இஸ்கான் உணவு திட்டம்

இஸ்கானுக்கு காலை உணவு திட்டத்தைக் கொடுத்தது போக மதிய உணவுத் திட்டத்தையும் கொடுக்கவேண்டும் எனப் பரிந்துரையாம். நல்ல விசயம். நல்ல முன்னெடுப்பு. அரசு இந்தமாதிரியான புரட்சிகர நடவடிக்கைககளை எடுக்கும்போது நாம் ஆதரிக்கவேண்டும்.
நிற்க.
இரு தினங்களுக்கு முன் நண்பர் இளங்கோ பகிர்ந்த ந்யூஸ்18 விவாத வீடியோவில் ஜெயரஞ்சன் சார் சத்துணவுத் திட்டம் கடந்துவந்த வரலாறைக் குறிப்பிட்டார்..
1920களிலேயே ஜஸ்டிஸ் பார்ட்டி படிப்பு சொல்லிக்கொடுக்க அழைத்தபோது வராதவர்களை வரவழைக்க சோறுபோட்டு அழைத்தார்கள். பிரிட்டிஷ்காரன் ஒத்துக்கொண்டு சம்மதித்து பின் கைவிட்ட திட்டத்தைக் காமராசர் கையில் எடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் காலகட்டத்தில் திட்டக்குழுவுடன் சத்துணவத் திட்டத்திற்கான நிதி கேட்டு சண்டையிட்டு பிறகு கருணாநிதி ஜெயலலிதா என மெருகேறியது இந்தத் திட்டம்.
இதற்கிடையேயான ஒரு காலகட்டத்தில் உச்சநீதிமன்றமே தமிழ்நாட்டு சத்துணவுத்திட்டத்தை மாடலாகக் கருதி மற்ற மாநிலங்களில் நடத்த அறிவுரை கூறுகிறதாம்.
ஒரு சத்துணவுத்திட்டத்தில் அதற்கான கொள்முதல் பொருள் அதற்கான கிடங்கு பணியாளர் வாரியம் என இத்தனை பேருக்கு வாய்ப்பளித்து வெற்றியுடன் செயல்படுகிறது.
சத்துணவுத் திட்டம் கடந்து வந்த வரலாற்றைக் கழுகுப் பார்வையாய் சொல்லியிருக்கிறேன்.
விவரிக்கவேண்டுமேயானால் காமராசர் மற்றும் திராவிடக் கட்சிகளின் வெற்றி அது. பலன் தரக்கூடியத் திட்டங்களில் அதுவும் ஒன்று.
நட்டத்தில் இயங்கினால் தனியாருடன் கோர்த்துவிடும் மத்திய அரசின் சூத்திரங்களில் லாபத்துடன் இயங்கினால் கூட கோர்த்துவிடுவோம் என்பது புதிய கண்டுபிடிப்பு. அதுதான் இதிலும் நடக்கிறது.
அதெல்லாம் விடுங்கள். ஒரு திட்டம் திணறாமல் நடக்கும் பொழுது அதில் சர்ச்சைக்குரிய தனியாரைச் சேர்க்கக் காரணம் கேட்டால் சோறு யார் போட்டால் என்ன என்கிறார்கள்.
நல்லது செய்வோரை ஏன் தடுக்கிறீர் எனக் கேட்கிறார்கள். சரியானக் கேள்வி.
வள்ளுவர் கூட கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக்கெடும் எனச் சொல்லிக்கொடுத்து வளர்ந்த மக்கள் நாம். அவர்களை அனுமதிப்போம். ஆனால் வேறுவிதமாய்.

