மாஸ்டர்.





காலைல எந்திரிச்சு மணிய பார்த்தா  ஆறு. அந்தா இந்தானு கிளம்பி நவின் பேக்கரில ஒரு காப்பி தண்ணிய குடிச்சிட்டு வாக்கர்ஸ் கிளப் வாசலுல வண்டிய நிப்பாட்டுனா மணி ஏழாயிரும். வெளிய இருந்து உள்ள போறதுக்குள்ள நெத்தி வியர்த்துரும். இதுக்கே டயர்டா ஆயிட்டா எப்படினு சூரிய பகவான் மூஞ்சில சுள்ளுனு தன்னோட பாசத்தக்காமிப்பாரு. வேகமா வெக்கு வெக்குனு   வியர்த்து விறுவிறுத்து நடந்து வந்தோம்னா நமக்குனு ஒரு போதி மரத்தடி  இடம் இருக்கு. வாக்கர்ஸ்கிளப்போட கடைசி முனை அது. ஒரு ஸ்டோர் ரூம். மூணு மரத்த வெட்டாம அதுக்கு அடில கட்டின கட்டிடம். முன் புறம் ஒரு பெரிய திண்ணைய கட்டிட்டாங்க. காலைல நடக்க வர்ற பெரிய வயசானவங்க அங்க படுத்து உடற்பயிற்சி பண்ணுவாங்க. அப்புறம் அந்த மரத்தடில சேர் போட்டு அரசியல் கலை இலக்கியம் னு எல்லாப் பயலையும் துவைச்சு தொங்க விடுவாங்க. முக்கியமா அந்த வாக்கர்ஸ் கிளப்புக்கு பணம் கட்டாம நடக்குறவன....அப்புறம் அங்க இருக்குற அரசியல் தலைவர் செயலாளர்னு எவன் வந்தாலும் கிளித்து தொங்கவிடப்படுற இடமா அதை பயன்படுத்திக்குவாங்க.

அந்த ஸ்டோர் ரூம்ல பாய் இருக்கும். அதை விரித்து படுத்து சிலர் யோகாசனம் செய்வாங்க. சிலர் அது மாதிரி ஏதாவது பண்ணுவாங்க. அதுல நானும் ஒருத்தன். சிலர் தனக்கு வந்ததை எல்லாம் பண்ணுவாங்க. ஒருத்தர் இருக்கார். வயது ஐம்பதுக்கு மேல இருக்கும். ஒரு டீ சர்ட். ஒரு வேஷ்டி. காலைல ஐந்தரை மணிக்குலாம் வந்துருவார்.சுகர் இருக்குனு அவரோட பொஞ்சாதி அவரை அடிச்சு நடக்கச் சொல்லி அனுப்புனதா செய்தி. மேற்படி என்ன பண்ணுவாருனா நடக்கலாம் மாட்டார் . உள்ள வந்ததும் நுழைவு வாயிலில் உக்காருவார். வாக்கர்ஸ் க்ளப்புக்கு சந்தா கட்டுறீங்களானு ஒரு பேனர போட்டு அங்க உக்காந்து ரிசிப்ட் போடுவார். அப்புறம் ஏழு மணிக்கு நம்ம திண்ணைக்கு வந்திருவார் பாய விரிப்பார். கால விரிப்பார். பாதத்த இடது பக்கம் ஒரு ட்விஸ்ட் வலது பக்கம் ஒரு ட்விஸ்ட். கழுத்த அப்படி ஒரு ட்விஸ்ட். முடிஞ்சது அவரோட சிக்ஸ்பேக் முயற்சி.  வயது அறுபது இருக்கும். இப்ப பேச ஆரம்பிப்பாரு. மோடி இருக்காரே மோடினு..அப்படியே அவங்க பேசுறத கேட்டுட்டே உடற்பயிற்சி பண்ணோம்னா டெல்லி, மும்பை , உத்திரபிரதேசத்துல யோகிக்கு மாலை மரியாதைலாம் பண்ணி , அப்படியே கல்கத்தா போயி மம்தாக்கு ஒரு சலாம் போட்டு கம்யூனிஸ்டுகளைக் கழுவி ஊத்தி, ஆந்திரா சந்திரபாபுவ பிடிச்சு பெங்களூர் வந்து காவிரி தண்ணீ அரசியல வழியா தமிழ்நாட்டுக்குள்ள வருவாங்க. அதுக்கு ஒத்து ஊத ஒரு நாலு பெருசுக இருப்பாங்க. பாக்கவும் அவங்க பேசுறத கேக்கவும் காலைல அவ்வளவு நல்லா இருக்கும். ஒரு பேங்க மேனேஜர் ரிட்டையர்ட் இருக்காரு. அவர் அதிமுகவா திமுகவா இல்ல பிஜேபியானு இப்ப வர தெரியல. கூட்டத்துல யார் எந்தக் கட்சிய ஆதரிச்சு பேசுனாலும் கழுவி கழுவி ஊத்துவார். அது கடைசில ஜோக்கா முடியும்.

