வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க்.

மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத் தேர்தல் வைத்து தலைவர் செயலாளர் பொருளாளர் இப்படி அந்த இடத்தையே மரங்களை நட்டு குழந்தைகளுக்கு பொழுதுபோக்குச் சாதனங்கள் வைத்து இலவசமாக மக்கள் வந்து போனாலும் தன்னலமில்லாமல் செய்கிறார்கள். எம் எல் ஏ க்கு பாராட்டு விழா வைத்து அந்தக் கண்மாயைத் தூர் வாருவது தண்ணீர் பிரச்சினைகளை முன்வைப்பது என்ற வைபவம் கூட்டமாக நடந்தது.

வண்டியூர் கண்மாய் கரையிலிருக்கும் நடையாளர் கழகத்தில் இருக்கும் மரங்களுக்குத் தண்ணீர் இல்லை அதற்கு வசதி வேண்டும் என ஒருவர் கூறினார். (குறிப்பு..அந்தக் கண்மாயிலேயே தண்ணீ இல்லைன்றது வேற விசயம்)

எல்லாவற்றையும் கேட்டுட்டு எம் எல் ஏ பேச ஆரம்பித்தார். இவர்களே அவர்களே (அதுல் பாதி பேர் அந்தாளே கூப்பிட்டு வந்தது..) அப்புறம் மானே தேனே பொன்மானே னு லாம் போட்டுட்டு கண்மாய தூர்வாறுறது தான் என் முக்கியமான பணி னு நான் ஆறாம் வகுப்பு படிக்கப்போன பிரிட்டோ ஸ்கூல் ல மாணவன் உறுதிமொழி னு ஒண்ணு முதல் நாள் நடந்த அசெம்பிளி ல எடுத்தது நியாபகம் வர அளவுக்குப் பேசுனாரு.

அவர் பேசி முடிச்ச பின்னாடி கூட்டத்துல இருக்கிற ஓய்வு பெற்ற ஓய்வு பெறப்போகிற னு இருக்கிற ஆசாமிகள் ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பிச்சாங்க...

அதுல் ஒருத்தர் சொன்னார். வைகைல 45 நாள் தண்ணீர் ஓடுச்சு. இப்ப வறண்டு கிடக்கு. அந்த தண்ணீர இந்தக் கண்மாயில் சேர்த்து வைத்திருந்தால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை அதிகப்படுத்தியிருக்கலாம். நாம் அதை வீணாக்கிவிட்டோம். மாநில அரசிடம் சொல்லி மத்திய அரசின் நல்ல நீர் திட்டத்திற்கு ஆயிரம் கோடி வரை கிடைக்கும் திட்டங்கள் இருக்கு என அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி அதைச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். எம் எல் ஏ கப் சிப்.
ஏரிய தூர்வாறதுக்கு முன்னாடி எம் எல் ஏவை இவிங்க வாற ஆரம்பிச்சிருவானுக போலேயே...னு எம் எல் ஏ கூட வந்த ஒரு ஆள் ' அண்ணே..லேட் ஆகுது னு ' அவசரப் படுத்தினார். "ஏண்டா லேட்டா கூப்பிடுற" ன்ற அளவுக்கு எம் எல் ஏ அவரைப் பார்த்தார்.

நன்றி சொல்லி முடிச்சுக்கிட்டாங்க.
ஆனாலும் ஒரு ஆள் விடல... இதச் செய்யனும். அதச் செய்யனும்னு இழுக்க. நம்ம எம் எல் ஏ நலத்திட்டம் நடக்கும். அம்மாவின் பணி நடக்கும் னு சொல்ல...யோவ் நான் எப்பய்யா நடக்க னு நான் ஆ...ஆ..னு வேடிக்கைப் பார்த்தேன்.

இவிங்க எப்போதுமே இப்படித்தான் பாஸ் னு ஒரு குரூப் நடக்க ஆரம்பித்தது. நானும் நடப்போமுனு நடையைக் கட்டுனேன்.

திமுக மெஜாரிட்டில இருக்குனு..உள்ளாட்சியை விட்டரக்கூடாதுனு அதிமுக இருக்கு. கண்டிப்பாக இவிங்க செய்வானுக னு முன்னாடி நடந்த இரண்டு பேர் பேசுனாங்க..
ஏதோ நடந்தா சரி னு நானும் நடந்தேன்..

