துலிப்..

துலிப் மலர்களை
இப்படித்தான் என
வரைந்துகாட்டியிருந்தாய்...
விழிகளினூடே
உள்ளங்கைகளுக்குள்
பொதித்துக்கொண்ட
முகத்தைப் பிடித்தபடி
ஒவ்வொரு துலிப்
மலருக்கும்
அறிமுகம் பகர்ந்தாய்..
வானிலிருந்தபடி
ஒவ்வொரு மலராய்
விழுமொரு நாளில்
பிணைந்து கடந்ததன்
மழைநாளை
நாட்குறிப்பில்
எழுதியிருப்பதாய் கூறினாய்...
கருப்புவெள்ளை
ஞாபகக் கிடங்கில்
துலிப்கள்
வண்ணமேறிக்கிடந்த
உன்மத்தமது....
துலிப்களின்
வெளியிதழென
வருடும்படி
ஓவியம் காண்பித்த
உன்மத்தத் தருணத்தில்
இதழை இதழால்
வரைந்த
இன்னொரு மழையும்
நனைத்திருந்தது...
ஏதுமற்ற பொழுதுகளில்
உன்னிருத்தல் சார்
தருணங்களை
விழுங்கியபடி
துலிப்களின்
வண்ணங்களிலிருந்து
ஒரு சிட்டிகை
தருவித்தபடி
ஞாபகங்களிலெல்லாம்
துலிப்களின்
நிறமிறங்கும்படியாய்
அருளியிருந்தாய்....
துலிப்களைக்
காண்பித்துக்
கொடுத்தவள்
துலிப்பாகவே
ஆகியிருந்ததன்
ரசவாதமெனப்
புரியவைத்திருந்தாய்...
நீ நான்
உலவிக்கொண்ட
அசூயையுலகில்
துலிப்கள்
பூத்தபடியே
இருக்கின்றன...
துலிப்களை
நுகர நீ
அனுமதித்ததேயில்லை...
நெடுநேரம்
கண்கள் பொதித்து
நுகர்ந்திருந்த
கழுத்துவாசனையும்
கைகள் கோர்த்துப்
பூத்த
உள்ளங்கை ஈர
வாசமுமென
நீ மட்டுமே
விரவுகிறாய்
துலிப்பென....

05/03/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8