பெரண்டை - க்வாரண்டைன் சிறுகதை

சுதாகருக்கு இது மூன்றாவது ஃபோன். கொரோனா ஊரடங்கில் நோய் தொற்று உள்ள இடங்களைக் கண்டெயின்மெண்ட் பகுதியாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். சுதாகரை ஒரு பகுதியில் வாலண்டியராக நியமித்துவிட்டார்கள்.
யாரையும் அனுமதிக்கக்கூடாது.
எந்த நேரத்தில் ரிப்போர்ட் யாருக்குக் கொடுக்கவேண்டும் . எந்த நேரத்தில் யார் யார் வருவார்கள் என்று ஒரு பட்டியல் தந்திருந்தார்கள்.
குடியிருப்புப்பகுதியில் யார் யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு மருந்து எதுவும் தேவையா என்று ஒரு சர்வே எடுக்க மறுநாள் ஹெல்த் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஒரு ஆள் வந்தான்.
கிட்டத்தட்ட சுதாகரனின் வயது தான் அந்த ஆளும். அது பல இடங்களில் ஒத்துப்போனது.
சுதாகருக்கு மாஸ்க் கட்டி கட்டி காது ஓரத்தில் தடம் விழுந்து தோலைக் கிழித்திருந்தது. ஆதலால் கர்சிப்பைக் கட்டிருந்தான். ஹெல்த் டிபார்ட்மெண்ட்காரருக்கு மூஞ்சியைக் காட்டிலும் மாஸ்க் பெருசாயிருந்தது.
ஹெல்த் டிபார்ட்மெண்ட் காரர்க்கும் ஒவ்வொரு கண்டெயின்மெண்ட்டாக நியமித்திருப்பார்கள் போல. ஆள் பார்க்கவே பத்துநாள் சாப்பிடாத ஆள் மாதிரி வீக்காக இருந்தார் என சுதாகருக்குப்பட்டது.
"பாஸ் சாப்டீங்களா"
'இல்ல ஜீ...காலைல நாலு இட்லி கட்டி பார்சல் தருவாங்கனாங்க, அந்த டைம்க்கு கோமதிபுரத்துல வொர்க் முடிஞ்சு, தாசில்தார் நகருக்கு போ னு ஃபோன் வந்திருச்சு, இங்க வந்துட்டேன். இட்லிய அங்ககொடுக்குறாங்களா, இங்க கொடுக்குறாங்களானு தெரியல, துயரத்தத்தான் கொடுக்குறானுக',

'ஐயோ பாஸ் , இங்க இட்லி ஏற்கனவே தந்துட்டாங்க'.
'அப்ப ரைட்டு, காலைல சாப்பாடு சுவாகா தான் பாஸ், வெளியவும் சாப்பிடவும் கடை இல்ல. இன்னைக்கு ஃபுல்லா பட்டினி தான்'.

'விடுங்க பாஸ், நான் சாப்பிடல. என்ட்ட இருக்கு இட்லி பொட்டலம் , நீங்க சாப்ட்டுக்கோங்க...காலைல ஆறரை மணிக்கே தந்துட்டானுக, அவனுகளுக்கு வேலை முடிக்கனும்ல. காலங்காததால யார் சாப்பிடுவானு வச்சிருக்கேன்' என்றான் சுதாகர்,
'என்னது ,ஆறரை மணிக்கே தந்துட்டானுகனா , நேத்து சுட்ட இட்லியா பாஸ்,' என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.
'நீங்க தான் பாஸ் ஹெல்த் டிபார்ட்மெண்ட், சாப்டு சொல்லுங்க,' என்றான் சுதாகர் சிரித்துகொண்டே.

இருவரும் ஒவ்வொரு வீடாகப் போனார்கள்.

முதல் வீட்டைத் தட்டி,

"சார்....சார் "என்றான் சுதாகர்,
ஆஜனபாகுவாய் ஒருத்தர் வந்தார்

"என்ன..வேணும்"
"யார் யார் வீட்ல இருக்கீங்க சார். உங்களுக்கு எதுவும் வேணுமா", சுதாகரன் கேட்டான்
"நான் , என் மனைவி அவங்க ஒரு டீச்சர்" ( ஆஜனபாகுவை யாராவது நீங்க என்ன பண்றீங்க னு கேட்டாலோ உங்க பெயர் என்னனு கேட்டாலோ மனைவி ஒருடீச்சர் என்பார், ஏன் என்றால் அவர் வீட்டு வேலையில் தான் இருக்கிறார். ஹோம் மேக்கர்) அப்புறம் என் பொண்ணு".
"உங்களுக்கு மருந்து மாத்திரை எதுவும் வேணுமா" , என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.
ஆஜனபாகு வேண்டாம் என்றதும் அடுத்த வீட்டுக்குப் போனார்கள் .

