மிஸ்டர்..எக்ஸ்

மதுரை புத்தக கண்காட்சி
இதற்கு சில முறைகள் சென்றிருக்கிறேன்.
ஒரு முறை மதுரை முகநூல் நண்பர்களைப் பார்க்க.
ஒரு முறை அலுவலக ஊழியர்களுடன்....
இப்படி போனவன் ஒரு முறை ஒரு நண்பனுடன் சென்றிருந்தேன்...அது யார் என்பது சஸ்பென்சாக வைத்துக்கொள்ளலாம். கடைசியாகக் குறிப்பிடுகின்றேன்.
அதுவரை அவருக்கு ஒரு பெயர் வைத்து இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.
என்ன பெயர் வைக்கலாம்....ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....(யோசிக்கிறேன்)ம்.ம்.ம்.ம்.ம் மிஸ்டர்.எக்ஸ்
அதென்ன எக்ஸ் னு கேக்குறீங்களா.....
கொய்யாலே...நானும் பத்தாம் வகுப்புல இருந்து பாக்குறேன்....தமிழ் மீடியம் னு கூட பாக்காம....கணக்குப் பாடமா இருக்கட்டும், குவாண்டம் இயற்பியல் இல்லாட்டி வேதியியல் பாடமா இருக்கட்டும்...கண்டுபிடிக்கப்போறத எக்ஸ் னு வச்சுக்கோனு சொல்றானுக...ஏன்  தமிழ் மீடிய பசங்களுக்காகவாவது இந்த எக்ஸ் க்கு பதிலா ஒரு  "அ" னா இல்லாட்டி "
ஆ" வனா....ஒரு  "ஐ"னா னு சொல்லலாம்ல....இந்த தமிழினத்தலைவர்கள்லுலாம் இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தமாட்டாங்களோ...
விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.....ஸோ..நம்ம நண்பன் பெயர்....."மிஸ்டர். எக்ஸ் "

மிஸ்டர்.எக்ஸ் பெயர்க்காரணம் சொல்லியாச்சு. இப்ப அவர பத்தி கொஞ்சம் புறணி பேசுவோம்....

மிஸ்டர்.எக்ஸ் ஒரு பஞ்ச் டயலாக் வாதி. அவர் ஒரு எதார்த்தவாதி னுலாம் எனக்கு மேதாவித்தனமா எழுதத்தெரியாதுங்க...
அவரோட இலக்கிய ரசனையை சொல்லனுமே....அடடாடாடாடாடாடா....மனுஷனுட்ட கவிதைய சொன்னா...."ஓ ....அப்படியா...அப்புறம்" னு கதை கேக்குற மாதிரி கேட்பான்....
புத்தகம்.....கேக்கவே வேணாம்....ஏழாம் பொருத்தம்....எல்லா புத்தகத்தையும் பார்ப்பார்...பாதி தான் படிப்பார்...ஆனால் பில்டப்ப பாக்கனுமே....பெரிய எழுத்தாளர் மாதிரி தான்....

இப்படிப்பட்ட சிங்கக்குட்டிய கூப்பிட்டுகிட்டு புத்தக கண்காட்சி போனேன்....சும்மா..மதுரை தமுக்கம் மைதானமே...கள கட்டுச்சு....
அங்க போனால் பயங்கர கூட்டம்..
கார்களை மறித்து பைக்குகளும், பைக்குகள மறித்து கார்களும் ஏகப்பட்ட குழப்பம். வண்டிய நிறுத்தவே இடம் இல்லை...
மிஸ்டர்.எக்ஸ ஒரு இடத்துல இறக்கிவிட்டுட்டு வண்டிய ஓரமாய் நிறுத்திவிட்டு பார்க்கிறேன்....
மதுரை ஏழாவது புத்தக கண்காட்சி னுற ஒரு கட் அவுட நம்ம எக்ஸ் பாத்துகிட்டு இருந்தார். (இது பழைய பதிவு)

என்னடா பாக்குற னு கேட்டேன்....
இதுக்கு முன்னாடி வந்திருக்கியானு கேட்டான்...
வந்திருக்கேன்...நேத்து கூட வந்தேன்...
அது இல்லடா....இது ஏழாவதுனா...இதுக்கு முன்னாடி ஆறு தடவை நடந்திருக்கானு கேட்டான்....(புரியுதா.....நான் சொன்ன ஏழாம் பொருத்தம் என்ன னு)
ஆமாடா...இது ஏழாவது வருடம்...னு கூப்பிட்டு உள்ளே போனேன்.....

