எஸ் ரா எழுதிய " எனது இந்தியா" தொகுப்பை முன் வைத்து ....

 எஸ் ராமகிருஷ்ணன் எழுதி ஜூனியர் விகடனில் தொடராய் வந்த " எனது இந்தியா" தொகுப்பை முன்வைத்து...


ஒருவர் ஒரு விசயத்தை ஆவணப்படுத்துவது என்பது நடந்த நிகழ்வைப் பதிவதும், அதுசார் சமூக மாற்றங்களையும் இயல்புகளையும் அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் கருதி தான். ஆனால் உண்மைக்குப் புறம்பான கருத்துகள்,  வரும்போது, உண்மையைத் தேடிப் போகவேண்டிய அத்தியாவசியம் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.  

இப்படியானத் தருணங்களில் தான் வரலாற்றாசிரியர்களின் தேவையும் தொல்லியல் அறிஞர்களின் முக்கியத்துவமும் புரியவருகிறது. 

அந்த வகையில் எஸ் ரா வின் " எனது இந்தியா" ஒரு பானை இந்தியத் தொன்மத்திற்கு ஒரு கைப்பிடி பதமான உண்மை. 

"சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத்தவறிய உண்மைகளை, மற்ந்துபோன நினைவுகளை, அறியப்படாமல் போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத்துறை" என்று தான் ஆரம்பிக்கிறார். 

வரலாற்றின் படிக்கட்டுகளில் நிரபராதிகள் காத்திருப்பார்கள் என்றபடிக்குச் சாகும்வரை ஷாஜஹானுக்கு அவர் எதிர்பார்த்த நீதி அவரது மகன் ஔரங்கசீப்பால் வீட்டுச்சிறையில் இருந்து ஏங்கி செத்தப்பிறகும் கிடைக்கவில்லை. 

பிரஞ்சு காலணி அதிகாரியின் துஷ்ப்ரயோகத்தைத் தட்டி கேட்ட அதிகாரி நைநியா பிள்ளை மீது குற்றம் சுமத்தி வீண்பழிக்குத் தண்டிக்கப்பட்டு சிறையிலேயே இறந்து போக, அவரது மகன் பிரான்ஸ் வரை சென்று மதம் மாறி நீதி கேட்டு போராடி தந்தை இறந்ததற்கு நீதி பெறுகிறார் என்ற அத்யாயத்தில் வரலாறு முழுக்க இருக்கும் துரோகங்களும் துஷ்ப்ரயோகங்களும் அதைத் தொடர்ந்து யாரோ ஒருவர் நீதிக்காக ஏங்குவதும் போராடுவதும் இருந்ததையும் இப்பொழுதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எஸ் ரா விளக்குகிறார். 


ஒரு வரலாற்று நூலை அல்லது நிகழ்வைப் பற்றி எழுதும் போது அது வெறும் தகவல் பரிமாற்றமாய் இருந்தால் ஏதோ பொது அறிவு புத்தகமாகவோ, போட்டித்தேர்வுக்குத் தயாராக உதவும் புத்தகமாகவோ மாறிவிடும் . 


" எனது இந்தியா" கொஞ்சம் நூல் இடைவெளி நகர்ந்திருந்தால் அப்படி மாறக்கூடிய வகை தான். ஆனால் எஸ் ரா , தரவுகளைச் சொல்லும் விதமும் அவருக்கே உரித்தான சுவாரஸ்யமான எழுத்து நடையும் இந்திய வரலாற்றுக்குள் வாசகனை கால இயந்திரத்திற்குள் ஏற்றி இறக்கி பிறகு வரலாற்று நிகழ்வின் மூலம் புரியவேண்டிய விசயத்தைப் புரியவைக்கும் யுத்தியையும் செய்துவிடுகிறது. 


சென்னைக்கு வந்திறங்கும் மெக்காலே வை பல்லக்கில் தூக்கிக்கொண்டு 400 மைல்கள் 11 நாட்கள் நடந்து ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள் நம்மவர்கள். எஸ் ரா இப்படிச் சொல்கிறார், அன்று மெக்காலே வைப் பல்லக்கில் தூக்கிய நாம் இன்னும் நம் முதுகில் அமர வைத்துக்கொண்டு இருக்கிறோம். 

மெக்காலே வின் கல்விமுறையின் தாக்கத்தை இப்படி விமர்சிப்பதில் வரலாற்றின் தரவுகளும் முக்கியம் பெறுகின்றன. 

நண்பர் ஒருவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தன் மகனுக்குப் படிக்க இடம் விண்ணப்பிக்க மெனக்கெட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தார். 

பண்டைய இந்தியாவில் பௌத்த மதம் ஓங்கியிருந்த நேரத்தில் நாலந்தா, விக்ரமசீலம், உடந்தாபுரி, சோமபுரம், ஜகத்தாலம், வல்லடி போன்ற ஆறு பல்கலைக்கழகங்கள் இருந்தனவாம். நாலந்தாவில் 1500 ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களாம், மாணவர்களிடம் கட்டணம் வாங்கவில்லையாம். கிபி 1037ல் படையெடுப்பில் நாலந்தா எரிக்கப்பட்டிருக்கிறது. 


