கடிதமாய்...

மழையை
நனைத்த படி
இறகு விரிக்கும்
காதல் பறவைகளின்
ஞாபகத்தில்
நீயும் நானும்
நனைந்து கொண்ட
ஓரீரப் பொழுது.

சந்தோசக் கீற்றுகளை
எழுத்தாக்கும் வித்தைகளேதும்
அற்றுப்போய்
வெறுமனே
வார்த்தைகளை மட்டும்
தருவதில்
நம்மை நனைத்த மழை
மீள நனைப்பதில்லை...

நெற்றிமுடி கலைந்த
அது சார்
தொட்டுத்தீர்த்த
விரல் ரேகைகள்
வளைந்துகொண்டதை
எழுத்துகள்
எழுதிக் காட்டுவதில்லை..

தூரங்கள் குறைய
விலகியதும்
பிடித்துக்கொண்ட விரல்
பிரிய
மறுத்ததும்
இன்னொரு கவிதையாகப்
பிறக்க எத்தனித்த
விபத்திலொன்று
கண்மூடி பார்க்கையில்
முழுக்க உன்னை
உணர்ந்தது...

நுகரும்படியாய்
காதுமடல்களுக்குள்
காதல் சொல்லிய
மாயப்பொழுதின்
முடிச்சுகளில்
இறுகிக்கொண்டது
உனை அழைக்கும்
ஓர் அன்பின்
கடவுச்சொல்..

நகர்ந்த பிறகு
இருக்க
ஒரு தடயம்
கேட்டு வாங்கும்
மாயைகளின் மாயையென
உனை விழிக்கும்
ஏக்கக்காரனின்
தாகம்..

இராக்கள் எல்லாம்
உன் முகங்கொண்டு
குறுகும்
தூக்கங்களில்
ஆகச்சிறந்த
நனவுகளின்
கனவு நீ....

அன்பைச்சொல்லித்
தீர்ந்துபோன
ஆதிப்பேனாக்கள்
ஏதேனுமொன்று
உயிர்பெறுமாயின்
உரக்கக்கதறும்
என் மௌனத்தின்
அடரற்ற மெல்லியல்
அன்பை எழுதட்டும்
ஒரு
காகிதத்திலாவது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....