ஹேப்பி தீவாளி.....

தீபாவளினு ஒண்ணு வந்தாலே எனக்குப் பல ஃப்ளாஷ்பேக் போயிருது.

சின்னப்பிள்ளைல தீபாவளினா புது ட்ரஸ், வெடி , ஸ்வீட். கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை சுட்டுத் தர்ற அப்பம். இதான் தீபாவளி.

அப்ப மதுரைல மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தோம்.

அங்க இருந்து க்ராஸ் ரோட்டுப்பக்கம் எங்கேயோ நடந்து ஒரு கல்லு சந்துக்குள்ள குடும்பத்தோட போவோம்.
அங்க தான் இருக்கும் வெங்கட் ராமன் கடை.
அந்தக் கடை பேரு வெங்கட் ராமனா இல்ல ஓனர் பேரு வெங்கட் ராமனா னு தெரியாது.
அது ஒரு பத்துக்கு பத்து இருக்குற ஒரு சின்ன ரூம் கடை.
கீழ தரைல பாய் விரிச்சிருப்பானுக.
கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வச்சுப் பார்த்தா அந்தக் கிழிஞச பாய்லாம் வருஷா வருஷம் நாங்க எடுக்குற துணில நல்ல பாய விரிச்சுட்டானுக.

துணியா எடுத்து வெளிய தைக்க கொடுப்போம்.
சட்டை டவுசர் தான்.
 எனக்குத் தெரிஞ்சு  அஞ்சாவது படிக்குறப்ப கூட படிச்ச பாலசுப்பிரமணியன் என்றவன் வெங்கட் ராமன் கடைலயா எடுக்குற...பாத்து டவுசர் கிழிஞிசுருமேடா.....கால தூக்கிறாத னான்.

முடிஞ்சது கதை.
சைக்கிள்ல டக் அடிச்சு உக்காந்ததுமே டக்குனு குனிஞ்சு பாத்துக்குவேன். அந்த தீபாவளிக்கு வெங்கட் ராமன் கடைனா வேணாம் னு சொல்லியிரலாம்னு பாத்தா....

எங்கப்பாவுக்கு அந்தக் கடைய நினைச்சாலே...' நம்பிக்கை, நாணயம், பாலு ஜூவல்லர்ஸ்னு ஒரு பட்டை போட்ட ஆசாமி சிரிச்ச விளம்பரம் மாதிரி ஒரு ரிங்க் டோன் கேக்கும் போல..." அந்தக் கடையோட அறிவிக்கப்படாத பிராண்ட் அம்பாசிடர் மாதிரி நல்ல தரமான கடைனு நிறைய பேருக்கு அட்ரஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. எனக்கென்னடானா அந்த பாலா சொன்னது தான் ஞாபகம் வந்தது. எத்தன தடவ தான் வாழ்க்கைல குனிஞ்சு பாக்குறதுனு..வீரமா ஒரு முடிவு எடுத்தேன். இந்தத் தீபாவளிக்கு வெங்கட் ராமன் கடைனா எனக்கு ட்ரஸே வேணாம்னு அழுதுரனும்னு...ரோசக்காரைங்க...வேற கடைக்கு கூப்பிட்டு போயிட்டாங்க..

அப்பத்தான் மதுரைல மிலன் னு ஒரு கடைய கண்ணுல காமிச்சானுக. ஒரு தடவை நல்லா ஞாபகம் இருக்கு அங்க ட்ரஸ் வாங்கி கொடுத்துட்டு இந்தவாட்டி கணக்குல நூத்துக்கு நூறு வாங்கல அடுத்த தீபாவளிக்கு ட்ரஸ் கிடையாதுனு ஒரு ரூல் போட்டாங்க. அப்புறம் வெளிய பொம்மைக்கு போட்டுருந்த பனியன் தான் வேணும்னு கேட்டா , அவன் அந்த பொம்மைய வாங்கி வச்ச விலையையும் சேர்த்து அந்த பனியனுக்கு போட்டான்.

எங்கம்மா க்ளோப் ஜாமூன் வாங்க வாங்குனு நெய், முறுக்கு போட வாங்குன திரிச்ச மாவு னு எப்படி போட்டாலும்
தீபாவளியோட மொத்த பட்ஜெட்டுலயே நம்ம பனியன் தான் டாப்.

