ஃபர்னிச்சர் 4

  ஃபர்னிச்சர்- இது ஒரு தேவையில்லாத ஆணியின் புடுங்கல் திணை.

கடந்தவாரம்  திடீரென " இப்போ" ராமசாமியாட்டம், இப்பவே சென்னை போகவேண்டிய நிலை. அதுவும் பகல் பயணம். 

பெயர் தெரியாத ஆம்னி பஸ்களே "சிவப்பு பஸ்ஸில்" தெரிந்ததால் நம்பி ஏறுவதற்குப் பயம். கட்டக்கடைசியாய் மறுநாள் வைகையில் போட்டால் என்ன என்று யோசித்து இந்த உலகத்தின் அதிவேக நெட்வொர்க்கான irctc க்குள் ஒரு மணி நேரமாக நுழைந்து அதிகாலை கிளம்பும் வைகைக்குப் பார்த்தால், நீ நினைச்ச கூந்தலுக்குலாம் உனக்கு டிக்கெட் கிடைக்காது என்று அதில் ஏற்கனவே துண்டு போட்ட இணைய பிரகஸ்பதிகள் சமிக்ஞைகள் சொல்ல, வேறு ஏதாவது பகல் நேரத்து ட்ரெயின் இருக்கிறதா என்று பார்க்க தேஜஸ் என்ற ஒரு ட்ரெயின். 

மறு படியும் வீட்டு மொட்டை மாடி, நடுத்தெரு , பெரிய டவர் க்குலாம் கீழ் நின்றும் ஏர் டெல்லின் இணைய தள சுற்றலில் வெகு சீக்கிரமாய் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது.  

சம்பவத்தன்று மதியம் மதுரை புகைவண்டி நிலையம். 

எப்பொழுதும் சென்னை போகும் ரயில்கள் முதல் ப்ளாட்ஃபாரத்தில் தான் நிற்கும் என்று  போய்ப்பார்த்தால் ட்ரெயினைக் காணோம். ஸ்டாப்பை விட்டு தள்ளி நிற்கும் பஸ்ஸைப் போல ஒரு வண்டி தள்ளி நின்றது. நீளம் குறைந்த வண்டி போல, ட்ரெயின் ட்ரைவருக்கு எப்போதும் அங்கு நிறுத்தி பழக்கம்.  தள்ளி நிறுத்திவிட்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் தள்ளிப்போயிருந்தால் கூடல் நகர் ஸ்டேஷன் போயிருக்கலாம். 

உள்ளே போனால் கம்பார்ட்மெண்டில் பாதி வடக்கே பார்த்து இருக்கைகளும், மறுபாதி தெற்கே பார்த்தும் இருப்பது போல் அமைப்பு. நடுவே வடக்கே தெற்கே என ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்க்கும் வரிசை . அதில் ஒரு இருக்கை. நடுவே ஒரு டேபிள். பட்டறை அங்கு போட்டாகிவிட்டது. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு புத்தகம். எதிரே ஆள் இல்லை. அதற்கு பக்கத்து இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். கல்லூரி முடித்து வேலை பார்க்கும் பருவம். வந்தான் , ஃபோனை எடுத்தான்.இயர் ஃபோன் சொருகினான். ஒரு பாட்டை போட்டான். உடனே ஒரு ஃபோன் வந்தது. கடலை ஆரம்பம் ஆனது. 

என் பக்கத்து இருக்கை காலி. அதனருகே ஒரு மேனாமிணுக்கர். சென்னை வாசி. தொப்பை தெரியுற மாதிரி ஒரு டீ ஷர்ட். முழங்காலோடு நிற்கும் ஒரு ட்ரௌசர் அதாவது ஷார்ட்ஸ்... பெரிய பை. குறுந்தாடி. அமர்ந்ததும் பையிலிருந்து ஒரு துணி எடுத்து கண்ணைக் கட்டிக்கொண்டு படுத்தார். 