நேத்து இரண்டு வயதானவங்க வந்தாங்க. ஒரு பிரச்சினைய முன் வைத்தார்கள். க்ளப் உறுப்பினர்கள் மூலமா குழந்தைகள் விளையாட ஒரு ஊஞ்சல் வாங்கி போட்டு இருக்கு. குழந்தைகள் னு இல்லாம சில பல எருமைகள் விளையாடி அது அந்து விழ, மறுபடியும் க்ளப் உறுப்பினர் நிதில இருந்து ரிப்பேர் சரி செய்து இப்ப  மாட்டிருக்கு. பத்தாக்குறைக்கு குழந்தைகளுக்கு மட்டும்னு ஒரு போர்ட்ல பெருசா எழுதி ஊஞ்சல் மேலேயே மாட்டி விட்டாங்க.  நேத்து சாய்ங்கலாம் இந்த இரண்டு பெரியவங்க நடக்கிறப்ப ஒரு கணவன் தன்னோட மனைவிய அந்த ஊஞ்சலுல உக்கார வச்சு ஆட்டிட்டு இருந்திருக்காரு.

பேஸ்புக் ல இல்லாட்டியும் கூட இந்த இரண்டு பெரியவங்களுக்கும் இத பாத்துட்டு அறச்சீற்றம் பொங்கி, அந்த கணவன்ட்ட போயி அந்த போர்ட பாத்தீங்களா, குழந்தைகளுக்குனு போட்டு இருக்கு. நீங்க ஆடிட்டு இருக்கீங்கனு ரொம்ப பவ்யமா கேட்டு இருக்காரு ஒருத்தர். அதுக்கு அந்த கணவன் இவரை முறைச்சிட்டு தன்னோட பொண்டாட்டிட்ட ' இந்தாம்மா இப்பத்த்தான் உன்ன வச்சு ஊஞ்சல் ஆடுனேன் . அது இவருக்கு பொறுக்கல. வா போலாம்னு கிளம்பினானாம்.
இதைக் கேட்டுட்டு பக்கத்துல இருந்த இன்னொருத்தர் அமைதியா இருந்தாராம்.
இப்ப சபைக்கு நடுல நிண்டுட்டு கேக்குறார். பாருங்க இவர் அமைதியா நிக்குறாரு. இவரும்தான மெம்பர். இவரும் கேக்கலாம்ல. அவன் அவனோட பொண்டாட்டிய வச்சு ஆடுறதுக்கு எனக்கு என்ன பொறாமையா னு கேட்டார்.
அங்க உக்காந்திருந்த ஒரு அக்ரி டிபார்ட்மெண்ட் ரிட்டையர்ட் ஆபிஸர், சார் அவன் தன் பொண்டாட்டிய குழந்தை மாதிரி பார்த்து விளையாண்டுருக்கான், கெடுத்துட்டீங்களே, பொறாமை பிடிச்ச ஆளு சார் நீங்க னார்.
இப்படித்தான் கலாய்ச்சுக்குவாங்க.

