திடீரென்று தான்..

திடீரென்றுதான்
தேவைப்படுகிறது
ஒரு மழையும்
ஒரு காஃபியும்...

ஞாபகங்களை
அவ்வப்போது
மீட்டுக்கொள்ள
பாதியில் விட்டுப்போன
உரையாடல்களைத்
திடீரென்றுதான்
தொடரும்படி
தோன்றுகிறது...

கேட்ட மாத்திரத்தில்
பூவைத் தராத
எந்தத் தாவரத்தின்
மீதும்
என் 'திடீர்கள்"
கவலைகளைக்
கொட்டுவதில்லை....

திடீரென்றுதான்
தேவைப்படுகிறது
துயரத்தின்
நாண்களையெல்லாம்
அதிர்வுறச் செய்யும்
மாபெருமிசை...

ஒரு குரலில்
குழைந்தபடிக்
காணாமல் போவது
என்னமோ
என் "திடீர்'களுக்கு
வாய்ப்பதேயில்லை...

எல்லாப் பிரயத்னமும்
அறுந்துபோன
ஒரு பட்டத்தின்
நாண் பற்றும்
இறுதித் தொடுகையில்
வழிகிறது
என் "திடீர்"களின்
வானம்...


திடீரென்று தான்
தோன்றுகிறது
இங்கு தானே
எங்கோ
இருக்கிறாய்.....

குரல் கேட்கிறது
தானே..
ஏனெனில்
திடீரென
இப்பொழுதெல்லாம்
மழை
குரலைக் கவ்வுகிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8