'கண்ணே கலைமானே' 2.0

'கண்ணே கலைமானே'
பாடலை ஒலிபரப்புவதாக
வானொலியில்
சொல்கிறார்கள்.
மழையில் நனைவதைவிட
மழை ஞாபகங்கள்
உன்மத்தமாயிருப்பதைப் போலவே
ஜேசுதாஸ் பாடுகிறார்..
'ஆண்டவனிடம் இதைத்
தான் கேட்கிறேன்' எனத்
தெருவில் போகும்
ஒரு வாலிபன்
குரல் கேவி அழுகிறான்...
யாருமற்ற வீதிகளில்
நிறைந்தழுகும்
உருபனியாகவே
வழிகிறது
'உனக்கே உயிரானேன்'
என்ற குரல்...
யாருக்காகவோ யாராவது
ஒருவர் அழும்
இந்தப் பிரபஞ்சத்தில்
ஜேசுதாஸ்கள்
பாடிக்கொண்டே இருக்கிறார்கள்...
நெடிய ப்ரார்த்தனைகளின்
முடிவில்
சொட்டிக்கொள்ளும்
வாதையின் கண்ணீரை
ஒரு குரல்
இப்படித்தான்
தழுவிச் செல்லும்...
பெரும் மன்றாடல்களை
இறைஞ்சும்
கூப்பிய கைகளைப்
பிடித்தபடி
அந்தக் குரல்
ஆசுவாசம் தருகிறது...

நேற்றைக்குப் பிறந்த
குழந்தையின்
உள்ளங்கைகளுக்குள்
அகப்பட்ட
வெம்மையானப் பிடிப்பாய்
பிரவாகம் எடுக்கிறது
குரலைத் தாங்கும்
ப்ரியமானவர்களின் ஞாபகம்...
வானொலியில்
பாடல் முடிந்தவுடன்
இரக்கங்களை இரவலாகக்
கேட்கும்
ஒவ்வொருவரின் குரலிலும்
ஜேசுதாஸ்கள்
அழ ஆரம்பிக்கிறார்கள்...

27/05/2020
11.15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....