இப்படி இருக்குறப்ப இன்னைக்கு ஒரு காட்சி. திண்ணைல அங்க இங்க னு மழை பெய்து கரையா இருந்தனால நாலு பேர் தான் பாய் போட்டு பயிற்சி பண்ண இடம் இருந்தது. அதுனால நான் நிண்டுகிட்டு சும்மா வார்ம் அப் பண்ணிட்டு இருந்தேன். ஒல்லியா ஒரு உருவம். அவரோட இரண்டு நபர்கள் வந்து இருக்காங்க. ஒல்லியா இருக்குறவர் பாய் போட்டு உக்காந்திருக்காரு. அந்த இரண்டு பேரும் அவருக்கு முன்னாடி பாய் போட்டு அவரைப் பார்த்து உக்காந்திருந்தாங்க. பார்க்கவே வித்தியாசமா இருந்ததுனு கொஞ்சம் அவைங்கள கவனிச்சேன். மூணு பேருக்கும் வயது 35 க்கு மேல் இருக்கும்.
அந்த ஒல்லியா இருக்கிறவர் யோகா பண்ணுறாரு போல. இவைங்க ஏதோ ஏடாகூடமா அவர்ட்ட கேள்விய கேட்டுட்டானுக. அவர் விளக்கம் கொடுக்குறாரு. கொடுத்துட்டு ஒரு ஆசனம் பண்ணலாம் வாங்கனு சொல்லி இரண்டு பேரையும் படுக்கச்சொல்லிட்டார். குப்புற படுத்தானுக இரண்டு பேரும்.
 காலை மடக்கச் சொன்னார்.
மடக்குனானுக.
அப்படியே திரும்பச் சொன்னார்.
ஒருத்தன் திரும்புனான். கால் மடங்குனது நீண்டுகிட்டது.
இன்னொருத்தன் அப்படியே குப்புறப் படுத்தபடி தாடைய தரையில ஊண்டி அப்படியே கிடந்தான்.
கால நீண்டவன பார்த்து அந்த ஒல்லி மாஸ்டர் கால மடக்கிட்டே திரும்புங்கனு அதட்டுனார்.
நான் அந்த குப்புறப்படுத்தவன பார்த்துட்டே இருந்தேன். நம்ம மாஸ்டரும் அவன பார்த்துட்டு காலை மடக்கிட்டீங்க இப்ப திரும்புங்கனார்.

படுத்து  இருந்தவன் இன்னும் திரும்பனுமானு கேட்டான்.

 ' டேய், நீ இன்னும் திரும்பவே இல்லையடா னு சொல்லத் தோணுச்சு.

மாஸ்டர் அவன விடல.
காலை மடக்கி முதுக திருப்பி வயித்த உள்ள இழுத்துனு ஏகப்பட்ட நோட்ஸ் கொடுத்தார்.
அவைங்க இன்னைக்குத்தான் யோகானு கேள்விப்பட்டு வந்திருக்கானுக. உடனே உடம்பு எப்படி வளையும்.
ஆனாலும் மாஸ்டர் இன்னைக்கு தான் கத்துக்கிட்ட வித்தைலாம் இவைங்கட்ட இறக்குமதி செய்யனும்னு உறுதியா இருந்தார்.
அடுத்த ஆசனம் செய்வோம்னு அவைங்கள எழுப்பி விட்டார்.

அவைங்க எந்திருச்சு நிண்டானுக. அவைங்கள முழங்கால் போடச்சொன்னார்.
போட்டானுக.
 அப்படியே பின்னங்காலுல உக்காரச்சொன்னார்.
உக்காந்தாய்ங்க.
மாஸ்டர் இப்ப அதை பண்ணிட்டு அப்படியே அவர் உடம்பை வளைத்து நெற்றி தரையில் படுறப்படி விழுந்தார்.
 இவைங்க பாத்துட்டு இதை இப்ப பண்ணனுமானு ஒருத்தன் கேட்டான்.

