ஊரடங்கின்போது இறப்பவர்கள்

ஊரடங்கின்போது இறப்பவர்கள்

இந்த உலகத்தின் பொருட்டு
அமைதியைக் கேட்டவர்களாக
இருக்கிறார்கள்....

பெருந்தவிப்பின் தடைகளை
எல்லாம் உடைத்தபடி
உறங்கத் தயாராகிறார்கள்..

ஊரடங்குத் தடைக்கம்பிகளுக்கு
அப்பால்
நிற்பவர்களின் மேல்
கருணை கொண்டவர்களாய்
விடை பிரிகிறார்கள்..

எந்தச்சலனமுமின்றி
கிளம்பிவிடும்
மனத்தைக்கொண்டு தான்
கொஞ்சம் நேரம்
பேசிவிட்டுப் போகச்சொல்லி
நம்மை இருத்தியிருந்தனர்.....
உங்களை வாசல்வரை
வெளிவந்து
வெயில்பார்த்து
வழியனுப்பிய ஞாபகத்தைத்
தருபவர்களாக இருக்கிறார்கள்..

ஊரடங்கின்போது இறப்பவர்கள்

பிரபஞ்சத்தின் பிரியங்களை
ஒரே இடத்தில்
கூட்டுவதற்கான
நியாயத்தை வாதாடுகிறார்கள்..
காற்று அற்றத்
தருணத்திலும் கூட
அமைதியாய்
மரத்திலிருந்து உதிரும்
ஒரு பழுத்த
இலையைப் போலவே
உதிர்கிறார்கள்...

எவரும் எதிர்பார்க்காத
ஒரு மழைக்காலத்தில்
அவர்களது நலம்விசாரிப்பின்
ஞாபகமழை மட்டும்
சொட்டிக்கொண்டே இருக்கிறது....

இன்னொருமுறை
ஓர் அழைப்பிற்கோ
ஒரு நலம்விசாரிப்பிற்கோ
வாய்ப்புகள் இல்லை
என்பதைக் கூட
மௌனமாகவே
மொழிந்திருக்கிறார்கள்..

கடைசியாக ஒருமுறை
கைகளைப் பற்றவோ
புன்னகை புரியவோ
நேரமற்ற
அவர்களது
அவசரத்தில்
எந்த ஊரடங்கும்
தடையாய் இருப்பதில்லை..

தடைக்கம்பிகள் துருவேறி
அவர்களின் தடத்தை
ஈரமாகவே வைத்திருக்க
அவர்கள்
அவர்களாகவே
பிரிகிறார்கள்

01/05/20
22.15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8