இன்று மேற்கத்திய கலை நாகரிகத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறோம். ஆனால் 1546 ல் ஆக்ஸ்போர்டில் வேலை செய்தது 5 பேராசிரியர்கள் தானாம். இங்கிலாந்தில் 16ம் நூற்றாண்டு வரை கல்விக்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்திருக்கிறது என்றால், வரலாறு எப்படியெல்லாம் இப்பிரபஞ்சத்தை  மாற்றியிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் எஸ் ரா தருகிறார். 


நேபாளத்தில் வாழும் ஷெர்பாக்கள் தங்களது குலக்கடவுள் கோமோலுங்குமா மலை உச்சியில் வாழ்வதாக நம்பினர். அந்த மலை முகட்டைக் கண்டார்கள். சீனர்கள் அதே சிகரத்தை ஷெங்க்மூபெங் அதாவது புனித அன்னை என்று அழைத்திருக்கிறார்கள். 

ஆனால், நில அளவை என்ற பெயரில் இந்தியா முழுக்க அதன் பரப்பளவை அளந்தவர்கள் அதன் உயரத்தை அளந்ததாகச் சொல்லி நில அளவை அதிகாரி எவரெஸ்ட் என்பவரின் பெயரை அந்தச் சிகரத்திற்குப் பெயராக வைத்திருக்கிறார்கள். இந்த அத்யாயத்தில் இதுவரை சொல்லப்பட்டது நிகழ்வு, வரலாறு. 

ஆனால் அதைப் பகிரும் எஸ் ராவின் வேலை என்ன.  மேற்கத்தியகாரர்கள் உலகெங்கும் பூர்வகுடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து புதிய தேசங்களைக் கண்டுபிடித்ததாகப் பெயர் சூட்டி அவர்களை அழித்து ஒழிக்கப்பட்டதையும் சரித்திரத்தை உன்னிப்பாக வாசிப்பவர்களால் உணர்ந்துகொள்ளமுடியும் என்ற வரியை எழுதுவதன் மூலம் வரலாறு தெரியாத இளைய தலைமுறைக்கு இன்னும் நாம் வாழும் நாட்டில் வேறு என்ன என்ன உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படலாம். 


எஸ் ராவின் உழைப்பு இந்தப் புத்தகம் முழுக்க தெரிகிறது. ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றி எழுதும் போது அது சார் மற்ற எழுத்தாளர்களின் நூல்களையும் குறிப்பிடுகிறார். அந்த ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தின் பெயர்களையும் ஒவ்வோர் அத்யாயத்தின் இறுதியிலும் தருகிறார். 

உதாரணத்திற்கு திப்பு சுல்தானின் கடைசி வாரிசு தன்னைக் காப்பாற்றும் படி விக்டோரியா மகாராணிக்குக் கடிதம் எழுதியதையும், பெரிய மருது தூக்கிலேறுவதற்கு முன் தன் உருவிய கத்தியில் தன் வாரிசுகளைப் பாதுகாத்து சொத்துக்களை தர்ம காரியத்திற்குப் பயன்படுத்தும்படி ஆங்கிலேயர்களிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார். 

ஆனால் சின்ன மருதுவின் மகனைக் கைது செய்து கைகாலில் விலங்கு மாட்டி பெரிய இரும்புக்குண்டுடன் பினாங்கிற்கு அனுப்பி திருச்சபை கட்டும் கட்டிட வேலை செய்யவிட்டிருக்கிறார்கள். ஒடுங்கிய தேகத்துடன் சின்ன மருதுவின் மகனைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரியின் டைரிக்குறிப்பையும் அது பற்றி எழுதிய நூலைப் பற்றியும் எஸ் ரா சொல்வதோடு 'மேலும் வாசிக்க' என்ற தகவல்களையும் தருகிறார். 


வரலாறு என்பது ஒரு நிலத்தின் பூர்விகத்தையும் அங்கு வாழ்ந்த மனித இயல்புகளையும் மாண்புகளையும் உள்ளடக்கியது. அதைத் திரித்து எழுதுவதால் நிலத்தின் இயல்பை மாற்றிவிடலாம் என்ற குறுகிய நோக்கத்தோடு ஆதிக்க சக்திகள் காலங்கள்தோறும் இருந்திருக்கிறார்கள். 

ஆனால், வரலாறு தன் உண்மைத்தன்மையை வெகுகாலத்திற்கு அடைத்துவைத்ததில்லை. ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கும். 

எஸ் ரா எழுதிய " எனது இந்தியா" கூட நிலத்தின் புதிய தலைமுறைக்குத் தன் பூர்வீகத்தின் தொன்மத்தைத் தெரியப்படுத்தும் படிக்கு அதுவாய் வெளிவந்த குறியீடு தான். 

இந்த நிலத்தின் வரலாறு ஒரு புத்தகத்தில் அடங்கிவிடாது. எஸ் ரா போன்றவர்கள் அதை எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் தான் அவர்களையும் அவர்களின்  எழுத்தையும் தேடிப்படிக்கவேண்டும். அது தான் நம் பூர்விக வரலாற்றிற்கும் அவர்களது உழைப்பிற்குமான வெகுமதி. 

பழனிக்குமார். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8