விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 17
பழனிக்குமார்



ஒரு மெடிக்கல் ரெப்பின் தொழில் வாழ்வில் பயணங்களும் காத்திருப்புகளும் தான் அதிகப்படியாய் நிகழ்பவை.

ஒரு மருத்துவரைப் பார்க்க மூன்று மணி நேரம் கூட காத்திருப்போம்.
மருத்துவரைப் பார்க்கலாம் என்னும்போது ஐந்து நொடிகள் தான் நேரம் என்பார்கள். அந்த ஐந்து நொடிகளுக்காக மூன்று மணி நேரம் காத்திருப்புகள் தான் தவம்.


அங்கு இருக்கும் நேரங்களில் டிவி, புத்தகம், மொபைல், வேடிக்கை, நண்பர்களுடனான உரையாடல் என்று அந்தக் காத்திருப்புகள் நிகழும்.


சில காத்திருப்புகளும் பயணங்களும் சுவாரஸ்யமாய் நிகழும்.


ஒரு பைக் பயணம். அது.
அருப்புக்கோட்டை வேலை முடித்துவிட்டு, திருச்சுழி என்ற கிராமத்தில் வேலை முடித்துவிட்டு, திருச்சுழியிலிருந்து நரிக்குடி வழியாக மதுரை வரும் ஒற்றையடிப்பாதை போல் ஒரு பாதை உண்டு.


என் அம்மாவின் ஊர் என்பதால் பள்ளிப்பருவங்களில் அந்தச் சாலை வழியாக மருதுபாண்டியர் போக்குவரத்து பேருந்தில் வந்த காலங்களிலிருந்து இப்பொழுது வரை அந்தச் சாலை மோசமானதாகத்தான் இருக்கும். அன்றும் கூட.



என் நண்பர் மற்றும் என்னுடன் வேலை பார்ப்பவருமானவரும் நானும் வந்து கொண்டிருந்தோம். பைக்கை நான் ஓட்டிக்கொண்டு வர என் பின்னால் அவன் அமர்ந்து வந்தான்.


என் பள்ளிப்பருவ ஞாபகங்களை அவனிடம் சொல்லி மொக்கை போட்டுக்கொண்டு வந்தேன். அது தான் உண்மை.


மழை இருட்டிக்கொண்டு வந்தது. இடையில் இரு வாலிபர்கள் பைக்கை உருட்டிக்கொண்டு போனவர்கள், எங்களைப் பார்த்ததும் லிஃப்ட் கேட்டது போல் நிறுத்தினார்கள்.


வண்டியில் பெட் ரோல் இல்லை என்றும், டோ பண்ணி நான்கு வழிச்சாலை வர கொண்டு வரமுடியுமா என்றும் கேட்டார்கள்.

கிட்டத்தட்ட 15 - 20 கிமீ க்கு மேல் இருக்கும் .
மேலும் வேகமாகத் திரும்பவேண்டும் என்று நிலையில் நான் இருந்ததால், இல்ல பாஸ் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
இன்னொன்று எனக்கு டோ பண்ணி ஓட்டமுடியாது என்றும் சொன்னேன். என் பின்னே இருந்த நண்பனும், கஷ்டம் பாஸ், என்றான்,


உடனே அவர்களில் ஒருவன், வேணும்னா, நீங்க எங்க பைக்ல உட்காருங்க, உங்க பைக்க நாங்க ஓட்டி டோ பண்றோம்ன்னா என்றார்கள்,


இல்ல பாஸ், மதுரை வர போகனும், வேலை இருக்குனு சொல்லிட்டு வண்டியைக் கிளப்பி விட்டேன். பின்னால் இருந்த நண்பன், தள்ளிருக்கலாம்ல என்றான்,

நான், " ஏதோ தெருமுக்கு வரை னு சொன்னாக்கூட பரவால, ஃபோர்வே வர 15 கிமீ க்கு எவன் தள்ளுறதுனு " என்று சொன்னேன்.


நான்குவழிச்சாலை- காரியாபட்டி தொடவும், மழை பிடித்தது.


மழை என்றாலும் மழை பேய் மழை.
முன்னால் வெள்ளையாகத் தெரிகிறது. சாலையே தெரியவில்லை. பற்றாக்குறைக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வரும் லாரிகள் தண்ணீரை அடித்துக்கொண்டு போகின்றன.

நான்குவழிச்சாலையில் ஒதுங்குவதற்குள் நனைந்துவிட்டோம்.

அப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரத்தில் மதுரையில் ஒரு முக்கியமான மருத்துவரைப் பார்க்க அப்பாயின்மெண்ட் வேறு. அவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் பார்ப்பார். அதனால் போக வேண்டிய கட்டாயம்.

நிறுத்தாத, போயிட்டே இரு என்றுவிட்டான் அவனும்.


