"வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"

அப்பொழுது நான் முதுகலை முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். வேதியியல் துறை.
வேதியியல் துறை என்னையும் ஒரு வேதிப் பொருளாக மாற்றிக்கொண்டிருந்தது.

அப்போது யாராவது கவிதை எழுதுகிறார்கள் என்றால் ஆர்வமாகப் படிப்பேன். நமக்குக் கவிதை அவ்வளவாக வராது. (அவ்வளவாக என்பது அபாண்டம்....சுத்தமாக வராது) ஆனலும் முயற்சி செய்வேன். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒன்றுக்குக் கீழாய் ஒன்று எழுதி கவிதை எனப் பிரகடனம் செய்துவிடுவேன்.(இப்ப வரைக்கும் அப்படித்தான்)...

அச்சமயங்களில்....என் வீடு...சொல்லியே ஆகனும்...

என் தந்தை- ஜாலியான அப்பா....கண்டிப்பான தமிழ் ஆசிரியர்.
என் தாய்- கண்டிப்பான அம்மா...கண்டிப்பான ஆசிரியை.
டிஸிப்லின் னு வந்துட்டா....அதாங்க ஒழுக்கம்...னு வந்துட்டா...மிலிட்டரி ஆபிஸர்ஸ் மாதிரிதான்....
என் அண்ணன்- ஒரு வினையூக்கி (கெமிஸ்ட்டரி படிச்சவங்களுக்குத் தெரியும்.....வினையூக்கி வினையில் ஈடுபடாது....ஆனால் வினையை வேகப்படுத்தும்) போல் தான்...

படிப்பு ஒழுக்கம் தவிர வீடு ஜாலி

எல்லாரையும் சொல்லிட்டேன்...அப்புறம் நான்...நம்ம செயல்பாடு பாருங்க தெரியும்.....

வீட்ல லேண்ட்லைன் ஃபோன் இருக்கும்...
ஆனால் ரொம்ப நேரம் பேசக்கூடாது...அது ஆணாக இருந்தாலும் சரி....பெண்ணாக இருந்தாலும் சரி....
"டக்குனு வச்சுட்டு போய் படி" இது தான் எங்க வீட்டு ரிங்டோன்...

சரி நம்ம யாருக்காவது ஃபோன் பண்ணி பேசலாம்னு பாத்தா...அப்பாவும் அம்மாவும் வந்து வந்து பாத்துட்டு போவாங்க...
இதுல நம்ம வினையூக்கி அதாங்க எங்க அண்ணன் "நீ பேசி பேசியே காசு ரொம்ப ஆகுது "னு சொல்வான்.உடனே எங்க அப்பா ஆரம்பிச்சுருவாரு...படிக்கிறியா...டைம் வேஸ்ட் பண்ணாத....எந்நேரமும் படிச்சுட்டே இருக்கணும்....

அடுத்து அம்மா....."ஒரு வேல செய்றீயா.....எல்லா வேலையும் நானே தான் பாக்குறேன்.உன் ஷெலஃப் கூட நீ கிளீன் பண்ணக்கூடாதா...புத்தகத்த அங்கங்க போட்டுற...."
அடுத்து அண்ணன் "இவன் என்னமோ படிக்கிறமாதிரி எல்லா இடத்துலயும் புத்தகத்த போட்ரான்மா....ஃபோன்லயும் ரொம்ப நேரம் பேசுறான்மா.....காசு ரொம்ப ஆகுது......"
நான் ஒரு தடவ சொல்லிட்டேன்.....காசு ரொம்ப ஆகுதுனா இந்த ஃபோன் எடுத்துட்டு ஒரு ரூபாய் ஃபோன் மாட்டிருங்க.....நான் காசு போட்டு பேசிக்கிறேன்...னு.........இதான் நான்.

இப்படி ஒரு மிலிட்டரி கேம்ப்ல இருந்து தாங்க வந்தேன்....

