செம்பருத்தி

இது ஒரு மழைக்காலம் தான் அதற்காக ரோட்டில் இந்த அளவு சகதியாக இருப்பதற்குக்காரணம் மழை இல்லை.
ரோடு போடுவதற்காக கொட்டப்பட்ட மண் தான்.
இவர்கள் எப்போதுமே இப்படித்தான். மழைக்காலத்தில் தான் பாதாளச்சாக்கடை போடுவது கேபிளிற்காகத் தோண்டுவது ரோட்டைப் போடுவது என்று செய்வார்கள். அப்படித்தான் ரோட்டைப் போட மண்ணைப் போட்டு சில இடங்களில் பள்ளங்களை நிரப்ப செம்மண்ணைப் போட்டு சாலையைச் செந்நிறமாய் வைத்திருக்கிறார்கள்.
நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதிக்கு இந்தச் சாலை தான் பிரதானம்.
எல்லாம் குடியிருப்புகள் இருக்கும் சாலை.
சாலையில் நடப்பவர்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிக்கும் தண்ணீருக்கும் ஏற்றபடி தாண்டி தாண்டிச் சென்றார்கள்.
சோமசுந்தரம் மாமா தான் என் முன் போய்க்கொண்டிருக்கிறார். ஒரு கையில் மஞ்சள் பை வைத்திருக்கிறார். சிவப்பு நிற லெதர் பேட்டா செருப்பின் நுனியில் சற்று சகதி அப்பியிருக்கிறது.
இடது கையால் தன் பேண்ட்டை ஏற்றிப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தவருக்குப் பின்னால்தான் பஜாஜ் பல்சரில் போய்க்கொண்டு இருக்கிறேன்.
அரை கிலோமீட்டரில் என் வீடு. அதற்கு நான்கு வீடுகள் முன்னதாகத் தான் சோமசுந்தரம் மாமாவின் வீடு.
அவருக்குப் பக்கவாட்டில் சற்று அருகில் போய் வண்டியை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்.
பைக்கில் அமர்ந்தபடி பார்த்தால் கூட் அவர் என் தோள்பட்டைக்கும் குறைவான உயரம் தான். கொஞ்சம் மாநிறம்.
முன் நெற்றி ஏறிப்போயிருக்கும்.
என்னைப் பார்த்ததும் பற்கள் தெரிய புன்னகைத்தக் கொஞ்ச நேரத்தில் கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னார்.
சோமசுந்தரம் மாமா எப்பொழுதுமே அப்படித்தான்.
காலையில் பால் வாங்கும்பொழுது எங்கள் வீட்டைத் தாண்டிப் போவார். ஆறு மணிக்கு எல்லாம் பனியன் கைலியோடு சிரித்த முகத்துடன் கைகளைக்கூப்பி வணக்கம் சொல்வார்.
ஒரு முறை தேர்தல் சமயத்தில் தேர்தல் சாவடியில் நின்றிருந்தவரைப் பார்க்க நேர்ந்தபொழுது கூட அப்படித்தான் வணக்கம் சொன்னார்.
வயது வித்தியாசம்லாம் அவர் பார்ப்பதில்லை. எனக்கு மட்டும் இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் அவர்.

உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். சோமசுந்தரம் மாமா எனக்கு உறவு முறை மாமா இல்லை. இருபது வருடங்களுக்கு முன் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு குடிவந்த பொழுது எங்கள் வீட்டிற்கு பின் புறம் எல்லாம் வயக்காடு. எதிர் புறத்தில் வீடு இல்லை. வலப் புறத்தில் வீடு இல்லை. பத்தடி தாண்டி நான்கு வீடுகள் சேர்ந்தாற்போல் ஒரு வீடு இருந்தது. எதிர் புறத்தில். அது தான் சோமசுந்தர மாமாவின் வீடு. அதற்கு முன்னதாக நாங்கள் பத்துவருடமாக இருந்தது  ஒரு ஜனரஞ்சகமாக இருந்தப் பகுதி. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் மாமா அத்தை தான்.