எம் எல் ஏ மீட்டிங்க் டைம்ம சீக்கிரமே வைக்கச்சொல்லிட்டாருனும், ஆனால மீட்டிங்க் முடிஞ்சதும் போடுற சாப்பாடு (காலை சிற்றுண்டி) கொஞ்சம் தாமதமா வந்துட்டு இருக்குனும் முன்னாடி நடந்துட்டு இருந்த ஒரு குரூப் பேசிட்டு இருந்தது. மீட்டிங்கே வரலாட்டியும் உளவுத்துறை மூலமா சாப்பாடு எப்ப வரும்னு கேட்டுருக்காய்ங்க யா...

இன்று நடையோட கொஞ்சம் தொடர் ஓட்டத்தையும் ஆரம்பிப்போம்னு நினைச்சு கால தூக்குறேன்....அதுக்குள்ள ஒரு ஆள்..என்ன சார்..வேகமா நடக்குறீங்க...(போச்சுடா...)
ஆமா சார்...
மெதுவா வாங்க பேசிட்டே போவோம் னு கூப்பிட்டார்.
சரி போ...நடந்தா சரி னு அவர் கூட கலை இலக்கியம் அரசியல் னு கடைசில கபாலி ல முடிச்சோம்.
கால் மணி நேரத்துல நடக்குறத அரைமணிநேரமா மனுஷன் நடக்க வச்சுட்டாரு...ஏதோ கபாலி படத்து ராதிகா ஆப்தே பற்றித் தகவலை பரிமாறிக்கிட்டதுனால சூரியன் உரைக்கல..
காலை சிற்றுண்டி வந்து ஆட்டோவில் இருந்து எடுத்து இறக்கிக்கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற வேலைகளை உறுப்பினர்கள் நாங்களாகவே பகிர்ந்து செய்து கொள்வோம்.
அப்படி சிற்றுண்டிகளை பரிமாறுவது வேலை.

கல்கண்டு சாதம். இட்லி, பொங்கல். வடை. சாம்பார் தேங்காய் சட்னி, மல்லி சட்னி, தக்காளி சட்னி.
பிளேட் கொடுக்க ஒரு ஆள்.
அதில் இலை வைக்க ஒரு ஆள்.
கேசரிக்கு இட்லிக்கு பொங்கலுக்கு வடைக்கு சாம்பார் சட்னி சகிதம் ஆளாளுக்கு ஒண்ணு.
இப்ப நம்ம அவிங்களா கூப்பிட்டு ஒரு வேலைய தரறத்துக்குள நம்மளா ஒரு கரண்டிய எடுத்து அவார்டு வின்னிங்க் பெர்பாமண்ஸ் கொடுத்துறலாம்னு பிளேட் கிட்ட வந்தேன்.
அதுக்குள்ள ஒருத்தர் அவரா தட்டை எடுத்துக்கொண்டு க்யூவ ஆரம்பிச்சார்.
அடுத்து இலை. அதை எடுத்தா இரண்டு இரண்டா ஒட்டிக்கிரும். அதைப் பிரிக்கனும். தட்டுக்கு ஏற்ற மாதிரி வெட்டி வச்சிருக்காங்க. இருந்தாலும் வேற இலையைக் கொடுனும்பாய்ங்க...இலை கழுவலையானு கேப்பாய்ங்க. ஒருத்தனுக்கே இத்தனை பக்குவம் பார்த்தா வேகமா வேகமா னு நிர்வாகிக அவசரப்படுத்துவானுக.இது நமக்குத்  தேவையா...
அடுத்த டிபார்ட்மெண்ட். இட்லி. அதுல ஒரு பையன் ரெடியா நிண்டுடான்.
அடுத்துப் பொங்கல்.
பொங்கல் சட்னி சாம்பார்ல ஒரு சிக்கல். கொஞ்சமா வை. கடைசியா நிறைய வைனு சொல்வாய்ங்க...அளவு தெரியாது. தேவையா.
நமக்கு ஏத்த வேலை இந்த வடை வைக்கிறது தான்.
சரி னு அதுக்கு போய் நிண்டுட்டேன்.
அந்த கழகத்துல ஆண்டுச் சந்தா கட்டி நடக்குறது 475 பேர். இதுல 75 பேர் வரமாட்டானுக. மீதி 400 பேர். மீட்டிங்கா அப்படினு வண்டிய நிறுத்தாம ஓடுனது போக அப்படி இப்படி னு பதினைஞ்சு பேர் தான் மீட்டிங்க் னா வர்றது. மீதி வர்றது தான் சாப்பிட வர்ற கூட்டம். வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம். சந்தா கட்டாம வர்ற கூட்டம்.