ஒரு நாள் எங்க காலேஜ் சீனியர பார்த்தேன். அவர் ஒரு கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக வேலை பார்த்துவந்தார். அப்படி பார்த்தபோது...அவங்க கல்லூரியில் கலை இலக்கிய போட்டி நடப்பதாகவும் அதுல அவரும் கலந்துகொள்வதாகவும் சொன்னாரு.
நமக்குத்தான் கவிதைனா......ஆ....னு பார்ப்போமே...
தலைப்பு என்ன அண்ணே னு கேட்டேன்...
தெரியலைடா....வீட்டுக்குப்போய் சொல்றேன்...நீ என்ன கவிதைலாம் எழுதுறீயா.....பார்க்க முயல் மாத்ரி இருந்துட்டு (மக்களே....நோட் திஸ் பாயிண்ட்) இதுலாம் பண்றீயானு கேட்டார்...
ஈ.....னு சிரிச்சுட்டு வந்துட்டேன்...
காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்...

எதிர் வீட்டில் நிலத்தடிநீர் வேண்டி லாரிய நிப்பாட்டி போர் போட்டுக்கிட்டு இருந்தாங்க.....
படிக்கமுடியாது....அத விட அப்பா அம்மா அண்ணன் கச்சேரி கேட்க முடியாது...சூப்பர்.....
உள்ளே வந்ததும்....
அப்பா.."உனக்கு ஃபோன் வந்ததுடா..."னார்.
யாருப்பா.....
உன் சீனியராம்....
உடனே நம்ம ஆளு....அதான் அண்ணன் "ஆம்பள சீனியரா இல்ல பொம்பள சீனியரா..."னு கேட்டான்....
இந்த கேள்விய கேட்டதும் அடுப்பறையில் காப்பி போட்டுக்கிட்டு இருந்த எங்க அம்மா ஹாலுக்கு வந்து பார்த்தாங்க...
வெளியே போர் போடுற சவுண்டு.....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு.....இந்த சத்ததிலும் எங்க அண்ணன் கேட்டது எங்க அம்மாவுக்கு கேட்ருச்சு....
நான் சொன்னேன்...அம்மா...இன்னைக்கு முழுசும் நான் இங்கத்தான் இருப்பேன்...எப்பனாலும் திட்டிக்கலாம்...முதல்ல காப்பி போடுங்க...
அம்மாவும் சிரிச்சுட்டாங்க...அப்பாவும் ச்ரிச்சுட்டாங்க...
இப்படி சிரிச்சுட்டு இருக்கும்போதே சீனியருக்கு ஃபோன் பண்ண்ரலாம் னு ஃபோன் கிட்ட போனேன். என்னமோ...அடுத்த நாட்டு பார்டருக்குப் போறமாதிரியே போய் போன் பண்ணேன்.

இந்தப்பக்கம் நான். ஃபோனில் அந்தப்பக்கம் சீனியர்.
இந்தப்பக்கம் : கூப்பிட்டீங்களா....
அந்தப்பக்கம் : தலைப்பு சொல்லவாடா.....
வெளியே ஒரே சத்தம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................
இந்தப்பக்கம் : சொல்லுங்க....
அந்தப்பக்கம்: (ஏதோ சொன்னாரு...எனக்குச் சத்தத்தோடு.) .....லு.......ம் னு கேட்டுச்சு..

இந்தப்பக்கம் : க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....கேக்கல....
அந்தப்பக்கம்: ய.....லு......ம்........