நுழைவுவாயிலில் எந்தெந்த ஸ்டாலில் எந்தெந்த பதிப்பகம்னு எழுதி வைத்திருந்தார்கள்.
அதை வாசித்தேன்....
இவ்ளோ தானா புத்தக கண்காட்சி....னு எக்ஸ் கேட்டான்.. (என்ன ஒரு தீர்க்கதரிசனம்)
ஆமாடா வா னு உள்ளே போனோம்.....
(எனக்கென்னவோ...ஸ்கூலுக்கு வராம அடம் பிடிக்கும் சின்ன குழந்தைகள தர தர தரனு இழுத்துட்டு போவாங்களே அது தான் நியாபகத்துக்கு வந்தது.....)
உள்ளே
நகரமுடியாதபடி நெருக்கடி....
முதல் ஸ்டால்...வைரமுத்துவின் கையெழுத்தோடு கவிதை தொகுப்பு கிடைக்கும்னு ஒட்டியிருந்தாங்க...
பாத்துட்டு எக்ஸ் கேட்டான்...."இந்த கிரிக்கெட் காரனுக தான் பைக், கார், பனியன், சட்டை, காபி பாக்கெட் னு கையெழுத்து போட்டு விக்குறானுக...இப்ப எழுத்தாளர்களுமா....னு
நைஸ் பஞ்ச்ல..

அடுத்த ஸ்டாலுக்கு போக முடியல...எங்களுக்கு முன்னாடி ஒரு குடும்பம் நின்னுகிட்டு ரணகளம் பண்ணுச்சு....

அவங்கள பாத்தா...ஏதோ உசிலம்பட்டியோ...பட்டிவீரன்பட்டியோ எங்கோ இருந்து மதுர வந்து மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு, அப்படியே போத்தீஸ்ல துணிய எடுத்துட்டு போறப்ப....என்னமோ லைட்டுலாம் போட்டுருகாஙைக....ஏதோ எக்ஸிபிஷனோனு வந்துட்டாங்க...

ஏய்! என்னதுடி இது...இங்க கூப்பிட்டு வந்திருக்க....னு குடும்பத்தலைவன் கேட்டான்
ஏங்க! இந்த கடையில ஒரே புத்தகமா இருக்குங்க னு குடும்பத்தலைவி சொல்லுச்சு....
ஏய்! எல்லாக் கடையிலயும் புத்தகம் தாண்டி இருக்கும் போல....(மகா பொது ஜனங்களே...இந்த தம்பதி கடை...கடை..னு சொல்றது நம்ம பதிப்பகத்தாரோட ஸ்டால்கள தான்)
சரிங்க...நம்ம பையன் ரெண்டு கோடு போட்ட நோட்டு கேட்டான்..வாங்கிருங்க னு குடும்பத்தலைவி சொல்லுச்சு.....(நமக்கு பொழுது போயிரும் போல.....)

அடுத்த ஸ்டாலுக்கு போறதுக்குள்ள ஒரு சலசலப்பு..
ஏதோ ஒரு எழுத்தாளர் போனாராம்..
யாருடா அது னு எக்ஸ் கேட்டான்....
எவனுக்குத் தெரியும் னு சொன்னேன்....

