மதுரை புத்தக மழை விழா

மதுரையில் நேற்றோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அது பற்றி எழுத வேண்டியது ஆசை. அந்த புத்தகக் கண்காட்சியில் நான் என்னென்ன புத்தக்ங்கள் வாங்கினேன் என்று ஒரு பட்டியல் போடப்போகிறேன் என நினைக்காதீர்கள். இது அது அல்ல.

கொஞ்ச நாள் முன்னதாக எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி தினமும் நிலைத் தகவலாய் அந்த புத்தகத்திருவிழா பற்றி பதிவு செயதார். அப்பொழுதே எனக்கு தோன்றிய விசயம் நாமும் ஏன் மதுரையில் புத்தகத் திருவிழா நடக்கும்பொழுது இப்படி எழுதக் கூடாது என யோசித்து எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களிடம் வாட்சப்பிலும் பின்னூட்டத்திலும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். நானும் எழுதப் போகிறேன் என்று.
அவரும் எழுதித் தொலையும் என்ற மைண்ட் வாய்ஸை மொழிபெயர்த்து எழுதுங்க பழனி)))) என்று ஸ்மைலியோடு சொன்னார்.

ஆனால் அவர் எழுதிய தொணி நமக்கு சரிபட்டுவராது என்பதும் நமக்கு வருவதை எழுத முற்பட்டால் scary movie ரேஞ்ச்க்குத்தான் மாறும் என்பதையும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன்.

அதற்கான புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமானது. அதுவரை அஸ்ஸாம் மும்பை அமெரிக்கா சென்னை நெல்லை என அங்கும் இங்குமாக பெய்த மழை மதுரையில் முகாமிட அந்த தேதியைத்தான் குறித்து வைத்திருக்கும் போல.

புத்தகத் திருவிழாவின் முதல் நாள் மாலை சரியாக ஆறுமணிக்கு  விற்பனைக்கு பத்தியைப் பொறுத்தும் தருவாயில் ஆரம்பித்த மழை தெளியவைத்து தெளியவைத்து அடித்தது. ஆறு மணிக்கு ஆரம்பித்த மழை ஆறு நாற்பது வரை கொஞசம் பெரிய மழையாக பெய்தது. பிறகு ஆறு ஐம்பது வரை அடுத்த பஸ் ஸ்டாப்பிற்கோ அல்லது வேறு தேநீர் கடைக்கோ ஒதுங்கிக்கொள்ளுங்கள் என  வாய்ப்பு கொடுத்த மழை ஆறு ஐம்பதிற்கு ஆரம்பித்து ஏழு நாற்பது வரை கொஞ்சம் அல்ல நல்ல பெரிய மழையாக பெய்தது. . அருகிலிருந்த நான்கு பொதுஜனங்கள் தனக்கு வரவிருக்கும் கேன்சரை சிகரெட் புகையின் வழியாக எனக்கும் பகிர முற்பட்டனர்.
டமிளன் சும்மா இருந்தா யோசிப்பான் என்பதால் யோசிக்க அவகாசம் கொடுக்காமல் ஒரு தட்டையை கொறித்து விட்டு ஓரளவிற்கு பால் கலந்த நீர் தேநீர் வயிற்றுக்குள் ஊற்றப்பட்டது.

ஏழு நாற்பதிற்கு மேல் ஆரம்பித்த மழை புத்தகத்திருவிழா முடியும் மணியான ஒன்பது மணிக்கு தன் பணியை நிறுத்திக்கொண்டது.

இதற்கு முந்தைய புத்தகத் திருவிழா நடந்த திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக நிறைய ஸ்டால்களில் மழை வழிந்து புத்தகங்கள் ஈரமாகினவாம். நட்டப்பட்டதாக ஒரு பதிப்பகத்தார் நியூஸ் சேனலில் பேட்டி கொடுத்த நியாபகம். பதிப்பகங்கள் காப்பிரைட் விசயத்தில் கொள்ளை அடிப்பதைச் சுட்டி காட்டும் எழுத்தாளர்கள் அப்பொழுது நியூஸ் பார்க்கவில்லை என்பதால் பதிப்பகங்களின் நட்டத்தைப் பற்றி எழுத முடியவில்லை. இருக்கட்டும்.

