யானை

மணி மதியம் ஒன்று.
முதுமலை வனச்சரக அலுவலகம்.
நாங்க நாலு பேர்.
காட்டுக்குள்ள வனத்துறைச் சார்பாக அழைத்துச் செல்லும் வண்டி பற்றி விசாரித்தோம்.
மதிய உணவு வேளை ஆனா இருபது பேர் வந்துட்டா வனத்துறையின் வண்டி வரும்.
வெளியே நிறைய தனியார் ஜீப்கள் இருக்கு. அவர்கள் எந்நேரமானாலும் அழைத்துச் செல்கிறார்கள்.
ஆனால் நம்ப வேண்டாம். பாதுகாப்பில்லை என அரசு சார்பாக அறிவிப்பு இருக்கு. எதுக்கு வம்புனு
இருபது பேர் கூடும் வரை காத்திருந்தோம்.
நகர் புறத்துல மெயின் ரோட்டுல மினி பஸ்ஸுக்கும் ஷேர் ஆட்டோக்கும் ஆள் சேர்ற வரைக் கத்துவாங்கள...அது மாதிரி கத்துனாலும் ஆள் அவங்களாத்தான் வரனும். கொஞ்ச நேரம் கழிச்சு...
சில கன்னடர்கள் வந்தார்கள்.
பதினாறைத் தொடுவதற்கு அரை மணி நேரம் பிடித்தது. உயரமான குன்றில்தான் அந்த வன அலுவலகம் இருந்தது. அங்கிருந்து பார்த்தால்
கண்ணுக்கெட்டும்வரை காடு.மலை.
பசுமை. பெரிய மரங்கள். அடர்ந்த கிளைகள்.
அமைதி.
ஒரு ஸ்வராஜ்மஸ்தா வண்டி ஏற்பாடு ஆனது.
அமர்ந்து கொண்டோம்.
ஜன்னல் முழுக்க வலை.
கேமராவை தயாராக வைத்துக்கொண்டேன்.
அறிவிப்பில் பார்த்தேன். யானைகள் புலிகள் மான்கள் மயில் குரங்குகள் காட்டுமாடுகள் நரி இப்படி பல உயிரினங்கள். யானை தான் பிரபலம்.
எது சிக்கினாலும் கிளிக் பண்ணனும் எனத் தயாராக இருந்தேன்.
அப்பத்தான் முகனூலில் போட்டோ போட்டு நம்ம ஒரு வனவிலங்கு ஆர்வலர் னு காட்டமுடியும்.
வண்டி முதுமலை மைசூர் சாலையில் நகர்ந்தது.
குறிப்பிட்டப் பகுதிக்குள் திரும்பி காட்டுக்குள் ஏறியது.
வெயில் தெரியவில்லை.
மண்ரோடு.
அதுவும் சரளைமண்.
வண்டி டயர் சத்தம் மட்டுந்தான் கேட்டது.
சற்று ஏத்தமான பாதை. வண்டி உறுமலாக ஏறியது.
பழக்கப்பட்ட வனத்துறை ஓட்டுனர் அங்கும் இங்குமாகப் பார்த்து விலங்குகள் இருப்பதைத் தேடிக்கொண்டே ஓட்டினார்.
பழக்கப்பட்ட டிரைவர் என்பதால் எங்கு விலங்குகள் வரும் எனத் தெரியும்.
ஒரு இடத்தில் சரளை மண் அடிக்கும் டிராக்டரும் வேலை ஆட்களும் இருந்தார்கள்.
டிரைவர் வேகமாக ஓட்டினார். ஆட்கள் இருந்தால் விலங்குகள் இருக்காது என்பது அப்போது தெரியவில்லை.
அடுத்த கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி சரளை மண்ணோடு நின்றது.
எங்கள் ஓட்டுனர் கோபப்பட்டார். வேலை நடந்தால் விலங்கு வராது டூரிஸ்ட் ஏமாறுவார்கள்.வேறு பகுதியில் போயிருக்கலாம் என அலுத்துக்கொண்டார்.
உண்மைதான்.
கேமராவை வைத்து ஒரு காகத்தைக் கூட படம் பிடிக்கமுடியாது போல. அப்புறம் நம்ம எப்படி போட்டோ போட்டு அலப்பறை காட்டுறது. எதுக்கும் இருக்கட்டும் என நான் காகத்தைத் தேடினேன்.
ஒரு ஈ காக்கா காணாம் என்பதன் அர்த்தம் புரிந்தது.