அடுத்த ஸ்டாலுல 30 நாட்களில் ஹிந்தி கற்கலாம் னு புத்தகம் போட்டுருந்தாங்க...வேணுமா எக்ஸ் னு கேட்டேன்...
அதுக்கு முன்னாடி போயிக்கிட்டு இருந்த ஒரு திருவாளர்.பொதுஜனம் " 30 நாளுனு சொல்றானுக சார்...ஆனா முப்பது நாளுக்குள்ள அந்த புத்தகத்த படிக்க முடியல னு சொன்னார்....(யார்கிட்ட....நம்ம எக்ஸ்...ட்ட....கட்டதுரைக்கு கட்டமே சரியில்ல போல...)
அதுக்கு நம்ம் எக்ஸ்..."சார்...வேணும்னா...நீங்க 30 நாட்களில் புத்தகம் படிப்பது எப்படி னு புத்தகம் விக்குதானு ட்ரை பண்ணுங்களேன்? னு கேட்டான்.
நைஸ் பஞ்ச்ல..

அடுத்த ஸ்டாலுக்குள்ள கூட்டமே இல்லை...
விடல....நம்ம எக்ஸ்...
வா இதுல போய் வாழ்க்கை கொடுப்போம்னு உள்ள கூப்பிட்டு போயிட்டான்.
போய் பார்த்தா....அப்ளையிடு கம்ப்யூட்டர் சயின்ஸ், அட்வான்ஸ்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஃபீனார்'ஸ் ஆர்கெனிக் கெமிஸ்டரி னு புத்தகம் இருந்தது...
என்னடா இது னு கேட்டான்..
இதுலாம் படிக்குற புத்தகம்டா....னு சொன்னேன்..
இங்க கூட்டத்தையே காணாமே....இத படிக்கமாட்டானுகளா...னு கேட்டான்.....
எத்தனை தடவை தான் இந்த பக்கிக்கு நைஸ் பஞ்ச் னு கைய கொடுக்குறது.

ஏய்...இங்க எதுக்குடி கூப்பிட்டு வந்த.....( அதே போத்தீஸ் குடும்பத்தலைவன்)
இந்தா....சும்மா...தொனத்தொனனு அனத்தக்கூடாது..வெளியே மழை வரமாதிரி இருக்கு...ரெண்டு கோடு போட்ட நோட்ட தேடுங்க .....(இத யாரு சொல்லியிருப்பானு நான் சொல்லத் தேவையில்லை..இருந்தாலும் கல்யாணம் ஆகாத ஆண்களுக்காக நானே சொல்லிவிடுகிறேன்....அதே குடும்பத் தலைவி தான்)


மறுபடியும் ஒரு சலசலப்பு...
ஏதோ ஒரு எழுத்தாளராம்....
அடடாடாடாடாடாடாடா....இந்த எழுத்தாளருங்க தொல்லை தாங்கமுடியலடா சாமி னு எக்ஸ் சொன்னான்...
முன்னாடி போன ஒரு வயதானவர்...ஒவ்வொரு பதிப்பகத்திலும் ஒரு எழுத்தாளர் உட்கார்ந்திருப்பாருனு சொன்னாரு.

இது வேறயா....

ஒரு ஸ்டாலுக்கு போனோம்..
இங்கிலீஸ் கிராமர் புத்தகம்...புத்தகத்த எடுத்து பின்பக்க அட்டை படத்த எக்ஸ் பாத்தான்.
ஸ்டால் கல்லால உட்கார்ந்திருந்த ஆள பாத்தான்.
அந்த ஆளும் பார்த்தார்.
அதே ஆள்.
நான் சொன்னேன்...ரொம்ப பாக்காதடா....அந்த ஆளு வந்திரப்போறாருனு..சொல்லி முடிக்கல.....அந்த ஆளு வந்துட்டாரு.....
அதாவது தம்பி....இப்ப ஸ்கூலுல கிராமர்னு ஆஆஆஆஆஆஆஆஆரம்பிச்சாரு பார்க்கனுமே.....நான் வராத ஃபோன எடுத்துக்கிட்டு ஹலோ....ஹலோ...னு சொல்லிட்டு ஸ்டால விட்டு வெளிய வந்துட்டேன்....
5 நிமிஷம்...ஆச்சு....எழுத்தாளர் எழுதுனதெல்லாம் எக்ஸ்ட்ட ஒப்பிச்சுக்கிட்டு இருந்தார்....
ஒரு வழியா எக்ஸ் மீண்டு வந்தார்.
என்னடா...னு கேட்டேன்.....
அடடாடாடாடாடாடாடாடா.....இந்த எழுத்தாளர்க தொல்லை தாங்க முடியலடா சாமி னான்.