பூட்டின தன்னோட கடைக்கு வெளியே ருக்கு அக்காள் சோகமாய் உட்கார்ந்திருந்தது.
அவர்கள் கேட்ட விவரத்தை ருக்கு அக்கா சொன்னது.
"நீங்க தான் வாலண்டியரா" என்று ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஆளைப் பார்த்து ஒரு சைஸாகப் பார்த்து ருக்கு அக்கா சிரித்தது.
"நான் இல்லக்கா, இவர் தான் வாலண்டியர்" என்றார் ஹெல்த் ட்பார்ட்மெண்ட்.
இப்பொழுது சுதாகரனுக்கு ஒரு சைஸ் சிரிப்பு கிடைத்தது.

ப்ரவீன் வீட்டைத் தட்டி நின்றார்கள்.
மருந்து எதுவும் வேண்டுமா என்ற கேள்விக்கு , "என்ன மருந்து" என்று கேட்டான் ப்ரவீன்.
ப்ரவீன் ஒரு மருத்துவத்துறை பணியாள். யாராவது மருந்தைப் பற்றி பேசினால் கூட என்ன ஏது என்று புலன் விசாரனை செய்பவன்.
"உங்களுக்கு எதுவும் மருந்து வேணுமா , வேணும்னா சொல்லுங்க அதுக்குத்தான் இவர் ஹெல்த் டிபார்ட்மெண்ட்ல இருந்து வந்திருக்கார்னு "சுதாகர் சொன்னான்.
ப்ரவீன் தன்னோட தொழில் பராக்கிரமங்களைச் சொல்லி முடித்து அவர்களை வழி அனுப்பினான். மருந்து வேண்டாம் என்று சொல்ல இவ்வளவு நீளமா பேசியிருக்கத்தேவை இல்லை தான்.

ப்ரவீனுக்கு எதிர்த்தவீட்டில் ஒரு இணைய போராளி இருந்தார். வந்தவர்களை அருகில் நிற்கவைத்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார். எப்படியும் ஐந்தே நிமிடத்தில் மக்கள் பணியில் நான் என்று ஒரு ஸ்டேடஸ் வரும்.
மணி காலை ஒன்பது.

"பாஸ், இதுவரைக்கும் போதும் , அந்த இட்லிய சாப்பிட்டுருங்க", என்றான் சுதாகர்.

"ஏன் பாஸ்! காலைல ஆறரை மணிக்கு பேப்பர்ல கட்டுன இட்லி இன்னும் இட்லியாவே தான் இருக்குமா" என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.

இருவரும் சிரித்துக்கொண்டே அந்த வரிசையில் இருந்த ஒரு பட்டாளத்துக்காரர் வீட்டின் வாசலின் நின்றார்கள்.

சுதாகரன் மெல்ல ஹெல்த் டிபார்ட்மெண்ட் காதைக் கடித்தான்.
"பாஸ், இவர்ட்ட மட்டும் நீங்க என்ன பண்றீங்கனு கேட்காதீங்க",
"ஏன் பாஸ்" என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.

"ஐயோ பாஸ் இந்த ஏரியாவ அடைச்ச இந்த மூணு நாளா வந்து என்னைய ஐஸ் வைக்க என்ன்ட வந்து பேசுறாப்புடி. அந்தாளு மிலிட்டரில ஏதோ ட்ரைவரா இருந்திருக்கிறதா தெரியுது . ஆனா பேச்சக் கேட்டா விஜய்காந்த் அர்ஜூன் மாதிரி பேசுறாப்புடி... அந்தாளுக்கு காஃபி பவுடர் இல்லையாமாம். ப்ரூ பவுடர்க்கு அலை மோதுறாப்புடி..."
இருவரும் சிரித்துக்கொண்டே பட்டாளத்தாரை அழைத்தார்கள்.

