R.I.P Dr. M.B.S க்ருஷ்ணன்.

அது ஒரு சம்பவம்.
மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவரிடம் புரோமோட் செய்வார்கள். விஷ்வல் எய்ட் இது போன்று வைத்திருப்பார்கள். அப்படி அந்த மருத்துவரிடம் ஐந்து விற்பனை பிரதிநிதிகள் பேசுவதற்கு நின்று கொண்டிருந்தோம்.
முன்னதாக நின்றவன் ஒரு புது விற்பனை பிரதிநிதி. இந்தத் துறைக்கே புதிது. திக்கிதிக்கி சொல்லிக்கொண்டிருந்தான்.
dr. reddy's என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதி அவன். நாங்கள் எல்லாம் அவன் பின்னே நின்றிருந்தோம்.
அப்பொழுது அந்தப் பையன் சொன்னதில் ஒரு மாத்திரை மேலும் விலை குறைந்து விட்டது . நான்கு ரூபாய் தான் .மலிவு என்றான்.
அதற்கு மருத்துவர் எட்டு ரூபாய் இருந்ததைக் குறைத்துவிட்டீர்களா என்றார்.
அதற்கு அவன் எட்டு ரூபாயிலிருந்து போன மாதம் ஆறு ரூபாய்க்கு குறைத்தோம். இப்பொழுது நான்கு ரூபாய் சார் என்றான்.
உடனே அவர் அடுத்த மாதம் ஓசியா கொடுப்பீங்களா என்றார்.
அவன் திகைத்து நின்றான். இந்த உரையாடல் எல்லாமே ஆங்கிலத்திலேயே நடந்தது. அந்த மருத்துவர் ஒரு கதையை ஆங்கிலேத்திலேயே சொன்னார். என்ன கதை என்னவென்றால்
ஒரு சர்க்கஸ் க்ரூப் ரோட்டில் வித்தை காண்பிக்கிறார்கள்.
ஒரு பெரிய வளையத்தை ஒருத்தன் காண்பிக்கிறா ன்.
அதற்குள் இன்னொருவன் ஓடி வந்து குதித்து தாவுகிறான்.
அவன் அதை விட சிறிய வளையத்தைக் காண்பிக்கிறான்.
இன்னொருவனும் அந்த சிறிய வளையத்திற்குள் தாவி குதிக்கிறான்.
இப்பொழுது அவன் அதை விட மிகச் சிறிய வளையத்தைக் காண்பிக்கிறான்.
இவனும் அந்த சிறிய வளையத்திற்குள் தாவுகிறான்.
இதைப் பார்த்த கூட்டத்தில் ஒருத்தன் கேட்பானாம் போகுற போக்க பார்த்தா வளையமே இல்லாம இவன் தாவுவான் போல...
இந்த ஆங்கிலத்தில் சொன்ன ஜோக்கைக் கேட்டதும் பின்னிருந்த அனைவரும் சிரித்தோம். அந்த புதுப் பையன் பதட்டத்தில் முகத்தை இறுக்கமாக வைத்து சிரிக்க வில்லை.
மருத்துவர் புரியலையா என அவனுக்காக தமிழில் மறுபடியும் அந்த ஜோக்கைச் சொன்னார். அவன் அதற்கும் சிரிக்கவில்லை.
உடனே மருத்துவர் சொன்னார். ஏம்பா டாக்டர் மொக்க ஜோக் சொன்னாலும் சிரி னு ட்ரெயினிங்க் ல சொல்லித்தரலையா...நோகடிக்கிறேயே பா எனக் கேட்டார். எல்லோரும் சிரித்தோம்.
என் திருமணத்திற்கு அந்த மருத்துவருக்குப் பத்திரிக்கை கொடுத்திருந்தேன். திருமணம் முடிந்து மஹாலைக் காலி செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த மருத்துவர் வேகமாக வந்தார்.
என் மனைவியிடம், என்னைப் பார்க்கும் மருந்து விற்பனை பிரதிநிதிகளை மதிப்பீடு செய்தால் உழைப்பு டெக்னிக்கல் அறிவு அறிவியல் அறிவு கணக்கில் முதல் மூன்று தரமான பிரதிநிதிகளில் உன் கணவரும் ஒருவர். you got excellent and sincere personality என என் மனைவியிடம் கூறினார்.