அடுத்த ஸ்டால் க்கு போனா...கலைஞர் பதிப்பகம்...குறளோவியம் அடுக்கி வச்சிருந்தானுக...
நான் எக்ஸ பாத்தேன்.....அவன் என்ன பாத்தான்.....மாத்தி மாத்தி சிரிச்சுக்கிட்டோம்....(அரசியல் ஆக்கிராதீங்கபா.....)

ஏங்க....இங்க இங்கிலீஸ் புத்தகமா இருக்குங்க.....(அக்கா....அது இங்கிலீஸ் புத்தகம் இல்ல கா.....அது டிக்ஸ்னரி....)
நம்ம பையன் இதுலாம் படிப்பானா டி..
என்னங்க....ரெண்டு கோடு போட்ட நோட்ட கேளுங்க.....(உங்க பையன் படிச்சமாதிரி தான்)

பரமக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை பற்றிய புத்தகம்...ரூ.200 மட்டுமே னு ஒட்டி வச்சிருந்தானுக....
எக்ஸ்க்கு ஒரு சந்தேகம், அவன் கேட்டான்" முந்திலாம் அரசியல் தான் ஆக்குவானுக, இப்ப புத்தகம் ஆக்குறானுகளானு"

ஒருத்தர் நல்ல உயரம்....ஒரு குர்தா போட்டுக்கிட்டு...அதுக்கு சம்பந்தமே இல்லாத பேண்ட் போட்டுக்கிட்டு...தோள்பட்டையில ஒரு தபால்பைய போட்டுகிட்டு முன்னாடி போயிக்கிட்டு இருந்தார்....

இந்த ஆள பாத்தா ஏதோ எழுத்தாளர் மாதிரி இருக்கேடா னு சொன்னேன்....
அட்டாடாடாடாடாடா....என்ன பண்றது.....லெட்டர்ஸ் டூ எடிட்டர் எழுதுனவன்லாம் எழுத்தாளனாடானு எக்ஸ் கேட்டான்.....
(நைஸ் பஞ்ச்)

நலம் பெற ஆயிரம் மூலிகைகள் னு ஒரு புத்தகம்...
நான் எடுத்து பார்த்தேன்....
முதல்ல...கடைசி அட்டையில ஃபோட்டாவ பாரு னு சொன்னான்...
ஒரு ஃபோட்டா இருந்தது.....
நலம் பெற ஆயிரம் மூலிகைகள் எழுதுன சித்த வைத்தியர்...அவர் தான் அந்த ஸ்டாலுல கல்லால பில்லு போடுறதுக்கு உட்கார்ந்துட்டு இருமிட்டு இருந்தார்.....(பாவம் எழுத்தாளர்/வைத்தியருக்கு உடல் சரியில்லை போல....)
நாங்க பாக்குறத பாத்த அவரும்....எங்களை பார்த்தார்....
எக்ஸும் அவர பார்த்தான்.....
நான் பார்த்தேன்...இது சரிபடாதுனு வழக்கம்போல வராத ஃபோன எடுத்துக்கிட்டு ஹ்லோ...ஹலோ னு வெளிய வந்துட்டேன்....
பின்னாடி பார்த்தா....ஹலோ...சார் சொல்லுங்க....னு சத்தம்....
நம்ம எக்ஸ்ம் வராத ஃபோன எடுத்துட்டு ஓடி வந்தான்.
என்னடா....னு கேட்டேன்...
அடடாடாடாடாடாடா....இந்த எழுத்தாளர்க தொல்லை தாங்க முடியலடானு சொன்னான்....

