம், ஒரே விசிட்ல மதுரைல அந்த மருத்துவரிடம் ஆர்டர் எடுத்தேன். நீங்க இத்தனவாட்டி போய் என்ன பண்ணீங்க என்று கேட்டுவிட்டார். ஏதோ அவர் ப்ளான் பண்ணி பண்ணியதாகவும், எங்கள் ரீஜீனல் வேலை செய்யாதமாதிரியும் நிர்வாகஸ்தர்கள் முன்னிலையில் பில்டப் கொடுத்துவிட்டார்.

மீட்டிங்கின் டீ ப்ரேக்கில் நடந்ததை எங்கள் மேனேஜர் எங்கள் சீனியரிடம் ஃபோனில் சொல்ல எங்களுக்கு வருத்தம். உழைத்தது, ப்ளான் பண்ணியது எல்லாம் எங்கள் சீனியரும் எங்கள் மேனேஜரும் தான். ஆனால், பெயர் ஜோனலுக்குப் போனது. இதைச் சாக்காக வைத்து, மதுரை போனால் அடிக்கடி ஆர்டர் எடுக்கலாம் என்று அடுத்த மாதமும் ஜோனல் வருவதாய் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை அவரை வைத்துச்செய்துவிட வேண்டும் என்று நாங்கள் மூவரும் அடிக்கடி சாப்பிடும் டீ க்கடையின் விளங்காத டீ மேல் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதிலும் எனக்கு அவர் மேல் ஒரு தனிப்பட்ட வெறி இருந்தது. அவர் போன முறை வந்த போது என்னுடன் வேலைக்கு அவரை அழைக்கப்போயிருந்தேன். அவர் உ.பி யில் பிறந்து ஆந்திராவில் செட்டில் ஆனவர். அப்பொழுது என்னிடம் பஜாஜ் எம் 80 வண்டி இருந்தது. விடுதியிலிருந்து வந்தவர், இது என்ன வண்டி என்றார். 

பஜாஜ் எம் 80 என்றேன். அப்படி ஒரு வண்டியா என்றார். 

ரட்சகன் படத்து நரம்புகள் தெறிக்கும் சீன் எனக்குத் தெரிந்தன. 

நான் இந்தியா முழுக்க வேலை செய்திருக்கிறேன், இப்படி ஒரு வண்டியை நான் பார்த்ததில்லை , டபுள்ஸ் போகலாமா, இழுக்குமா என்றார். அதோடு விடவில்லை. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியின் நடுவே நின்றுகொண்டு என் லட்சுமி எம் 80யை இரண்டு முறை சுற்றிச்சுற்றி வந்து நக்கலாகச் சிரித்தபடி அமர்ந்தார். அப்படியாக என் லட்சுமியின் தன்மானத்தையும் அவர் சுரண்டி வைத்திருந்தார். நானே என் சீனியர்களிடம் கேட்க, அவர் வந்த முதல் நாள் வேலை என்னுடன் வைத்துக்கொள்வோம் என்று ஸ்கெட்ச் போடப்பட்டது. 

ஜோனல் வந்ததும் காலையில் சீனியரை அழைத்து அவர் ஆர்டர் எடுத்த டாக்டரை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று கூற, காலையில் அவரும் மாலையில் நானும் ஒதுக்கிக்கொண்டோம். பதினொரு மணிக்கு அழைத்துக்கொண்டு போய் அந்த மருத்தவமனையில் சாத்தியவர் தான். மருத்துவர் நான்கு மணிக்குத்தான் பார்த்திருக்கிறார். ஜோனல் தன் விசிட்டிங்கார்டைக் கொடுத்து போனமுறை வந்த ஜோனல் எனச் சொல்லச்சொல்லியிருக்கிறார். நீ முதலாளிய கூப்டு வந்தாலும் நோயாளிகள பாத்துட்டுத்தான் உனைய பாப்போம், கூப்ல போய் உட்கார் என்று பதில் வந்திருக்கிறது. 

 இடையில் இடையில் என் சீனியரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். என்ன ஆனது என்று. நான் எதும் பண்ணல பழனி, எல்லாம் தன்னால நடக்குது, என்றார் சீனியர்

ஒவ்வொரு நோயாளியாக வர, டீ சாப்பிடவோ மதிய உணவுக்கோ வழி இல்லை. நான்கு மணிக்கு மருத்துவரைப் பார்த்துவிட்டு மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு ஐந்து மணிக்கு ஜோனல் அவர் அறைக்குச் செல்ல, ஐந்தரை மணிக்கு நான் வரேன்டி மாப்ளேய் என்ற தொணியில் நான் ஃபோன் செய்தேன். 

