M.I பீரியட்

சும்மா எப்ப பாரு நச்சுநச்சுனு இருக்கானுக. இவனுகளா விருது தரானுக...அத ஒரு க்ரூப் திட்டுது. இன்னொரு க்ரூப் புரோமோ பண்ணுது. வெளிய வந்தாலும் வெக்கை. உள்ள வந்தாலும் வெக்கை. ச்சை...ஊராயா இதுனு காந்தி மியூசியம் ரோட்டுல மரத்தடில நிண்டு சர்பத் சோடா நல்லா சில்லுனு கடல் பாசி பெப்பர்லாம் போட்டு தருவார் ஒரு அண்ணேன். குடிச்சா ஜிவ்ஜிவ்வுனு இருக்கும். அப்படி இதமா எங்கயாவது போகனும். அட்லீஸ்ட் மன நிலையிலாவது அப்படி போயிரனும்.

பள்ளிக்கூடம் படிக்கிறப்ப காலை  ஆரம்பிக்கிறப்ப நல்லொழுக்கம் க்ளாஸ் இருக்கும். நான் படிச்சது புனித பிரித்தோ மேல்நிலைப்பள்ளி. இந்து முஸ்லீம் பசங்களுக்கு நல்லொழுக்கம் க்ளாஸும், கிறித்தவ மாணவர்களுக்கு கத்தோலிக்கக் கிறித்தவ க்ளாஸும் நடக்கும். பரீட்சைலாம் வைப்பானுக. மொக்க க்ளாஸ். என்னா பெரிய நல்லொழுக்கம் க்ளாஸ். படிச்சு ஒப்பிச்சு பாஸ் பண்ணுறதுதான..பண்ணியாச்சு. கிறித்தவ பசங்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையானு கேட்டீங்கனா நீங்க ஒரு ஆன்டி இந்தியன்.

அப்புறம் உடற்கல்வினு ஒரு வகுப்பு இருக்கும். எல்லாப் பசங்களும் சட்டைய கழட்டிட்டு ஸ்கூல் யூனிஃபார்ம் பனியனோட க்ரவுண்ட்டுக்கு போவோம். மூணு நாலு வகுப்பு பசங்க கிரவுண்ட்ல விளையாடுவானுக. ஒரு வகுப்பிற்கு நாற்பது பேர். கூட்டி கழிச்சு பாருங்க. இதுல கூத்து என்னானா குறைஞ்சது இரண்டு வகுப்பாவது ஃபுட்பால் விளையாடுவானுக. ஒன்பதாவது படிக்கிறப்ப நானும் என் நண்பன் பாலாவும் ஒரு நாள் சபதம் போட்டோம். எப்படியாவது ஃபுட்பால காலால தொட்டுறதுனு. பின்ன எங்க க்ளாஸ்ல நாப்பது பேரு. இரண்டா பிர்ச்சா ஒரு டீம்க்கு இருபது பேர்.  அதுல மூணு நாலு பேராவது சோளத்தட்டைய வச்சு கிரிக்கெட்டுனு பிரிஞ்சாலும் டீம்க்கு பதினைஞ்சு மிஞ்சும். இப்படி ஒரு நாள் நானும் பாலாவும் ஓடுறோம். பந்து எங்க காலுக்குச் சிக்கவே இல்லை. நாங்களும் பந்து பின்னாடியே ஓடுறோம். அந்த க்ரவுண்ட்ல நெருஞ்சி முள் அங்கங்க கிடக்கும். எனக்கு அது பயம். நான் கொஞ்சம் ஓரமா நிண்டு பாலாவே பாத்தேன். பயபுள்ள பந்தை தொட்டுருமோ..னு.. பாலா பந்த பாத்தே ஓடுறான். அதுக்குள்ள லட்சுமணன்னு ஒரு பையன் பந்தை ஓங்கி எத்துனான். பந்து தாவி தாவி நேரா வருது. எங்கடா வருதுனு பார்த்தா ங்கொய்யாலே எங்கிட்ட வருது. எனக்கு வர்றதுக்கு முன்னாடியே பீ.கே...இந்த பக்கம் பாஸ் பண்ணு..இந்தப் பக்கம் னு சவுண்ட் கொடுக்குறானுக...
இதுல ஒரு குறிப்பு. நான் எந்த டீம் ல இருக்கேனு எனக்கே தெரியல....சரி இப்ப பந்தை கவனிங்க...
அது பாட்டுக்க வேகமா வந்தது. எவன் பக்கம் எத்தனு எனக்கு டவுட். ஆனாலும் ஆபத்பாந்தவன் பந்து என்னைக் கைவிடவில்லை. மன்னிக்கவும். கால்விடவில்லை. ரொம்ப நல்ல பந்து. நான் கால ஓங்குறதுக்குள்ள என் காலுல பட்டு அதுவா இன்னொரு பக்கம் ஓடிருச்சு.

