விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 2
மெடிக்கல் ரெப்பாகி சில மாதங்கள் ஆயிருந்தன. ஒரு கிராமத்திற்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வேலைக்குப் போகவேண்டும். அப்படி போகும்பொழுது என்னுடன் வேலை பார்த்த சீனியருடன் அங்கு இருந்த மருத்துவர்கள் , அதில் யார் யார் நம் கம்பெனிக்கு சப்போர்ட் செய்வார்கள், யாருக்கு potential அதிகம், எந்த மருத்துவர் எந்த மருந்துக்கடைக்கு எழுதுவார் , எந்தெந்த மருந்துக்கடைகளுக்கு டாக்டர் சீட்டு போகும் என்று பேசுவோம். அப்படி பேசும்பொழுது ஊருக்கு வெளியே ஒரு கிமீ தொலைவில் ஒரு ஸ்டாப் இருக்கிறது அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய கணவர் பெயர் போட்டிருக்கிறது ஆனால் அவரைப் பார்க்கமுடியவில்லை என்று என் சீனியரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், அவர் வேஸ்ட் பழனி, மூஞ்சிய கடுமையா வச்சுட்டே இருப்பார், பெரிய கம்பெனிக்குத்தான் எழுதுவார். நமக்குலாம் எழுதமாட்டார், பாக்கலாட்டி விடு என்றார்.
அந்தமுறை நான் சென்றபொழுது அந்த மருத்துவமனையில் அவர் இருந்தார். பெண் மருத்துவரைப் பார்த்துவிட்டு அவருக்கும் பார்க்க விசிட்டிங்க் கார்டைக் கொடுத்துக் காத்திருந்தேன். உள்ளே ஒரு நோயாளி கணவனும் , மனைவியும் இருந்தார்கள்.
கணவனுக்கு இரண்டு நாட்களாக நெஞ்சுவலி. படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். மூன்றாவது நாளில் தான் அவரது மனைவி அழைத்துவந்திருக்கிறார்.
பரிசோதனை செய்த அந்த மருத்துவர், அந்தப் பெண்ணைக் கடுமையாகத் திட்டினார். புருஷனை அப்படியே ரெண்டு நாள் போட்டுட்டு அவனைக் கொல்ல பாத்துருக்கியா, முந்தா நேத்தே கூப்டு வரத்தெரியாதா என்று கடிந்துகொண்டார்.மனைவி திக்கித்து நின்றார். புருஷன் செத்துட்டா என்ன பண்ணுவ. நடு ரோட்டுல நிக்குறதா என்றார். அதற்கும் அந்த மனைவி அமைதியாக நின்றார். இருவருக்கும் வயது எழுபது இருக்கும். கையில் காசு இருக்கா என்றார். ஏதோ அந்த மனைவி காண்பித்திருக்கும் போல. மருந்தயவாது வாங்கி கொடு என்று சொல்லி அனுப்பினார். கிராமங்களில் இதுலாம் உரிமையின் வெளிப்பாடு தான். ஆனால் எனக்கு என் சீனியர் சொன்னது ஞாபகம் வந்தது. அவர்கள் வெளியே வந்ததும் செவிலியர் உள்ளே சென்று அந்த நோயாளிகளுக்கு ஃபீஸ் எவ்வளவு என்றார். வாங்க வேண்டாம் என்றுவிட்டார். அதன் பிறகு நான் உள்ளே சென்று என் மருந்துகளை ப்ரோமோட் செய்தேன். ஒரு ஆயுர்வேதிக் தயாரிப்பில் பிரஸ்ஸர் மாத்திரை லான்ச் செய்திருந்தது கம்பெனி. அதைச் சொன்னேன். அது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டார். கம்பெனி சொல்லிக்கொடுத்ததைச் சொன்னேன். என்னால் நம்பமுடியாது என்றார். மறுமுறை கம்பெனி சொல்லிக்கொடுத்ததில் என் பாயிண்டுகளையும் சேர்த்து சொன்னேன். அவர் கண்களில் நம்பிக்கை இல்லை. சேம்பிள் தருகிறேன். ட்ரை செய்யுங்கள் என்றேன்.
நானே சாப்ப்டுக்கனுமா என்று கோபமாகக் கேட்டார்.
ஸ்ட் ரெஸ் இருந்தா யாருனாலும் போட்டுக்கலாம்ல டாக்டர் என்று பதிலளித்தேன்.
ஆனால் என் கிட் (kit) பையைத் திறந்தால் அந்த சேம்பிள் இல்லை. எனக்குக் கொஞ்சம் பயம் அதிகரித்துவிட்டது. ஆனால் அவர் திட்டவில்லை. அடுத்தமுறை தருகிறேன் டாக்டர் என்றுவிட்டு மற்ற மருத்துவர்களைப் பார்க்கக்கிளம்பிவிட்டேன்.
மதியம் இரண்டு மணியளவில் வேலை முடிந்து எல்லா சேம்பிள்களூம் தீரும் தருவாயில் பையின் அடியில் அந்த மாத்திரை கொஞ்சம் இருந்தது. ஊருக்கு வெளியே போகவேண்டும் என்றால் 1 கிமீ மறுபடியும் நடக்கவேண்டும். என்னமோ பட்டது. மறுபடியும் நடந்து வியர்த்து விறுவிறுத்துப் போனேன்.
பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். ஸாரி டாக்டர், கடைசில கடந்தது. இந்தாங்க னு கொடுத்துட்டு வந்துட்டேன்.
அந்த ஊருக்கு இருபது நாள் கழித்துப்போகவேண்டிய திட்டம் விடுமுறை தினமாக அந்த மாதம் போகமுடியவில்லை. எங்கள் மேனேஜர் ஃபோன் செய்தார்.
அந்த மருத்துவரைக் கடைசியாக எப்ப பார்த்த என்றார். சொன்னேன்.
மாத்திரை நன்றாக வேலை செய்கிறது. உங்கள் ரெப் பெயர் தெரியவில்லை. நல்ல முறையில் நம்பிக்கை தரும்படி புரோமோட் செய்தார். எனக்கு மறக்காமல் சேம்பிளும் தந்துவிட்டு போனார். நோயாளிகளுக்கு எழுதினேன். கடையில் ஸ்டாக் இல்லை என் கிறார்கள். அந்த ரெப்பின் உழைப்பு வீணாகக்கூடாது. உடனே ஸ்டாக் வைக்கச்சொல்லுங்கள். மருந்தை எழுதுகிறேன் என்று என் கம்பெனியின் தலைமையகத்தில் ஹைதராபாத்தில் ஜெனரல் மேனேஜர் நம்பருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அந்த நேரம் அந்த மாத்திரையை அதிகமாக விற்கவேண்டும் என்று கம்பெனி வேறு அழுத்தம் தந்துகொண்டிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவரே ஃபோன் செய்து அதுவும் ஹைதராபாத்துக்கே ஃபோன் செய்து ஸ்டாக் வைக்கச்சொல்கிறார் என்றதும் கம்பெனி குஷியாகிவிட்டது. எந்த ஊர் ரெப் கவர் செய்கிறான் என ஜெனரல் மேனேஜர் விசாரிக்கக் கடைசில் நான். என் மேனேஜர் என்னைப்பாராட்டி அடுத்த வாரம் போய் பாரு. ஸ்டாக் வை என்றார்.
மூன்று நாட்கள் கழித்து அந்த ஊர் பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் அந்த மருத்துவர் படம் போட்ட ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இருந்தது.
##விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள்...
கருத்துகள்
கருத்துரையிடுக