ஆதலால் மதுரையில் அப்பர் செக்மெண்டை வலுவாகச் செய்து பேஸ்மெண்ட்டை கோட்டை விட்டார்கள். கொஞ்சம் பத்து நிமிடம் கூடுதலாக பெய்திருந்தால் தண்ணீர் உள்ளே முழுக்க வந்திருக்கும். தப்பித்தது. ஆக அன்று யாரும் வராத நேரத்தில் வந்து போன மழை அதிசயம்.

அடுத்த நாளும் மழை தான். அதற்கு அடுத்த நாளும் மழை தான். பதிப்பக சங்கமான பபாஸிக்கு ஒரு வேண்டுகோள். மதுரையில் மழை வராமல் அவனவன் ஆட்டையும் மாட்டையும் கோழியையும் காவு கொடுத்து தாவு தீர்ந்து கொண்டிருந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியைக் கொண்டு வந்த நேரம் மழை வந்தது. ஆதலால் இனி மதுரையில் மழை அற்று தத்தளிக்கும் சம்யங்களில் வந்து கண்காட்சி போட்டு குடங்களை நிரப்ப வேண்டிக்கொள்கிறோம்.

மூன்று நாட்கள் கழித்து மாலை ஆனதும் வாங்கடா எல்லாரும் குடும்பத்தோடு புக் வாங்க போகலாம் என பரிவாரத்துடன் கிளம்பும் குடும்பங்களைக் கிலி ஏற்படுத்த அது வரை நீலமாக இருக்கும் வானம் திடீரென கருப்பாக மாறி மேகமாக நிற்கும். இப்படி ஒரு நான்கு நாட்கள் செய்து வருபவரையும் நிப்பாட்டி விட்டது.
ஒவ்வொருவனும் மாடியில் ஏறி  அரசியலுக்கு வருவியா மாட்டியா என ரஜினி கமலைப் பார்த்துக் கேட்கும் சாமானியனாக வானத்தைப் பார்த்தார்கள். கடைசியில் மூன்று நாட்கள் மழையும் வரவில்லை.

புத்தகத் திருவிழாவின் உச்சபட்ச விற்பனை எதிர்பார்க்கப்பட்ட கடைசி ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணியிலிருந்தே மேகம். அங்கும் இங்குமாக சாரல். முடிந்தது கதை.

இதில் முக்கியமான விசயம். இதற்கு முன்னதாக நடந்த பதினோரு புத்தகத்திருவிழாவில் படித்ததன் விளைவா இல்லை மக்கள் விவரமாக மாறிவிட்டார்களா எனத் தெரியவில்லை. ஈஷா யோகா ஸ்டாலில் கூட்டமே இல்லை...

பெப்புள்ஸ் என்ற ஸ்டாலுக்குத்தான் விற்பனை. பிள்ளைகளுக்கு எதையாவது சொல்லிக்கொடுத்து வாங்கிக்கொடுத்து உருப்படியாக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கடமை. அதை அங்கு வந்து காட்டிக்கொண்டனர். இரண்டு டிவிக்களை மாட்டி விட்டு ஒன்றில் கண்மனி பாட்டு இன்னொன்றில் ஒரு வயதான ஆசிரியர் முழுக்க முழுக்க தமிழில் ஸ்போக்கன் இங்கிலீஸ் சொல்லிக்கொடுக்கும் காணொளியும் ஓடிக்கொண்டு இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு நீட் தேர்விற்கான கெமிஸ்ட்டரி புத்தகம் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் முதல் ஸ்டால் ஆச்சி மசாலாவின் ஸ்டால்.
என்னடா இது ஒருவேளை ஓரத்தில் மிளகாய் பஜ்ஜி செய்து ஆச்சி மசாலா பொடி தூவி ஏதும் திண்பதற்கு தருகிறார்களா என்று பார்த்தால் அவர்கள் புத்தக ஸ்டால் தான் போட்டு இருக்கிறார்கள். அந்த ஸ்டால் முழுக்க ஒரு ஐம்பது புத்தகங்கள் இருந்திருக்கும். அந்த ஐம்பது புத்தகங்களும் ஒரே புத்தகம்.
அது ஆச்சி மசாலா ஓனர் எழுதிய தன்னம்பிக்கைப் புத்தகம். அதான் இப்பொழுது விளம்பரத்திற்கு வருகிறாரே பூவிழி வாசலிலே பட வில்லன் தாடிக்காரர் மாதிரி இருப்பாரே அவர்.

