கானாகுமாரு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி டி.வி.எஸ் சேம்ப் கட்டுரை எழுதிருந்தேன்.
அதுல வந்த சில கதாபாத்திரங்களோட இன்னோரு அனுபவம்.

நான் கணேஷ் கணேஷ்குமார் அப்புறம் ராபர்ட் அண்ணன் பிரேம்னு படிப்பாளி. இவைங்களோட தான் அந்த அனுபவம்.

குறிப்பு மேலே கண்ட பயபுள்ளைக எல்லாம் இப்ப பத்தாம் வகுப்பு படிக்குதுக...ராபர்ட் அண்ணே மட்டும் பதினொண்ணு.

நான் கணேஷ் கணேஷ்குமார் எல்லாம் ஒரே இடத்தில் ட்யூஷன். அது எங்க னு அப்புறம் சொல்றேன்.

அதுக்கு முன்னாடி கணேஷயும் கணேஷ்குமாரையும் வேறுபடுத்திக்காட்ட கணேஷ்குமார கானாகுமாருனு கூப்பிடுவோம்...குழப்பாதுல..

ட்யூஷன் நல்லாத்தான் போனது.

ஒரு நாள் தான்//// ஒரே நாள் தான் ஒன்பதாம் வகுப்பு படிச்ச ஹெலன் குட்டைப் பாவாடை போட்டு வந்தது . அன்னைக்கு பிறந்த நாளாம்...சாக்லேட் கொடுத்தது.  நானும் கணேஷும் தின்னுட்டு பேப்பரை க் கீழ போட்டுட்டோம். இந்த பாழாப்போன கானாகுமார் மட்டும் அந்தப் பேப்பரைத் தனியா சட்டைப் பையில வச்சுக்கிட்டான்.
ஏ என்னடா....னு கேட்டேன்...
போ...மாப்ள....னு வெக்கப்படுறான் கானாகுமார். 
உண்மையிலையே
வெளங்கல..அவன் வெக்கப்பட்டது...

டே என்னடா...னு மறுபடியும் கேட்டேன்...
தெரியலையா அது வெக்கம்...னான் நம்ம க்ரியா ஊக்கி கணேஷ்...

கருமம்டா....என்னனு சொல்லித்தொல...
பழனி....(கொணட்டுறான்...)
ம்....
பழனி....(மறுபடியும் கொணட்டுறான்...)
டே...என்னடா....
தெரியலையா...அது வெக்கம்...னு மற்படியும் சீண்டுனான் கணேஷ்...
டே..நீ வேற்....அவன்என்ன னு சொல்லட்டும்...

மாப்ள....நான் ஹெலன லவ் பண்றேன்....னான் கானாகுமார்.

எனக்கு பக்குனு இருந்தது. இப்ப சொல்றேன்.
 ட்யூஷன் டீச்சர் எங்க அப்பா....
எங்க அப்பா ரொம்ப கண்டிப்பான ஆசிரியர். சில ஆண் நண்பர்கள்ட்ட கூட என்னைய அதிகம் சேர விடமாட்டாங்கனா பெண் தோழிகள கேக்கவே வேணாம். 
அந்த காலத்துல தூர்தர்ஷன்ல எதிரொலி வாசிக்கிற பொம்பளையவே கொஞ்சநேரம் உத்துப் பார்த்தா உத்துப்பார்த்தா என்னா உத்துப்பார்த்தா அந்தம்மாவ கொஞ்ச நேரம் காமிச்சாலே டிவிய ஆப் பண்றவங்க எங்க அப்பா...(யோசிச்சு பாக்கனும்..எதிரொலி ல வர்றவங்க....டூப் பே போடாம பாட்டி வேஷத்துக்கு நடிக்கலாம் அப்ப...அவங்களுக்கே அப்படினா...இப்ப...கேக்கவா வேணும்)

இந்த விஷயம் கேட்டதும் எனக்கு அல்லைய பிடிச்சது....

இதுக்கு கணேஷ் ஒரு ரியாக்ஷன் கொடுத்தான் பாருங்க.....
என்னது ஹெலன லவ் பண்றியா....அது பழனிய லவ் பண்ணலையா..னு ஒரு பிட்ட போட்டான்...

