நிறுவு..3
அஜித் நடித்து வந்த பில்லா இரண்டாம் பாகத்தில் ஒரு வசனம் வரும். உட்கார்ந்து வேலைபார்ப்பவனுக்கும் களத்துல் இறங்கி வேலைபார்ப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கும்.
இதை விற்பனைத்துறையில் பொருத்திப் பார்த்தால் கனக்கச்சிதமாய் இருக்கும்.
பொதுவாக மருந்து விற்பனைத்துறை என்பது விற்பனைத் துறைக்கு மிகவும் சவாலான ஒன்று.
இப்பொழுது இஙகு பல பல நாட்டுக் கம்பெனிகளும் வந்து விட்டன.
நாகரிகம் வளர்ந்த பிறகு MBA படிப்பு படித்து விட்டு ஹெச் ஆர். என்று சொல்லப்படும் மனிதவளத்துறை உள்ளுக்குள் வளர்ந்திருக்கிறது.
சில நிறுவனங்களில் அவர்கள் தான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.
தகுதியில்லாதவர்களை அப்பணியில் அமர்த்தி நிறுவனங்கள் சீரழிகின்றன.
சில நாட்களுக்கு முன்னதாக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியே சென்ற ஒரு பிரதிநிதி என்னை தொலைபேசியில் அழைத்தார். CIPLA (முன்னனி நிறுவனம்) நிறுவனத்திற்கு அப்ளிகேஸன் அனுப்பியுள்ளதாகவும், அதில பழைய மேலாளர் பெயரைக் கேட்டதாகவும் அதில் என் பெயரையும் என் எண்ணைக் கொடுத்துள்ளதாகவும் சொல்லியிருந்தார். அவர் அப்படி சொன்ன இரண்டாவது நாள் மேற்படி நிறுவனத்தின் மும்மை அலுவலகத்திலிருந்து ஒரு கால் வந்தது. ஒரு பெண் அழைத்தார். அவருக்கும் எனக்கும் நடந்த ஆங்கில உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு நடந்தது.
நீங்க தான் பழனிக்குமாரா..
ஆம்
உங்கள் நிறுவனத்தில் ________இவர் வேலை பார்த்தாரா
ஆம்
எவ்வளவு நாள்
இரண்டு வருடம்..
எப்படி வேலை பார்த்தார்
நன்றாகத் தான் வேலை பார்த்தார். நாங்களாய் போகச்சொல்லவில்லை...அவராய்த்தான் போனார். அவர் எதிர்பார்த்த சம்பளத்திற்கு வேறு நிறுவனம் தேடியிருக்கவேண்டும்
சரி...அவர் எப்படிப்பட்டவர்
நல்ல மனிதர். அவரை வைத்து நாங்கள் பணம் பரிமாற்றம் கூட செய்திருக்கிறோம். நேர்மையானவர் .
அவருக்கு அறிவு எவ்வாறு இருந்தது. மருத்துவரிடம் எப்படி உரையாடுவார்.?
புரியவில்லை
அவருக்கு நன்றாகப் பேசத்தெரியுமா, மருத்துவரிடம் நன்றாக உரையாடுவாரா, உங்கள் மருந்து பொருட்கள் பற்றி அறிவுக்கு அவருக்கு இருந்ததா
(இந்த இடத்தில் தான் எனக்கு எரிச்சல் வந்தது....அந்த பெண்மணி ஒரு அரைகுறை போலும் . MBA படித்துவிட்டு வேலைக்கு வந்துவிட்டு ஓர் ஆளை தேர்வு செய்வதற்கு என்னிடம் அத்தனை கேள்விகள்...முதலில் அவர் தேர்ந்தெடுக்க விரும்பும் நபரின் முந்தைய மேலாளர் நான். என்னிடம் நான் முதலில் அவரிடம் பேசத் தயாரா என்று எதுவும் கேட்கவில்லை. பணப்பரிமாற்றமே அவரை வைத்து நாங்கள் செய்திருக்கிறோம் நேர்மையானவர் என்று சொல்லியப்பிறகும் கூட அவரின் பேச்சுத்திறன் அறிவுத்திறன் இப்படி எல்லாவற்றையும் என்னிடம் கேட்டு அவர் அங்கு ரிப்போர்ட் கொடுக்கிறார். பிறகு அவருக்கு அங்கு என்னதான் வேலை. இதில் அவர்கள் செய்யும் அட்ராசிட்டி என்னவென்றால் நான் நீங்கள் ஃப்ரீயாக இருக்கிறீர்களென நினைத்தேன்...எனக்கூறினார்.