அப்படித்தான் சோமசுந்தரம் மாமா உதயமானார்.
எங்களது பழைய பகுதி மக்கள் போல் இந்த ஏரியா மக்கள் இல்லை. சோமசுந்தர மாமாவும் தான்.
சமயத்தில் அவரைப் பார்த்தது கூட இல்லை. வங்கியில் வேலை பார்ப்பவர் என்றுதான் தெரியும். அவர் வருவதும் போவதும் தெரியாது. காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார் . அப்பொழுது பார்த்தால் தான் உண்டு. இரவு ஒன்பது மணிக்கும் மேல் தான் வருவார்.
ஒரு வீட்டில் இருந்துகொண்டு அடுத்து அவருக்குச் சொந்தமாய் இருந்த நான்கு வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தார். அவருக்கும் ஒரு மகன் மட்டும் இருந்தார். அப்பொழுது தியாகராசர் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். மகேஷ் அண்ணன்.
மகேஷ் அண்ணன் எப்பொழுதும் மாடியிலே படித்துக்கொண்டே இருப்பார். பார்த்தால் எப்போதாவது சிரிப்பார்,. அவரையும் வெளியில் பார்த்தது கிடையாது. அவர் வயதிற்கு அவர் நண்பர்களுடன் சுற்றுவதும் கிடையாது. பொதுவாகச் சொன்னால் சோமசுந்தரம் மாமாவின் வீடு ஒரு மர்ம்மாகவே இருந்தது. அந்தப் பகுதி அப்பொழுது கட்டுமானப் பணிகளில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வீடுகள் ஆகிக்கொண்டிருந்தன. வீட்டிற்குப் பின்னாடி பெரிய வயக்காடு இருந்ததாகச் சொன்னேன் அல்லவா. அங்கு கூட சில நாட்களில் நான்கு வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
வெகு நாட்களாக அந்தப் பகுதியில் குப்பை அள்ளும் ஒரு ஊழியர் ஒரு மதியச்சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டு ஃபோர்டிகோவில் அமர்ந்தவர் அந்த ஏரியாவின் பின்னனி ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தார். அதில் பாதி கதை. பாதி உண்மை. எது எது என்பதை நாம் தான் ஆராயவேண்டும்.

சோமசுந்தரம் மாமா தண்ணி அடிப்பார்.
மனைவியை அடிப்பார். மெண்டல் மண்டையன்.
அவருக்கு ஒரு பெண். ஒரு பையன் என்றபோது தான் அவருக்கு இரண்டு பிள்ளைகள் என்று தெரியும்.
பக்கத்து வீட்டில் வாடகைக்கு விட்டிருந்த ஒரு குடும்பத்தில் ஒரு பையன் இருந்தான். இந்தப் பெண்ணிற்கும் அந்தப் பையனிற்கும் ஏதேதோ நடந்து அந்தப் பெண் ஓடிவிட்டாள். அந்தக் குடும்பமும் வீட்டைக் காலி செய்துவிட்டது.
இது தான் அவிழ்ந்தக் கதை.
அதை ஆராய்ந்ததில் பெண் ஓடிப்போனது உண்மை. வீட்டிற்குள் நுழையவிடவில்லையாம். எங்கு இருக்கிறாள் என்பது எங்கள் பகுதி ஆட்களுக்கே தெரியவில்லை.
அந்த அத்தையும் வெளியவே வராது. ஒரு வேளை மாமா அடிப்பார் என்று சொன்னது உண்மையோ?
நாட்கள் சென்ற ஒரு காலகட்டத்தில் மகனுக்குத் திருமணம் முடித்தார். பாண்டிச்சேரியில். ஏரியாக்காரர்களுக்குப் பத்ரிக்கை எதுவும் தரவில்லை.அவர்கள் வீட்டிற்கு பால் ஊற்றும் பால்காரர் வீடு மூன்று நாட்கள் பால்வேண்டாம் ஏன் எனக்கேட்டதற்குக் காரணத்தைச்சொல்ல அவன் எங்கள் பகுதி டீ க்கடைக்குச் சொன்னான். போதுமே?