ஆனா கானாகுமார் ஒரு நல்லவன். நல்ல நண்பன். நம்பல...
நான் சொல்லிட்டேன் ...இது வேணாம் . அப்பாக்குத் தெரிஞ்சா என்னைய கொண்ணே போட்டுருவாங்க....( அட ஆமாங்க ...நான் கொஞ்சம் தயிர்சாதம் தான்...பேச்சும் எழுத்தும் தான் கிழி கிழி னு இருக்கும்....ஸ்கூலுலலாம் அட்டென்டண்ஸ் வாசிக்கும் போது வாத்தியார் கொஞ்சம் அழுத்தமா பல்ல்ழனிக்குகுமார் னு பேர வாசிச்சா கூட அடுத்த நாள் லீவு போட்டுறவன் நானு)

கானாகுமார் உறுதி கொடுத்தான்..ட்யூஷன்ல வச்சு ஹெலன்ட்ட பேசமாட்டேனு...அவன் கொடுத்தானு ன்றத விட நான் அழுது வாங்கிட்டேன்.

கானாகுமார் இருந்தது மேலப்பொன்னகரம் அஞ்சாவது தெரு. நாங்க எட்டாவது தெரு. நாங்கனா...நான் கணேஷ் அப்புறம் ஹெலன். ஹெலன் வீடு எங்க வீட்டுல இருந்து ஆறு வீடு தாண்டி.

ஹெலன் வீட்டுல இருந்து இரண்டு வீடு தாண்டி ராபர்ட் அண்ணன் வீடு. ராபர்ட்டும் ஹெலனும் ஒரே சர்ச். இது அப்படியே நிக்கட்டும்.

நான் சைக்கிளில் போறப்ப ராபர்ட்டும் அவர் நண்பர்களும் என்னையவே பார்த்தாங்க...நானும் பார்த்தேன்.
கொஞ்ச நாளாவே பாக்குறாங்க...
நான்  நல்லா பாத்தப்பின்னாடி தான் தெரியுது அவைங்க பாக்கல...முறைக்கிறானுகனு....ஏன்னு தெரியல...

ஒரு நாள் எனக்கு சந்தேகம். கணேஷுட்ட சொன்னேன்... 
அவைங்க இருக்கிறப்ப சைக்கிளில போடா ...அவைங்க பாக்குறாங்கைளா னு பாருனு...
அவன் போயிட்டு வந்து..இல்லடா அவைங்க உன்னைத்தான் பாப்பாய்ங்க போல...எதுக்கும் அங்குட்டு போகாத..கரண்ட் இல்லாத ப்ப அவனுக பாட்டுக்க கல்ல எடுத்து மண்டைய ஒடைச்சுட்டானுகனு வச்சுக்க.....அப்படி இப்படி னு ஒரு வயலன்ஸ் சீன்ன சைலண்டா சொன்னான். அவன் சொல்லச் சொல்ல தலையல இரத்தக்கறை யோட நான் ஓடுற காட்சி என் கண்ணுக்கு எனக்கே தெரியுது.
எட்டாவது தெரு முக்குல இருக்குற சதீஸ் புரோட்டா கடைக்கு போகனும்னா கூட ஏழாவது தெரு போயி சுத்தி தான் ரெண்டு நாள் போனேன்...

அப்ப ப்ரேம்னு ஒரு பையன் ட்யூஷன்ல படிச்சான்.நல்லா கருப்பா புஸுபுஸு னு அமுல்பேபி மாதிரி இருப்பான்.  அவனுக்கும் எனக்கும் ஒரு வாய்க்கால் தகராறு...என்னன்னா அவன் நல்லா படிப்பான். எங்கப்பாட்ட அவனுக்கு ரொம்ப நல்ல பேரு...
அவனைச் சொல்லித்தான் என்னைய வீட்டில் திட்டுவாங்க...
பழனி படிக்கலையா/// ப்ரேம பாரு...எப்படி படிக்கிறான்..

பழனி சேட்டை பண்ணாத...ப்ரேம பாரு எவ்வளவு அருமையா இருக்கிறான்...
பழனி இன்னுமா விளையாடுற...ப்ரேம பாரு எங்கயாவது விளையாடுறானானு...

இப்படி ப்ரேம்க்கு ஒரு ப்ரேம் போட்டு அதுல கத்தி எறியுற அளவுக்கு எனக்கு வெறி இருந்தது.
அவன் ராபர்ட் வீட்டுக்கு எதிர் வீடு...