அப்படி வேலை சேர்ந்துவிட்டால் அந்த நபர் அவருக்கு மரியாதைத் தரவேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் வந்தால் எழ வேண்டும். துதிக்க வேண்டும். பெரிய நிறுவனங்களெல்லாம் இப்படிப்பட்ட ஆளை மனிதவளத்துறையில் போட்டு உண்மையாய் உழைப்பவனை அவமதிக்கிறார்கள். MBA படித்துவிட்டால் சிலருக்குக் கொம்பு முளைத்துவிடுகிறது.
மருந்து நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகள் அவர்களுக்கு மேலாக மேலாளர்கள், அவர்களுக்கு மேலாக மண்டல மேலாளர் பிறகு மாநில மேலாளர், பிறகு விற்பனை மேலாளர் இப்படி ஒரு வரிசை இருக்கும். இவர்களெல்லாம் ஏதோ படித்து முடித்துவிட்டு அப்படியே வந்து விடுவதில்லை. முதன் முதலில் விற்பனை பிரதிநிதிகளாய் கைப் பையைப் பிடித்து வெயிலிலும், மழையிலும் அலைந்து மருத்துவர்களைப் பார்த்து அனுபவம் பெற்று பிறகு தான் மேலாளராக, மண்டல் மேலாளராக பதவி உயர்வு பெறுகிறார்கள். ஆனால் துரதிர்ஶ்டமாக இவர்களை நேர்காணலுக்காய் செல்லும் பொழுது அந்த MBA பட்டதாரிகளைத்தான் பார்க்கவேண்டும். வருடத்திற்கு ஒருமுறை புத்துணர்வு பயிற்சி எனச் சொல்லி அரைகுறை மேதாவிகளின் விளையாட்டிற்கு வேறு ஆளாக வேண்டும்.
சில நேரங்களில் சில மனிதர்களால் தகுதி அவமதிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக ஒரு மேலாண்மைக் கல்லூரியின் ஒரு விழாவிற்காகச் சென்றிருந்தேன். பல முன்னணி நிறுவனங்கள் அங்கு அரங்கு அமைத்திருந்தன. அங்கு பல கல்லூரிகள் வந்திருந்தன. பல போட்டிகள் நடந்தன. அந்த கல்லூரியின் MBA துறை மாணவர்கள் அதை ஏற்பாடு செய்திருந்தனர். அப்படி அதை ஏற்பாடு செய்திருக்கும் நிர்வாகக்குழு மாணவர்கள் சிலர் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை பார்த்து வந்தனர். அதில் ஒரு மாணவர் ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாய் என்னைப் பார்த்தார். பிறகு என்னிடம் வந்தார். என்னிடம் என் பேனாவைக் கேட்டார். நான் கொடுத்ததும் அந்த பேனாவின் தரத்தைப் பார்ப்பது போல் பார்த்தார். அது ஒரு இரண்டு ரூபாய் பேனா. இது தான் இப்போதைய MBA மாணவர்களின் நிலை. அவர்களிடம் ஒரு பேனா இல்லை. இரவலாக வருமிடத்தில் அதன் தரத்தைப்பார்க்கும் விதமாய் தான் வெளிவருகிறார்கள்.
நான் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் நிபந்தனைகளுக்குட்பட்டவை.
இன்னும் சில கருத்துகள் நிறுவுவோமாக....
கருத்துகள்
கருத்துரையிடுக