கொரோனாவும் எதேச்சதிகாரமும்

சில தினங்களுக்கு முன் மருந்து மொத்த விற்பனையாளர்களின் சேல்ஸ்மேன் கள் தகுந்த ஆவணங்கள் இருந்தாலும், ஐ டி கார்ட் இருந்தாலும், மருந்து சப்ளை க்கான பில் இருந்தாலும் ,கையில் மெமோ மற்றும் மருந்துகள் இருந்தாலும் மதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டு காவல்துறையால் அபராதம் விதிக்கப்படுவது பற்றி எழுதியிருந்தேன்.

என் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தால் தான் விற்பனை இருக்கும்.
அப்படியான ஒரு்நிலையில் விற்பனையே இல்லாவிட்டால், இருக்கும் ஊழியர்களுக்கு வேலை இருக்காது.
தினமும் சேல்ஸ்மென் அழைப்பார்கள்.
சப்ளை இருந்தால் வரச்சொல்வேன்.

அப்படி சப்ளை வரச்சொல்ல காலை 10.30 மணிக்கே தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறைஅபராதம் விதித்திருக்கிறார்கள்.
ஐடி கார்ட் , ஆவணம் இருக்கிறது. ஹெல்மேட் போட்டிருக்கிறார். இருந்தாலும் ஹெல்மேட் போடவில்லை என்று செலான் கொடுத்திருக்கிறார்கள்.

மருந்து சப்ளை க்குத்தான் வரேன் என்று சொல்லியிருக்கிறார்.
ரொம்ப பேசாத என்று செலான் போட்டு ஆன்லைனில் கட்டிக்கோ என்று தந்திருக்கிறார்.

அவனுக்கு ஆன்லைன் பேங்க் வசதி இல்லை. கடைலாம் அடைச்சிர்க்கு சார் எங்க போய் கட்டுவது இங்கேயே பணத்தைக் கட்டுகிறேன் என்றிருக்கிறான். காது கொடுக்கவில்லையாம்.

சாமான்யர்களின் மீது அனாவசியமாக விழும் அதிகாரங்களை என்னச் செய்வது.

இதை இன்னொரு மருந்து மொத்த விற்பனையாளரிடம் சொல்ல அவர் ஒரு கதை சொல்கிறார்.
அவரது சேல்ஸ்மேன்னைப் பிடித்த ஒரு பெண் உதவி ஆய்வாளர் என்ன கொண்டு போற என்றவர் , இது என்ன உயிர்காக்கும் மருந்தா? இதை ஏன் கொண்டு போற. இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி வியாபாரம் பாக்குறீங்களா என்று கூறியிருக்கிறார்.

ஒரு மருந்தை ஒரு நோயாளி கேட்கிறான், அது ஒரு சாதாரண கொழுப்பு குறைக்கும் மாத்திரையாக இருந்தாலும் உயிர் காக்கும் மருந்து தானே. அது எப்படி சேல்ஸ் மேன் க்குத் தெரியும். அரசு உயிர்காக்கும் மருந்து மட்டும் அனுமதி என்று காவல்துறைக்குச் சொல்லியிருக்கிறதா.

உறவினர் ஒருவர் சர்ஜிக்கல் ஹோல்சேல் வைத்திருக்கிறார். அவர் நேற்று புலம்பினார். டிரக் கன்ட் ரோல் ஆபிஷிலிருந்து ஃபோன் மாப்ள. கடை திறக்கனும். எதுவும் தட்டுப்பாடு வரக்கூடாது. கடைய அடைச்சிராதீங்கனு என்றார்.

இவர்கள் திற என் கிறார்கள். அவர்கள் அனுமதி தர மறுக்கிறார்கள்.

அரசாங்கம் மொத்தத்தில் அது பித்து பிடித்து எங்களைப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது.

ஒன்று, மருந்து சப்ளை கிடையாது என்று சொல்லிவிடுங்கள்.

இங்கு எவனும் எங்களுக்கு நோய் தொற்றுலாம் வராது என்று நல்ல உடல்நிலையுடன் எல்லாம் இல்லை.
மருந்து சப்ளைக்கு வருபவனும் உயிரைப் பணயம் வைத்துத்தான் வருகிறான்.

என் சேல்ஸ்மேன் க்கு ஒரு கர்ர்பிணி மனைவி. அவளுக்குத் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது, என உறவினர்கள் அவனை வேலைக்குப்போகாதே என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவனின் வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகள் இருப்பார்கள். அதையும் மீறித்தான் மருந்து அத்தியாவசியப் பொருளென சப்ளை செய்ய வருகிறான்.

இல்லையா, இப்படியான காவல்துறை அதிகாரிகளை இனங்கண்டு கவுன்சிலிங்க் கொடுங்கள்.

ஒரு பக்கம் காவல்துறையினரின் பணி வியக்கத்தக்க வகையில் இருந்தாலும், சில நண்பர்களால் ஒட்டுமொத்தத்துறையின் மீதும் வருத்தம் ஏற்படுகிறது.

ஒரு முடிவு எடுங்கள். மருந்து சப்ளைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் நிறுத்துவோம். அனுமதிக்கமாட்டோம். அபராதம் விதிப்போம் என்று.

இல்லை என்றால், மருந்தை பில் அடித்து வைக்கிறோம். காவல் துறை ஆட்களை வைத்து எடுத்து சப்ளை செய்துகொள்ளுங்கள்.

விற்பனை இல்லாதக் காலகட்டத்தில் இந்த அபராதப் பணம் எங்கள் வறுமையின் மீது, எங்கள் துயரத்தின் மீது, எங்கள் வலியின் மீது நீங்கள் வீசுகிற எரிஅமிலம்.

உங்கள் புன்னகையும் ஆயிரம் பொற்காசுகளும் தேவையில்லை. நீங்கள் வீசும் எதேச்சதிகாரச்சாட்டையை மட்டும் சாமான்யனுக்கெதிராய் சுழற்றாமல் இருங்கள் போதும்.

பழனிக்குமார், 20/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....