ஆனால் ஆபத்பாந்தவன் ஆஞ்சநேயர் கைவிடவில்லை.
மூன்று குரங்குகள் இருந்தன.
எடுறா எடுறா போட்டோ எடுறானு விடலையே.....வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்.
வேன் இருக்கிறவன்லாம் திரும்பி பாத்தானுக...இவன் என்னடா குரங்க கூட பார்த்ததில்லையானு...
டிரைவர் பாவம் வேற ஏதாவது கிடைக்குமானு தேட
ஒரு வயதான கன்னடர் ஏதோ கன்னடத்தில் கத்த ஒரு ஓரத்தில் யானை தெரிந்தது.
வேனின் இருபக்கமும் காட்டுப்பகுதி. நடுவே ரோடு. வலது பக்க மேட்டிற்குப் பின் ஒரு யானை தெரிகிறது. ஒரு கிமீ தூரம் இருக்கும்.
டிரைவர் வண்டியை மெதுவாக ஓட்டினார்.
புதர்களுக்கு அப்பால் ஒரு யானை..
வண்டி நகர நகர யானை தெளிவாகத் தெரிந்தது.
நிற்கிறது
இல்லை இல்லை எதையோ திண்கிறது.
ஒரு யானை இல்லை...
இன்னொன்றும் 
கூட்டம் ஆர்ப்பரித்தது.
ஏ குட்டியானை...னு சத்தம்
ஆமா இரண்டு குட்டியானை...
மொத்தம் இரண்டு பெரிய யானைகள். மீடியம் சைஸ்லஒரு பெரிய யானை.
இரண்டு குட்டி யானைகள்.
வண்டியின் வலது பக்கமா பாக்குறோம்.
அதுகளும் எங்கள கவனிக்குதுங்க.
கொஞ்சம் நகர ஆரம்பித்தன.
டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டார்.
எங்கள் வலப் பக்கத்திலிருந்த யானைக் கூட்டம் முன்னோக்கி நகர்ந்தன.
அதுக நகர்றது எப்படினா வலது பக்கத்துல இருந்து இடப் பக்கமா க்ராஸ் பண்ணப் போகுதுக.
வண்டி இருந்ததுனால தள்ளி போய் க்ராஸ் பண்ணப்போகுதுக...
கேமரால சக் சக சக்குனு கிளிக் பண்றேன்.
நம்ம தெருல பாக்குற கோயில்யானைகள் மாதிரி காட்டு யானைகள் கருப்பா சுத்தமா இல்ல.
அங்கங்க மண்ல படுத்து ப்ரவுன் கவர்ல இருக்குறதே பயமா இருக்கு.
கேமரால க்ளிக் பண்ணப்ப ஒரு யானையோட கண் மட்டும் சிவப்பா அதி பயங்கரமா ஜும்ல தெரிஞ்சது.
இப்ப யானைகள் ரோட்ட க்ராஸ் பண்ணி இடப்பக்க மேட்டுல ஏறனும்.
அதுக க்ராஸ் பண்ண யோசிக்குற இடமும் நாங்க நிக்குற இடத்துக்கும் 600 இல்ல 700 மீட்டர் தூரம் இருக்கும்.
எங்க டிரைவர் வண்டிய நிப்பாட்டிட்டார்.
இப்ப யானைகள் 400 மீட்டர் தூரத்துல வந்து க்ராஸ் பண்ணப் போகுதுக.
நாங்க இருக்குற பயத்துல அதுக க்ராஸ் பண்ண யோசிக்கிதுக போல.
நான் க்ளிக் பண்றேன்.
யார் முதல போறானு யானைகளுக்குள ஏதோ ஒட்டி உறவாடிட்டு முதல பெரிய யானை இறங்குது....
வலப் பக்கத்துல இருந்து எங்க மண்ரோட்ட க்ராஸ் பண்ணி இடப்பக்கம்.
நான் வேன்குள்ள இருந்தே க்ளிக் பண்றேன்.
அந்த பெரிய யானை வால ஒட்டியே பின்னாடி குட்டியானை க்ராஸ் பண்ணுது
நான் க்ளிக் பண்றேன்
அடுத்த குட்டி யானையும் அடுத்து போகுது.
அதுக்கடுத்த பெரியயானை க்ராஸ் பண்ணுது.
பாக்க அழகா இருக்குல...முதல் பெரிய யானை அடுத்து குட்டிக அடுத்து பெரிய யானை..குழந்தைகள நடுல விட்டு பெரிய யானைகள் போகுதுக...