"சார், உங்களுக்கு மருந்து மாத்திரை எதுவும் வேணுமா" , என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்
"ஏன் எதுவும் தர்றீங்களா." என்றார் பட்டாளத்துக்காரர்.
"இல்ல சார் உங்களுக்கு எதுவும் மருந்து வேணும்னா வாங்கித்தரத்தான் ஹெல்த் டிபார்ட்மெண்ட் ல இருந்து வரேன்", என்றார்.
பட்டாளத்துக்காரர் ஆரம்பிச்சார்,
"சார் , என் வீட்டம்மாக்குத்தான் அப்பப்ப இடுப்பு உளையும். அதுக்கு பெரண்ட கீரை வச்சு சாப்பிட்டுக்கும். மாடிலயே கொடி போட்டேன். பெரண்ட வீட்ல வைக்கக்கூடாதுனு சொல்வாங்க , வீடு விளங்காதாம்.
நான் பார்டர்ல இருக்குறப்ப என் கூட அம்பாசமுத்திர பையன் ஒருத்தன் இருந்தான். நைஸா காஷ்மீர் தாண்டி நைட்டு பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்கு அங்குட்டு கைய விட்டு ஒரு பெரண்ட செடிய நட்டுவிட்டுட்டான். அவைங்க விளங்காம போகட்டும், சும்மா சும்மா சுட்டுட்டே இருக்கானுகனு, எனக்கு அதுலாம் நம்பிக்கை இருக்காது, என்ன சொல்றீங்க னு" அந்த இருவரையும் பார்த்து கேட்டார் பட்டாளம்,

இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

பட்டாளம் தொடர்ந்தார்,

"நான்லாம் இப்பவும் காலைல மூணு மணிக்கு எந்திரிச்சுருவேன். நான் காலைல சீக்கிரம் எந்திரிச்சுருவேன்னே என்னைய லடாக்ல நைட் டூட்டி போட்டாங்க."

"நைட் டூட்டில தூங்கலாமா சார் "என்றான் சுதாகரன்.

பட்டாளத்துக்கு ஃப்ளோ தடை பட்டது.

மாஸ்க் போட்டிருந்ததால், ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஆள் சிரித்தது பட்டாளத்துக்குத் தெரியவில்லை.

"நைட் டூட்டில பார்டர்ல தூங்குவோம் தம்பி.. நமக்கு பெரிய கண்ணு, நைட்டு தூக்கம் வந்தா சொக்குனாலே மூடிக்கும். நமக்கே அப்படினா, சைனாக்காரனுக்கு சின்ன கண்ணு, தூங்கமாட்டானா? அதுவும் இல்லாட்டி, நான் கொஞ்சம் சின்ன சத்தம்கேட்டாக்கூட எந்திருச்சுருவேன்..இப்பவும் காலைல எந்திர்ச்சு ஒரு செம்பு தண்ணீ குடிச்சிருவேன். அது நம்மள எந்தக் கிருமியையும் அண்டவிடாது...என்ன சொல்றீங்க னு மறுபடியும் அவர்களைப் பார்த்துக்கேட்டார் பட்டாளம்.

"சரிங்க சார், இப்ப மருந்து மாத்திரை இப்ப வேணுமா , வேணும்னா இவர்ட சொல்லுங்கனான்" சுதாகர்.

பட்டாளத்துக்காரர் பதில் சொன்னாரோ இல்லையோ, சுதாகர் நகர்ந்துவிட்டான். பின்னாடியே ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஆள் ஓடிவந்தார்,

"பாஸ், ட்விஸ்ட்டே, பாகிஸ்தான் எல்லைக்குள கைய விட்டு பெரண்ட நட்டது தான் பாஸ், "என்று சிரித்தான் சுதாகரன்.

இருவரும் அந்தப் பகுதியின் கடைசி வீட்டின் கதவிற்கு வந்தார்கள்.