காலைல வியர்க்க வியர்க்க நடந்துட்டு ஒரு ஆள் வந்தார். கேசரி சாப்பிடுங்க...னார் கேசரி வைக்கிறவர்.
வேணாம் ...காலையிலேயேவா..என்றார் அவர்.
இட்லி சாப்பிடுங்கண்ணே னார் இட்லி வைக்கிறவர்.
இன்னும் குளிக்கல னார் அவர்.
அப்ப பொங்கல்...? அப்படினு கேட்டார் பொங்கல் வைக்கிறவர். (குளிக்காம பொங்கல் சாப்பிடலாமா..)
ஐயோ....அப்படினு கொஞ்சம் சிரிச்சார் அவர்..

எல்லாப் பயலும் கேட்டுட்டானுக..நம்மளும் கேட்போம் னு
சார் வடை..னு கேட்டேன்.
அது வேணும்னா கொடுங்க னு பிளேட் எடுத்து இரண்டு வடை கேட்டார்.
சட்னி சாம்பார் சகிதம்.
இந்தாளு நடந்து எரிச்சது ரெண்டு கலோரி...ஏத்துறது பத்து கலோரி...விளங்கும்..

பின்னாடி இருந்து என் இடுப்பு ஓரமா ஒரு கை. யார்றானு பார்த்தா நிர்வாகி ஒருத்தர் அஞ்சு வடைய பார்சல் கட்டுறாரு....
இவிங்க சாப்பாட்டையும் தூர் வாறுவானுக போலேயே...

சாப்பிட்டு முடிச்சு வந்தா சூடா டீ. அவிங்களே பிடிச்சு குடிச்சுக்களாம்...

காலையிலேயே ஒரு லவ் ஜோடி வந்தது. சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சுனு தட்டை எடுத்துட்டு வந்திருச்சு.
கேசரி வாங்குச்சு அந்தப் பொண்ணு.
அதுல பாதி அந்தப் பையனுக்கு வச்சது. நீ பாதி நான் பாதினு சொல்வாய்ன்கள அதாம்.
அவன் இட்லி வாங்குனான். அவ வேணாம்னு சொல்லிட்டா.
உடனே அவன் தான் வாங்குனா இரண்டு இட்லில ஒண்ண கொடுத்தான் அந்தப் பொண்ணுக்கு....
(ஏம்பா சீரியல் டைரக்டர்ஸ் இந்த சீன்லாம் நோட் பண்ணுங்கப்பா...)
அடுத்துப் பொங்கல்....
அந்தப் பொண்ணு வாங்குச்சு. அவன் வாங்கல...ஓரமா போயி பகிர்ந்துக்குவாய்ங்க போல...
அடுத்து என் டர்ன்... வடை...
அந்தப் பொண்ணு வந்தது.
வடைய எடுத்தேன்.
உங்களுக்கு வைக்கவா..அவருக்கு வைக்கவா னு கேட்டேன்..
அந்தப் பொண்ணு சிரிச்சுட்டே...எனக்கே வைங்கனு சொல்லுச்சு....
பின்னாடி இருந்து இடுப்பு வழியா...(என் இடுப்பு வழியாத்தான்..) ஒரு நிர்வாகி கை. ஒரு நாலு வடைய  ஒரு கேரி பைல பார்சல் கட்டுச்சு....

கடைசில பரிமாறுனவங்களாம் சாப்பிடுங்கனு ஒரு குரல்.
நம்ம ஒரு டீ ய சாப்பிட்டு கிளம்பிட்டா நடந்தோம் இளைச்சோம் னு ஒரு ஸ்டேடஸ போட்டுரலாம்னு பார்த்தா, ஒரு வயதான மிலிட்டரி ஒருத்தர் வாங்க தம்பி சாப்பிடுங்க னு பொங்கலை வைத்து தட்டை நீட்டிட்டார்.
அட....சரி விடு...யானை என்ன டயட்டுலயா இருக்கு...னு சாப்பிட்டு வைப்போம்னு சாப்பிட்டாச்சு...
வடை மட்டும் தான் தீர்ந்துருச்சு...
வடைய ஆட்டைய போட்ட நிர்வாகி ஒருத்தர் இடுப்பு தசை தளர உடற்பயிற்சி பண்ணிட்டு இருந்தார்....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....