கொரோனாவும் வெளிப்படைத்தன்மையும்..

துபாயிலிருந்து வந்த 71 வயது க்காரர் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ஸ்டான்லி மருத்தவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அனுமதிக்கப்பட்டவர் கொரோனா அறிகுறிகளுடன் இறக்கிறார். மூச்சுத்திணறலால் இறக்கிறார் என்று சுகாதாரத்துறை அறிவிக்கிறது. இது நடந்தது ஏப்ரல் 2.

இது நடந்து மூன்று நாட்கள் கழித்து இன்று சுகாதாரத்துறை அவர் கொரோனா வால் தான் இறக்கிறார் என்கிறது.

இதற்கிடையே ஏப்ரல் இரண்டாம் தேதியே இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான கீழக்கரை க்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கிறது.

அமரர் ஊர்தியில் சென்னையிலிருந்து கீழக்கரை வரை (எங்கெங்கு நிறுத்தினார்கள்) சென்று அங்கு உறவினர் கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். முன்னூறு நபர்கள் வரை இறுதிச்சடங்கில் கலந்திருப்பார்கள் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்.

கொரோனா அறிகுறிகளுடன் வந்தவரை பாசிட்டிவ் நெகட்டிவ் தெரியாமல் நெகட்டிவ் நோயாளி என எப்படி தீர்மானிக்கமுடியும்.

டெங்கு பரவிய காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான டெங்கு நோயாளிகளைச் சிகிச்சை பெற அனுமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி டெங்கு உயிரிழப்புகளை மறைத்தது. மர்ம காய்ச்சலில் பலி என்ற துண்டு பெட்டிச்செய்தி தான் நாளிதழில் வரும். டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது என அமைச்சர் பேட்டி வரும்.

அதே சூத்திரத்தில் தான் கொரோனோ நோயாளிகளையும் அரசு கையாள்கிறதென்றால் கொரோனோ வே வேண்டாம் என்று போனால் கூட வம்படியாக இழுத்துவைப்பது போன்றது. கொரோனோவை டெங்கு போல் மறைப்பது அபத்தம் என்பதற்கு இந்த நிகழ்வு மோசமான உதாரணம்.

அப்படி கீழக்கரைக்குக் கொண்டு சென்றப்பட்ட உடலை ஒரு கொரோனோ தாக்கப்பட்ட உடல்போல் தான் புதைத்தார்களா.

இப்பொழுது கீழக்கரையை முடக்கியிருக்கிறார்களாம். இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள்.

இது மேம்பட்ட கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டு சுகாதாரத்துறை அதாவது அதிகாரி மருத்துவர் செவிலியர் அணி யில் இப்படி கவனக்குறைவு நிகழ வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நம் சுகாதாரத்துறையின் நெட்வொர்க் அப்படி. இந்த நிகழ்வு அவர்களைத் தாண்டி அரசியல் தலையீடு எதுவும் இருக்கிறதோ என்ற பயத்தைத் தருகிறது. அதாவது டெங்கு போல் கொரோனோ இறப்புகளை அரசு மறைக்கிறதா என்ற பயம்.

ஏற்கனவே விஜய்பாஸ்கர் ஓரம்கட்டப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கண்டன போஸ்டரில் சுகாதாரச் செயலர் மீதும் அரசு மீதும் கோபத்தைத் தெரிவித்திருக்க இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஜனவரி 24ம் தேதி உலகச் சுகாதார நிறுவனம் கொரோனோ எச்சரிக்கைக் கொடுத்தபோதும் லண்டன் ஆய்வறிக்கையில் இந்தியா கொரோனோவால் பாதிக்கப்படும் என்றபோதும் ரஷ்யா போன்ற நாடுகள் பிப்ரவரி மாதமே விமானநிலையங்களையும் ஊரடங்கையும் முன்மொழிந்தபோது நம் மத்திய அரசு மெத்தனமாக இருந்தது. விளைவு இந்தியா அனுபவிக்கிறது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வெளிநாடு போய் வந்திருப்பர்? இரண்டு சதவீதம்? அவர்களை முறையாக ஸ்க்ரீனிங் செய்யாமல் நூற்றி முப்பது கோடி மக்களையும் வேதனைக்குள்ளாக்குவது மத்திய அரசின் தோல்வி. மோசமான நிர்வாகமே.
ஆனது ஆனதாகிவிட்டது என்று எதிர்கொள்ளும் தருவாயில் தமிழ்நாட்டில் இந்த நிகழ்வு இன்னும் மோசமான நிர்வாகத்தில் தான் இருக்கிறோம் என்ற ஐயப்பாட்டைத் தராதா?

கொரோனோவிற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசிற்கு மக்கள் முழு ஒத்துழைப்புத் தரத் துவங்கியிருக்கிறார்கள். இந்நேரத்தில் நம் மாநில சுகாதாரத்துறை இன்னும் விழிப்புடன் செயல்படுவதே மக்களைக் காப்பாற்றும் வழி.

தனித்திருப்போம்
வெளிப்படையாயிருப்போம்...

05/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8