ஏண்டா வெளக்கெண்ண பண்ணுறதுக்குத்தான அந்தாளு செஞ்சு காமிக்குறாப்புல பண்ணுயானு சொல்லத்தோணுச்சு.
இரண்டு பேரும் ட்ரை பண்ணானுக.
மாஸ்டர் எந்திருச்சு இரண்டு பேரையும் அட்ஜஸ்ட் பண்ணுவாருனு பார்த்தா அவர் போன் பேச ஆரம்பிச்சுட்டர்.
ஒருத்தன் அப்படி நெத்தி படுற மாதிரி படுத்தவனுக்கு எந்திரிக்க முடியல. இன்னொருத்தன் ரொம்ப சுட்டி. படுக்கவே இல்ல.
 மாஸ்டர் பேசி ஃபோன கட் பண்ணதும் பேச்ச மாத்துறானாம், இப்படி பண்ணா என்னாகும் உடம்புலனு கேள்விய கேட்டான்.

பிரஸ்ஸர் குறையுமாம். கவனம் அதிகரிக்குமாம். இரத்த ஓட்டம் அதிகரிக்குமாம்னு ஒவ்வொண்ணா மாஸ்டர் அள்ளிப்போட ஆரம்பிச்சார். அவன் எல்லாத்துக்கும் அப்படியா அப்படியானு கேட்டுட்டு இருந்தான். படுத்தவனால எந்திரிக்க முடியாம அவனும் படுத்துக்கிட்டே கேட்டுட்டு இருந்தான்.

இதை உருப்படியா செய்றதுக்குள்ள மாஸ்டர் அடுத்த ஆசனத்துக்கு போயிட்டார். இத இன்னொரு தடவ பண்ணவானு கேட்டான் ஒருத்தன். இல்ல டைம் இல்ல. இன்னொண்ண சொல்லி தந்துறேன். பாத்துக்கோங்கனு மாஸ்டர் தன் வித்தைய காமிக்குறதுலயே குறியா இருந்தார்.

யோகா பண்ணா ஞாபகசக்தி அதிகரிக்குமானு கேள்விய கேட்டதுதான் தாமசம். நம்ம மாஸ்டர் பேசுனாரு பேசுனாரு பக்கம் பக்கமா பேசுனாரு. அனேகமா மாஸ்டர் யோகாவ தியரியா படிச்சிருப்பாரு போல.

 ரெண்டு பேருல ஒருத்தன் யோகா பண்ணா நல்லா செமிக்குமா, தூக்கம் வருமா, டாய்லெட் நல்லா போகுமானு தன்னோட எல்லாப் பிரச்சினைகளையும் கேள்வியா கேட்டுட்டு இருந்தான். நம்ம மாஸ்டரும் சளைச்சவர் இல்ல. எல்லாத்துக்கும் ஆசனம் இருக்கு. ஒரு ஞாயித்துக்கிழமை வாங்க எல்லா ஆசனங்களையும் செஞ்சு காமிக்குறேனு சொன்னாரு.

இப்ப இன்னொர் ஆசனம். மாஸ்டர் சமணங்கால் போட்டு உக்காந்துட்டு தன்னோட ரெண்டு கைகளையும் கோர்த்துட்டுஅடி வயித்துக்கிட்ட வச்சுக்கிட்டு கண்ண மூடிக்கிட்டார். மூச்ச நல்லா இழுத்து , ஒரு நிமிஷம் இப்படி இழுக்குறப்ப தன்னோட கைய அடிவயித்துல இருந்து தொண்டை வரைக்கும் மேல கொண்டு வருவார். மூச்ச இழுத்து வாய் வழியா க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு சத்தத்தோட வெளி விட்டார். செஞ்சுட்டு இவைங்கள பாத்து இத பண்ணா உடம்புல இருக்குற அழுக்கு கெட்ட எண்ணம்லாம் வெளிய போயிரும்னார். சொல்லிட்டு கண்ண மூடி அவர் பண்ண ஆரம்பிச்சுட்டார். ரெண்டு பேத்துல ஒருத்தன் இன்னொருத்தன பார்த்து என்னாடானு பார்வைலயே கேட்டான். இன்னொருத்தன் வெயிட் பண்ணு என்ன நடக்குதுனு பாக்கலாம்னு அவனும் பார்வையிலேயே பதில் சொன்னான்.
மாஸ்டர் தொடர்ச்சியா மூச்ச இழுத்து கைகள ஆட்டி ஆட்டி க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு னு சவுண்ட் கொடுத்தார். இவைங்க இப்ப மிரண்டு போய் உக்காந்திருந்தானுக.