கடைசியா மீடியம் சைஸ் யானை வலப் பக்கத்துல இருந்து இறங்கி க்ராஸ் பண்ணப்போகுது.
நான் கேமரால ஜூம் பண்ணி கேமராலயே பாக்குறேன்.
க்ராஸ்பண்ற யானைய க்ளிக் பண்ணாமலேயே ஹேங் ஆகுற மாதிரி ஸ்க்ரீன்ல யானை ஸ்டில் நிக்குது...என்னடானு நிமிர்ந்து பாத்தா கடைசி யானை வலப் பக்கத்துல இருந்து இடப்க்கம் போகாமா ரோட்டுல குறுக்கா அப்படியே நிக்குது....
நாங்க குதூகலிக்குறோம்...
யானை நகரல....
வலப்பக்கமும் போகல
இடப்பக்கமும் போகல
குறுக்கா ரோட்ட மறிச்சமாதிரி நிக்குது.
வேன்குள்ள அமைதி.
டக்குனு யானை எங்க பக்கமா திரும்புச்சு..
400 மீட்டர் தூரம்.
ஒரு பக்கம் வேன். உள்ளருந்து பாக்குறோம்.
நேரா யானை...
அந்த சிவப்புக்கண் மீடியம் சைஸ் பெரிய யானை...
நேர் நேரா பாக்குது...
வேன்க்குள ஒருத்தரை ஒருத்தர் ஏ ..ஏ சைலண்ஸ் சைலன்ஸ்னு கத்திக்கிட்டோம்...
யானை எங்கள பாத்துட்டே இருக்கு...
நாங்களும் தான்.
இப்ப யானை எங்கள பாத்து எடுத்தது பாருங்க ஒரு வேகம்...
ஆமா யானை எங்களை டார்கெட் பண்ணிருச்சு...
எங்க வேனை முட்ட ஓடி வருது.
லைட் ப்ரவுன் கலர்ல அவ்வளவு பெரிய உருவம் நம்மள பாத்து ஒட்டு மொத்த பெரிய உடம்போடும் ஓடி வருது...
எங்க டிரைவர் ரிவர்ஸ் கியர் போட்டார்.
நகர்த்தினார் பின்னாடி..
எவ்வளவு தூரம் பின்னாடி போறது.
டயர் முழுசா ஒரு சுத்து சுத்திருக்காது நிப்பாட்டி யானைய பாத்ருப்பார் போல...என் கண்ணுக்கு யானை மட்டும் தான் தெரியது.
300 மீட்டர் தூரமா பக்கத்துல யானை வந்திருச்சு.
வேகம் குறையல.
பக்கம் வரவர யானை லைட் ப்ரவுன் கலர் இல்ல..டார்க் ப்ரவுன்.
இப்ப 200 மீட்டர்கூட இல்லை.
கத்துறோம்.
அண்ணே பின்னாடி எடுங்க யாரோ தமிழுல கத்துறாங்க.
யானை வேகம் குறையல....
100 மீட்டருக்கும் குறைவு...
பக்கத்துல...ரொம்ப பக்கத்துல....
கத்துறோம்....
டிரைவர் தன்னோட ஜன்னல் வலைல இருந்த ஓட்டை வழியா கைய விட்டு கதவைத் தட்டி சத்தம் கொடுத்தார்.
தட்டிக்கிட்டே இருக்கார்.
யானை டக்குனு நிண்டுருச்சு...
யானை நிண்டதும
டிரைவர் கதவைத் தட்டுறத நிப்பாட்டிட்டார்.
வேனுக்கும் யானைக்கும் இருபது ஸ்டெப் இடைவெளி.
யானை எங்களை பாக்குது.
எங்களை பாக்குதுன்றத விட எங்களையே பாக்குது...
சிவப்புக் கண்...
நாங்க யாரும் கத்தல...கத்தலன்றத விட சத்தம் வரல...
யானையவே பாக்குறோம்.
டிரைவர் கைய வெளிய கதவுல வச்சமாதிரியே இருக்கார்.
யானை பிளிறல..
ஆனா ஏதோ உறுமுறமாதிரி பண்ணுது.
அது நகரல....
இரண்டு நிமிஷம் இருக்கும்.
எங்களை அப்படியே அரஸ்ட் பண்ணிருச்சு.