ட்ரெயின் கிளம்பி சோழவந்தானைத் தாண்டியிருக்காது , ஹோட்டல்களில் வெல்கம் ட்ரிங்க் தருவதைப் போல ஒரு கிட் தந்தார்கள்.   தட்டை ரயில் ஊழியர் கொண்டு வந்ததும் பக்கத்தில் கண்ணைக் கட்டிக்கொண்ட மேனாமிணுக்கர் அவராகவே கட்டை அவிழ்த்து தட்டை வாங்கிக்கொண்டார். அவரைத் தாண்டி தட்டு என் கையில் வரவில்லை, கடலை மிட்டாய் அவர் வாய்க்குள் போய்விட்டது.  தட்டு என் கையில் வந்து என்னென்ன இருக்கிறது என்று பார்ப்பதற்குள் பக்கத்து ஆள் சமோசாவை ஒரு கடி கடித்துக்கொண்டே என் தட்டை நோட்டம் இட்டார். அதாவது அவரது தட்டு பதார்த்தங்களும் என் தட்டு பதார்த்தங்களும் சரியாக இருக்கிறதா என்று. எதிரே இருந்த பையனுக்குத் தட்டு கொடுக்கவில்லை. 

நம்ம தான் பொதுவெளில சமத்துவம் நல்லா பேசுவோமே என்று, ஏன் தம்பி உங்களுக்குத் தரல என்றேன், பக்கத்து ஆள், அவர் " நோ ஃபுட் ஆப்ஷன் ல டிக்கெட் போட்டுருப்பார் " என்றார். நான் இதுலாம் வாங்கும் டிக்கெட்டுக்கு ஓசியாகத் தந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தட்டிற்குள் வேறு என்னென்ன இருக்கிறது என்று புலனாய்வு செய்ததில் சமோசாவிற்கு ஒரு சாஸ் பாக்கெட் வைத்திருந்தார்கள், ஒரு டீ த்தூள் பாக்கெட். எண்ணெய் வடிய வடிய ஒரு அதிரசம் மாத்ரியாய் ஓர் வட்ட வடிவ இனிப்பு. சமோசா , டீ த்தூளை எடுத்துகொண்டு மற்றதை அந்தப் பையனிடம் தந்துவிட்டேன்.  டீ த்தூளுக்கு தனியாய் ஒரு பேப்பர் கப் தருகிறார்கள். பின்னாடியே ஒருவன் சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டு வருகிறான். 

பக்கத்து ஆள் , சிட்டி ரோபாவின் மனித உரு போல.  என் டம்ளரில்  ஊற்றுவதைப் பார்த்துவிட்டு அந்தாளைப் பார்த்தால் அதற்குள் டீத்தூளைக் கொட்டி  டீயாக்கி ஒரு மடக்கு குடித்துவிட்டார். நான் அந்தத் தட்டில் சுடு தண்ணீரை வைத்து, டீ த்தூள் பாக்கெட்டை பிய்த்து அதில் கொட்டி, அஃப்கோர்ஸ் கீழே கொஞ்சம் கொட்டி பிறகு அதை ஒரு மடக்கு குடிப்பதற்குள் மேனாமிணுக்கர், எல்லாவற்றையும் முடித்து கண்ணைக் கட்டி படுத்துவிட்டார். இவ்வளவு எழுதிருக்கேனே, எவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது, எதிரே இருந்த பையனுக்கு இன்னும் கடலை ஓடிக்கொண்டு தான் இருந்தது. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை. 

திண்டுக்கலைத் தாண்டி திருச்சி வருவதற்குள் ஒரு பிரட்டை பத்தாய் வெட்டி அதில் ஒரு துண்டை நான்காய் மடித்தால் வரும் கெட்டியாக ஒரு ரொட்டியைத் தந்தார்கள், கூட ஒரு சீஸுக்கும் பட்டருக்கும் நடுவே ஒரு கூழ் நிலையில் ஏதோ ஒன்று. தக்காளி சூப். திருச்சியில் வண்டி நின்றது. எதிரே ஒரு தயிர் ( திரவம் இல்லை மனித உருவம்) சாதம் போல் ஒருவர் ஏறினார். அவருக்கு இடம் விட அந்தக் கடலை விடலை பையன் எழுந்து நின்றான். அஃப்கோர்ஸ் அவன் கடலையை விடவில்லை. இதில் ஒரு நிமிஷம், ஒருத்தர் வந்திருக்கார், எந்திரிச்சுக்கிறேன் என்று சொல்கிறான், ரன்னிங்க் கமெண்ட்டிரி ரன்னிங்க் கமெண்ட்டிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ரயில் ரன்னிங்க்ல இருக்குறப்ப இப்பத்தான் லைவ்வா பாக்குறேன். 