இவர் இப்பொழுது எழுத களம் இறங்கியிருப்பதனால் எப்படி விளம்பரத்திற்கு முதலாளிகளே வந்தார்களோ அப்படி எல்லா முதலாளிகளும் உதாரணத்திற்கு லலிதா ஜுவல்லர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் இப்படி ஒவ்வொருத்தரும் எழுத வந்துவிடுவது எழுத்தாளர்களுக்கு ஒரு கிலியை ஏற்படுத்துமா என்பது ஒரு அவதானிப்பு.

எனக்கு அருகில் புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒருத்தர் ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பார்த்து வைத்தார். ஒரு சில புத்தகங்கள் சீல் செய்யப்பட்டு டின் பெப்ஸி கோக் வகையறா போல உள்ளே இருப்பது தெரியாதபடி இருக்கிறது. ஏனென்றால் டமிளன் மோசமானவன் ஒரு நிமிடத்தில் நான்கு பக்கங்களைப் படித்துவிடுவான். எழுத்தாளன் கொஞ்சம் ஏப்பை சப்பையாக இருந்தால் அடுத்து வரும் நூறு பக்கங்களுக்கு அவர் என்ன எழுதியிருப்பார் என்று கூட கண்டுபிடித்துவிடுவான். ஆதலால் சீல் செய்துவிட்டார்கள் போல. அவர் என்னிடம் ஒரு புத்தகம் காண்பித்து , இது சிறுகதை தொகுப்பா எனக் கேட்டார். அந்தப் புத்தகம் எஸ் ரா அவர்களுடையது. நான் சொன்னேன் அது கட்டுரைத் தொகுப்பு சார் ஆனா கதை மாதிரி தான் இருக்கும் படிங்க என்று.
அடுத்த புத்தகம் சாரு அதற்கு அடுத்து ஜெயமோகன் என எல்லாம் எடுத்தார். எல்லாமே கட்டுரைத் தொகுப்புகள். பிறகு ஏதோ ஒரு கதைத் தொகுப்பை எடுத்துவிட்டு ஏன் எல்லாரும் கட்டுரைக்குத் தாவிட்டாங்க என்றார். நான் சொன்னேன் ஜிமிக்கி கம்மல் எப்படி ட்ரெண்ட் ஆகிறதோ அது மாதிரி எழுத்தாளர்களுக்கு கவிதை கதை நாவல் க்கு அடுத்து கட்டுரையும் மொழிபெயர்ப்பும் ஒரு ட்ரெண்டிங்க். இப்பொழுது அது தான். லத்தீன் அமெரிக்க ரஷ்ய இலக்கிய னு எல்லாத்தையும் நெட் ல டவுன்லோட் பண்ணி படிச்சுக்கிட்டு எழுதுறது இப்ப ட்ரெண்ட்..அரேபிய இலக்கியங்கள் அனேகமா அடுத்த வருஷ  புத்தகத் திருவிழாவிற்கு வந்துரும்னு நினைக்கிறெனு சொல்றதுக்குள்ள அவர் போயிட்டார்....

ஸ்டால் போட பதிப்பகங்கள் தந்த காசிற்கு ஏற்ற படி விற்பனை நடந்திருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம். அப்படி நடந்திருந்தாலும் அதில் லாபம் எவ்வளவு என்பது தெரியவில்லை.

கூட்டம் குறைவா என நண்பர் ஒருவர் கேட்டார். ஆம் என்றேன். ஏன் என்றார்,.
படிக்கிறவர்களை விட எழுதுபவர்கள் மதுரையில் அதிகம் ஆகிவிட்டார்கள் ஆதலால் மற்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் போல என்றேன்.

உண்மையில் வாசிக்க வேண்டும் என்ற ஆரவம் இருந்தவர்கள் வந்து போனது தான் சிறப்பு.

டிஸ்கி: வார்த்தைகளும் வரிகளும் கள்ளம் கபடம் அற்று ஒரு சாமானியனின் பார்வையாக எழுதப்பட்டது. சர்ச்சையாகப் பார்த்தால் கம்பெனி பொறுப்பு ஏற்காது என்று பொறுப்பு துறப்பு போர்ட் இங்கு மாட்டப்பட்டுள்ளது.

நன்றி.
வணக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8