விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5

 விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 5


வேலை பார்த்த கம்பெனியில் கமிஷன் முறைக்கு மாற்றியதும் ஏகப்பட்டக் குழப்பங்கள். சம்பளம், allowance எல்லாம் குறைந்தது. ஏற்கனவே அப்பாவின் ஒரு பழைய மாணவர், நீ மெடிக்கல் ரெப் ஆவதற்கு  LIC ஏஜெண்ட் ஆகியிருக்கலாம்ல என்றுவிட்டு போயிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு எல் ஐ சி ஏஜெண்ட். ஒருமுறை வீட்டுக்கு வந்தவர் சூரியவம்சம் படத்தில் சரத்குமார் பெரிய ஆள் ஆனதுபோல் அவர் வாழ்க்கை ஆனது என்று சொல்லிவிட்டுப்போனார். அவர் பேசி முடிக்கும்பொழுது எங்கள் அப்பாவின் முகத்தில் எல் ஐ சி யின் விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த அரைவட்ட லோகோ சாயல் இருந்தது. ஆனாலும் இனி மேல் (2003ல்) எல் ஐ சிலாம் யார் போடுவா என்று எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இது பத்தாது என்று, அப்போதைக்கு கம்பெனியின் அனைத்து ரெப் களும் இன்னொரு பெரிய கம்பெனியின் புதிய டிவிஷன் லான்ச் க்குச் சேர்ந்தார்கள். அங்கு சேர்ந்த கோயம்புத்தூர் ரெப், நீயும் அவர் சேர்ந்திருக்கும் கம்பெனிக்கு அப்ளை பண்ணு என்றார்.

முதலில் அந்தக் கம்பெனியின் மேனேஜரின் நம்பர் வாங்கி அவரிடம் பேசு என்றார்கள். அவர் எண்ணை அழைத்துப் பேச, மதுரையில் ஏற்கனவே இரண்டு ரெப் கள் அப்பாயின்ட் பண்ணியாச்சு, திருநெல்வேலி , கோவை வேகன்ட் போறீங்களா என்றார். வேண்டாம் என்று விட்டு, அந்தக் கோவை நண்பரை அழைத்து மதுரைல வேகன்ட் இல்ல என்றேன். எதுக்கும் மும்பைக்கு ஒரு ஃபேக்ஸ தட்டிவிடு பழனி என்றார். எப்ப வேகன்ட் வருதோ, அப்ப உன்னைக் கூப்பிடுவாங்க என்றார். ரெஸ்யூம் ரெடி பண்ணி எந்தெந்த ஊருக்குலாம் வேலைக்குப்போயிருக்கிறேன் என பட்டியல் போட்டு அனுப்பிவிட்டேன் . இரண்டு நாட்களாய் ஒன்றும் வரவில்லை. 

இது கதைக்கு ஆகாது என்றுவிட்டு, குழப்பம் முற்றியது. எல் ஐ சி ஏஜெண்ட் வேலையை சைடாகப் பார்த்திருந்தால் இந்நேரம் வருமானம் குறைஞ்சிருக்காதுல என்று அப்பா வேற கூறியிருந்தார். தெரிந்த ஒருவர் மூலம் எல் ஐ சி ஏஜெண்டாக ஆகிவிடலாம் என ஒரு டெவலப்மெண்ட் ஆபிஷர் நம்பர் கிடைத்தது. அவர் ஒரு சின்சியர் சிகாமணி. எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீர்கள், அவரே சொன்னார். முதல் அழைப்பிலேயே மறுநாள் கூப்பிடு என்றார். மறுநாள் அழைத்தேன். விவரத்தைச் சொன்னேன். மாலை கூப்பிடச்சொன்னார். அழைத்தேன்.இரவு அழைக்கச்சொன்னார். 

அழைத்தேன். 

உண்மையிலேயே வேலைக்கு அக்கறையா கூப்பிடுறியா என்பதைச் சோதிக்கத்தான் இத்தனை முறை அழைக்கச்சொன்னேன் என்றார். பிறகு தான் அப்பவே இன்டர்வ்யூ ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்தது. மறுநாள் கே கே நகரில் ஒரு டீக்கடையில் நேர்முகத்தேர்வு என்றபடிக்கு அழைத்தார். 

அந்தக் கடையில் நான்கு மணி நேரம் பேசினோம். மூன்று டீ கள் வாங்கிக்கொடுத்தார். அவர் நான்கு டீ குடித்தார். நான்காவது டீ வேண்டுமா என்றபோது என் வயிற்றுக்குள் ஒரு எலிக்குட்டி ஓடுவது போல் உணர்ந்தேன். ஆதலால் வேண்டாம் என்றுவிட்டேன். 

என் கதையைக் கேட்டார். அவர் எப்படி டெவலப்மெண்ட் ஆபிஷர் ஆனார் என்று கூறினார். அது ஒரு படையப்பா படத்தில் வரும் வெற்றிக்கொடிகட்டு பாட்டு தான். முதல் பத்தியில் வந்த சூரியவம்சத்தைவிட கொஞ்சம் சுவாரஸ்யம் தான். டீ கிடைத்ததால் அப்படித்தோன்றியிருக்கலாம். 