அப்பத்தான் நம்ம க்ரியா ஊக்கி கணேஷ் ஒரு ஐடியா கொடுத்தான்.
எதுக்கும் அவனை இதுல கோர்த்துவிடுவோம் னு . நானும் சரினு அவன்ட கேட்டேன்
ப்ரேம்..உன் வீட்டு எதிர் ராபர்ட் அண்ணே எதுக்கு என்னையவே பாக்குறாப்ல.
அவனுக்குத் தெரியல....

ஆனா அடுத்தநாள் வில்லங்கம் வந்தது.

நம்ம புஜ்ஜுகுட்டி  ப்ரேம் அத அப்படியே ராபர்ட்ட கேட்டுருச்சு. அவைங்க டீம் ல இருந்து என்ட்ட பேச நாளைக்கு நைட் வரச்சொல்லிருக்கானுகளாம்.
நைட்டு ஏழரை மணிக்கு.
ராபர்ட் வீட்டுக்கிட்ட ஒரு போஸ்ட் லைட் லேம்ப் இருக்கு. அதுக்கு கீழ. ஒரு தண்ணி குழாய் இருக்கும். அங்க...ஏழரை மணிக்கு நீ போ பழனினான்..ப்ரேம்...

எப்போதுமே வாய்க்கா சண்டைக்கு இந்த மாதிரி குணச்சித்திரத்தை பக்கத்துல வச்சுக்கிறது ஒரு சேப்டி...
நீ வர்றீயா ப்ரேம்...னு கேட்டேன்.
நா படிக்கனும்....னான்...
நானும் ரவுடி தான் விஜய்சேதுபதி மாதிரி கையை முறுக்கி தலைக்குப் பின்னாடி வச்சு வானத்த பாத்து தலையை சாச்சு கண்ணை மூடுனேன்....
இப்ப என்ன பண்ணப்போற னு டைமிங்கா கேட்டான் கணேஷ்.

இருக்கிற பயத்துல என்ன பண்றதுனே தெரியல....வெளியே சொல்வோமா....சூனா....பாணா.....சொல்லிருவோமா....என்ன????

கணேஷ் ....நீ வா....நம்ம போலாம் னேன்...
ம்ஹீம்....நான் படிக்கனும் ....னு கொணட்டுனான் கணேஷ்...
ப்ரேம் மேல இருந்த கடுப்புல...நீ படிச்சு கிளிச்ச...வா..நைட்டு போலாம் னு சொல்லிட்டேன்.

அடுத்த நாள்...காலைல...கணேஷ் என் கூட ஸ்கூல்லுக்கு வர்றப்ப....நைட்டு எப்புடி போகப்போற னு கேட்டான்.

நல்லா கேளுங்க மக்கழே...
புத்திசாலித்தன்மாம்....அவர் வரலையாம் ...அத தெளிவா எப்படி போகப்போற னு ஒத்தையா கேக்குறாப்புல.....

சாய்ங்காலம்....
ட்யூஷன் க்ளாஸ்.

மணி ஆறரை...
விஷயத்தை யார்டயும் சொல்லல...ஏன்னா அடி வாங்குனா கூட கம்முனு அமுக்கிரலாம். ஆனா இந்த பயபுள்ளை கணேஷ நினைச்சாத்தான் அல்லைய பிடிக்குது. பயபுள்ள எல்லாத்துடயும் சொல்லிரும். குறிப்பா எங்க அண்ணன். அவன் மூலமா எங்கப்பா...எங்கம்மா..அவ்ளோதான்....கொண்றுவானுக...

பேசாம இருந்திருக்கலாம். புஜ்ஜுகுட்டி ப்ரேம பாத்தோமா சிரிச்சோமானு இருந்திருக்கலாம்.
இந்த கிர்யாஊக்கியோட பேச்ச கேட்டு ப்ரேம் ட் சொல்லி இப்ப அவனுக என்ன சொல்லப்போறானுகளோ...

எப்படா ஏழரை ஆகும்னு இருந்தது. பிரச்சினைகளைக் காக்க வச்சா டென்ஷன். வேகமா முடிச்சிரனும்னு இருந்தது.

மணி ஏழாச்சு.
வெளிய வந்து நானும் கணேஷும் ரிகர்சல் பார்த்து ப்ளான் போட்டோம்.

நீ ஏன் எங்கள முறைக்குற னு ஆரம்பிப்பானுக...அதான பிரச்சினை)

நீங்க கூடத்தான்  முறைச்சீங்க னு பதிலுக்கு கேளுனான் கணேஷ்...