ஒருத்தன் என்ன பீ.கே அங்குட்டு எத்திட்டன்றான்..இன்னொருத்தன் கூட்டத்துக்குள்ள இருந்து சூப்பர் பீ.கே..ன்றான்.....
டே....நான் என்னடா பண்ணேன்....பந்து அதுவா என் காலுல பட்டு அதுவா போகுதுடானு சொல்லவா முடியும்..ஒரு மாதிரி கெத்தா முகத்த வச்சுக்கிட்டேன். வேகமா வந்தான் பாலா...என்ன பழனி எத்திட்டியா...னு கேட்டான்...

இயா..இட்ஸ் மீ...னு கெத்தா தலைய ஆட்டுனேன்.. ரோசப்பட்டு அவனும் வேகமா ஓடிப் போயி பந்த  தொட்டுட்டு ரொம்ப சந்தோசமா வந்தான்.

அடுத்து கிராஃப்ட் னு ஒரு வகுப்பு இருந்துச்சு. பள்ளிக்கூட ஓரமா ஒரு ஓட்டு வகுப்பறை. இன்னாசினு ஓர் உயர்ந்த மனுசன் தான் கிராஃப்ட் டீச்சர். ஒரு முழுநீளச் சட்டை. வேஷ்டி. ஒல்லியா இருப்பாப்புடி. நரைச்ச தலை. கை பட்டன போடவே மாட்டாரு. கிராஃப் நோட் னு ஒண்ணு வாங்குவோம். அந்த ஆளு சொல்ற மாதிரி கட்டம் போடுவோம். டபுள் கலரில் விட்டு விட்டு ஷேட் கொடுக்கச்சொல்வார்.  எதுக்கு கட்டம் போடுறோம். எதுக்கு கலர் அடிக்குறோம்னு இப்ப கேட்டாத் தெரியாதுனா பரவால..அப்ப கேட்டு இருந்தாக்கூட எனக்குத் தெரிஞ்சிருக்காது. இன்னாசி ஐயாட்ட இதுவரைக்கும் எவனும் டவுட்டுனு கேட்டதே இல்லை. ஏன்னா தட்டையா ஒரு கம்பு வச்சிருப்பார். மனுசன் அவர் உசரத்துக்கு நம்ம நடுமண்ட தான் ஃபோகஸா தெரியும் போல. நச்சுனு ஒண்ணு போடுவார். எவனும் எதுவும் கேக்க மாட்டான். அவர் கலர் அடிக்கச்சொல்வார். அடிப்போம். இல்லாட்டி அவர் அடிப்பார். அந்த  க்ளாஸ் ஜெயலலிதா செத்ததவிட மர்மமா நடக்கும்.

அடுத்து L.O.E னு ஒரு வகுப்பு. அதாவது லைஃப் ஓரியண்டல் எஜிகேஷன். வாழ்க்கைக் கல்வி. அந்த வகுப்பை ஆறாவதுலயும் ஏழாவதுலயும் என் சயின்ஸ் சாருக்குக் கொடுத்து அந்த வகுப்பைக் கதறக் கதறக் கற்பழிச்சுட்டானுக. நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்தாலும் அந்த பீரியட்ல என்னத்த நடத்துனானுகனே தெரியல. எல்லா வாத்தியாரும் வந்து அறிவியல் சமூக அறிவியல்னு நடத்துனதுதான் தெரிஞ்சது. யார் சிலபஸ் முடிக்கலையோ அந்த வாத்தியார் எல்.ஓ.ஈ பீரியட்ட ரேப் பண்ணிட்டு போயிர மாதிரி தான் இருக்கும். என்ன வாழ்க்கையோ..என்ன கல்வியோ...

