பயோ மெடிக்கல் மேனேஜ்மெண்ட்

பயோ மெடிக்கல் வேஸ்ட்மேனேஜ்மெண்ட் என்பது இப்பொழுது எல்லா மருத்துவமனைகளையும் ஆட்டிப்படைக்கும் ஒரு வஸ்து. ஒரு மருத்துவமனை அது படுக்கை அறை கொண்ட (BEDDED HOSPITAL) ஆக இருக்கட்டும் இல்லை எட்டுக்கு பத்து ரூமில் ஒரு சேர் மேஜை போட்டு ப்ராக்டிஸ் பண்ணும் ஒரு சாதாரண மருத்துவரின் ஓபி (op)(non bedded) க்ளினிக்காக இருக்கட்டும். அவர்கள் பயோ மெடிக்கல் மேனேஜ்மெண்ட் செய்யவேண்டும். தங்களது மருத்துவமனையில் / க்ளினிக்கில் விளையும் கழிவுப்பொருட்களை அதாவது கெமிக்கல் வேஸ்ட் ( ஊசிமருந்து, ட்ரஸ்ஸிங்க மருந்து, மாத்திரைக்கழிவு ) ஹுயுமன் வேஸ்ட்(அதாவது யாராவது அடிபட்டு வந்தால் அல்லது ஒரு நகத்தை வெட்டி எடுத்தால் கூட அந்தக் கழிவு , ஆபரேஷன் தியேட்டர் இருந்தால் அதில் வெட்டி எடுக்கப்படும் உடல் பாகங்கள்) பிறகு ட்ரஸ்ஸிங்க் மெட்டேரியல்( பஞ்சு, துணி) போன்றவற்றை ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் இவர்கள் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்கள் அவற்றை முறையாக எரித்தோ புதைத்தோ நீக்குவார்கள். சமூகத்தில் அதனால் மாசு ஏற்படாதவண்ணம் அதைச் செய்வார்கள்.

இது கட்டாயம் செய்யவேண்டும். இப்படி அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இதை நாங்கள் செய்கிறோம் என்று அந்தப் பத்திரத்தையும் ஒப்பந்தச்சீட்டையும் மருத்துவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தனக்கான ஆதாரம் , மருத்துவமனையின் டோப்போ ஸ்கெட்ச், ப்ளு ஸ்கெட்ச் இதர பதினாறு டாக்குமெண்டுகளைச் சமர்ப்பித்து ஒரு ஒப்புதல் ஆணை வாங்கவேண்டும். அப்பொழுது தான் க்ளினிக்கோ மருத்துவமனையோ நடத்தமுடியும் என்பது இப்பொழுது கட்டாயம்.

அங்கு தான் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என சில மாதங்களுக்கு முன் கட்டுரை எழுதியிருந்தேன்.

இப்படி பயோ மெடிக்கல் மேனேஜ் பண்ணுகிற கம்பெனியை மாவட்டத்திற்கு ஒரு கம்பெனி என்று அரசு தீர்மானித்து அனுமதி வழங்குகிறது.
ஒரு OP க்ளினிக்கிற்கு மாதம் எண்ணூறு ரூபாய் என்று இருந்த விலையை 1000 முதல் 1500 வரை ஏற்றிவிட்டது அந்த நிறுவனம்.

ஒரு மருத்துவமனையில் அல்லது க்ளினிக்கில் எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்பதை சர்வே எடுத்து அதற்கேற்றவாறு விலையைத் தீர்மானிக்கமுடியாமல் பொத்தம்பொதுவாய் ஒரு விலையை வைத்துவிட்டார்கள். அவ்ர்கள் போடும் ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் அந்த மருத்துவமனைக்கு மனிதக்கழிவுகளைச் சேகரித்துவைக்க ஒரு நிறத்தில் குப்பைக்கூடையும் கெமிக்கல் வேஸ்ட் க்கு ஒரு நிறமும், துணிக்கழிவுகளுக்கு ஒரு நிறமுமென ஒரு குப்பைக்கூடையும் வழங்கவேண்டும். ஆனால் அவர்கள் தருவதில்லை.
அந்தந்த மருத்துவமனையின் செவிலியர்களுக்கு கழிவுகளை எப்படிச் சேகரித்து அந்த நிறுவனத்திற்குத்தரவேண்டும், எப்படி சமூகத்தை மாசுபடுத்தாமலும், வந்துபோகும் நோயாளிகளுக்குத் தொற்றுவராமலும் பாதுகாப்பாய் இதைச் செய்யவேண்டுமெனவும் அவர்கள் பயிற்சி எடுக்கவேண்டும். அதையும் அவர்கள் செய்வதில்லை.
ஆனால் மாதாமாதம் பணம் கொடுத்துவிடவேண்டும்.