பயங்கரச் சத்தம்......க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இந்தப்பக்கம் : (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) என்ன யலுமா.....
அந்தப்பக்கம் : கேக்கலயாடா.......
இந்தப்பக்கம் : கேக்கலயா ன்றது கேக்குது...தலைப்பு கேக்கல.....
   மறுபடியும்  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

அந்தப்பக்கம் :  வ்.......ய....லு....ம்
           க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
இந்தப்பக்கம் : வியலும் ..ஆ.......
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
அந்தப்பக்கம்:   ஆமாம் டா....
இந்தப்பக்கம்: அப்படினா...என்ன?
     க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
அந்தப்பக்கம்: ஏய்....வ்..ய..லு..ம் (க்ர்ர்ர்ர்ர்...) த்...(க்ர்ர்ர்ர்ர்)ரி....யாதா.....(கத்துறாரு)
இது தெரியாதா.....
இந்தப்பக்கம் : ( என்னடா இது நமக்குத் தான் தெரியல்லையோ.....ஈகோ ப்ராப்ளம் ஆயிருமே) சரி நான் ட்ரை பண்றேன்...னு ஃபோன் வச்சுட்டு திரும்பிப் பார்த்தா...அப்பா,அம்மா,அண்ணன் 3 பேரும் சத்தம் கேக்குதேனு எல்லா ஜன்னலையும் கதவையும் அடச்சுட்டு பக்கத்துல நிண்டு பாக்குறாங்க....
கேக்கல...கேக்கலனு கத்துனியே...கேட்டுச்சா...னு கேட்டாங்க...
(நான் நினைக்கிறேன்...திரிசூலம் படத்துல சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் ஃபோன்ல பேசுற மாதிரி பில்டப் பண்ணிட்டேன் போல)

கேட்ருச்சுப்பா.....
என்னவாம்....
ஒரு கவிதைப் போட்டி ....அதுக்கு தலைப்பு கொடுத்தாங்க..
என்னது கவிதைப் போட்டியா...டேய் போய் படிக்கிற வேலைய பாருடா....அத செய்றேன் இத செய்றேனு கெமிஸ்ட்டரிய விட்ராதடா......னு அப்பா சுழி போட்டாரு.....
அடுத்து அம்மா....அத செய்றான் இத செய்றானா...இவன் ஒரு வேலய கூட செய்றது இல்ல........(ச்ச்ச்ச்ச்சப்பா.....வெளிய க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சவுண்டே பரவால போலயே......)

வியலும்....என்ன அர்த்தம்?
டென்ஷனா இருக்குர அப்பாகிட்ட கேட்டா...அவ்வளவுதான்..மிலிட்டரி ஆபிஸர் பரேட் நடத்திருவாரு....
என்ன பண்ணலாம்....
பேசாம் தமிழ் டிக்ஸ்னரியில தேடிப்பார்த்தால்?...
சூப்பர்....ஐடியா கிடச்சுருச்சு.....
(இப்ப எல்லாரும்  என்ன நினைப்பீங்க....தமிழ் டிக்ஸ்னரில "வியலும்" தேடுவேன்னு....மன்னிக்கனும்...அதுக்கு முதல்ல....தமிழ் டிக்ஸ்னரிய தேடனும்....அது எங்க கிடக்குதோ....)
ரூம்ல..கதவ சும்மா சாத்திட்டு...தேடு தேடுனு...தேடுனேன்...கிடைக்கல....பரணில ஏறி எல்லாத்தையும் கீழே எடுத்து வச்சும் தேடுனேன்...கிடைக்கல....
இப்ப வியலும் க்கு அர்த்தம் கிடைக்கலாட்டியும் பரவாயில்லை....டிக்ஸ்னரி கிடைக்கனும்னு ஆயிருச்சு....
கிடைக்கல....படுத்துட்டேன்...தூக்கம் வரல...
வியலும்...சீனியருக்குத் தெரிஞ்சிருக்கு...நமக்குத் தெரியலையே...
சரி விடு....அர்த்தம் தெரிஞ்சா படிக்கிறோம்...எழுதிரலாம்னு முடிவு பண்ணேன்.
படுத்துக்கிட்டே யோசிச்சேன்...
வானமே....வியலும்...
வா...வி.... மோனையாம்....சரிப்பட்டு வரல.....
எப்படியோ தூங்கிட்டேன்...

காலையில் எந்திரிச்சா...மூளையில் வியலும் னு தான் நிக்குது.
ஆரம்பிச்சேன்...
விடிந்ததும்
விழிகள்
வியலும்.....