அது ஏதாவது இலக்கியப்புத்தகத்துக்கு விமர்சனம் பண்றேனு மொக்கை போட்டுருந்துச்சுனா நாங்க கேட்டே ஆகனும்ன்ற நிலைமை அது...
யானை வச்ச கண்ண விலக்கல...
அது அடுத்த இலக்கான தாக்குதலுக்கு கிட்டத்தட்ட தயாரா இருந்தது.
அடுத்த மூணாவது அடில எங்கள முட்டிரும் அவ்ளோ பாய்ச்சல் வேகம் அதுட்ட...
இப்ப யானை முகத்த ஆட்டிட்டு
முன்னங்கால ஓட எடுத்தது.
எங்க டிரைவர் கதவ தட்ட ஆரம்பிச்சார்.
யானை நிண்டுருச்சு...
டிரைவர் நிப்பாட்டல. தட்டிட்டே இருக்கார்.
இப்ப யானை திரும்பிருச்சு.
கிட்டத்தட்ட யானைக்கு பின்னாடி எங்க வேன்.
எங்களுக்கு அப்பத்தான் மூச்சே வந்தது.
ஆனாலும் யானை நகரல.
திரும்பிட்டு நாங்க சேட்டை பண்றோமானு வேவு பாக்குது.
எங்க டிரைவர் தட்டிட்டே இருந்தார்.
பிறகு யானை இடப்பக்கமா மேட்டுல ஏறுச்சு...
நாங்க மெதுவா வண்டில நகர்ந்தோம்...
பின்னாடி வந்து முட்டுனா என்னபண்றதுனு பின்னாடியே பாத்தேன். ஏன்னா நான் பின் சீட்.
உண்மையிலேயே யானை பின்னாடி வந்தா தப்பிச்சிருக்கமுடியாது. கதவைத்தட்ட டிரைவர்ட மட்டும்தான் துவாரம் இருந்தது.
அவனவனுக்கு கை நடுங்குது. பசில நடுங்குதா பயத்துல நடுங்குதானே தெரியல....
மறுபடியும் வன அலுவலகம் வந்து
இறங்குறவரை அதான் பேச்சு..
கேமரா ஆன்ல இருந்தும் அந்தக் காட்சிய ஃபோட்டோவா எடுக்கல..
எடுக்கல ன்றத விட எடுக்கத் தோணல...
வேனைவிட்டு இறங்குறப்ப பாத்தா டிரைவருக்குப் பின்னாடி முதல் சீட்ல அறுபது வயசுல தாத்தா பாட்டி தான் இருந்தாங்க..எல்லாரும் அவங்கள பாத்து சிரிச்சோம்...
நாங்க மட்டும் டிரைவருக்குப் போய் நன்றி சொன்னோம்..
தற்காப்புக்கு ஆயுதம் இல்லையானு கேட்டா இல்லையாம்.
வண்டி பஞ்சர் ஆனா கூட மாற்று டயர் இல்லை. அடுத்த வண்டியோ அல்லது இவரைத் தேடி ஆள் வந்தால்தான் உண்டு. செல்ஃபோன் டவரும் கிடையாது.
யானை வேனை தாக்கிருந்தா என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்.
யானைக்கு ஆயுதம்லாம் என்ன சார். அது வந்த வேகத்துக்கு அடிச்சிருந்தா பாதி வண்டி போயிரூக்கும்..
அப்ப என்னண்ணே பண்வீங்கனு கேட்டேன்.
இந்த மாதிரி கத்திட்டே வேன்குள்ளேயே இருக்கனும்.
இறங்கி ஓடுனா நமக்கு வழி தெரியாது. இன்னொரு யானைட்ட சிக்கிருவீங்க...இல்லாட்டி புலி.
அதுனால கூட்டமா அப்படியே சவுண்ட் கொடுக்கனும்னு சொன்னார்.
நாங்க ஒவ்வொருத்தரும் முகத்த பாத்துக்கிட்டோம். விட்டா கொஞ்ச நேரத்துல டிஸ்கவரி சேனலுக்கு ஹாய் நான் தான் உங்க பழனிக்குமார். இந்த முதுமலை காட்டுல ஒரு கொடிய மிருகம் துரத்துனா எப்படி தப்பிக்கனும் கட்டுரை எழுதி காட்டப்போறேனு ஒரு பேட்டி கொடுத்திருக்க வேண்டியது. நல்ல வேல அந்த யானை ஒரு பயந்தாங்கொளி யானை போல..கதவைத் தட்டுனதுக்குப் போயிருச்சு. 