தீபாவளி அன்னைக்கு ஒரு போட்டி இருக்கும். பக்கத்து வீட்டு கேங்கோவன் அண்ணனுக்கும் எங்க அண்ணனுக்கும். அதாவது முதல் வெடிய யார் வைக்குறதுனு. ரொம்ப நாளா கேங்கோவன் அண்ணன் தான் வைப்பாப்புடி. எனக்கு பத்தாவது படிக்குறப்பத் தான் கவனிச்சேன். ரெண்டு பயல்களும் சித்ரா ன்ற ஒரு பொண்ண கவர் பண்ண இத்தன வருஷம் அலப்பற பண்றானுகனு.

போனவருஷ தீபாவளிக்கு சித்ரா அக்கா காலங்காத்தால வச்ச வெடி வெடிச்சத விட போகுறப்ப கேங்கோ அண்ணன ஒரு பார்வை பார்த்துச்சே...அப்ப வெடிச்சது எங்க அண்ணனுக்கு வெடி.

காலைல எந்திரிச்சு குளிச்சு புது ட்ரஸ் போட்டு ஆறு மணிக்குலாம் கேங்கோ அண்ணன் பத்திய பொறுத்திருவாப்புடி.

அந்த தீபாவளிக்கு நம்ம களத்துல இறங்குனோம்.

என்ன டேஷ்க்கு குளிச்சு ட்ரஸ் போட்டு அப்புறம் வெடி.

அதுலயும் எங்க வீடு குளிச்சா சாமிய கும்பிடும்பாய்ங்க,

புசு ட்ரஸ்க்கு குங்குமத்த போடுவானுக, சந்தனத்தை தெளிப்பானுக..

டிஸ்கி: அதைப்  பாத்துட்டு ஃபாத்திமா ஒரு தடவை டிசைன் சூப்பர்னா.

அப்புறம் வெடியா வைக்கப் போற , இரு பத்திய காமினு சொல்வாங்க. ஒவ்வொரு தீபாவளிக்கும் வெடி எப்படி வெடிக்கனும்னு க்ளாஸ் நடக்கும். பத்த வச்ச பத்தி முழுசா காலியாகுற வரை க்ளாஸ் நடக்கும்...விட்டா கார்த்திகையே வந்திரும். அதுனாலத்தான் எங்கண்ணே லேட்டா வெடி வைக்குறான்.  கேங்கோ அண்ணே ஜெயிச்சுராப்புடி.

அந்த தீபாவளி காலைல எந்திரிச்சது அஞ்சரை மணி. ங்கொய்யாலே..எட்டாவது தெருல நம்ம வெடி தான் முத வெடி. சட்டை கூட போடல...
ஒரு அணு குண்டு பாக்கெட்ட எடுத்துட்டு வந்து முதல் அணு குண்டை வச்சேன்....கீழ் வீட்டு செண்பகம் அத்தை வெளி லைட்ட போட்டாங்க.

ரெண்டாவது குண்டு ...எதிர் வீட்டு சைமன் அண்ணன் அப்பா லைட்ட போட்டாரு. எவன் எந்திருச்சாலும் நம்ம டார்கெட் கேங்கோவன் அண்ணன் தான்.

மூணாவது குண்டுக்கு கேங்கோவன் அண்ணன் ஈரத்துண்டோட வந்தாப்புடி...

பழனி நீயா வெடி வச்சனு கேட்டாரு....
ஆமாண்ணே...
குளிச்சுட்டியா...
அண்ணே ...ஈரமாச்சுனா வெடி பதத்துருமேண்ணே....னு சொல்லிட்டு அடுத்த குண்டு...

அம்புட்டுத்தான்..போய் படுத்து தூங்கிட்டேன். எட்டு மணிக்கு எந்திரிச்சா சின்னப் பயல்க கேங்கோவனும் எங்க அண்ணனும் சரத்த வச்சுட்டு இருக்குதுக...

என்னதான் அணுகுண்டும் லெக்ஷ்மி வெடியும் பட்டைய கிளப்புனாலும், மதியம் நல்லா வெய்ய்ட்டா சாப்பிட்டு மூணு மணிக்கு அசருற நேரமா பார்த்து ஒரு சீனி வெடி பாக்கெட்ட எடுத்து டொப்ப் டொப்புனு வெடிக்குற சுகம் இருக்கே...காலைல ஆர்ப்பரிச்ச வெடிக்கும் நைட்டு வரப்போற ஆரவாரத்துக்கும் நடுல இருக்குற அந்த மூணு மணி தான் நம்ம டார்கெட்.