அவர்க்குக் கீழ் இருக்கும் எல் ஐ சி ஏஜெண்ட்கள் திறமையானவர்கள் என்றார். அப்படித்தான் அவர்களை அவர் மாற்றியிருப்பதாகக் கூறினார். வேலையில் கெடுபிடியான ஆள் என்று சொல்லிக்கொண்டார். அவரது நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் அவர் கையெழுத்துப்போட்டு பரிந்துரைக்கும் ஹோம்லோன் அப்ளிகேஷன் கள் நிராகரிக்கப்படமாட்டாது என்றார். அந்தளவிற்குத் தொழில் பக்திகொண்டவர் என்றும் தெரிந்தது. இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், எல் ஐ சி ஏஜெண்ட்டாய் என்னிடம் சேர்ந்துவிட்டால் சின்சியரா இருக்கனும், பாதிக்கு மேல் ஓடிரக்கூடாது என்றார். கிட்டத்தட்ட அட்டென்ஷனில் என் சி சியில் நின்றபடிக்கு உறுதிமொழி எடுத்தது ஞாபகம் வர அப்படிலாம் இல்ல சார் என்று கூறினேன்.

உனக்கு எல் ஐ சி ஆபிஷ் தெரியும்ல, நாளைக்குக் காலை 11 க்கு வந்துரு..எனக்கு டைம் முக்கியம் என்றார். 

சரிங்க சார். என்று கிளம்பிவிட்டேன். மறுநாள் கிளம்ப என் வண்டி பஞ்சர். அதைக் கழற்றி வேலை பார்க்கத் தாமதம் ஆகும் என்று, நண்பனை அழைத்து எல் ஐ சி ஆபிஷில் இறக்கிவிடு என்றுவிட்டேன். பல முறை எல் ஐ சி போர்டை செல்லூர் சாலையில் பார்த்த ஞாபகம். பத்தரை மணிக்கே ஆபிஸில் இறங்கி நண்பனை போகச்சொல்லிவிட்டேன். பில்லா படத்தில் அஜித்தின் வசனம் இருக்கும். சீக்கிரமா போனா அதிகங்கப்பிரசங்கினு ஆயிரும். லேட்டா போனா உருப்படாது னு ஆயிரும்னு அரைமணி நேரம் கழித்து அவருக்கு ஃபோன் பண்ணா, நான் நின்றது வேறொரு அலுவலகம், அவர் இருந்தது மெயின் ப்ரான்ச். என்னப்பா, நீ ஒரு எல் ஐ சி ஏஜெண்ட் , எல் ஐ சி ஆபிஸே தெரியலையா என்றார். கிட்டத்தட்ட என் பேச்சு என் கம்பெனியில் என் கதை எல்லாம் கேட்டு என்னை எல் ஐ சி ஏஜெண்ட் என்றே முடிவுசெய்துவிட்டார். வெளியே வந்து லிஃப்ட் கேட்டு ஓடி நடந்து மெயின் ப்ரான்ச் வந்து சேர்ந்தேன். 

மறுபடியும் ஒரு டீக்கடை. நீ எல் ஐ சி ஏஜெண்ட் ஆ பெர்ஃபார்ம் பண்ணுவேல என்றார். 

பண்ணுவேன் சார் என்றேன். 

நான் யாரையும் அவ்வளவு ஈஸியா ஏஜெண்ட்டா சேத்திரமாட்டேன், உன் பேச்சும் உன் அணுகுமுறையும் பிடிச்சிருக்கு, நீ பெர்ஃபார்ம் பண்ணுவனு நம்புறேன், வா , அப்ளிகேஷன்ல கையெழுத்து போடு, மதியமே ட்ரெயினிங்க் ல ஜாயின் பண்ணுனு உள்ளே கூப்பிட்டுப் போனார்.

ஓர் அலுவலரின் எதிரில் சேரில் அவர் அமர்ந்து என்னைப் பற்றி சொல்லி ஒரு ஃபார்ம் வாங்கி அதில் அவரது போர்ஷனை நிரப்பினார். 

எனக்கு ஃபோன் வந்தது. நம்பரைப் பார்த்தால் தெரிந்த நம்பராகத்தெரியவில்லை. கட் செய்தேன்.

அவர் அவரது போர்ஷனை நிரப்பிவிட்டு , ஃபார்மை என்னிடம் நீட்டி இதை நிரப்பிக்கொடு என்ற போது, மறுபடியும் என் ஃபோன் ஒலித்தது. 

சும்மா பேசுப்பா என்றார். 

அட்டெண்ட் செய்தால், மும்பையில் நான் அனுப்பிய ஃபேக்ஸைப் பார்த்துவிட்டு அந்தக் கம்பெனியின் மனிதவளத்துறை அதிகாரி ராபர்ட்.

அவரிடம் , இது பற்றியும் சொல்லியிருந்தேன். ராபர்ட்டை ஒரு நிமிஷம் என்றுவிட்டு, ஃபார்மோடு நின்ற அவரிடம், சார் மும்பை அந்த நிறுவனத்திலிருந்து ஃபோன் சார் என்றேன்...

என்ன பண்ணப்போற என்றார்...

பேசட்டுமா சார் என்றேன்..

கையில் மெடிக்கல் ரெப் வேலை, கண் முன் எல் ஐ சி ஏஜெண்ட் வேலை...

அவர் பேசு என்றார்.

மூன்றாவது நாளில் நாகர்கோயில்-மும்பை ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன்......


பழனிக்குமார்,

மதுரை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....