மகனும் காதல் கல்யாணம் அது இது என்று ஏரியாக்குள் அதகளம்.
நான்கு நாட்கள் கழித்து மகனும் மருமகளுமென காரில் இறங்கியது குடும்பம். அவனும் மனைவியுடன் அடுத்த நாளே பாண்டிச்சேரி போனவன் தான். வரவே இல்லை.
அவ்வப்போது சோமசுந்தரம் மாமாவின் மகள் ஸ்வாதி அக்கா வருவாள். கைக்குழந்தையோடு . இரண்டு நாட்கள் இருக்கும். பிறகு போய்விடும் .
இன்னும் சில நாட்கள் கழித்து சோமசுந்தரம் மாமா பகலிலும் தென்பட்டார். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு அடைந்துவிட்டதாகத் தகவல்.
அந்தப் பகுதி இப்பொழுது பிரபலமடைந்து மினிபஸ் ஷேர் ஆட்டோ இப்படி போக்குவரத்து எல்லாம் மலிந்துவிட்டாலும் கூட பழைய பழக்கமாய் இருபது நிமிடம் நடந்து மெயின் ரோடு சென்று பஸ் ஏறுவது சோமசுந்தரம் மாமாவிற்குப் பழக்கம்.
ஒரு நாள் மாமா அத்தை எல்லாம் வெளியே நிற்க அவர் வாடகைக்கு விட்டிற்கும் மூன்று வீடுகளுக்கும் அவரது வீட்டிற்கும் நடுவே பெரிய சுவர் எழுப்பும் வேலை நடந்தது. கேட்டதற்கு அந்த மூன்று வீடுகளையும் விற்றுவிட்டார் என்ற தகவல் கிடைத்தது.
ஸ்வாதி அக்கா கணவனுடன் முழுக்கச் சண்டையிட்டு வந்துவிட்டது.
கொஞ்ச நாளில் ஸ்வாதி அக்கா தன் ஐந்து வயது குழந்தையை ஒரு பள்ளீயில் சேர்த்துவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தது.
சோமசுந்தரம் மாமா தன் இறுக்கங்களை எல்லாம் தளர்த்தி பால்காரர் பேப்பர்காரர் டீக்கடைக்காரர் என்று பேசும் உலகத்திற்கு அப்பொழுதுதான் வந்தார். ஒருவேளை ஓய்வுகாலம் அவரை இப்படி மாற்றியிருக்கலாம்.
ஒரு வருடத்தில் ஸ்வாதி அக்காவின் கணவன் இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்து ஒரே ரகளை. அதுவரை எங்கள் பகுதிக்கு அந்த வீட்டின் தகவல் எதுவும் தெரியவில்லை என்பதால் வெறும் வேடிக்கை தான். கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரம் மாமா வீட்டை விட்டு வெளியே வந்து எங்கள் வீட்டைத்தாண்டியுள்ள ஒரு டீக்கடையில் வந்து நின்றார். அக்காவின் கணவன் நெடுநேரமாய் வீட்டினுள் அமர்ந்து பேசிப்பார்த்து விட்டு போய்விட்டான் . என்ன பிரச்சினையோ தெரியவில்லை. பிறகு ஸ்வாதி அக்கா தன் அப்பாவை கடைக்குச்சென்று அழைத்துப்போனது. அந்த இருட்டில் தெரு விளக்கு வெளிச்சத்தில் சோமசுந்தரம் மாமா இறுகிப்போய் போனார்.
முன் நெற்றியில் வியர்வைத்துளிகள் முத்தாய் வழியக்காத்திருந்தன.
எங்கள் பகுதி பாதாளச்சாக்கடை வேண்டி ஒரு குழு கவுன்சிலரைப் பார்க்கப்போனது தான் சோமசுந்தரம் மாமா என்னுடன் சில நேரம் சிரித்துப்பேசியது. என்ன வேலை என்று எல்லாம் கேட்டார். விவசாயத்திற்கான உரம் மற்றும் விதைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மார்க்கெட்டிங்க் என்றதும் விவசாயி, மழை என்றேல்லாம் பேசினார். அயல் நாட்டு விதை கம்பெனியா என்று கூட கேட்டார்.