இதே மாதிரி M.I இப்படி ஒரு பீரியட் உண்டு. அதாவது மாரல் இன்ஷ்ட்ரக்ஷன். இதை ஒன்பதாவது வகுப்பில் உறுப்படியா பயன்படுத்துனது அப்போது புதிதாய் சேர்ந்த அருள் னு ஒரு சார். டபுள் டெஸ்க் போட்டு நாலு வரிசையா இருக்கும் எங்க க்ளாஸ். ஒவ்வொரு க்ளாஸ்க்கு செயற்கைக்கோள்களோட பெயர். நானும் பாலாவும் இருக்குறது பாஸ்கரா ன்ற வரிசை. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டி. கை தட்டு பாராட்டுனு ஒரே குஷியா  இருக்கும். நாங்களே கணக்குப் பண்ணி யார் ஜெயிக்குறானு குறிப்போம். . அதுல காளீஸ்வரன் இருக்குற ஆரியபட்டாக்கும் நாங்க இருக்குற பாஸ்கராக்கும் போட்டி. ஒரு தலைப்பு கொடுத்து இரண்டு நிமிடம் ஆதரிச்சும் இரண்டு நிமிடம் எதிர்த்தும் பேசுற போட்டி. ஒருத்தர் தான் ஒவ்வொரு வரிசைக்கும். அதுல நான் ஜெயிக்க, அடுத்து தலைப்பு கொடுத்து பேசுறதுல பாலா பிச்சு உதறி தீப்பொறினு பட்டத்தோடு நாங்க ஜெயிச்சோம்.
இப்படி சந்தோசமா ஒன்பதாவது வகுப்ப முடிக்க பத்தாவது வகுப்பிற்கு M.I  பீரியட்டும் இப்படி ஓட்டிரலாமானு நினைக்க விழுந்தது ஆப்பு.

MI பீரியட்டுக்கு சுகுமாறன் ஐயாதான் வருவாருனு கேள்விபட்டோம்.
அவனவனுக்கு அள்ளைய பிடிச்சது.

ஏன்னா சுகுமாறன் ஐயா பத்தி சொல்லனும்னா, பள்ளிக்கூடமே பயப்படும். அவர் ஒரு தமிழ் ஆசிரியர். அதுனாலத்தான் ஐயா.
எல்லா தமிழ் ஐயாக்களும் வேஷிடி சகிதமா வர்றப்ப சுகுமாறன் ஐயா பேண்ட் போட்டு வருவார். அதிலயும் இன் பண்ணீ.  அதுவே பயம்.
அடுத்து எல்லா தமிழ் ஐயாக்களும் நடந்தோ இல்லாட்டி சைக்கிள்ல வர்ரப்ப சுகுமாறன் ஐயா புதுசா வந்த டிவிஎஸ் சேம்பில் வருவார்.
பயங்கரமா நடத்துவாராம். மார்க் வாங்கலாட்டி அடி வெளுத்துருவாராம் இது உபரி தகவல்.

எங்களுக்கு தமிழ் வகுப்பிற்கு வந்தவர்லாம் சூசை மாணிக்கம் ஐயா. பழக்கப்பட்ட பேய் மாதிரி. அவர் எடுக்குறதுக்கு எப்போதும் கான்ஃபிடண்டா தலைய ஆட்டுனா மட்டும் போதும். அவர் நம்மள தொந்தரவு செய்யமாட்டார். நடத்திட்டு போயிட்டே இருப்பார். கொஞ்சம் டவுட்டா தலைய ஆட்டுனா போதும் . என்ன பழனி புரியலையா னு மறுபடியும் நடத்துறேனு பேருல ரொம்ப சிரமப்படுவார். ஒரே கஷ்டம். அதுனால பரிட்சைக்கு பேனா ரெண்டு கொண்டு வா னு அவுட் ஆஃப் சிலபஸ் அடவைஸ் பண்ணாலும் அவருக்கு தலைய ஆட்டுனா போதும் . பச்ச மண்ணு எங்க தமிழ் அய்யா.

ஆனா இந்த சுகுமாறன் ஐயாக்கிட்ட இப்ப மாட்டிக்கிட்டோம். எனக்கு தனியா பயம்னா, என் கூட டபுள் டெஸ்க்ல உக்காருற பாலாவோட சேருறப்ப ரொம்ப பயம். பயபுள்ள அவன் பயத்தையும் எனக்கு ஒட்டி வச்சிரும்.

முதல் வகுப்பு. MI  பிரியட். கப்சிப் னு உட்கார்ந்திருக்கோம். சுகுமாறன் ஐயா வர்றார். கையில வண்டியோட கீ செயின். அப்புறம் ஒரு ஹேண்ட் பேக்  வச்சிருக்கார். சுகுமாறன் ஐயாவோட அடையாளத்துள ஒண்ணு அந்த ஹேண்ட் பேக். இன் பண்ணி வார் செப்பல் போட்டு இருக்கார். வந்து ஆசிரியருக்கான மேடைல நிக்குறாரு. நாங்க எந்திரிச்சு வணக்கம் ஐயானு சொல்றோம்.
வகுப்பே கப்சிப்.