நீ கூட வருவியா...
ம்ஹூம்...நான் படிக்கனூம்....

(ங்கொய்யாலே...இவன் வரமாட்டானாம் ..கேள்வி மட்டும் நான் கேக்கனுமாம்...)

ப்ளான் போட்டோம்.
நான் முன்னாடி போவேன்.

நான் நாலு அடி தாண்டி வர்றேன்...னான் கணேஷ்

ஏண்டா...

அவைங்க பாட்டுக்க உன்ன ரவுண்ட் கட்டி அடிக்க ஆரம்பிச்சாடாஙைனு வச்சுக்க ஓடி வந்து உங்க அப்பா அம்மாட்ட சொல்லிரேன்..

பயபுள்ள எப்புடி கோர்த்துவிடுதுனு...எனக்கு அவைங்கட்ட கூட அடி வாங்கிரலாம்...வீட்ல அடி வாங்கிரக்கூடாதுனு இருந்துச்சு..

டே ப்ளீஸ் வீட்ல சொல்லிராத
அப்ப உங்கண்ணேட்ட சொல்லவா
வேற வினைய வேணாம்...

ஆக மொத்தம் அவன் முடிவு பண்ணிட்டான் நான் அடி வாங்குவேனு...எனக்கே என் மேல கொஞ்சம் நம்பிக்கைதான்...நம்ம அடிவாங்கப்போறோம்னு...என்னயா கொடுமையா இருக்கு. ஒரு பொம்பளப்பிள்ளைய பார்த்துட்டு அடி வாங்குனா கூட பரவால....ஆம்பளைக்கு ஆம்பளைய முறைச்சு அடி வாங்குறதா...

மணி ஏழேஹால்.
நெருங்கிருச்சு.
ப்ளான் பண்ணிட்டோம்.

நான் மட்டும் தனியா போறேன்.
நீஏன் முறைக்குறனு கேட்டா நான் உங்கள பாத்தே பத்து வருஷமாச்சுனு பெர்ஃபாமன்ஸ் கொடுக்கனும்.
மீறி அடிச்சாஙைனா நாலு அடி தாண்டி நிக்குற கணேஷ் எங்களுக்கு எதிர்தாப்புல இருக்குற ஜெர்மானஸ் ஹோட்டல் ஓனர் வீட்டு நாய் மேல கல்ல விட்டு எறிஞ்சு அதக் குரைக்க விடனும். கூட்டத்த கூட்டிரனும். அதுல நான் எஸ்கேப் ஆகனும். இதான் எங்க ப்ளான்.

சிகரெட் அட்டைய அடுக்கி விளையாடுற சில்லாக்குக் கல் ஒண்ணு மார்பிள் கல். அத எடுத்து ட்ரவுசர் பாக்கெட்டுல வச்சுக்கிட்டேன். எவ்ளோ அடி வாங்குனாலும் ஒத்தை அடியாவது ராபர்ட்டுக்குத் தந்திரனும். அது என்னோட ப்ளான்.

மணி நெருங்கிருச்சு.
நாங்க நடக்க ஆரம்பிச்சோம்.
கொஞ்சம் கொஞ்சமா கணேஷ் பின்வாங்குனான்...

குரல் மட்டும் கேட்டுச்சு...

பழனி அவைங்கள ரவுண்ட் கட்ட விட்ராத

பய நம்மள எச்சரிக்கிறானா பயமுறுத்துறானானே தெரியல...
நாலு அடி னு சொன்னவன் பத்து பதினைஞ்சு அடி தாண்டி நிக்குறான் போல...

பாக்கெட்டுல மார்பிள் கல்ல சரி பண்ணிக்கிட்டேன். ராபர்ட் மூக்க உடைச்சிரனும்.

மணி ஏழரை...

அவைங்க சொன்ன போஸ்ட் லேம்ப்.
வந்துட்டேன்.
அவைங்கள காணாம்.
பின்னாடி கணேஷ பாத்தேன். எங்கேயோ நிண்டுகிட்டு கைய காமிக்குறான்.
ஆள் இல்லைல வான்றான்.
போயிரலாமா னு யோசிச்சேன். எதுக்கு பிரச்சினைய ஆற போட்டுட்டு முன்னாடி மூணு வுடு தாண்டி ராபர்ட் ஆட்களோட நிண்டான்.
ஜெர்மான்ஸ் வீட்டு நாய் படுத்திருக்கு. 

