வினோத் மாமா....

நான் ஐந்தாவது ஆறாவது படிக்கும்பொழுது என் வீட்டில் அப்பா ட்யூஷன் எடுப்பார்கள். நிறைய அண்ணன்மார்கள் வந்து படிப்பார்கள். அப்பா வேலை பார்த்த பள்ளி ஒரு வசதியற்ற தாழ்வுநிலையில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்த பள்ளி. அப்பா அங்கு தமிழாசிரியர். ஆரம்பகால பணி நிமித்தம் காரணமாகவும் அனுபவம் காரணமாகவும் ஆங்கிலமும் கணிதமும் அப்பாவிற்கு அத்துபடி. அவரது பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையில் கணிதத்திற்கு அப்பாவே வகுப்பு எடுத்தார். மொத்தமே பத்து மாணவர்கள் படித்த பத்தாம் வகுப்பெல்லாம் உண்டு. சில சமயம் சந்தேகங்கள் இருந்தால் வீட்டிற்கு வாங்க என்று அழைத்து விடுவார். ஏழை மாணவர்கள் பணம் கொடுக்க வசதி இல்லை எனத் தயங்குவார்கள். அதையும் மீறி வந்து படி கொடுக்க வேண்டாம் எனலாம் நடக்கும்.  அதில் சில அண்ணன்மார்கள் எனக்கு மிகவும் ப்ரியம். இலவசமாக ஓர் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் வீட்டில் இருக்கும் குட்டிப்பையனை யாருக்குத்தான் பிடிக்காது. எனக்கு அப்பொழுது பொங்கல் வாழ்த்தாக  ராஜா சின்ன ரோஜா பணக்காரன் என ரஜினி படங்களை வாங்கி அப்பாவிடம் கொடுத்து அனுப்புவார்கள். அப்பொழுது எல்லாம் சைக்கிள் வாடகைக்கு எடுத்து பசங்க ஓட்டுவது வழக்கம். எனக்கு ஓட்டத்தெரியாது என்ற போது முருகேசன் அண்ணன் பாண்டித்துரை அண்ணன் இருவரும் தான் எனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லிக்கொடுத்தனர்.  இலவசமாகப் படிக்கிறோம் என  எனக்கு சைக்கிள் ஓட்டச்சொல்லித்தருவார்கள்.நான் சைக்கிள் ஓட்ட ,  பின்னாடியே ஓடி வருவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு முடிந்து மதியம் இப்படி நடக்கும். மதியம் ரொம்ப நேரம் ஆவதால் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு போகும்படி அப்பாவும் உத்தரவு போடுவார். .  ஒருமுறை மாம்பழத்தோடு சாப்பாடு. எனக்கு மாம்பழம் பிடிக்கும் எனச்சொல்லி , நான் முருகேசன் அண்ணன் சாப்பிடும் தட்டிலிருந்து மாம்பழக் கீற்றை எடுத்துச் சாப்பிட்டேன். அண்ணன் இடது கையால் என் கையை வாய்க்கு போக விடாமல் பிடித்துக்கொண்டார். விளையாட்டுக்கென நினைத்து நானும் குனிந்து மாம்பழத்துண்டை வாயில் போட்டுவிட்டேன். எங்க தட்டுல எல்லாம் சாப்பிடுவியா பழனினு முருகேசன் அண்ணன் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே தெரியவில்லை. ஆனால் அந்த கேள்வி உறுத்தியது. அதன் பின் ஒரு சாதிக்கான குற்ற உணர்ச்சியுடன் அண்ணன் கேட்டிருந்தது பிறகு தான் தெரிந்தது. இதைப் பார்த்த அப்பா, டேய், அதுலாம் இங்க கிடையாதுடா. ஆம்பள பொம்பள நல்லவன் கெட்டவன் இது தான்டா சாதி. நான் சொல்லிக்கொடுக்கிறதே அதான். புரியலையானு அப்பா கேட்டாங்க.
இப்படித்தான் முருகேசன் அண்ணன் பாண்டித்துரை அண்ணன் பூச்சி அண்ணன் எல்லோரும். முருகேசன் அண்ணனுக்கு கல்யாணம் நடந்த பொழுது கூட அப்பா தான் முன்னிலை வகித்தார். அவரை நான் அண்ணனாகத்தானே பார்த்தேன் பார்க்கிறேன். இப்பொழுதும் கூட முருகேசன் அண்ணன் பழக்கம். தொடர்பில் இருக்கிறார்.  ஒருவரை அவராகவே பார்ப்பது தான் வாழ்வியலின் அழகு. அது தான் மனிதம். அவர் யாரெனச் சொல்லக்கூட இந்தக் கட்டுரையில் அவரை அடையாளப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை தான்.
ஆனாலும் மனிதர்கள் அப்படிப்பார்ப்பதில்லை. எங்கள் தெருவில் எங்கள் பகுதியில் அயர்ன் பண்ண ஒரு வயதான ஒருவர் வருவார். காலையில் ஏழு மணிக்கு முன்னதாகவே வீட்டைத் தாண்டும் பொழுது எங்கள் வீட்டில் துணிகள் இருக்கின்றனவா எனக் கேட்டுவிடுவார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் தருவோம். அப்பா ஒரு படி எப்பொழுதும் மேல். துணிகளைக் கொடுக்கும்பொழுதே அதற்கானக் காசையும் கணக்குப் பண்ணி கொடுத்துவிடுவார். அந்த வயதானவர் அந்தக் காசில் தான் தனத் காலைத் தேனீரை எடுப்பார். சில நேரம் அவர் துணி தேய்க்க அப்பா அவர் அருகில் நின்றுகொண்டு அரசியல் விஷயங்கள் எல்லாம் பேசுவார். போக வரும் ஆட்கள் பார்ப்பது உண்டு. எதிர் வீட்டுக்காரர் கூட பார்ப்பார். எதிர்வீட்டுக்காரருடன் நாங்கள் முகம் பார்ப்பதோடு சரி. பேசுவது கிடையாது. ஆனால் துணி தேய்ப்பவருடன் பேசுகிறோம் என அவர்கள் பார்ப்பார்கள். எங்களுக்கு அதுலாம் இல்லை. ஒரு நாள் அவரது மகன் வந்து காலையில் நின்றார். அப்பாவிற்கு தீராத தலைவலி. என்ன வினோத் எனக் கேட்க , ஐயா , எங்க அப்பா தவறிட்டார் னு சொல்லிட்டு உங்கட்ட கொஞ்சம் நிண்டு பேசுவார் அதான் சொல்ல வந்தேனு சொல்லிட்டுப் போனார்.
அப்பா உடனே , நல்ல மனுஷனு அடுத்த தெருவின் முக்கில் இருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்த வீடு தேடி போய் வந்தார்.

