வலசை ஓவியம்..(வாசகசாலை)

அப்படியான ஓவியத்தில்
இருந்துகொள்ள
அந்தப் பறவைக்கு
விருப்பமில்லை தான்....
இந்த ஓவியத்தின்
முதல் தீற்றலாய்
விழுந்த
பறவையின் அலகு
வெகுக் கூராயிருப்பதில்
அதற்கொரு கவலை...
தான் ஒருபோதும்
அடர் சிறகுகளுடன்
பேடையுடன் 
களிப்பதில்லை 
என்பதறியாது
தீட்டப்பட்ட ஓவியத்தில்
இருந்துகொள்ள
பறவைக்கு
விருப்பமில்லாமல்
இருக்கலாம்..
தன்னியல்பாய்
இருப்பதைத் தவிர
வேறுவழிகளற்ற
பறவையின்
இறகினடியிலிருந்து
காற்றின்கீற்றொன்று
ஓவியத்தை
கிழித்தெறிய
பிரயத்னப்படுகிறது....
இப்படியான நிழலும்
இப்படியான கிளைமரமும்
இப்படியான நதிநீரோடையும்
இப்படியான என
எதுவுமற்ற
வனாந்திரத்தின்
தனித்தலையும் பட்சியின்
இன்னொரு கூடென
ஓவியத்தில் இருந்துகொள்ள
விருப்பமில்லாமல் இருக்கலாம்....
பறவை கொள்ளும்
ஒரே ஆறுதல்
தன் குழந்தையிடம்
ஓவியம் காண்பிக்கச்
சுருட்டியெடுக்கும்
ஓர் அப்பாவின்
உள்ளங்கையில்
வலசையாதல்.....

வாசகசாலையில் வந்த கவிதை

6/2/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....