ஐயா ஆரம்பிச்சாரு. இது என்ன பீரியட் டா...
கூட்டத்துல இருந்து ஒரு தைரியசாலி MI பீரியட் னான்.
எல்லார்ட்டயும் கையேடு இருக்கானு கேட்டார்.

டிஸ்கி. கையேடு னா ஹேண்ட் புக்.  அதைக் கொடுத்ததும் எப்பலாம் லீவு விடுறானுக எப்பலாம் பரீட்சை வைக்குறானுக. எந்த சனிக்கிழமைலாம் ஸ்கூல் னு பாக்குறதோட சரி. அது பாட்டுக்க டீஃபால்ட் செட்டிங்கா பைக்குள்ளேயே கடக்கும் . அடுத்த வகுப்பு போறப்ப இத தூக்கிப்போட்டு அடுத்த கையேட்ட வச்சுக்குவோம்.

ஆறாவது வகுப்புல இருந்து இருக்குற பழக்கத்துல சுகுமாறன் ஐயா கேட்டதும் அப்ப த்தான் எடுத்து காமிக்குறோம்.

அதுல இருக்குறதுலாம் படிச்சுட்டீங்களானு கேக்குறாரு.
படிக்குறதுக்கு என்ன இருக்குனு அப்பத்தான் திறந்து பார்த்தேன். உள்ளுக்குள்ள இறை வாழ்த்து தமிழ்த்தாய் வாழ்த்து தேசியகீதம் தாளாளர் தலைமை ஆசிரியர் உரை ஆண்டறிக்கை னு ஒரு பத்து பக்கத்துக்கு பிரிண்ட் அடிச்சிருக்கானுக.
நான் அத பார்த்ததே இல்ல.
சுகுமாறன் ஐயா அழுத்தமா மறுபடியும் கேட்டாரு படிச்சிருக்கீங்களாடானு

எதுக்கு வம்புனு படிக்கல னு தலைய ஆட்டுனேன்.
பக்கத்துல பாலா...பழனி படிக்க அதுல என்ன இருக்குனான்...

எனக்கு அப்பலாம் நீராருங்கடலுடுத்த க்கு அடுத்தே நொண்டும். இறைவாழ்த்து ஒவ்வொரு திங்கள் கிழமையும் அசெம்பிளில பாடுவானுக. கூட்டத்துக்க்குள நிண்டு கோவிந்தா போட்டுருவேன்.

பாலாக்கு கையேட்டை திறந்து காமிச்சு இதுலாம் தெரியுமா னு கேட்டேன்...'
இதுலாம் பரீட்சைல கேப்பாங்களானு கேட்டான்...
இங்க க்ளாஸே பாதி உசுருல சுகுமாறன் ஐயா முன்னாடி போராடிட்டு  கிடக்கு. இப்ப இவனுக்கு விளக்கத்த எப்படி சொல்ல..
நான் மெதுவா சொன்னேன்..பரீட்சைக்கு விடு...இந்தாளுக்கு என்ன சொல்லப்போற னு கேட்டேன்...

பழனி ஜன கன மனக்கு பின்னாடி தெரியாதுடானான்...

அப்பாடா நமக்கு கம்பெனிக்கு ஆள் இருக்குனு எனக்கொரு சந்தோசம். நாங்க தான் இப்படினு நினைச்சா க்ளாஸே அமைதியா இருக்கு. எல்லாம் முதல்ல கையேட்ட படிங்கடா..நான் கேள்வி கேப்பேன்னார்...

எல்லாம் படிக்க ஆரம்பிச்சோம். நான்லாம் வாய்விட்டு படிக்க ஆரம்பிச்சேன். மனசுக்குள்ள படிக்க மாட்டியோ ஒரு சவுண்ட் விட்டார் ஐயா. அவ்வளவுதான். பின் ட்ராப் சைலன்ஸ் ன்ற வார்த்தைய அப்பத்தான் கண்டுபிடிச்சிருப்பானுக னு நினைக்கிறேன்.
நல்ல வேல வாரத்துக்கு ஒரு வாட்டி தான் MI பீரியட்.
அடுத்த வாரம் சுகுமாறன் ஐயா வந்தார்.
அதே கேள்வி.
நாங்க இன்னும் படிக்கல.
நான் ஓரளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்த படிச்சு ஒப்பிச்சு பார்த்துத்தான் ஸ்கூலுக்கு வந்தேன்...

ஆனாலும் தேசிய கீதத்துல தப சுப நாமே ஜாஹே..தப சுப ஆசிஸ மாஹே வரி மட்டும் மிஸ் ஆயிருது இல்லாட்டி வேற ஏதாவது வரில கோர்த்துறேன்.
தாகூருக்கு அது பெரிய சத்தியசோதனை.

