கொரொனாவும் சிறுகுறு தொழில்களும்..

கொரோனா சமயத்தில் அரசு என்னென்ன செய்யலாம் என்று பல நபர்கள் தொடர்ந்து தொலைகாட்சியிலும் சமூக வலைதளத்திலும் தொடர்ந்து அரசிற்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றனர். அப்படியான நூற்றில் ஒன்று தான் இந்தப் பதிவும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்த கொரோனா நோய்தொற்று ஊரடங்கு நாட்களில் ஊதியத்தைக் கொடுத்துவிடவேண்டும் எனவும், வேலையாட்களை வேலையைவிட்டு நிறுத்திரக்கூடாதெனவும் அரசு கோரிக்கை வைக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் சொல்வது சரி என்றாலும், அரசாங்கம் தனக்கென்று வரும்பொழுது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்க கண் வைக்கிறது. நாட்டைக் கட்டி ஆளும் அரசாங்கமே திணறும்போது இரண்டிலிருந்து இருநூறு வரை ஆட்கள் வேலை செய்யும் குறு நிறுவனங்களின் முதலாளிகளின் நிலைமையை என்ன செய்வது.
நாட்டின் நிதி அமைச்சகத்தில் ஐ ஏ எஸ் படித்தவர்கள் நிதி மேலாண்மை படித்தவர்கள் பேரிடர் மேலாண்மை படித்தவர்கள் பொருளாதார வல்லுனர்கள் இல்லாமலா இருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரியப்போகிறது.
சில தினங்களுக்கு முன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன், பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் சில தரவுகள் தந்திருக்கிறார். அதன் படி இந்திய தேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதம் சிறு குறு முதலாளிகளின் பங்கு இருக்கிறதெனவும், ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இவர்களின் நிறுவனத் தொழிலாளிகளின் உழைப்பு இருக்கிறது எனவும், மேலும் 350 தொழில் நகரங்களில் 1.49கோடி வரை வேலைவாய்ப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன என்றும் அந்தக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அத்தனை தொழிலாளர்கள் இத்தனை நகரங்களில் வேலை பார்க்கிறார்கள் தானே. அவர்கள் தங்களின் பிழைப்பிற்கு அந்தச் சிறு குறு முதலாளிகளை நம்பியுள்ளனர் தானே. அந்தச் சிறு குறு முதலாளிகளில் நீங்கள் யூகிக்கும் அம்பானி, அதானி, டாட்டா ஏன் நாராயணமூர்த்தி , டிவிஎஸ் பஜாஜ் மாருதி லாம் இல்லை. இவர்கள் அந்த நட்சத்திரப்பட்டியலில் இருக்கமாட்டார்கள். வெகு தூரத்திற்குச் செல்ல வேண்டாம். நம்மூரிலேயே இருக்கும் சிப்காட்டிற்குச் சென்றாலே தெரியும். எத்தனை எத்தனை கம்பெனிகள் 10லிருந்து 200 வரை உள்ள தொழிலாளிகளை வைத்துக்கொண்டு மெனக்கெடுகிறார்கள் என்று.
இங்கு என்னமோ கொரோனா வைரஸிற்குப் பின் தான் நமது பொருளாதாரம் படுமட்டமாக இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள் . இல்லை. இங்கே மேற்சொன்ன தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரும் முதலாளிகளின் நிலைமை பண மதிப்பிழப்புச் சமயத்திலிருந்தே பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜி எஸ் டி வரிவிதிப்பின் தவறான அமல்படுத்துதலால் நாட்டிற்கு வருமானம் கூடியதேதவிர சிறு குறு முதலாளிகளின் நிலை பெரியதாய் மாறவில்லை.

இப்பொழுது கூட கொரோனா நோய்தொற்று ஊரடங்கின் போது தொழில்கள் முடங்கிபோய் உள்ளன. மக்கள், அரசிடம் எதிர்பார்ப்பது தங்கள் பாதுகாப்பையும் தங்களுக்கு உடைமைகள் மீதான அக்கறை கொண்ட அறிவிப்பையும் தான்.
ஆனால் அரசு மௌனம் காக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் ஜி எஸ் டி பங்கை அதுவும் மாநிலத்தின் பங்கு அதை உரிமையுடன் கோராமல் மத்திய அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.மாநிலத்தின் சுய உரிமை பற்றிப் பேசிய ஒரு மாநிலத்தின் நிலைமை இப்படிமாறியிருக்கிறது. அமரர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது ஜி எஸ் டி யை எதிர்த்ததற்கு இந்தச் சந்தேகம் தான்காரணம். நமது மாநிலத்தின் வரிவருவாயை மத்திய அரசிடம் கொடுத்து விட்டுப் பிறகு பெறுவது உரிமை பறிபோகுமோ என்றும், எப்பொழுதும் தான் மத்திய அரசின் பிடியில் இருந்தாகவேண்டும் என்பதும் தான் சந்தேகம். அது தான் கனக்கச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது.