பிறகு தினமும் பக்கத்து பால் பூத்தில் பால் வாங்கச் செல்வார். பார்த்ததும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வார். நன்றாகச் சிரிப்பார்.
ஒரு முறை அலுவல் வேலையாகச் சென்றவன் வீடு திரும்பி வீட்டில் பைக் வைத்துக்கொண்டிருக்கும்போது என் வருகையைப் பார்த்து வந்து நின்றார்.
வீட்டில் ஒரு செம்பருத்திச் செடி வைத்திருக்கிறேன். பூச்சினு நினைக்கிறேன். வரமாட்டிங்குது. என்ன செய்யலாம். பேத்தி ஆசையா தண்ணி ஊத்துறா என்றார்.
நான் பார்க்கலாமா என்றேன்
அழைத்துப் போனார்.
பஞ்சு போல் படரும் பூச்சியினங்களை கைகளால் எடுத்துவிடுங்கள் வளர்ந்துவிடும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தவனை உள்ளே அழைத்து அன்றைக்கு கடையில் வாங்கிய ஸ்வீட் கொடுத்து தண்ணீர் கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.
அவர் வீட்டை விற்றது, இறுக்கமாய் பல வருடங்கள் இருந்தது என அந்த இருண்டகாலத்தில் கண்ட சோமசுந்தரம் மாமாவா இது என்று இருந்தது.
நாம் நம் வாழ்விற்குள் செய்த அசாதாரணப் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளும் தருவாயில் தான் தெரிகிறது நாம் கடந்துவந்த சில இருணடகாலவெளிகளை. ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த இருண்ட காலம் என்பது இருந்துவிடுகிறது. ஏன் நிகழ்ந்தது எதனால் என்று கூட யோசிக்க முடியாதபடி இருந்த காலத்தில் தான் சோமசுந்தர மாமாவும் இருந்திருப்பார் போல்.

இப்பொழுது சகதி சூழ் நடுத்தெருவிற்கு வாருங்கள்.சோமசுந்தரம் மாமாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீடு வந்தேன்.
இரண்டு மூன்று பூச்செடி விதைகள் கேட்டார். கிடைத்தால் தருவதாகச் சொன்னேன்.
பேத்தி காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கா என்றார்.
காலங்கள் ஓட ஓட எல்லாமே மாறுகின்றன. ஸ்வாதி அக்கா வெளியில் நின்று நான் அவரது அப்பாவுடன் வருவதைப் பார்த்தார்.
ஸ்வாதி அக்காக்குக் கூட வயதாகிவிட்டது.
பெரிய செம்பருத்திச் செடிகள் பூத்துக் கிடந்தன.
இறக்கிவிடும்போது , என்ன மாமா பேத்திக்குனு வச்ச செடிகள் எல்லாம் பெருசா வளர்ந்துருச்சுல என்றேன்.
செடி மட்டுமா..தம்பி ..பிரச்சினைகளும் தான் என்று விட்டு கைகள் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு போய்விட்டார்.
பிறகு இரண்டு நாட்கள் கழித்து காலை ஆறுமணிக்கு எல்லாம் ஸ்வாதி அக்கா வீட்டு வாசலில் நின்றார்.
என்னக்கா...பால் வந்திருச்சா என்றேன்.
இல்லப் ப்ரவீன்....அப்பா நைட்டு தவறிட்டார். சொல்லலாம்னு வந்தேன் என்றாள்.
வெளியே வந்து சோமசுந்தரம் மாமாவின் வீட்டைப் பார்த்தேன். அது எப்பொழுதும் போல யாருமற்ற வாசலாய் தனித்துக் கிடந்தது. அவரது காம்பவுண்ட் மீறி வளர்ந்து தெருப்பக்கமாய் பூத்திருந்த செம்பருத்திச் செடியின் புதிய பூவொன்றை ஒரு ஆடு எட்டி தின்று கொண்டிருந்தது..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....