பெயர் அரசுராஜ். அரசாங்க உத்தியோகம், பெரிய தீர்த்த வண்டி. ஏதோ ஒருதுறையில இயக்குனரா இருந்தார்.
இவர்கள் சத்தம் கேட்டு அரசு வெளியே வந்தார், தட்டுத்தடுமாறி வந்தார்.
காலைல ஒன்பது மணிக்கே அவர் தீர்த்தம் சாப்பிட்டு இருந்தார்.
அவர் வெளிவருவதற்கு முன்பே தீர்த்த நெடி வெளியே வந்தது.
அசைந்து கைலியைக் கட்டியபடியே அரசு வெளியே வந்தார்,

"சார், உங்களுக்கு எதுவும் மருந்து வேணுமா,"
"எனக்கு எதுக்கு மருந்து",
"இல்ல சார்,நீங்க எதுவும் மருந்து சாப்பிடுறீங்களா,"
"நான் எதுனாலும் சாப்பிடுவேன், உங்களுக்கு அத பத்தி என்ன",

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். இது சரிப்பட்டு வராது என்று சுதாகர் நகர ஆரம்பித்தான்,

"இல்ல சார், நான் ஹெல்த் டிபார்ட்மெண்ட், உங்களுக்கு மருந்து எதுவும் தேவைனா உதவி செய்யலாம்னு வந்திருக்கேன்."..என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்,
"நீ முதல்ல அடைச்சு வச்சிருக்கிறத திறந்துவிடு, நான் போயி வாங்கிக்கத்தெரியும் "என்றார் அரசு.

சரிங்க சார் என்று நகர்ந்தார் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.

அதற்குள் சுதாகருக்கு ஃபோன். காவல்துறை துணை கமிஷ்ணர் ரேடியோல பேசப்போகிறார் என்றும், ரேடியோவில் கமிஷ்னரையும், கண்டெயின்மெண்ட் பகுதியில் இருக்கும் யாராவது மூன்று நேயர்களையும் பேச வைக்கும் முயற்சியாம்.
ஆதலால் சுதாகர் பொறுப்பில் இருக்கும் இந்தக் கன்டெயின்மெண்ட் பகுதி மக்களில் யாராவது ஒரு ஆளின் நம்பரைக் கொடுக்கவேண்டும் என்று அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். எடுத்துத் தருவதாய் சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தான் சுதாகர்.

அதற்குள் ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஆளுக்கு ஃபோன். வேறொரு கண்டெயின்மெண்ட் பகுதிக்குச் சென்று அங்கு இது போல் கேட்கவேண்டும் என்று அவனது அதிகாரி கூறினார்.

"என்ன பாஸ், இட்லி வந்திருச்சா "என்றான் சுதாகர்
"இனி இட்லி லாம் இல்ல பாஸ், நேரா லெமன் சாதம் தான்" என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்,
"பாஸ் நேத்துலாம் சாம்பார் சாதம்னு ஒண்ணு தந்தானுக, கொடுத்த ஏட்டையா நைட் வந்தாப்புடி, என்ன ஏட்டையா சாதத்தைத்தான் தந்தீக, சாம்பார் தரலனு சொன்னேன், சிரிக்குறாப்புடி, சாம்பார் சாதமா பாஸ் அது, வெறும் சோறு மாதிரி இருக்கு பாஸ்,"
"உங்களுக்கு இங்க தான் வேல, நல்லா இல்லாட்டியும் ஏதோ தரானுக, என்னைய பாருங்க, இப்பத்தான் வேலை முடிஞ்சது, அதுக்குள  இன்னொரு ஏரியாக்கு போகச்சொல்லிட்டானுக, அங்க லெமன் சாதம் வருதா இல்ல இட்லி மாதிரி ஆகுதானு தெரியல பாஸ்" என்றான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்.

"பாஸ், ஏதாவது ஒரு ஆளோட நம்பர் கேக்குறானுக, சாம்பார் சாதத்து மேல இருக்குற கடுப்புல பேசாம நம்ம அரசு சார் நம்பர தந்திரவா" என்றான் சுதாகர்,

"பாஸ், அது சாதாரண பழிவாங்கல் பாஸ், நீங்க பட்டாளத்துக்காரர் நம்பர கொடுங்க , அதான் வச்சு செய்றது .. "எனச் சிரித்தான் ஹெல்த் டிபார்ட்மெண்ட்..

இட்லி பிரச்சினையும் சாம்பார் சாதப் பிரச்சினையையும் மறந்துவிட்டு ஹெல்த் டிபார்ட்மெண்ட் அடுத்த பகுதிக்குப் போனான்.

சுதாகர் ப்ரவீன் வீட்டுக் கதவைத் தட்டினான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....