ஒரு கையால் கண்ணில் விழும் மழைத்துளியைத் துடைத்துக்கொண்டும், நெற்றிக்கு மேல் கையை வைத்துக்கொண்டும் வண்டியை விரட்டினேன் .

ஆவியூர் தாண்டி டோல்கேட் வந்ததும், டோல்கேட் வேலையாட்கள் மூன்று பேர் எங்களை நிறுத்தினார்கள். பைக் குகளுக்குக் கட்டணம் இல்லையே, பிறகு என்ன, என்று கேட்டோம்.


ஆவியூர் ஸ்டேஷன்ல இருந்த் சப் இன்ஸ்பெக்டர் அழைத்தார், உங்களை நிறுத்தச்சொன்னாராம், நிறுத்தாம வந்தீங்களாம் உங்களைப் பேசச்சொன்னார் என்றும் சொன்னார்கள்.


எங்களை யாரும் நிறுத்தவில்லையே என்றோம். ஃபோன் பண்ணி கொடுத்தார்கள்.

நான் தான் பேசினேன். நிறுத்தச்சொன்னா, நிப்பாட்ட மாட்டியா என்றார்.

எங்களுக்குத் தெரியலையே சார், மழை வேற அதுனால தெரியல, என்றேன்.

வண்டி எண்ணைச்சொல்லு என்றார்,

சொன்னேன்

ஸ்டேஷனுக்கு வா என்றார்.


அங்கிருந்து மறுபடியும் காரியாபட்டி போகும் வழியில் ஐந்தாறு கிமீ இருந்தது அது.

மறுபடியும் என்ன என்று தெரியாமல் வண்டியைத் திருப்பினோம்.

நாங்க்ள் திரும்புவதைப் பார்த்து டோல்கேட் ஊழியர்கள் ரிப்போர்ட் அவருக்குச் சொன்னார்கள்.


நாங்கள் ஸ்டேஷன் போன போது அங்கு எஸ் ஐ இருந்தார்.


நிறுத்தச்சொன்னா நிறுத்தமாட்டிங்களா என்றார்.

மழையில் நனைந்தபடிக்கு இன் பண்ணி ஷூ போட்டதையும் எங்கள் ஈரமான பையையும் பார்த்தார். நடந்து வரும்பொழுது ஷூ விலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்ததையும் அதனால் அந்த இடம் ஈரமானதைப் பார்த்து நான் சங்கடப்பட்டதையும் அவர் கவனித்தார்.


எங்க இருந்து வந்தோம் என்ன வேலை எங்க போறோம் எல்லாவற்றையும் விசாரித்தார்.

விசிட்டிங்க் கார்ட் கொடுத்தோம்.


நீங்க சொன்ன வழில் ரெண்டு பேர் செயின் ஸ்னாட்ச்சிங்க். இந்தப் பக்கம் தான் தப்பிச்சு வந்திருப்பாங்கனு சஸ்பெக்ஷன். நீங்க நிறுத்தாம போனதனால சந்தேகம் என்றார். என்ன பைக் என்றார். யூனிகார்ன் என்றேன்.

கிளம்புங்க என்றார்.

மழைன்றனால தெரியல சார். இல்லாட்டி பாத்திருந்தா நின்றுருப்போம். இந்த மழைலயும் ஆள நிறுத்த நிண்டீங்களா சார் என்றேன்.

வேல அதான என்றார்.

வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. எதிர்த்தாப்பில் இருந்து குடையுடன் ஒரு காவலர் வந்தார். அவர் தான் வண்டிகளை நிறுத்த நிறுத்தப்பட்டிருந்தவர்.

எங்களைப் பார்த்து நீங்க தான் நிறுத்தாம போனது, ஹீரோ ஹோண்டா பைக் தான, இவங்க தான் சார் என்று எங்களைப் பார்த்துச் சொன்னார்.


நான், ' சார், ஹீரோ இல்ல சார், ஹோண்டா யூனிகார்ன் " என்றேன்.


அதான் ஹீரோ ஹோண்டா தான என்றார்.

நான் எஸ் ஐ யைப் பார்த்தேன். அது ஸ்ப்ளெண்டர் ஏட்டையா என்றார்.


ஏட்டுவிற்கு எங்கள் மீதே சந்தேகம். கிளம்புறோம் என்று வெளியே பைக்கை எடுத்தோம் . எஸ் ஐ வெளியே வந்தவர், மழைனு தெரியுதுல நிண்டு போகவேண்டியது தான, அப்படி என்னயா வேலை என்றார்,

வேல அதான சார் என்றேன். கண்களில் சிரித்தார்.



எங்களை இடையில் நிறுத்தி வண்டியை டோ பண்ணுங்க என்றும் உங்கள் வண்டியை நாங்கள் வாங்கி ஓட்டவா என்றும் கேட்ட இரண்டு இளைஞர்கள் வைத்திருந்தது ஒரு ஸ்ப்லெண்டர் பைக் தான்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....