ஒரு மகப்பேறு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பபையை ஒரு வாரமாகியும் எடுக்க அவர்கள் வராமல் அதை எலிகளிடமிருந்தும் பூனைகளிடமிருந்தும் பாதுகாத்து அவர்களை வரச்சொல்லி அவர்கள் எடுக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டதாகத் தகவல்.
இப்படித்தான் மாநிலம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும்நிலைமை இருக்கிறது. ஏன் மாவட்டத்திற்கு ஒரு கம்பெனி என்றால் அவர்களுக்கே வெளிச்சம்.
வாங்கும் காசிற்கு அவர்கள் வந்து சேகரமாகும் மனித உடல் பாக கழிவுகளை, கெமிக்கல் கழிவுகளை எடுக்காவிட்டால் , அவர்களுக்கு கொடுக்கும் பணத்தை நிறுத்திவிட்டால் அவர்கள் அந்த புரிந்துணர்வு பத்திரத்தைத் தரமாட்டார்கள். அது இருந்தால் தான் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவர்கள் க்ளினிக் நடத்துவதற்கான ஆணையை வாங்கமுடியும்.

வெளியிலிருந்து பார்க்கும் வெவ்வேறு துறையினருக்கு மருத்துவர்கள் நன்றாகச் சம்பாதிப்பதாகவே படும். ஆனால் பத்துவருடங்களுக்கு முன் ஒரு மருத்துவன் தனியாக தன் சேவையை ஆரம்பித்தத் தைரியம் இப்பொழுதுவரும் இளம் மருத்துவர்களுக்குக் கிடையாது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சம்பளத்திற்கு போய்விட்டால் தேவலை என் கிறார்கள். அப்படியானால் மக்கள் அங்கு போய் தான் வைத்தியம் பார்க்கவேண்டும். கட்டணமும் கூடிவிடும்.
ஒருவன் தொழில் செய்வதற்கு அதுவும் ஆசிரியன் மருத்துவன் போன்ற சேவை மனப்பான்மையில் வருபவர்களுக்கு இலகுவானச் சமூகவெளியை அரசோ பொதுமக்களோ ஏற்படுத்தித்தரவேண்டும்.

ஒரு ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்குத் தேர்வு காலத்தில் வேலை நிறுத்தம் செய்யலாம்.
ஒரு வங்கி ஊழியன் தன் சங்கத்தோடு சேர்ந்து எத்தனையோ கடன் வாங்கி தொழில் நடத்தும் சாமான்யனின் பணத்தேவையைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தம் செய்யலாம்.
அரசு ஊழியர் சங்கம் அரசு இயந்திரம் முடங்குமளவிற்கு வேலை நிறுத்தம் செய்யலாம். அப்பொழுதுதான் அவர்களது முக்கியத்துவம் அரசிற்கும் பொதுமக்களுக்கும் தெரியவரும். அது தான் தருணம் என்பார்கள். அவர்கள் போராட்டமும் கோரிக்கையும் நியாயமானதாகவே இருக்கும்.

கரோனா வின் தீவிரம் அதிகமாகி மக்கள் பதைபதைக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்த மருத்துவனும் தன் வேலை நிறுத்தத்தைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு புரோட்டா கடை வைத்து ரோட்டில் மாமிசத்துண்டுகளை வீசி மாசுபடுத்துபவனுக்கு இவ்வளவு சட்டத்திட்டங்கள் இல்லை. ஒரு சீட்டு கம்பெனி வைத்து நடத்துபவனுக்குக் கூட கடினமான சட்டதிட்டங்கள் இல்லை.உயிர் காக்கும் சேவைக்கு பதினேழு டாக்குமெண்டுகள் ஆதாரங்கள் அது போக காற்று மாசு நீர் மாசு அதற்கான வருடாந்திரக் கட்டணம் குறைந்தது ஆறாயிரம் முதல் அதுவும் ஒரு மருத்துவன் மருத்துவமனையைக் கட்டிய காலத்திலிருந்து என்பதுலாம் மருத்துவர்கள் மீது அரசு செலுத்தும் வன்மம் தான்.