நான் ஒரு சாதாரண ம்ருந்து விற்பனை பிரதிநிதி. அவருக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் இல்லை. ஆனால் அவரது வேலை முடிந்து மதுரை வந்து முகூர்த்த நேரம் முடிந்த பின்பும் கூட என்னைப் பார்த்து வாழ்த்திப் போன மனிதாபிமானம் கொண்டவர்.
இன்னும் நிறைய ஏழை மக்களுக்குச் சேவை நோக்கத்துடன் பணிபுரிந்தவர்.
ஒரு புது மாத்திரையைப் பற்றிப் பேசினால் அதன் மெக்கானிசம் பக்க விளைவுகள் பற்றி அப்டேட்டா எல்லாம் பேசுவார்.
மிகுந்த ஜனரஞ்சகமான ஒரு நல்ல மனிதர். ஒரு முறை ஒரு விவசாயப் பெண்மணி வருகிறார். அவருடன் ஒரு கணவன் வருகிறார். என்ன செய்கிறது என்றால் களை எடுக்குறப்ப விடுக்குனு ஏதோ கடிச்சிருச்சு....பார்த்தா பாம்பு சார். பாம்ப அடிச்சு வச்சிருக்கோம்னு கையை காண்பித்தது.
டாக்டர் கையைப் பார்த்தார். வலி இருக்கா...
லேசா..
எப்ப கடிச்சது..
காலைல...
இப்ப வந்திருக்க...அறிவு இல்லையா..
அவர் இப்பத்தான் வந்தார்...
உன் வீட்டுக்காரரா...
ஆமா...
யாருய்யா அது என கூட்டமா இருந்த நோயாளிகள் மத்த்தியில் கேட்டார். ஒரு வயதானவர் முகத்தைக் காண்பித்து நான் தான் யா என்றார்.
உன் சம்சாரமா...
ஆமாங்கய்யா...
போனவாரம் உன் சம்சாரம்னு வேற யாரையோ கூப்பிட்டு வந்த னார்...
நாங்க எல்லோரும் சிரித்தோம்...
உடனே அந்தக் கணவர்...எங்கயா...ஒண்ணுக்கே..முடியல..னு சிரிச்சார்.
ஊசி போட்டுக்க....தண்ணிப்பாம்பு தான் என்றார்.
அப்பொழுது நின்றிருந்த மூன்று விற்பனை பிரதிநிதிகளுக்கு பாம்புக் கடி போன்று ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தார். எந்த பாம்பு எப்படி கடிக்கும்.
எந்தப் பாம்பு கடிக்கு கிட்னி உடனே செயலிழக்கும்.
கிராமத்தில் இருக்கும் பாம்புகள் எப்படி எப்படி லாம் கடிபட்டு மனிதர்கள் வருவார்கள் என உரையாடினார்.
அவர் ஒரு களஞ்சியம்.
நிறைய புத்தகங்கள் வாங்குவார். பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தின் முதன்மை மாணவர்களுக்கு உதவியும், விழாக்களில் புத்தகங்களையும் பரிசளித்து மகிழ்வார்.
இன்று தன் தந்தைக்குத் திதி கொடுக்க இராமேஸ்வரம் கடலில் இறங்கியவர் தடுமாறி விழுந்து மீட்க முடியாமல் மீள முடியாமல் இறந்து விட்டதாகச் செய்தி..
எங்கள் அருமை மருத்துவர் மேலூர் M.B.S.க்ருஷ்ணன் அவர்களை இந்த கடல் விழுங்கிக் கொண்டதில் எங்களுக்கு வருத்தம். ஒரு நல்ல மனிதனை ஒரு மருத்துவனை தன்னலம் பார்க்காமல் சேவை செய்தவனை வேகமாக விழுங்கிக்கொள்ள கடலுக்கு எந்த அலை சொல்லிக்கொடுத்ததோ...
க்ருஷ்ணன் சார்...உங்களுடன் உரையாடிய ஒவ்வொரு நேரமும் எங்களுக்குப் படிப்பு.
இந்த உலகமும், இயற்கையும் சுயநலமிக்கது..
போய்வாருங்கள் Dr.. க்ருஷ்ணன் சார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....