அதுக்கு அடுத்த வாரம்.
ஜன கன மன ஓரளவிற்கு வந்திருச்சு.
தாளாளர் உரை முழுக்க அட்வைஸ்... இடைல இடைல் பைபிள் வசனம். எவ்வளவு படிச்சும் மண்டைல ஒட்டல. ஒரு வாட்டி சர்ச் ல பாதிரியார் பேசுற மாத்ரி படிச்சுப் பார்த்தேன்.  " கண்மணிகள்ளே.....! நீர் படிக்கும் காலத்தில் உமது படிப்பில் மட்ட்டும் க்கவனம் செல்லுத்தும் கண்ண்ண்மணிகள்ளேஏஏஏ....(எப்படி படிக்கனும்னா பால்தினகரன இமிடேட் பண்ணனும்...ஆண்டவரே....வாரும்ம்யா...வந்து இவர்களின் கையேட்டில் இருப்பதை மண்ட்டையில் ஒட்டும்மய்ய்ய்ய்யாஆஆஆ....இப்படி படிச்சுப்பார்த்தா....ங்கொய்யாலே தாளாளர் உரை அப்படியே தான் இருக்கு..)
பாலா ட்ட அப்படி படிச்சுக் காமிச்சேன்....எங்க தாளாளர் ஒரு கிறித்தவ துறவி.
பாலா நான் நடிச்சு படிச்சுக் காமிச்சத கேட்டுட்டு....பழனி நம்ம தாளாளர் ஒரு பூசாரிடானான் பாருங்க...செம...
அதே தொணில தாளாளர் உரைய மனப்பாடம் பண்ணோம். சுகுமாறன் ஐயா மட்டும் அதை க் கேள்வியா கேட்டா நானும் பாலாவும் பிரசங்கமாத்தான் பதில் சொல்லிருப்போம்.

அதுக்கும் அடுத்த வாரம் கையேட்டுல பரிட்சை வச்சா நான் அத்துப்படி. தலைமைஆசிரியர் ஆ.யாகப்பன் சொல்ல மறந்த வரிலாம் பிடிச்சு வச்சிருந்தேன்.

அரைப் பரீட்சை வரைக்கு ம் நாங்க அந்த வகுப்புல கையேட்ட மட்டும் படிப்போம். படிக்குறப்ப சுகுமாறன் ஐயா முகத்தை நிமிர்ந்தே பாக்கமாட்டோம். அடிப்பாரோ னு பயம். கையேட்டை படிச்சு படிச்சு எனக்கும் பாலாக்கும் போரடிச்சிருச்சு. அப்பப்ப சுகுமாறன் ஐயாவ நிமிர்ந்து பார்த்தோம். ஐயா தலைய அப்பப்ப ஆட்டி அவரே ஏதோ பேசிக்குவாரு.

அரைப் பரிட்சைக்கு அடுத்த பீரியட் ல முடிவு பண்ணிட்டோம். சுகுமாறன் ஐயா வந்தார்.
கையேட்ட படிச்சீங்களானு கேட்டாரு.
படிச்சிட்டோம்னு கோரஸா கத்துனோம்.
அப்ப சரி..அமைதியா ஏதாவது வேலை இருந்தா ஹோம்வொர்க் இருந்தா எழுதுங்க இல்லாட்டி ஏதாச்சும் படிங்கனு சொல்லிட்டு அவர் பாட்டுக்க நாற்காலிலில உட்கார்ந்துட்டு தலைய தலைய ஆட்டிக்கிட்டாரு..

ங்கொய்யாலே..இதுக்குத்தான இவ்வளவு அக்கப்போரு...
நான் பாலாவ பார்த்தேன்.
பாலா என்னைய பார்த்து..பழனி தேசியகீதம் ஒப்பிக்கவா.னு கேட்டான்..

இதை முதலிலேயே சொல்லிருந்தா நம்ம பாட்டுக்க சயின்ஸ படிச்சிருப்போம்ல னு சொன்னேன்...

அவன் தேசிய கீதம் ஒப்பிக்கிறதுலயே குறியா இருந்தான்....

பீரியட் முடிஞ்சு வெளிய சுகுமாறன் ஐயா போனதுதான் தாமசம். அவனவன் ஐயாவ கழுவி கழுவி ஊத்துனான்...
அப்பக்கூட பாலா அப்பாவியா ஒரு கேள்வி கேட்டான் தேசியகீதம் பரீட்சைக்கு கேட்கமாட்டாங்களா பழனி....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....