பிரபஞ்சன் எழுதிய "தபால்காரர் பெண்டாட்டி" சிறுகதை தொகுப்பை முன்வைத்து....

பழனிக்குமார்
மதுரை

பிரபஞ்சன் எழுதிய "தபால்காரர் பெண்டாட்டி" சிறுகதை தொகுப்பை முன்வைத்து....

தொடர் வேலைப்பளு இருந்தபொழுதுகளில் ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்க ஒரு மாதம் ஆகும் எனக்கு. காரணம் தொடர் வாசிப்பு இல்லாததும் மறுபடியும் வாசிப்பைத் தொடர்கையில் ஏற்கனவே படித்த சில பக்கங்களை மீள் வாசிப்பு செய்து ஆரம்பிப்பேன். அது ஓர் உணர்வு சங்கிலி சம்பந்தப்பட்டது. விடுபட்ட உணர்வுச்சுரப்பிகளில் மீண்டும் அதே உணர்வதிர்வைத் தக்கவைத்தலின் சூட்சமம் அது.
நீண்ட விடுமுறை காலங்களில் தொடர் வாசிப்பில் இருந்தால் கூட சில புத்தகங்கள் மறுபடியும் மறுபடியும் மீள் வாசிப்பில் ஆழ்த்தும். சில வரிகளில் நாம் சற்று நேரத்திற்கு நின்றுபோய்விடத் தோன்றும். எனக்கு அப்படித் தோன்றுகிறது.. ஒரே சொற்றொடரில் அன்றைய வாசிப்பு முழுமையையும் நிறுத்திவிட்டு அந்தச் சொற்றொடரோடு இருக்கத்தோன்றும் மனநிலை எனக்கு அவ்வப்போதுண்டு.
இரண்டு காரணங்கள், ஒன்று அதில் லயித்தல். இன்னொன்று "Recalling cue" என்பார்களே அப்படி வாசிப்பை , வரியை நினைவுக்கூறலில் எனக்குச் சிரமம் உண்டு. அதனாலேயே உள்வாங்குதலில் என்னை நானே நிறுத்தி நிலைப்படுத்துவதுண்டு. பிரபஞ்சனின் "தபால்காரர் பெண்டாட்டி" சிறுகதை தொகுப்பு அப்படியான மீள் வாசிப்பனுபவத்தைத் தந்தது.
சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவே எந்த அரவமும் அற்று ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போல பிரபஞ்சனின் எழுத்து.
ஒரே ஓட்டத்தில் இருக்கும் நீர்நிலைகள் கூட பிரவாகம் ஏகி கரைகளைப் பெயர்த்துச் சென்றாலும் அமைதியாகவே கலைந்து இழுத்துச் செல்லும் தன்மை உடையவை. கைகளை , கால்களை மனங்குளிர நனைத்துச் செல்கையில் எங்கிருந்தோ இழுத்துவந்த ஒரு பூவையோ அல்லது ஒரு பழுத்த இலையையோ நம் கால்விரலில் சூடிவிட்டுச் செல்வதைப்போல "தபால்காரர் பெண்டாட்டி" மூலம் நம் மனக்கண்களுக்குள் சில உலகங்கள் உருப்பெறுகின்றன.

எதார்த்த உலகில் நிகழும் நிகழ்வுகளில் கவித்துவத்தைக் கொட்டுவதில் மனுஷ்யபுத்திரனும், வண்ணதாசனும் கவிதைகளின்வழி ஏற்படுத்தியத் தாக்கங்கள் என்னளவில் உணர்வுவயப்பட்டவை. அதே அளவில் சிறுகதைகளின்வழி கவித்துவத்தை உலவ விடுவதில் பிரபஞ்சன் என்னளவில் பெரும் தாக்கக்காரர். ஒரேஒரு மீன்தொட்டி குழந்தை இருக்கும் வீட்டில் வாங்கத் திட்டமிட்டு வாங்கி, மீன்களின் உலகிற்குள் நம்மையும் நனைக்கவைக்கிறது அவரது மொழி.அது வெறும் வீட்டு மீன்களை மட்டும் பேசப்போவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் மீன்களுக்கு எல்லாம் மொழி தரும் கதை அது. மீன்கள் தவிர்த்து கொஞ்சம் கிளிகளையும் அந்த மொழி தத்தெடுக்கிறது.