ஆரம்பத்துலேயே எனக்குத் தெரிஞ்சது. இவைங்களுக்கு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு நம்ம நல்லா சிக்கிட்டோமோனு.



 ரெண்டு பேத்துல ஒருத்தன் எந்திருச்சு செருப்ப போட்டுட்டு வா கிளம்பலாம்னு சைகை காமிச்சான்.
இன்னொருத்தன் வெயிட் பண்ணு னு சைகை காமிச்சான்.
 மாஸ்டர் இப்ப கண்ண திறந்தார். நிண்டவன் அவரைப் பார்த்து கிளம்பலாமா சார் னான். அவர்  விடலை. நீங்க வேணா போங்க. இவர் கண்ணுல ஒரு யோகிக்கான தெளிச்சி தெரியுது. நல்லா இன்ட் ரெஸ்டா இருக்காரு. இவர்ட்ட நான் பேசனும் . நீங்க போங்கனு இன்னொருத்தன கிட்டத்தட்ட மாஸ்டர் அரெஸ்ட் பண்ணிட்டார்.

யோகிக்கான  தெளிச்சியானு அவன் மிரண்டது இன்னும் ஜாஸ்தி ஆயிருச்சு. இப்ப மாஸ்டர் நீங்களும் பண்ணுங்கனு கண்ண மூடிட்டு க்ஸ்ஸ்ஸ்ஸூ க்ஸ்ஸ்ஸூ னு ஆரம்பிச்சுட்டார். எந்திரிச்சவன் நான் கிளம்புறேனு சைகை காமிச்சான். இவன் ஏய் இருடா..னு சைகை காமிக்குறான். மாஸ்டர் கண்ண திறந்து அடுத்த ஆசனம் பண்ணலாமானு கேட்டாரு.

டேய்..இவன் இன்னும் க்ஸ்ஸ்ஸ்ஸூ னு மூச்சு ஆசனத்தையே பண்ணல அடுத்த ஆசனமா னு தோணுச்சு. சின்னப்பிள்ளைகளில ஸ்கூல் படிக்கிறப்ப ரெண்டு பேர் சேர்ந்து படிக்கிறப்ப நல்லா படிக்கிறவன் இன்னொருத்தன்ட்ட படிச்சத புல்லா ஒப்பிச்சுட்டே இருப்பான். அது மாத்ரி மாஸ்டர்க்கு இவன் சிக்கிட்டான்.

இப்ப மாஸ்டர் உக்காந்திருந்தவன்ட மூச்சு எப்படி விடுறீங்கனு கேட்டார். வடிவேல் படத்துல இசை எதுல இருந்து வருது னு ஒருத்தன் கேட்பானே அந்த மொமேண்ட் அது.
அவன் என்ன சார்னு ஒரு கிறக்கத்துல கேட்டான். தியானம் பண்ணலாமானு மாஸ்டர் கேட்டார்.
என் பொண்டாட்டி கூப்பிடுறாரு சார்னு உக்காந்திருந்தவன் எஸ்கே ப் ஆனான்.

மாஸ்டர் இப்பத்தான் என்னைய பார்த்தார்.

பலே...வெள்ளையத்தேவா..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8