மதம் ஒரு வியாதி

பழனிக்குமார்
மதுரை

இங்கு முதன் முதலில் குடியேறியவன் ஆதிமனிதன். அவன் கண்டுபிடித்தது தான் கூட்டு வாழ்க்கை, தீ, இயற்கையைப் பேணுதல், நாகரிகம் இவற்றோடு மதம்.
இயற்கை குறியீடுகளை தனக்கு மேலான சக்தி என நம்பியவன், தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள தனக்கு மேலான சக்தி தேவை என நம்பியவன் மதத்தைக் கண்டுபிடிக்கிறான். அடையாளங்களை உருவாக்குகிறான்.
மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. இந்து மதம் பிறப்பதற்கு முன்பாகவே இங்கு மனிதன் உலவியிருக்கிறான்.
ஒவ்வொரு மதமும் அந்தந்த நிலத்தின் வாழ்வாதாரங்களோடு பிணைக்கப்பட்ட புனைவு வாழ்வியல் முறை.
உண்மையற்ற அல்லது உண்மையென நம்பவைக்கப்படும் வாழ்வியல் முறைகளுடன் நம் கோட்பாட்டுகளைத் திணித்து, உணர்வு மேலோங்க ,நம் உரிமைக்கான மானசீகத்துடன் அணுகவேண்டிய நடைமுறைகளை, உணர்ச்சிவேகத்துடன் அணுகுதல் மூடத்தனமான முறை.
நாம் உருவாக்கிய ஒரு நம்பிக்கை நடைமுறைக்கு இவ்வளவு உரிமையுடன் இருந்து, அடுத்தவர்களை வேறு ஒரு அடையாளத்துடன் பார்ப்பதை ஒரு பழக்கவழக்கமாக மாற்ற நம்மைப் பயன்படுத்த நினைப்பவர்கள் நம்மை மடைமாற்றுகிறார்கள்.
மதம் என்ற வார்த்தை அரசியல்வாதிகளுக்குரியது. நீங்கள் உங்கள் மனதால் அல்லது உங்கள் செய்கையால் இன்னொரு மதத்தினரைக் காயப்படுத்தினால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.
தேசத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நீங்கள் பயன்படுத்தப்படுகிறீர்கள் என்பதை உணரவேண்டும்.
இந்தியா என்ற பூமி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழியினரால் ஆளப்பட்டு அவரவர் கலாச்சாரங்களைச் சுவீகாரம் செய்துகொண்ட ஒரு கனகாம்பர தேசம்.
முகலாயர்களின் கலாச்சாரமும் டச்சு போர்ச்சுக்கீசிய வியாபார நுணுக்கங்களும் ஆங்கிலேயே செயல்திட்ட படிப்பினைகளும் கலந்தோங்கும் நாடு இது.
எல்லாம் ஒன்றானபிறகு அவன் வேறு இவன் வேறு என அட்டவணைப்படுத்துவது சுயநலக்காரர்களின் வேலை.
உங்கள் மூளையை இன்னொருத்தன் பயன்படுத்தாதபடி வாழக் கற்றுகொள்ளுங்கள். சாதி மதம் இரண்டும் பிரிவினைக்காரர்களுக்கான பொழுதுபோக்கு. அவற்றைத் தலையில் சுமப்பது நம் பொழுதுபோக்கு அல்ல.
எது உயர்ந்த மதம் என்கிறீர்களோ அதை உங்கள் முப்பாட்டன் தான் உருவாக்கினான்.

எப்படி புனையப்பட்ட ஒரு மதத்தை நீங்கள் நம்புகிறீர்களோ அதையே தான் இன்னொரு மதத்துக்காரனும் நம்புகிறான்.
இன்னொரு மதத்திலிருந்து கலாச்சாரமும் கட்டிடக்கலையும் அறிவியல் நுணுக்கங்களும் விளைபொருளும் எப்படி நாம் அனுபவிக்கிறோமோ அப்படியே அவர்களை அவர்களது நட்பை அவர்களது உணர்வை மதித்தனுபவிக்க வேண்டும்.
புனையப்பட்ட மதங்களில் எதுவுமே உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை.
எந்த இனவாதமும் மதவாதமும் கண்ணுக்குத் தெரியாத ஓர் உணர்வின் உள்ளுந்துதலால் நிகழும் வியாதி போன்றது.
வியாதியஸ்தராக நீங்கள் மாறுவது சமூக அவலம்.

27/02/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8