யூ.பி சார்

அவர் பெயர் U. பாலசுப்பிரமணியம். நாங்கள் செல்லமாக யூ.பி என அழைப்போம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அந்த நிறுவனத்தில் மருநது விற்பனை பிரதிநிதியாகச் சேர்ந்தபோது அவர்தான் ஏரியா மேனேஜர். அதற்கு முன் நான் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்தபோதுகூட இப்படிப்பட்டவர் மாதிரி ஏரியாமேனேஜர் வரமாட்டாரா என ஏங்கி பிறகு அவரே எனக்கு மேனேஜரா விதி போட்ட தாய நகர்வுகளில் அதுவும் ஒன்று.
மெடிக்கல் ரெப்பாக தொழிலை வேறு இடத்தில் கற்றுவந்திருந்தாலும் இவருடன் பணிபுரிந்த போது நான் கற்றுகொண்டது ஏராளம்.

மதுரைல ஆயிரம் ரெப் இருக்கான் பழனி. அம்புட்டு பேரும் உன் மருந்த விப்பான்.எல்லாப் பயலும் நீ பாக்குற டாக்டர பார்ப்பான். அதுல நீ அந்த டாக்டர எழுத வைக்கனும். நம்ம ஏன் பழனிக்கு எழுதக்கூடாதுனு டாக்டர யோசிக்க வச்சுட்ட நீ உண்மையான மார்க்கெட்டிங் ஆளு பழனி . இந்த வாசகத்தை நான் பதவி உயர்வு பெற்று ஏரியா மேனேஜர் ஆனபிறகு என் ரெப்களுக்கு ட்ரான்ஸ்ஃபார்ம் செய்திருக்கிறேன்.

அந்தளவு அவரது வார்த்தை எனக்கு ஓர் உபதேசம்.

எப்பொழுது அழைத்தாலும் சொல்லுங்க பழனி என்ற காந்தத்தொனியில் சொல்வார்.

மருத்துவருடன் அவர் பேசும்பொழுது அவரது லாவகம் உடல்மொழி வார்த்தைஜாலம் அனைத்தும் அவ்வளவு வசீகரம். அவருடைய மகன் வயது எங்களுக்கு. இருந்தாலும் எங்கள் வயதுக்கேற்ற அத்தனை அம்சங்களிலும் அவர் கலந்து விளையாடி பயின்று பயிற்றுவித்து தன்னை நிரூபித்தவர்.

ஒரு மெடிக்கல்ரெப்பிற்கு மாதக்கடைசியில் இருக்கும் டார்கெட் சம்பந்தமான பிரஷர்களை நான் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அனைத்தையும் அவருடன் நாங்கள் சிரித்தே தான் கடந்து வந்தோம்.

ஒரு மருத்துவரிடம் எப்படியாவது ஆர்டர் எடுக்கவேண்டும் என பிரஷ்ஷர் கொடுப்போம். அப்போது அவர் எனக்குச் சொன்னது. உனக்கு இருக்கும் ஆயிரம் பிரஷர்களை டாக்டர்ட்ட நீ காமிக்கக்கூடாது பழனி...ஆனா அவங்க அதை உணரனும்...

மார்க்கெட்டிங் துணுக்குகளை அவர் வாழ்வின் அத்தனை மூலைகளிலும் சொல்லிக்கொடுத்தார். அவர் ஜோனல் மேனஜராகவும் நான் ஏரியா மேனேஜராகவும் பொறுப்பேற்ற சமயத்தில் அவரது அணுகுமுறை அப்படியே இருந்தது. ஒரு முறை அவர் இப்படிச்சொன்னார் டெஸிக்னேஷன் இஸ் ஜஸ்ட் எ கார்ட் பழனி.
ஒரு கட்டத்தில் அவர் ராஜினாமா கொடுத்து வெளியே சென்றவர் மகன் மகள் திருமணம் முடிந்து ஓய்வு அறிவித்தார். இருந்தாலும் இன்றுவரை அவர் பெயரை அலைபேசியில் ஜோனல்மேனேஷர் என்று தான் வைத்திருக்கிறேன்.

மாதம் ஒரு முறை அவர் அல்லது நான் என அழைத்து பேசிக்கொள்வோம். சொல்லுங்க பழனி என்பார்
சார் உங்க ஸ்லாங்குக்கு நான் ரசிகன் னு  ஒரு முறை சொன்னேன்

அதற்கு

யோவ் டாக்டர்கட்ட அள்ளிப்போடுறமாதிரி என்கிட்ட அள்ளிப்போடாதய்யா.... என்றார்

அதான் யூ.பி சார்.

நாங்கள் புதிதாக வந்த குழந்தையின்மை சிகிச்சைமுறைக்கான மருந்து பற்றிப் பேசினோம்.
ஜெயலலிதா மரணம் பற்றி
அனுஷ்கா உடல் எடை பற்றி

எல்லாவற்றிலும் யூ.பி சார் அனேலிடிகல் ரிப்போர்ட்டாகப் பேசுவார். கடைசியாக மூன்று நாட்களுக்கு முன் கூட ஒபாமா பன்னீர்செல்வம் சசிகலா எனச் சிரித்துமுடித்தோம்.

இன்று இரவு அவருக்கு மாரடைப்பு எனவும் இருக்கிறாரா என்னத் தகவல் என ஒருவர் கேட்டார். பகீரென இருந்தது. அலைபேசிக்கு அடிக்க மனமில்லாமல் லேண்ட்லைன் அடித்தேன்.

நான் கேட்க ஆசைப்பட்டது சொல்லுங்க பழனி என்று.
ஒரு பெண் ஃபோனை எடுத்து அப்புறம் கூப்பிடுங்க என்று உடனை துண்டித்தார்.
ஒரு வேளை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருக்கலாம் என நம்பிக்கை இருந்தது.
மகன் அமெரிக்கா. மகள் சென்னை. மதுரையில் உதவிக்கு யார் இருப்பார் எனவும் எப்படி இருக்கிறார் எனவும் பதைத்தது.

அவரது அலைபேசிக்கு சார் எப்படி இருக்கிறார் என செய்தி அனுப்பினேன்.
ஐந்து நிமிடம் கழித்து ஃபோன் வருகிறது.

நான் பதிந்து வைத்திருந்த ஜோனல்மேனேஜரைப் பார்த்ததும் நிம்மதி.

சார் கூபுபிடுகிறார்.

சொல்லுங்க பழனி
கேட்பதற்காக ஆன் செய்கிறேன்.
அவரது மனைவி.
மேடம் சார் எப்படி இருக்கிறார்
இருக்கிறாரா..அவர் போயிட்டார்பழனி என்றது அந்தக் குரல்.
இந்த இரவைக் கடந்து நாளை காலை எனக்கு வாழ்வின் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்துவைத்த ஆசானை பயிற்றுவித்த ஒரு மேலாளரை பார்க்கச் செல்கிறேன்.

எதிர்பார்க்கவே முடியாதநேரத்தில் விதி போடும்  வலி மிகுந்த முடிச்சுகள் மாத்திரமே வாழ்வியலை நெரிக்கின்றன...

இனி அந்தக் காந்தத்தொனியில் நாளை யூ.பி அழைப்பாரா

சொல்லுங்க பழனி....

முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....