மதுரைக்குப் புறநகரில் ஒரு குழந்தை மருத்துவர் இருந்தார். நெடுநாட்களாய் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் எழுதியபாடு இல்லை. வாருங்கள் சாப், படா படா டாக்டர், படா படா சேல், ஆயிஏ சாப் என்று என் எம் 80ல் வைத்துக்கொண்டு போனேன். குழந்தைகளுக்குத் தொண்டையில் சளி படிமத்தைப் பரிசோதிக்கும் thumb depressor உடன் ஒரு டார்ச் லைட் இணைத்து  டாக்டர்களுக்கு நினைவுப்பரிசாகத் தரும்படி கம்பெனி அனுப்பியிருந்தது. டார்ச் லைட்டின் ஒரு முனையில் thumb depressor குச்சியைச் சொருகி அமுக்க டார்ச் ஆன் ஆகும் படியானச் சாதனம். அதைக் கையில் வைத்துக்கொண்டு அந்த மருத்துவர் அறைக்குள் நுழைந்தோம்.

 அந்த மருத்துவர் அறையில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் அதிக நேரம் எடுக்கக்கூடாது, மருந்துகளின் பெயரை மட்டும் சொன்னால் போதும் . உன் விளக்கம்லாம் வேண்டாம் என்று தான் விதி அங்கு. குழந்தைகளுக்குப் பசி எடுக்க வைக்கும் ஒரு மருந்தை நான் சொல்ல, நம் ஜோனல், அந்த மருந்தின் மெக்கானிசத்தை விளக்க ஆரம்பித்தார். 

எதிரே இருந்த மருத்துவருக்கு புலி ஜாடை தெரிய ஆரம்பித்தது. நான் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டேன். அது ஓர் ஆயுர்வேத மருந்து என்பது ருசியான விசயம். அந்த மருந்தின் மூலப்பொருட்களைப் பார்த்த மருத்துவர், இது எப்படி வேலை செய்யுதுனு உங்களுக்குத் தெரியுமா எனத் தமிழில் கேட்டார். ஜோனல் என்னிடம் மொழிபெயர்க்கச் சொல்ல, மெக்கானிசத்த சொல்லுங்க ஜீ என்றேன். 

ஜோனல் அந்த செக்மெண்ட்டில் வீக் என்பது நாங்கள் அறிந்தது.ஜோனலின் குறுகிய கண்கள் அகன்றன. மருத்துவருக்குச் சிரிப்பு வந்தது. எந்த ஊர்டா தம்பி, உங்காளு என்றார் தமிழில். எல்லாம் வடக்க தான் டாக்டர், ஆனா ஒண்ணும் தெரியாது என்றேன். மருந்து பாட்டிலில் இருந்த சம்ஸ்க்ருத மூலிகைகளின் பெயருக்கு இது என்ன வகை தாவரம் என்றார் என் ஜோனலிடம். என் ஜோனல் அது ஒரு மூலிகை - பசி எடுக்கும் என்றார். அதான், எப்படி பசி எடுக்குது என்றார் மருத்துவர். கிட்டத்தட்ட ஒரு இன்டர்வ்யூ மாதிரி இருந்தது எனக்கு. ஜோனல் ம்யூட் நிலைக்குப் போனார். 

நான் அந்த மூலிகையின் தாவரவியல் பெயரைச் சொல்லி விளக்க, மருத்துவர் அவரது ஆங்கிலத்தில் , i write for him , he knows it . என்றார். அந்தச் சந்திப்பு அப்படியே முடிந்திருக்கலாம். வந்தது வினை. ஜோனல், thumb depressor எடுத்து எப்படிக் கையாள வேண்டும் என க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார். புலிக்கு மீசை துடிப்பது அச்சு அசலாகத் தெரிந்தது. லைட் எப்படி எரியும் தெரியுமா, என்று குச்சியைச் சொருகி ஜோனல் தன் உள்ளங்கையில் அமுக்க, குச்சியும், அது சொருகிய டார்ச் லைட்டின் ஸ்விட்ச்சும் மூன்று திசைகளில் தெறித்து பறந்துவிழுந்தன. 

'யோவ்...இப்டி பண்ணி குழந்தைய தொண்டைல குத்தவா...என்று ஆங்கிலத்தில் புலி அடித்தது. clean it and go away என்று கத்தினார். நான் என் கால் அருகில் விழுந்த குச்சியை எடுக்க, ஜோனல் மருத்துவருக்கு அருகில் விழுந்த ஸ்விட்ச் எடுக்கத் தயங்க, பயப்படாத பாஸு, என்ற தொணியில் நானே அதை எடுத்துவிட்டு, தேங்க்யூ டாக்டர் என்று சிரித்தேன். 

என் ஜோனல் திரும்பி, அறைக் கதவைத் திறக்க, நான் மருத்துவர் பக்கம் திரும்பி, ' டாக்டர், அந்த சிரப் நான் ஸ்டாக் வச்சிரலாம்ல, எனக்காகத் தான் எழுதுறேனு சொன்னீங்க என்று சிரித்தேன்.

புலி புன்முறுவல் தந்தது...


##விற்பனைப்பிரதிநிதியின்தனிக்குறிப்புகள்

##medicalrepnotes

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8