உயர்திணை

அது ஒரு மரத்தடி.

ஒரு கடையின் முகப்பு.

ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருந்த் நேரம்.
அவன் இடப்பக்கமாய் வருவானா...வலப்பக்கமாய் வருவானா என விழித்திருந்தத் தருணம்.
அப்பொழுது என் காலில் ஏதோ ஊர்ந்த உணர்வு.
கீழே பார்த்தேன்.
நகர்ந்து பார்த்தேன்.
மீண்டும் காலை யாரோ தொட்டதுபோல் உணர்வு.

ஓர் ஆடு படுத்திருந்தது நான்கு கால்களையும் நீட்டி......

ஒருவேளை இந்த ஆடாக இருக்குமோ??????
சில நேரங்களில் நாம் அஃறிணைகளை மதிப்பதே இல்லை.

மறுபடியும் நண்பனைத் தேட ஆரம்பித்தேன்.ஆனால் மீண்டும் அதே உணர்வு.
காலை யாரோ தொட்டுவிட்டு எடுத்து விடுகிறார்கள்.
இம்முறை முகத்தைத் திருப்பி கண்களைக் காலில் வைத்தேன்.
அந்த ஆடு தான்.....
தன் முன்னங்கால்களை என் கால் விரல்களோடு ஒட்டி வைத்தது.
சட்டென்று ஆட்டினைப் பார்த்தேன். நாம் சிறு குழந்தைகளைத் தலையில் தட்டி விளையாடி அவர்கள் பார்க்கும்போது சிரிப்போம் அல்லவா....அவ்வாறு ஆடு என்னைப் பார்த்தது.

"என்ன" என்று கேட்பது போல் ஆட்டினைப் பார்த்தேன்.
அதுவும் பதிலுக்கு "என்ன" என்று கேட்பது போல் என்னைப் பார்த்தது.

அது கருப்பு-வெள்ளை உடம்பு.
முகம் முழுக்க கருப்பு, நெற்றியில் மட்டும் வெள்ளை.
யார் தடவிக் கொள்ள இந்த வெள்ளை பூத்திருக்கிறது என பார்த்தேன்.
"நன்றாகப் பார் என நெற்றியை நீட்டியது. மறுபடியும் "என்ன பார்க்கிறாய்" என்பது போல் பார்த்தேன். "நீயும் தான் பார்க்கிறாய்" எனச் சொல்வதுபோல் கண்களைக் காட்டியது. கால்களால் என்னைத் தீண்டியது படுத்துக்கொண்டே......
அதன் கால்களைத் தொட்டேன்.
"என்ன செய்யப்போகிறாய்" என என்னைப் பார்த்தது.   

தலையை ஆட்டியது.
அதன் மௌனம் எனக்கு பேசியது.
எனது "எது" அதற்கு பேச்சானதெனத் தெரியவில்லை...

திடீரென பக்கத்துத் தூரத்தைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்தது.
எதைப் பார்க்கிறது எனப் பார்த்தேன்....பக்கத்தில் ஒரு கீரைச் செடி சிறியதாய்.....

இம்முறை " என்ன " என வாய் திறந்தே கேட்டு விட்டேன். அது மறுபடியும் அந்தச் செடியைப் பார்த்துவிட்டு, தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தது.
"வேண்டுமா?" என கண்ணில் கேட்டேன்....
ஆமாம்...எனச் சத்தம் எனக்கு மட்டும் கேட்டது.
எழுந்தேன்....
கீரையைக் கையால் பறித்துக்கொண்டே அதைப் பார்த்தேன்.
இவன் அதை நமக்குத் தான் எடுக்கிறான் என நம்பிக்கை அதன் கண்களில்...
கீரையுடன் அதன் அருகில் அமர்ந்தேன்.
அட....ஆடு சிரிக்கிறது.
ஆம்...விலங்குகளின் மொழி தெரிந்தவர்களுக்கு அவை சிரிப்பது புரியும்..
மௌனங்களின் சத்தம் உணர்வுகளை மொழிபெயர்க்கும்.
வாயால் சிரிப்பது நாம் மட்டுந்தான்.
அஃறிணைகள் சிரித்து சிரித்து உயர்திணையாக மாறுவது நமக்குத் தெரிவதில்லை...
என் மீது எவ்வளவு நம்பிக்கை...அந்த ஆட்டிற்கு....படுத்துக்கொண்டே கீரையைக் கேட்கிறது....

சட்டென சட்டையில் செல்லிடைப்பேசி சத்தம்...
இந்த இயற்கையை.....இந்த அன்பைக் கெடுக்கும் நவீனத்தின் சத்தம்....
நண்பன் அழைக்கிறான்...
காதில் வைத்துக்கொண்டே பேசிக்கொண்டே எழுந்தேன்..
மறு கையில் கீரை...
நண்பன் விலாசம் கேட்கிறான்....
என் கவனம் காதுகளில்...ஆனால் கால்களில் ஆடு தொடுகிறது.
அழுத்துகிறது...ஓடுவது போல் ஆட்டுகிறது...என்னால் உணர முடிகிறது...ஆனால் காதுகளில் நண்பனின் குரல்....வழி சொல்கிறேன்...
கால்களை ஆட்டுகிறது...அடித்துக் கொண்டே இருக்கிறது. நண்பனை துண்டித்துவிட்டு அமர்ந்து..."என்னடா" எனச் சொல்லி ஆடும் கால்களைக் கைகளால் பிடித்தேன்...முகத்தைப் பார்த்தேன்......தலை அறுக்கப்பட்டு தனியாகக் கிடந்தது...
கால்கள் ஆடப்படவில்லை...துள்ளியிருக்கின்றன....
கால்கள் ஓடவில்லை. எனக்கும் எதுவும் ஓடவில்லை....
காட்சிகள் நின்று நகர்ந்தன.
நம்பமுடியாமல் ஒரு நம்பிக்கை செத்திருந்தது.
துள்ளிய கால்கள் அடங்கிய நேரம்..நான் பிடித்தது.
ஆட்டிறைச்சி கடையின் முன் நின்றிருக்கிறேன்.
அறுக்கப்பட்ட தலையின் கண்கள் கீரையைக் குறி வைக்கவில்லை. என்னை!!!!
ஏதோ பேச வந்தேன் அதனுடன்....
கீரையைக் கூட கொடுக்கவில்லை...
வாய் திறவாமல் கண்களாலேயே கேட்டது. அந்த கண்கள் திறந்தே கிடக்கின்றன..
அது பறித்துக்கொண்ட கீரையின் இரு இலைகள் பற்களின் நடுவே....
இப்பொழுது ஒரு மனித அஃறிணை நகர்ந்து வந்து செத்துப்போன இந்த உயர்திணையைக் கூறு போடப் போகின்றான்...

மனசு வலிக்கிறது...........
       
       
                                                                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8