தலைவலி

தலைவலி

இப்போதைக்குக்
கொஞ்சம்
அமைதியாயிருங்கள்.
தலை வலிக்கிறது.

வேறு எங்குமில்லை
உங்களுக்குள் தான்
ஆனால் பேரிரைச்சலுடன்
இடி
கண்களின் நடுவில்
இருந்தபடி
இரு காதுகளுக்கும்
சமிக்ஞை தருகிறது...

ரசிக்கப்பட்ட
ஏதோ ஒன்று
ரசனையின்
பதங்கமாதல் புள்ளியைத்
தாண்டி
ஒரு சிட்டிகையளவு
தள்ளி நின்று
மேனி முழுதும்
அழுத்துகிறது...

இந்தப் பிரபஞ்சத்தின்
மிகப்பெரிய
வன்மம்
இந்தத் தலைவலியென
நீங்கள் உணர்கையில்
தலைவலி
உங்களை விழுங்கியிருக்கும்...

மிகையாய்
வழிந்த
இரசனைகளைத்
திகட்டியபடியே
வெளிறிய மின்னலொன்று
மூடிய கண்களுக்குள்
இங்குமங்குமாய்
பாய்கிறது.....
கண்களை மூடிய
இருளிமையில்
தெரிகிறது
தலைவலி உணர்வின்
எதேச்சதிகார உரு....

தலைவலி
மட்டுந்தான்
மனிதனைச்
சாகடித்துவிட்டு
மறுபடியும்
புணரமைக்கிறது...

உங்களுக்குத் தேவையான
ப்ரியங்களைப்
பட்டியலிட்டு
இப்போதே
வைத்துக்கொள்ளுங்கள்.
தலைவலியென்பது
ப்ரியங்களை விழுங்கும்
வாதைப்பிரவாகம்...

உங்களின்
தலைவலியின் போது
நீங்கள்
கைவிடப்பட்ட ஆடென
மேய்ப்பனொருவன்
ஓலமிட்டு அழுவதைக்
கேட்கமுடியும்..
மௌனத்தின்
பேரிரைச்சலைத்
தாங்காதபடிக்குத் தான்
உங்களுக்குக் கருணை
அருளப்பட்டதாக
தலைவலி தெய்வம்
தலை வருடலாம்..
இப்போதைக்குத்
தலை வருட
தலைவலி தவிர
வேறு தெய்வங்களில்லை...

உங்களுக்கு
ஒரு துரோகம்
ஞாபகம் வரலாம்..
ஒரு பிரிவு,
நிறைவேற்றப்படாத
ஒரு மன்றாடல்,
அல்லது
வெறுமனே
ஒருவலி.
நீங்கள்
தலைவலியின் பெயரால்
பொதுமைபடுத்தப்படுவீர்கள்....

இப்பொழுது
அழுதுவிட்டால்
தேவலை..
தலைவலி
உங்களை
அனுமதிப்பதில்லை...

இப்பொழுது
தூங்கிவிட்டால்
தேவலை.
தலைவலி
உங்களைத் தூங்கவும்
அனுமதிக்கப்போவதில்லை..

உள்ளிருந்துகொண்டே
எதையோ
யாரையோ
தலைவலி
ஞாபகப்படுத்துகிறது தானே?

இப்போதைக்குக்
கொஞ்சம்
அமைதியாயிருங்கள்.

05/05/20
00.09
தலைவலிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....