ஓர் எழுத்தாளன் எழுத்தின் மூலமாக மிஞ்சிமிஞ்சி என்னசெய்துவிடமுடியும். இந்தப் பிரபஞ்சத்தின் மிதமிஞ்சிய நிலத்தை , மண்ணை, ஈர விளைநிலத்தை, ஏரியை, மரத்தை, சிறு தாவரத்தை, மலரை, அதன் வாசனையை, காதை வருடிச்செல்லும் காற்றை , ஒரு பறவையை இவற்றையெல்லாம் எழுதி எழுதித் தீர்கிறான். வெறும் மனிதர்கள் மட்டுமல்லவே இந்தச் சமூகம்.
"தபால்காரர் பெண்டாட்டி" தொகுப்பில் மரங்கள் ஆங்காங்கே அசைகின்றன. ஒரு பெரிய அரசமரத்தின் கீழ் ஒரு கதையில் பிள்ளையார் இருந்தது என்கிறார். அந்தக் கதையில் பிள்ளையாருக்கு வேலை இல்லை. ஊரை அடையாளங்காட்ட மரம் காட்டப்படுகையில் உங்கள் மனக்கண்ணில் மரம் வரையப்படுகிறது. பிரபஞ்சன் ஓர் எழுத்து தூரிகைக்காரர். எழுத்துத்தீற்றலில் கதை காட்சியாய் வழிகிறது.
உருவற்ற காற்றை எழுத்துகளின்வழி உருப்படுத்துகிறார். சந்துஷ்டி தருகிற காற்று ஒருத்தியை இதம் செய்வதாக எழுதுகிறார். காற்றை இன்னும் உருப்படுத்துகிறார். அவள் அந்தக்காற்றை அனுமதித்தாள். காற்று கேசத்தைக் கலைத்து ஆடையைக் கலைத்தது. காற்று அப்போதைக்கு வேண்டியிருந்தது.கண்ணைமூடி ஏகாந்தமாக அனுபவிப்பதாய் எழுதப்படுபவளை பிரபஞ்சன் காத்திருக்கும் ஆசைக் கணவனைக் காணத்துடிக்கும் மனைவி அலுவலகத்தில் வேலைகளைத் துரிதமாய் முடிக்க இருப்பவளாய்த்தான் அறிமுகப்படுத்துகிறார்.அவசர அவசர வார்த்தைகளைப் போட்டு நடுவே கொஞ்சம் காற்றை அனுமதிக்கிறார். மொழி ஆசுவாசப்படுகிறது.