நானே போனேன்.
அவைங்க நாலு பேரு.
நான் போனதும் ராபர்ட் பக்கத்துல ஒருத்தன் நிண்டுகிட்டான். 
என் இடப்பக்கம் ஒரு தடியன்.
வலப்பக்கம் ஒரு நெட்டையன்.
ராபர்ட் மூக்க எட்டி குத்துற தூரம் நான் நிக்குறது.
குத்துறதுக்கு முன்னாடியே அவன் மூக்கு நல்லா பொடைச்சுக்கிட்டுதான் இருந்தது.

தெரு ல நடமாட்டமும் குறைவு.
கயல் பேக்கரிகாரைங்களோட தள்ளுவண்டி மட்டும் வருது. உள்ளுக்குள மெழுகுவர்த்தி எரிய தேங்காபன் விப்பாஙைக...
அந்த தள்ளுவண்டிகாரன் கட்டையால தட்டிக்கிட்டே வர்றான்


இப்ப எங்க மீட்டிங்...

என்னைய பாக்கனும்னு சொன்னீங்களாமே...
கேட்டதும் என் வலப்பக்கம் இருந்தவன் எனக்கு சைடுல நிண்டான். கிட்டத்தட்ட ரவுண்ட் கட்டுறானுக...எனக்கு கணேஷ் சொன்னது நியாபகம் வந்தது.

ஆமா....நீ தான பழனி...னான் ராபர்ட்.
(ஆஹா...பேருலாம் கரெக்டா விசாரிச்சிருக்கானுகளே)
ஆமா...பலனிக்குமார்...(டென்ஷன் ல " ழ"கரம் வரல...)

நீ ஹெலன பாக்குறீயா....(பாக்குறீயானா சைட் அடிக்கிறாயா னு அர்த்தம்)
ஹெலனையா...இல்லையே....
சரி...நான் ஹெலன பாக்குறேன்...னான் ராபர்ட்..
(எனக்குக் கிட்டத்தட்ட புரிஞ்சுபோச்சு....அவைங்க நான் ஹெலன நான் பாக்குறேனு நினைச்சுட்டானுக போல...அப்பாடா...இப்பத்தான் மூச்சே விட்டேன்)

அதுக்கு என்னைய எதுக்கு வரச்சொன்னீங்க...
நீ பாக்காத...
நான் பாக்கல...
உன் ஃப்ரண்ட் பாக்குறானாமே...
ஆமா...
அவன பாக்க வேணாம் னு சொல்லுனான் இடப்பக்கம் இருந்த தடியன்.
அதை நான் சொல்லவா..
ஏன் சொல்ல மாட்டியா...இது நெட்டையன்.
நான் ராபர்ட் அண்ணனைப் பார்த்தேன்...' அண்ணே ....நீங்க ஹெலன பாக்குறீங்க...அவனும் பாக்குறான்...ஹெலன் யார பாக்குதுனு பாருங்க...'

உன் ஃப்ரண்ட் பாத்தா நாங்க அவனை அடிப்போம்..னான் தடியன்.
(எனக்கு உள்ளுக்குள பயம்....காட்டிக்கல..)
அடிங்க...தாராளாமா...
நீ கேக்க கூடாது...இது ராபர்ட்.
கேக்க மாட்டேன்...ஆனா அவன் உங்கள அடிச்சா நீங்க என்ன கேக்ககூடாது.
ஒருத்தன் சிரிச்சான்..அவன் எங்கள...மூணு பேரும் சிரிச்சாங்க...
எனக்கு இப்ப தடியன் வயித்துலயே குத்தனும் னு இருந்தது.

உன் ஃப்ரண்ட சொல்லி பாத்து இருக்கச்சொல்லு...
பாக்கலாம் னேன்...

நகர்ந்தேன்...

கணேஷ காணாம்.
அங்க இருந்த கடைல பட்டாணி வாங்கி தின்னுட்டு இருக்கு பயபுள்ள.