தேசம் தொழில் முடங்கி ,பொருளாதாரம் பாதாளம் போகும் ஓர் ஊரடங்குச் சமயத்தில் நிருபர்களைச் சந்தித்த தேசத்தின் நிதி அமைச்சர் வாயிலாக பல நல்ல தகவல்கள் வருமென சிறு குறு முதலாளிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் பார்ப்பதற்கு ஒய்யாரக்கொண்டை உள்ளே ஈறும் பேனும் என்பது போல மூன்று மாதத்திற்கு ஈ எம் ஐ கட்டத்தேவையில்லை என்பதை மாபெரும் கருணையாகக் கூறினார். உள்ளே அத்தனை வட்டி சிக்கல்கள் . எத்தனை சாமான்யர்களுக்குப் புரிந்தது எனத் தெரியவில்லை. அது புரியாமலேயே நன்கு படித்தவர்கள் கூட மொரேட்டோரியம் பட்டனை அமுக்கிச் சிக்கலைப் பெரிதாக்கிக்கொண்டார்கள்.
ஜிஎஸ்டி விசயத்தில் , இரு மாதங்கள் கழித்துக்கூட ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளுங்கள் என்று மற்றொரு கருணை, தேசத்தின் நிதியமைச்சரால் அருளப்பட்டது.
அதாவது தொழில் நடத்து இல்லை அழிந்து போ, உயிரோடு இரு இல்லை செத்துப்போ, இரண்டு மாதத்தில் ஜி எஸ் டி தாக்கல் செய் என்பதன் அமைதியான வாக்கியம் அது.
பெரும் பணக்காரர்களின் கடன் களைத் தள்ளுபடி செய்யும் அரசு, பெரிய கற்சிலைக்கு பெரும் பணத்தை ஒதுக்கிய ஒரு அரசு, ஒரு வெளி நாட்டு அதிபரின் வரவேற்பிற்குத் தன் வறுமையைச் சுவர் வைத்து மறைத்து பெரும் கோடிகளால் ஊதாரித்தனம் செய்த அரசு இந்த நாட்டின் உற்பத்தியில் முக்கியமாய் இருக்கும் அல்லது உழைப்பையும் அதன் மூலமான ஊதியத்தையும் நம்பும் சிறு குறு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சொல்வதற்கும் செய்வதற்கும் எதுவுமே இல்லாமல் போனது கூட ஃபாசிஸம் தான்.

பெரியதாய் ஒன்றும் வேண்டாம். சிறு குறு தொழில் முதலாளிகளின் நிறுவனங்களைக் கண்டறிய முடியாதா. அவர்களின் ஆண்டு விற்பனை ( turn over) வைத்து , உதாரணத்திற்கு பத்துகோடி வருடத்திற்கு விற்பனை செய்பவர்கள் , தங்கள் ஜி எஸ் டியில் பாதி மட்டும் கட்டலாம் எனச் சொல்லலாம். கிட்டத்தட்ட 12 சதவிகித வரி என்றால் கூட அதில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகை பெரிய ஆறுதலாக இருக்கும். அவர்கள் ஆண்டு முழுமைக்கும் தரவேண்டாமே, நிதியாண்டின் முதல் காலாண்டிற்குத்தானே. வருடத்திற்கு பத்து கோடி என்றால் சுமாராக ஏப்ரல் முதல் ஜூன் வரை இரண்டரை கோடி விற்பனை.அதற்குச் சுமாராக 12 சதவிகித ஜி எஸ்டி என்றால் 30 லட்சம் . அதில் பாதி 15 லட்சம் என்பது சிறு குறு நிறுவனங்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கும். இது விற்பனை உள்ள நிறுவனம் என்றால். இந்த ஊரடங்கில் கடந்த வரும் 10 கோடி விற்பனை பார்த்த நிறுவனம் இந்த வருடத்தில் அப்படி பார்க்குமா என்று இந்த ஏப்ரலில் சொல்லமுடியாது. ஆனால் கடந்த வருடத்தின் ஏப்ரல் 19 ல் செய்த விற்பனை இப்பொழுது ஊரடங்கின்போது இருக்காது தானே. அப்படியென்றால் ஜி எஸ் டி சலுகைகள் ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு சலுகையாயிருக்கும் என்று புரிகிறதா?