டிரைவருக்குக் கைய கொடுத்துட்டு நகர்ந்தோம்.
வெளியே இதுபற்றி பேசிகிட்டே டீ சாப்டோம். அங்க இருந்த ஜீப் டிரைவர்ட்ட பேச்சு கொடுத்தோம். அந்தாளு சொன்னது அதுக்கு மேல அல்லைய பிடிச்சது.
ஜீப் ரைடுல வேற வேற டேரிஃப் வச்சிருக்காங்க.
நைட் ரைடு. அதாவது டூரிஸ்ட்களை இரவு காட்டுக்குள கூப்பிட்டு போறது. அனுமதி கிடையாதே...
குவார்ட்டர் கொடுத்து ஆள கரெக்ட் பண்ணிருவாங்களாம். இளைஞர்கள் வட இந்தியர்கள் வெளிநாட்டுக்காரைங்க நைட் ரைடு பிரியப்படுவாங்களாம்.
வனத்துறை காட்டுக்குள்ள போகாம இருக்க செக்யூரிட்டி போட்டுருக்கு. அவங்களுக்கு ஒரு க்வார்டர் கொடுத்து குடிமகனாக்கி உள்ள நுழைஞ்சிருவாங்களாம்.
அடுத்து பகல் ரைடு. அது நார்மல்.
அடுத்தது சேஸ் ரைடு.. அதாவது யானை ஒன்றை வம்பிழுத்து கோபப்படுத்தி விரட்டவைப்பாங்களாம்.
எப்படி கோபப்படுத்துவீங்க னு கேட்டேன்
யானை மேயும்போது பக்கத்துல ஜீப்ப  நிப்பாட்டி ஆஸ்ஸிலேட்டர அழுத்தி சத்தம் கொடுப்பாங்களாம்...
சத்தம் கொடுத்துட்டு டக்குனு வண்டிய ஆஃப் பண்ணவாங்களாம். அதூல யானை விரட்ட ஆரம்பிக்குமாம்.
உடனே வண்டிய ஸ்டார் பண்ணி வந்திருவாங்களாம்.
நான் கேட்டேன் வண்டி ஸ்டார்ட் ஆகலாட்டி...
அவ்வளவுதான் அவர் சொன்னார்...
அவ்வளவுதானா. 
ஆமாசார்...ஆனா அப்படி ஆக விடமாட்டோம்.
ஒரு யானை எப்ப விரட்டும்னு எங்களுக்குத் தெரியும் வால் ஆட்டுற யானை எப்ப வால நிப்பாட்டுதோ அப்ப அது ஓட தயார் ஆயிருச்சுனு அர்த்தம் நாங்க சுதாகரிப்பாயிருவோம்னார்.
கியர்லயே வச்சிருப்போம். பதட்டபடமாட்டோம்.
அப்படி லாக் ஆயிட்டா கூட கைட் வருவார். அவர் இறங்கி யானை முன்னாடி போய் நிண்டு யானைய திசை திருப்புவார். அதுக்குள ஸ்டார்ட் பண்ணி டூரிஸ்ட டிரைவர் காப்பாத்தனும்.
அப்ப அந்த கைட்....அவ்வளவுதானா...னு கேட்டேன்
சிரிச்சார்...
இல்ல சார் அவர் தப்பிச்சிருவார். அதுனாலதான் அதுல பாதி காசு அவங்களுக்கு...
இவ்வளவு கஷ்டப்பட்டு உயிரைப் பணயம் வைத்து அந்த வாயில்லா ஜீவனைக் கோபப்படுத்தாட்டி என்ன...
காடுகளைச் சுருக்கிட்டோம். நம்ம அதுக இருக்கிற பகுதிக்குள போறோம். அதான் அதுக நம்மள பாத்து கோபப்படுதுக. மிரளுதுக.
ஒரு யானை காட்டுக்குள போனா நம்மள விரட்டுறதுக்கு அதுக்கு நியாயமான காரணம் இருக்கு. ஒரு யானையின் கோபத்துகு முன்னாடி அதனுடைய பலத்துக்கு முன்னாடி நம்மளாம் ஒண்ணுமில்ல...
இதுலாம் கேட்ட பின்னாடி தெருல வர்ற கோயில் யானையோட கண்ணையும் வாலையும் பார்ப்பேன்.
இனி நீங்களும் பாருங்க சிவப்புக்கண்ணு...வால நிப்பாட்டிட்டா. ஓடிருங்க...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....