அடுத்த ஸ்டாலுக்கு போனோம்...
முதல்ல எழுத்தாளர் உட்கார்ந்திருக்காங்களானு பாரு னு எக்ஸ் சொன்னான்.
இந்த தடவை எல்லாபுத்த்கத்திலேயும் கடைசி அட்டைய பாக்கனும்...அதே ஆள் உட்கார்ந்திருந்தா....நம்ம ஒண்ணு நிற்கக்கூடாது.....இல்லாட்டி அவர குறுகுறு னு பார்க்கக்கூடாது.....னு ஒரு டீல் போட்டுக்கிட்டு போனோம்.
எழுத்தாளர்கள் எழுதுரதைக் கூட தேத்திக்கலாம். இந்த பேசுறது இருக்கே.....ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா..
பாதி எழுத்தாளர்கள் பேசுறதை நிப்பாட்டினாலே அவங்க எழுதுற புத்தகம் கொஞ்சம் கூடுதலா விக்கும்.

ஒரு ஸ்டாலுல ஒரு எழுத்தாளர்னு நினைக்கிறேன். மக்களுக்காக எழுதுனா மக்கள் படிக்கிறதே இல்ல. மக்களுக்கு ஆர்வம் இல்லனு ஒரே புலம்பல். அதுக்கு ஆமா சாமி போட்டுக்கிட்டு ஒரு நாலு பேர் இருந்தாங்க. புத்தகக் கடைலாம் விக்க முடியாம மூடிட்டு போயிறாங்கனு சோகப்பாட்டா ஓடிட்டு இருந்தது.
அவங்க சொன்னது பாதி உண்மை தான னு எக்ஸ் கேட்டாப்புடி. மீதிப்பாதி என்னன்னா புத்தகத்த காசு அனுப்பி எங்க வீட்டுக்கு விபிபில அனுப்புங்கடானு இவைங்க அனுப்ப மாட்டானுக. மக்கள் படிக்கனும்னு ஆசைப்படுறதே ஒரு குறிப்பிட்ட மன நிலைல தான். அதற்கான சர்வீஸ் யார் தர்றா.
ஒரு எழுத்தாளனைப் பிடிச்சுப் போயி எழுத்தை வாசிச்சு பொது பிரச்சினைகளுல அவரோட கருத்தை என்னனு கேட்டா அவரோட சுயரூபம் ஈஈஈனு இளிக்குது.
இதையே சினிமாக்காரன் பண்ணா வியாபாரம் , நடிக்குறானு சொல்லிரோம். எழுத்தாளன் மட்டும் தமிழ் இலக்கியம்னு ஒளிஞ்சுக்குவான் என்னத்த சொல்லனு வந்ததுக்கு ஒரு அப்பளத்த வாங்கித் திண்ணோம்.

ஒரு வழியா எல்லா ஸ்டாலையும் முடிச்சுட்டு...வெளியே வந்தோம்.....

ஏய்! இங்க வாடி....இங்க நோட்டுலாம் கிடைக்காதுடி... இங்க ஏன்டி வந்த....

இருங்கங்க....30 நாட்களில் 30 வகையான கோலங்கள்னு புத்தகம் இருக்குங்க.....வாங்கிட்டு வரலாம்னு அந்த அம்மா ஓடுச்சு...பின்னாடியே போத்தீஸ் பையுடன் நம்ம ஆளு ஓடுனான்.....உண்மையான தமிழ் நாட்டு கணவன்....

வண்டி நிறுத்துன இடத்துக்கு வந்தா...வண்டிய காணாம்...ஒரு கார் காரர் வண்டிய ஒரு சுவற்றில் சாய்த்து விட்டு அவர் கார நிறுத்திட்டாரு.....

எக்ஸ் கேட்டான்.....இவ்வளவு கூட்டம் வருதே....புத்தகம் வாங்க.....இவ்வளவு படிக்குறவங்க இருந்தும் நாகரிகமும் கலாச்சாரமும் ஏன் வளரவே இல்லை.....

நைஸ் பஞ்ச் தானே......
இவ்வளவு நக்கல் பண்ணி பேசுன எக்ஸ் கேரக்டர் யாருனு சஸ்பென்ஸ் வேறயா...



                                                   



                                                   



                                                   
                                                   
                                                   
                                                   

                                                   
                                                    



                                   

                                   

                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....