என்னைப் பார்த்ததும் வந்தான்.
அடிக்கலையா னான்..
இல்ல
ஏன்
(இவன் ரொம்ப எதிர்பாக்குறான் போல...)
அப்புறம் எதுக்கு கூப்பிட்டானுக..
ஹெலன ராபர்ட் அண்ணே பாக்குறாராம்..
ஓஹோனானா...ட்விஸ்ட்யா....கானாகுமாரு காலியா... னு குதூகலிச்சான் கணேஷ்
சைக்கிள எடுத்து இதை உடனடியா கானாகுமார்ட்ட சொல்லனும்.
அவனை அவைங்க அடிச்சிரக்கூடாது னு நைட்டே சைக்கிள் எடுத்துட்டு கணேஷையும் கூப்பிட்டுகிட்டு கானாகுமார் வீட்டுக்குப் போனேன்.

விசயத்தைச் சொன்னேன்.
அவன் ஏன் என்ட சொல்லலனு கோபப்பட்டான்.
இதான் விசயம் னு தெரியாதுல...
நாளைக்கு நான் வறேன் எவனு அடையாளம் காட்டு அங்கேயே அவனை அடிக்கிறோம் னான் கானாகுமார்.

ஆத்தாடி....எனக்கு ஜிவ்வுனு ஏறிடுச்சு...விசயம் எங்கப்பா அம்மாக்கு தெரிஞ்சதுனா அடி வெளுத்துருவாங்க...வேணாம். பிரச்சினை வேணாம்...விடு னு கேட்டேன்.. நீ அவனை அடி..அவன் உன்னைய அடிக்கட்டும். ரெண்டு பேரும் ஹெலனை சைட் அடிங்க...விசயம் எதுவும் எங்க வீட்டுக்கு வரக்கூடாது. அப்புறம் எல்லாரும் என்னை அடிப்பாங்க...னு கிட்டத்தட்ட நான் புலம்பி
ஒரு மாத்ரி அவன அடக்கிட்டு வீட்டுக்கு நானும் கணேஷும் கிளம்புனோம்.

நாளைக்கு போயி ராபர்ட்ட அடிக்கப்போறீங்களா னு கேட்டான். கணேஷ்.
முதல்ல உன்னைய அடிக்கப்போறேன் சும்மா வா..
உங்கப்பாக்குத் தெரிஞ்சா உன்னைய அடிப்பாங்களா..
உனக்கு என்னடா எவனாவது அடி வாங்கனுமா...அவன் மண்டைலயே நாலு போடு போட்டேன்...

அடுத்த நாள். லீவு.
காலைல எட்டு மணி...
கானாகுமார் சைக்கிள்ல முன்னாடி ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் னு டிரிப்ள்ஸ் அடிச்சிட்டு போனான்.

கணேஷ் வேகமா வந்தான். ஒரு வேள ராபர்ட்ட அடிச்சு அவங்க அப்பா அம்மா வந்து உங்க வீட்ல சண்டை போட்டா என்ன ஆகும் னு கேட்டான்.
மறுபடியும் அதே சீன் ஞாபகம் வந்தது. தலைல இரத்தக்கறையோட நான் தெருல ஓடுறது....என்ன ஒரு மாற்றம்னா அடிக்கிறது எங்க அப்பாவும் அம்மாவும்...ங்கொய்யாலே...நம்மள யாராவது அடிச்சா விஷ்வலைஸ் பண்றது அவ்வளவு ஈஸி னு கணேஷ் சொல்லச்சொன்னா அப்படியே நடக்குது.

அன்னைக்கு லீவு ன்றனால காலைல பத்து மணிக்கு ட்யூஷன். கானாகுமார் ராபர்ட் டையும் அவன் நண்பர்களையும் த்ன்னோட கம்மாக்கரை நண்பர்களோட போயி மிரட்டிட்டு வந்தான்.

பிரச்சினை எதுவும் வராதுல னு கேட்டேன்..
வராதுனான்.
எதிர்த்தாப்புல ஹெலன் ஒண்ணுமே தெரியாம படிச்சிட்டு இருந்துச்சு.
நான் கானாகுமார பார்த்தேன். அவன் அவளைப் பார்த்துட்டு குனிஞ்சு படிக்க ஆரம்பிச்சான்.
ஹெலன் மெல்ல என்னைப் பார்த்து நானும் அதுவும்  ஒரே கலர்ல ட்ரஸ் போட்டுருக்கோம்...ஸ்வீட் வேணும் னு சைகைல கேட்டுச்சு....

கணேஷ் பாகைமானி வச்சு முக்கோணம் வரைஞ்சுட்டு இருந்தான்...






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....