மாமா தூங்குறாருடா பழனி...அங்குட்டு போய் வெடி வெடிடா னு பதத்துப்போன குருவி வெடி மாதிரி ரஞ்சித அத்தை கேட்கும். அப்பத்தான் நமக்கு தீபாவளி வந்த ஃபீலிங்கே வரும்.

நம்ம வேற ரஜினி ரசிகன் வேறயா. மிஸ்டர் பாரத் ல நம்ம தலைவர் என் ட் ரி  மாதிரி வெடிய கையில பிடிச்சு தூக்கி எறிவோம். ஒன்ஸ் அப்பான் அ டைம் தீபாவளி அன்னைக்கு அதுக்கு முந்துன நாள் லாம் மழ பெய்யும். அப்படி தேங்கி இருக்குற தண்ணில கரெக்டா வெடிய வெடிக்குற டைம்ல போட்டா அது தண்ணில விழுகனும் ஆனா வெடிக்குற பதமா இருக்கனும்னு போடுவோம். தண்ணி அப்படியே தெளிக்கும். ஒருவாட்டி ஒரு பொம்பள போக நான் வெடிய போட தண்ணி தெளிக்க அந்தம்மா மேல தண்ணி தெளிச்சிருச்சு...அப்புறம் என்ன....அந்தம்மா வெடியா வெடிச்சுருச்சு...இதுலாம் பார்த்தா தீபாளி கொண்டாடமுடியுமா...போம்மா போம்மா னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு அடுத்த வெடி திரிய திருகுன பயலுக தான நம்ம....

வெடி வெடிக்குறதுல அப்பாக்கு இஷ்டம் இல்ல. காச கரியாக்குறதுக்கு நல்ல துணியா வாங்கு. நல்லா சாப்புடு. வெடி வேணுமானு கேட்டது தான் உச்சம்.
அதுக்குள்ள காலச்சக்கரம் தீபாவளி விசயத்துல ஹரி படம் மாதிரி வேகமா ஓட வெடிக்கானச் செலவு வீண்னு புரிஞ்சது. வேலைக்கு வந்தப்பின்னாடி நம்ம தீபாவளிய நம்மளே தான் செய்யனும்னு பழகிக்கிச்சு. அதுனால நம்ம வாழ்க்கை டிவில தீபாவளி சேனலுல வெடி இல்லாம ம்யூட் பட்டண அமுக்கியாச்சு.

காலேஜ் படிக்குறப்ப வெடிக்கானக் காசுக்கு கேட்க வெட்கப்பட்டது, வேலைக்கு வந்தப்பின்னாடி இருந்த கஷ்டம் , ஒரு கிராமமே பறவைகளுக்காக வெடி போடாம இருக்குறதுனு கேள்விபட்டது. எல்லாமே வெடிய நிப்பாட்டிருச்சு.

இப்பக்கூட வரி வெடிய ரெண்டு செரட்டாங்குச்சிக்கு நடுல வச்சு அதைத் தெறிக்க விட்ட அனுபவம் கையில இருக்கு. மிஞ்சிப்போன வெடிகள புல்லா ஒரு டப்பால போட்டு பேப்பர போட்டு அமுக்கி தீய பத்த வச்சா வெடிக்குற ஒவ்வொரு வெடி சத்தத்துலயும் அது எந்த வெடினு சொல்வோம்.

தீபாவளினா இப்ப வேடிக்கை பாக்குறது தான். போன தீபாவளிக்கு எங்க வீட்டு இடது வீட்டுப் பையனும் வலது வீட்டுல இருந்த பையனும் வெடி வச்சு ஒருத்தர ஒருத்தர பாத்துக்கிட்டாங்க.

பார்க்கலாம் .. இந்த தீபாவளிக்கு யாரோட வெடி முதல வெடிக்கும்னு...

நீங்களும் பாருங்க...உங்க தெருல ஒரு பால்ய பழனிக்குமார் அந்தத் தெருவோட முதல் வெடிய வச்சுட்டு சுத்தி சுத்தி பார்ப்பான்....அவன்ட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க...


ஹேப்பி தீபாவளி......


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....