வி..வி..வி..னு போட்டா எப்படி? நல்லா இல்லை...
குளிக்கப்போனேன்..
வியலும்...வியலும் னு சொல்லி சொல்லியே கப் எடுத்து தண்ணிய தலையில ஊத்துனேன்...
மனசுக்குள்ளே ஒரு B.ஃ . அப்துல் ஹமீது கோர்ட் சட்டைலாம் போட்டுக்கிட்டு நீங்கள் ஆரம்பிக்கும் எழுத்து "வி" நெடில் அல்ல...குறில் னு குறி சொல்றாரு...ஆனா கவிதை வரல....

ஒரு வழியா காலேஜ் போயிட்டேன்..
வியலும்....யாருகிட்ட அர்த்தம் கேட்கலாம்...
நண்பர்கள்ட..? வேணாம்...அவங்களுக்கு கெமிஸ்டரி தான் தெரியும்....இத கேட்டா என்னது இது ஒரியாவா....னு கேட்பாங்க...
பேசாம் தமிழ்த்துறைக்கு போய் யாராவது தமிழ் அய்யாகிட்ட கேட்ரலாமே....
போனேன்....
ஒரே ஒரு அய்யா மட்டும் உட்கார்ந்திருந்தார்.
அவர ஒரு தட்வ பார்த்திருக்கேன். பரீட்சை எழுதும்போது கண்காணிப்பாளரா வந்தார். ரிஜிட்ரேசன் நம்பர் எழுது ன்றத அரை மணி நேரமா சொன்னாரு..இவர்ட்ட போயி வியலும் அர்த்தம் கேட்டா..தொல்காப்பியம் முழுக்க ஒப்பிச்சிரமாட்டாரா....
போகலை....


சுத்தமா எழுதத்தோணல....
காலேஜ் முடிஞ்சதும் சீனியர்ட்ட போனேன்....
என்னடா எழுதிட்டீயா.....
இல்லை அண்ணே.....
அதான் உனக்கு இதுலாம் தெரியாதுடா....நீலாம் சின்னபையன்...
இல்லண்ணே...மூடு செட் ஆகல.... அண்ணே அது என்ன வியலும்..என்ன அர்த்தம்...
வியலுமா.....டேய்....அது "இயலும்"
அண்ணே....என்ன சொல்றீங்க.....
ஆமாம்டா....." இயலும் "

(அடப்பாவி ஒருநாள் ஃபுல்லா கிறுக்கனாக்கிட்டியே....எனக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் கேட்டுச்சு....)

இயல்பாய்ச் சொன்னால்
எதுவும்
இயலும்...
முயல் என்பதற்காக
முயலாதா என்ன?
னு முணங்கிகிட்டே வீடு வ்ந்தேன்...

வீட்டுக்கு வந்தா தமிழ் டிக்ஸ்னரி எங்க அப்பா கையில்...

என்ன அப்பா இது ? னு கேட்டேன்.
நீ தேடுனேல.....
எனக்கு வேண்டாம்பா....
அப்புறம் ஏன்டா தேடுன....
சும்மா அது எங்க கிடக்குனு பார்க்கத்தான் பா....இது நான் சொன்னேன்

ஏன்டா...உனக்கு வேலையே இல்லையா....ஏன் வெட்டி வேலைலாம் பாக்குற...படிக்கமாட்டியா....னு அப்பா சுழி போட்டாரு...
அடுத்து அம்மா...இவன் எங்க வேலயா பாக்குறான்...நேத்து பரணிய ஃபுல்லா குளப்பிட்டான்....
அவ்ளோதான் கச்சேரி ஆரம்பம்.....
எல்லாத்துக்கும் காரணம்....வியலும்...
இப்ப அண்ணனும் வந்துட்டான்.....
இனி அவ்ளோதான்...இவன் ஊத......அவங்க  பாட......

 "வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"





                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....