சுவாதீனங்களின் எச்சம்

பெருஞ் சத்தத்துடன் தான்
உதிர்கிறது
அந்தச் செடியின்
முதலும் கடைசியுமான
பூவொன்று...
எவளோ ஒருத்தியின்
தோள்பற்றியழுத
சிறுகுழந்தையின்
எதிர் திசையில்
அப்பொழுதுதான் உடைந்த
ஒரு பலூனின்
காற்று கலைந்தழுதது...
யாருக்கும் அகப்படாத
கருஞ்சிவப்பு
நிறத்திலாலான 
பட்டாம்பூச்சியொன்றின்
வெற்றுடலைத் 
தூக்கியபடி விரைகிறது
நெடுஞ்சாலை
வண்டியொன்று....
அவிழும் 
முந்தானை முடிச்சிலிருந்து
உருண்டோடி மறையும்
ஆகச்சிறிய
ஐந்து ரூபாய்
நாணயத்தைத் தேடியபடி
தற்சமயத்திலிருந்து
தொலைந்துபோகிறது
பாட்டியொன்று...
பரமபதங்களின்
எல்லாச் சாளரங்களிலும்
சர்பங்களினோவியம்
நெளிகிறது..
சுவாதீனங்களின்
எச்சத்தில்
ப்ரியங்களின்
திசை நோக்கி
நீள்கிறது
இதயத்தாலானப்
பிச்சைப்பாத்திரம்....

வாசகசாலையில் வந்த கவிதை
6/2/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8