ஏழு மணிக்குலாம் இரவு சாப்பாட்டைத் தந்தார்கள். சுருட்டி வயிற்றுக்குள் குத்தினால் நேரடியாக இரைப்பையைச் சென்றடையும் வல்லமையுள்ள இரு சப்பாத்திகள். அதன் துர்பாக்யம், மென்று தான் சாப்பிடவேண்டும். அரிசிக்கு வலிக்கக்கூடாதென்று பக்குவமாய் ஃப்ரை செய்த ஃப்ரைட் ரைஸ், பருப்புக்கஞ்சி போல் ஒன்று, சென்னா மசாலா. ஒரு பெரிய தயிர் டப்பா, ( உணவு வகைகளை வடிவமைத்தவன் கண்டிப்பாக வடக்கனாகத்தான் இருக்கவேண்டும், பல வடக்கர்கள் இருக்கும் ஒரு பகுதியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் சொன்னார், தம்பி, மருந்துக்கு எவ்வளவு விலை இருந்தாலும் என் பேஷண்ட் வாங்கிருவான், டாக்டர் ஃபீஸ் 500 ஆக்குனாலும் கொடுத்திருவான், ஆனால், பால் தயிர் சீஸ் பட்டர் லாம் சாப்பிடாத னு சொன்னா , அவன் டாக்டர மாத்திருவான் என்றார். அது தான் ஞாபகம் வந்தது. ) 

எப்படியென்று தெரியவில்லை, பாய்ஸ் படத்தில் கோயிலில் படுத்து இருக்கும் செந்திலைப் போல, பக்கத்து ஆசாமி உணவு வரும்பொழுதெல்லாம் சரியாக கண் கட்டை அவிழ்த்தார். ஒரு முறை எழுந்து, விழுப்புரம் க்ராஸ் ஆகிருச்சா என்றார், ஏசி பெட்டிக்குள் கண்ணாடி வழியாய் பார்க்க வழியற்று நானே எஸ். ரா எழுதிய ஒரு புத்தகத்தை வெறித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறேன். சமயத்தில் கண்ணாடி வழியே தெரியாத அந்த இருட்டே தேவலை என்ற ரீதியில்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதில் விழுப்புரத்தைக் கண்டேனா சப்பரத்தைக் கண்டேனா என்று அவரிடம் சொல்லவா முடியும். தெரியல என்றேன். எதிரில் இருந்த தயிர்சாதம் என்னையவும் அந்த ஆசாமியையும் பார்த்துக்கொண்டு தான் வருகிறது. பதில் சொல்லவில்லை. அந்தப் பையன் அஃப்கோர்ஸ்,  சூப் கொடுத்ததாகவும், இவன் அதை வாங்கவில்லை என்றும் சொல்லிய அடுத்த நிமிடத்தில் அவன் ஃபோனின் மறுபக்கம் சூப் சாப்பிடு என்று ஏவல் வந்திருக்கும் போல, டக்குனு திரும்பி ஒரு சூப் என்றான், தக்காளி ( ஆச்சர்ய குறியீடு! ) ...தக்காளி சூப்பிற்கு இப்படி சில்லறையைத் தெறிக்கவிடவேண்டாம். அதுவும் தேஜஸ் தக்காளிக்கு( காய்கறி குறியீடு).

பக்கத்து மேனாமினுக்கர் விழுப்புரம் வந்ததா என்று கேட்டது இரவு சாப்பாட்டுக்காக. 

பெண் பார்த்துவிட்டு ஓகே என்று சொல்லிய மாப்பிள்ளையை நன்றாகக் கவனித்து அனுப்புவது போல் தேஜஸில் கவனித்து அனுப்புகிறார்கள். 

இருந்தாலும் இந்த irctc க்காரனுக்கு ஒரு வேண்டுகோள், கையைத் தூக்கினாலே பக்கத்து இருக்கைக்காரன் மீது படுகிறது. பக்கத்து ஆள் எழுந்து போயி மறுபடியும் வந்து அமரும் பொழுது, ரயில் போகும் வேக குலுக்கலுக்கு அவர் நம் மடி மீது அமர்ந்துவிடும் துர்பாக்யங்கள் நிகழ வாய்ப்புள்ளது. மேலும் என்னைப் போன்றவர்களுக்கு பக்கத்து இருக்கை மட்டும் அல்ல எதிர் இருக்கை அதற்குப் பக்கத்து இருக்கை என ஆண் தடிமாடுகளே அமரும் நிகழ்தகவுகள் வாய்க்கப்பெற்றவன் நான். ஆதலால், கொஞ்சம் சீட்டுகளை விலாசமாய் போடும் படி கேட்டுக்கொள்கிறேன். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....