உன் பெயர்

இப்பொழுது
உன் பெயரில்
நீ மட்டும் தான்
இருக்கிறாயா?

என் இரவிற்குள்
உன் பெயர்
ஒரு
வெளிச்சக் கவிதையாய்
மின்னிக்கொண்டிருக்கிறது...
உன் பெயரில்
ஒரு கவிதை
எழுதி
பட்டாம்பூச்சியொன்று
கிறங்கித் தவிக்கிறது...
பூக்களின் மேல்
திளைத்து விழுந்த
'மது'வென
உன் பெயரில்
வண்ணம் நிறுத்திப்
பறக்கிறது..
யாரோ அழைத்ததும்
மேகத்துண்டாய்
காற்றிலலையும்
உன் பெயரில்
ஒரு மழை
இந்தப் பிரபஞ்சத்தை
நனைக்கிறது...
சாலையில்
ஒரு குழந்தை
காகித கப்பலை
மிதக்கவிடுகிறது...
உன் பெயரைக்
கொண்டே
ஒரு மழை
கப்பலைக்
கரையேற்றுகிறது...
குழந்தைகளின்
பூரிப்பிற்குக்
கவிஞனொருவன்
உன் பெயர்
வைக்கிறான்....
சந்தங்களில்
உன் பெயரேற்றி
வீணையின் நரம்பதிர
விரல்களில்
இசை தருவிக்கிறான்
இசைக்காரனொருவன்...
பாடத் தெரிந்த
பறவைகளுக்கெல்லாம்
உன் பெயரில்
ஒரு குரல்
கிடைக்கிறது...


நாட்காட்டியில்
மழை பெய்யும்
சுபயோகதினத்தை
உன் பெயரில்
குறித்திருக்கிறார்கள்..

மலைகளுக்கப்பால்
புகைவண்டி ஒன்று
உன் பெயரொலியில்
ஓடிக்கொண்டிருக்கிறது...
ஞாபகங்களை இழந்த
மறதிநோய் முதியவனுக்கு
உன் பெயர்-
தான் என்றோ
ரசித்த
ஒரு பழைய பாடலை
ஞாபகப்படுத்துகிறது...

உன் பெயரைச் சுண்டி
குழந்தையொன்று
கைகளில்
மூடிக்கொள்கிறது..
கைகளைத் திறந்தால்
இன்னொரு பக்கம்
மழை விழுந்திருக்கிறது..

உன் பெயரில்
நதி ஓடுவதாக
மீன்தொட்டிக்குள்
தங்க நிற
மீனொன்று
கனவு காண்கிறது..
அந்தக் கனவில்
பெயர்கொத்திப்
பறவைகள்
உன் பெயரை
உச்சரித்துப் பாரத்து
நதி மூழ்குகின்றன...


இப்பொழுதும்
உன் பெயரில்
நீ மட்டும் தான்
இருக்கிறாயா..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....