செடிகளை வளர்க்கும் ஒரு குழந்தைக்கு கதை எழுதுகிறார்.
கிளி வளர்க்கும் பையனைப் பார்த்து பொறாமைபட்டு லவ்பேர்ட்ஸ் வளர்க்கும் ஒரு குழந்தைக்குக் கதை எழுதுகிறார்.
காணக் கிடைத்ததையும், நாம் காணக் கிடைக்காததையும் தருவது தானே இலக்கியம். மனிதர்களின் கதையை நகர்த்த வெறும் மனித கதாபாத்திரங்கள் போதாதா? இல்லை. படைப்பாளி என்பவன் சதா அனைத்து ஜீவன்களின் மீதும் பற்றோடு இருப்பவன். அவற்றின் மீதான தன் பொறுப்புகளை அவன் தன் கலையில் படைத்தே தீர்கிறான்.
அரவமற்று நகரும் நதி கரை பெயர்த்தலைச் செய்யும் அல்லவா. "தபால்காரர் பெண்டாட்டி" தொகுப்பில் சில பெண்கள் இருக்கிறார்கள். காற்சிலம்பை எடுத்து பல தூரம் நகர்ந்து நீதி கேட்டு ஓலமிட்டு தீ வார்த்து, இப்படியெல்லாம் தன்னை நிறுவ அந்தப் பெண்களை மெனக்கெட பிரபஞ்சன் வைக்கவில்லை. அமைதியான கரை பெயர்த்தும் நதியாய் ஓடவிடுகிறார் பிரபஞ்சன். அந்தப் பெண்கள், காதல்கடிதம் தந்தவனை, உன் காதலைச் சொல்லக்கூட தைரியம் இல்லாதவனுடன் எப்படி வாழ்வது எனக் கேட்கிறார்கள்.
வேலையை விட்டால் திருமணம் என்று கண்டிப்புடன் இருப்பவர்களை வெறும் புன்னகையால் நிராகரிக்கிறார்கள்.
கணவன் கொடுமையால் வெளியேறி இட்லிகடை வைக்கிறார்கள். அதே கடைக்குச் சாப்பிடவரும் கணவனுக்கு அனுதாபத்துடன் உணவிட்டு கைகளில் பணத்தைத் தருகிறார்கள். அவர்களது தனிமைத்துயரை இன்னொருவர் பயன்படுத்திக்கொள்ள பணத்தைத் தந்து ஏமாந்துபோகிறார்கள். அப்பொழுதும்கூட அது ' புருஷக்கூலி' எனக் கதையில் சிரிக்கிறார்கள்.

சீர்திருத்தங்கள் என்பவை எடுத்துக்கூறப்படுபவை அல்ல. எடுத்தாளப்படுபவை. ஒரு துறவி தன் ஆசிரமத்து வர்ணாசிரமங்களைக் கண்டு எல்லா சிரமங்களிலும் அவற்றை நீக்க முற்பட்டு முடியாமல், மதத்திலிருந்தே விலகி எங்கு சமத்துவம் இருக்கிறதோ அங்கு தான் இறைவன் என மதம் மாறுவதாய் ஒரு கதையை முடிக்கிறார்.

நம்பிக்கைகள் அற்றுப்போன கண்கள் ஊரெங்கும் இருக்கின்றன என்கிறார். நம்பிக்கை அற்றுப்போனவர்களை மறுபடியும் துளிர்க்கச்செய்வது கலை, படைப்பு. சிறுகதைகள் என்னசெய்துவிடமுடியும் எனக் கேட்டான் ஒரு நண்பன். கையில் சீட்டைக் குலுக்கி ஒவ்வொருவர்க்காய் எறிந்துவிட்டு மீதமுள்ளவற்றை ஒரு கட்டாய் நடுவே வைக்கிறார்கள். கைகளில் ஏறியதும் வரப்போவதுமாய் இருக்கும் சுவாரஸ்யமே வாழ்க்கை. சிறுகதைகளில் சில, கைகளில் வந்து சேர்ந்ததன் அபத்தங்களையும் ,வந்து சேரப்போகும் நிச்சயங்களையும் ஒரே வரிசையில் கோர்ப்பவை. வாழ்க்கையின் எல்லா நிச்சயங்களையும் சிறுகதைகள் காண்பிக்கவே எத்தனிக்கின்றன. புரிதலும் புரிதல் சார் சீட்டுகளும் உங்கள் கைகளில் வரும்வரை நீங்கள் சீட்டுகளுக்கு உங்களை ஒப்புவிக்கவேண்டும்.
பிரபஞ்சன் "தபால்காரர் பெண்டாட்டி" தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் நம்மையே நமக்குக் காண்பிக்க சீட்டுகளைக் கலைத்துப் போடுகிறார்.
தினமும் வாழ்வு நமக்கு பல சீட்டுகளை அப்படித்தானே கலைத்துப்போடுகிறது.


"தபால்காரர் பெண்டாட்டி" பிரபஞ்சன்.
நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....