இப்படி செய்வோம். சத்துணவுத்திட்டம் எப்பொழுதும்போல் செயல்படட்டும். அதாவது அரசே நடத்தும்.
புதியதாய் தமிழகத்தில் கண்ணைத் திறந்து சேவையாற்ற வரும் இஸ்கானையும் புறக்கணிக்கவேண்டாம்.
உனக்கு சோறுதானே போடவேண்டும். வா நண்பா வா..
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிக்குச் சென்றிருக்கிறீர்களா.. இந்த விடுதி என்று இல்லை. எந்த விடுதிக்கும் செல்லுங்கள். சத்தான சாப்பாடுலாம் இல்லை. அங்கே போடுங்களேன் உங்கள் தியாகச் சோற்றை.
உறைவிடப் பள்ளியென மலைவாழ் குடும்பக் குழந்தைகள் மிகவும் பிற்படுத்தப்பட்டக் குழந்தைகள் இருப்பார்கள். அங்கே காட்டுங்களேன் உங்கள் கருணையை....
தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகள் செல்லுங்கள். வலியோடும் இரணத்தோடும் நோயாளிக்கூட்டம் இருக்கிறது. அங்கு அளியுங்களேன் உங்கள் பிரசாதப் படையலை.
உலகச் சுகாதார நாட்டாமை இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாய் பிறக்கின்றன என்று ஓர் அறிக்கையை முகத்தில் எறிந்திருக்கிறது. இஸ்கான் அன்பர்களே நீங்கள் சேவை செய்யும் உங்கள் பக்திக்கும் அன்பிற்குமுரிய உங்கள் தேசத்தில் இப்படி பிறக்கலாமா..வாருங்கள் எங்கள் தமிழகத்தில் அரசு சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் பொட்டு பணம் லாம் கொடுத்து இலவச மகப்பேறு நடக்கிறது. நீங்களும் கைகோர்த்து கர்ப்பிணிப்பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவளித்து உங்கள் பக்திக்குரிய தேசத்திற்கு ஆரோக்யமான குழந்தைகள் பிறக்க ப்ரார்த்தனை செய்யலாம்.

நாடெங்கும் புற்றுநோய் பரவி அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்தாலும் பணம் கட்டமுடியாமல் திணறுகிறது கூட்டம்.
நாம் என்ன செய்கிறோம் இஸ்கான் அன்பர்களே தமிழக அரசு- இஸ்கான் கூட்டு புற்றுநோயாளிகளுக்கான உணவாதார வாழ்வாதார வாரியம் அமைக்கிறோம். அவர்களை உங்கள் கூட்டாளி கண்டுபிடித்த ஆதார் கார்டோடு நம் வாரியத்தை இணைத்து புற்றுநோயாளிகள் மருந்திற்காகவும் மருத்துவத்திற்காகவும் அலைகழியலாம். ஆனால் உணவிற்கு...ஹரே ராமா...நாங்கள் இருக்கிறோம்..ராம ராம ஹரே..என விளம்பரம் செய்து புற்று நோயாளிகளுக்கானச் செலவைக் குறைக்கலாம்.

எங்களுக்கு உங்கள் சேவை தேவை தான். ஆனால் எங்கு தேவை என நாங்களே சொல்கிறோம்.

எல்லா அரசு மாணவ மாணவியர் விடுதிக்கும் நாங்கள் சோறுபோடுகிறோம் என்றால் உங்களுக்குப் பெருமை தானே.
இல்லாவிட்டால் பணமாய் தாருங்கள் சத்துணவுத் திட்டத்திற்கு.

ஓர் அரசு அலுவலக வேலைக்கு வரும் சாமான்யன் ஓர் அரசு மருத்துவ வேலைக்கு வரும் சாமான்யன் நகரத்தில் பணியமர்த்தப்படாமல் நகரத்திற்கு வெளியே கிராமம் குக்கிராமம் அங்கு சேவை செய் என்னும் சூத்திரத்தை தனியார்க்குப் பயன்படுத்துங்கள்.

ஒரு வரலாற்றை நிகழ்த்திக்காட்டி நாட்டிற்கே முன்மாதிரியான திட்டத்தை செய்துகாட்டிய தமிழக மக்களுக்கும் தமிழக அதிகாரிகளுக்கும் மன தைரியமும் முதுகெலும்பும் ஸ்திரமாக இருக்கிறது.
வலிமையும் கருணையும் மிகுந்த இஸ்கான் வாதிகளே வாருங்கள். உங்கள் சேவை எங்களுக்கு எங்கு தேவையோ அங்கு மதமற்று நிறமற்று வாருங்கள்.
வரலாற்றில் இடம்பிடிக்க வரலாற்றை நிகழ்த்தவேண்டும். இன்னோர் இனத்தின் வரலாற்றில் அதுவும்
பெரிய கட்டுமானமாய் இருக்கும் ஒரு வரலாற்றில் இடைச்செருகி உங்கள் பெயரைப் பொறிக்க நினைப்பது க்ருஷ்ணாம்சம் இல்லை அன்பர்களே.....

க்ருஷ்ண..க்ருஷ்ண...ஹரே.

20/2/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8