மறுபடியும் நீ ஒரு மருந்து கம்பெனிக்காரன் . ஜால்ரா அடிக்கிறாய் என்ற பழைய பஞ்சாங்கத்தை எடுக்காதீர்கள்.

என் மகள் எல்கேஜி படிக்க சேர்ந்த பள்ளியில் பத்து பென்சில்கள் ஒரு ஸ்கெட்ச் பாக்கெட் க்ரையான் இரண்டு செட் ஒரு ஸ்கேல் ஒரு ரப்பர் ஷார்ப்னர் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார்கள் . அவர்கள் கேட்கும் ப்ராண்டில் தான் வாங்கிகொடுக்கவேண்டும். ஜூன் மாதமே கொடுத்தாகிவிட்டது.
அக்டோபர் மாதத்தில் டைரியில் எழுதி அனுப்புகிறார்கள். மறுநாள் ஒரு ஓவியப் போட்டி. இன்னொரு ப்ராண்ட் குறிப்பிட்டு அதில் க்ரையான் வாட்டர் கலர் செட் வேண்டும் என்று. எங்கள் பகுதிக்குச் சென்று கேட்டால் அந்தக் கடைகளில் அந்தப் பள்ளி பெற்றோர்களாகத் தெரிகிறார்கள். இந்தக் கம்பெனி ப்ரான்ட் பேனா வாங்கு பென்சில் வாங்கு என்று ஆணையிடும் ஒரு சாதாரண பள்ளியைத் தட்டிக்கேட்க முடியாதச் சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்.

உனக்குச் சேவை கிடைக்காவிட்டால் சத்தம் கொடு. கிடைக்கும் சேவையின் பின்னால் இருக்கும் காரணிகளை ஆராயாதே என்று என்றோ நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

இந்தப் பதிவு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்/க்ளினிக்குகளுக்கும் இருக்கும் சங்கடங்களின் முகத்தை மற்றத் துறையினருக்குக் காட்டுவதற்காகவே. இதில் எந்த ஜால்ராவும் இல்லை.

குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
க்ளினிக் மீதான மருத்துவமனை மீதான இத்தனைக் கடினமான விதிமுறைகளை அரசு தளர்த்தாவிட்டால் எதிர்காலத்தில் தனி ப்ராக்டிஸ் மருத்துவர்கள் வரமாட்டார்கள். ஒரு சாதாரண காய்ச்சல் தலைவலிக்கு இப்பொழுது நீங்கள் அடைக்கலம் புகும் நர்சிங்க் ஹோம்கள் க்ளினிக்குகள் இருக்கப்போவதில்லை. நீங்கள் பெரிய கார்ப்பரெட் மருத்துவமனைகளைத்தான் அணுகவேண்டும். அங்கு அவன் பில் தீட்டத்தான் செய்வான்.

எல்லா மருத்துவர்களும் உத்தமர்களா என்றால் , அரசியல்வாதிகளில் காந்தி ஒரு முறை தான் வந்தார். அவர் மீதும் விமர்சனம் வைக்கிறோம்தானே. அப்படி இருக்கையில் எல்லா மருத்துவர்களும் உத்தமர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் சிலர் நியாயமான கடினமான உழைப்பைக் கொடுக்கக்கூடிய , தியாக மனப்பான்மையுடன் இருக்கத்தானே செய்வார்கள்.

இதோ சோஷியல் டிஸ்டன்ஸ் விழிப்புணர்வு ட்ரெண்டிங்க் வருகிறது. உயிருக்குப் பயந்து மருத்துவர்களால்தனித்து இருக்கமுடியுமா...

நம்மால் ஒருவர் மீது ஒரு துறையின் மீது ஆயிரக்கணக்கான விமர்சனங்களை வைக்க முடியும். தனிப்பட்டக் குற்றங்களுக்காக ஒரு துறையின் மீது ஆயிரக்கணக்கானத் தவறுகளை அள்ளி வீச முடியும்.
ஆனால் அந்தத் துறையினரின் சேவையையும் தியாகத்தையும் உழைப்பையும் உங்களால் விமர்சிக்கவே முடியாது.

பழனிக்குமார்
17/03/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....