கொஞ்ச நாளில் அவரது மகன் வினோத் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தார். இப்பொழுதும் துணியைக் கொடுக்கும்போதே காசே கொடுத்துவிடுவோம். எதிர் வீட்டில் குடியிருந்த ஒரு பெண் ஒரு துணிப்பையில் துணி கொண்டு வந்தது. இந்தாப்பா..நல்லா சுத்தமா இருந்து இந்தத் துணியெல்லாம் தேய். தேச்சுட்டு இந்தப்பைலயே வச்சிரு. வீட்டுக்கு வந்து கொடு. வெளில நிண்டு கூப்பிடு வந்து வாங்கிக்கிரேனு சொல்ல.. சரிங்கமா என வினோத்தும் சொல்லி அப்படித்தான் கொடுத்தார் . அதையும் பார்த்தேன்.

மூன்று வயது ஆகும் என் அண்ணன் பையன் சுதர்ஷன் இப்பொழுது எல்லாம் காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறான். வினோத் வாசலில் நின்று ஐயா என அழைக்கும்பொழுது சுதர்ஷன் மாமா என அவரைப் பார்த்துச் சிரித்து, வினோத்துடன் ஏதோ பேசுவான். காசை அவன் தாத்தாவிடம் இருந்து வாங்கி வினோத் கையில் மாமா எனக்கூப்பிடுத் தருகிறான்.  இப்பொழுது என் மகளும் அவரைப் பார்த்து மாமா எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

ஒரு முறை எங்கள் பகுதியில் ஒரு டீக்கடையில் கைலியை ஏத்திக்கட்டி நண்பர்களுடன் வினோத் பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் கைலியை இறக்கிவிட்டு சிரித்தார். வினோத் வாங்க ஒரு டீ சாப்பிடலாம் என அழைத்தேன். வினோத் சிரித்தது இன்னும் என் கண்ணில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தச்சிரிப்பையோ அல்லது அவருக்குள் இருக்கும் பாகுபாடு பற்றியோ எந்தச் சிந்தனையும் இன்றி தான் அவரை டீ சாப்பிடுவோமா எனக் கூப்பிட்டேன். அவர் சிரித்த பின்னாடி தான் அவர் சந்தித்த தாழ்வுமனப்பாண்மைக்கானக் காரணம் தெரிந்தது..

மனிதர்கள் மனிதர்கள் தான். எப்பொழுது அம்பேத்காரையும் காமராசரையும் பசும்பொன் முத்துராமலிங்கத்தையும் வ.உ.சியையும் தேசத்தலைவராக மட்டும் பார்க்க மக்கள் தயாராகின்றனரோ அன்று தான் சமத்துவச் சுதந்திரம் கிடைக்கும். தலைவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் படி அவர்களைச் சாதிச் சாக்கடையில் தள்ளுவது கொடூரம்.

மனிதன் பிறக்கையிலும் சாவிலும்  மனிதன் தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....