அதற்கு மேல் இன்னொரு ஸ்லாப் வைக்கலாம், அவர்களுக்கு ஜிஎஸ்டியில் 30 சதவிகிதம் விழுக்காடு வைக்கலாம்.
எப்பொழுதும் போல ஜி எஸ் டி செலான் தயார் செய்து அதில் அவர்களே இத்தனை சதவிகிதம் எனக் குறித்து அதைக் கட்ட வகை செய்யலாம். ஒட்டுமொத்த வரி விலக்கு என்பதற்குப் பதிலாக அரசாங்கத்திற்கு வரியும் வரும். நிறுவனங்களும் ஏதோ மூச்சுவிட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கும்.

நான்கு பேர்வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில் , ஒரு லட்சம் ஜி எஸ்டி வருகிறது என வைத்துக்கொண்டால் அதில் பாதி கட்டினால் போதும் என்றால் ஐம்பதினாயிரம் வரும். அதை அந்த முதலாளி விற்பனை இல்லாத இந்த நேரத்தில் அவர்களது தொழிலாளர்களுக்குச் சம்பளமாகத் தரலாம். இது உதாரணத்திற்குத்தான். ஓர் அரசு தன் மக்களுக்குவெறும் அறிவுரையை மட்டுமா தரும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குங்கள், அதற்கு அரசு இதைச் செய்யும் என்று வழி ஏற்படுத்திக்கொடுத்தால் தானே அது நல்ல தலைமை உள்ள அரசு. தொழில்முடங்கி தற்கொலை செய்த எத்தனையோ முதலாளிகள் இறந்த நாடு தானே இது.

இல்லையா அதுவும் வேண்டாம், இப்போதைய அத்தியாவசியத்தேவை என்ன என்று பார்த்து அதில் ஜி எஸ்டி வரி விலக்கு அளியுங்கள், மக்களும் பயன்பெறுவார்கள். ஏன், சானிட்டைசர், ஹேன்ட்வாஷ் மற்றும் மாஸ்க் போன்றவற்றிற்கு இந்த நோய் தொற்று காலத்தில் கூட 12 மற்றும் 18 சதவிகித வரி என்பது சாமான்ய மக்கள் மீதான வன்மம் இல்லையா.
ஜி எஸ் டி வரி விதிப்பிற்குப் பின் நாட்டின் வருமானம் கூடியுள்ளது என்று தொழில் துறை அமைச்சர்களே கூறும்பொழுது அந்த வருமானத்தைப்பெற்று ஆதாயம் தேடும் அரசு , ஒரு இக்கட்டானச் சமயம் வரும்பொழுது அந்த வரியை அள்ளித்தருகிற நிறுவனங்களுக்குக் கைம்மாறு செய்வது தானே மனிதாபிமானம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரியற்ற மருந்துகளுக்குக் கூட இப்பொழுது 12 சதவிகித வரி இருக்கிறது. அப்படியான வருமானங்களை அரசு என்ன செய்கிறது.
பெரிய பெரிய நிறுவனங்கள் நடத்தி பெரும் கடன் என்று கருணைப்படும் அரசு, சாதாரணத் தொழில்கள் முடங்குவதில் கவனம் கொள்ளாதது ஏன். அப்படியென்றால் அதனை நம்பியிருக்கும் மக்கள் மீதான அக்கறை தான் என்ன.
அரசு பெரும் முதலாளிகளுக்குத்தான் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டைத் தன் பங்கிற்கு அரசும் ஊர்ஜிதப்படுத்துகிறது.

இந்தப் பதிவு ஒன்றும் புதியக் கண்டுபிடிப்பு அல்ல. மெத்தப் படித்தவர்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் தொடர்ந்து எழுதுவது அவர்களை நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் பார்வைக்காக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8