பின்வரிசை மன்றாடல்

உங்கள் பின்வரிசையில்
இருப்பவருக்குத்
திரை சரியாகத்
தெரியவில்லை ..

உங்கள் பின்வரிசையில்
வருபவருக்கு
சாமி சிலை கூட
சரியாகத்
தெரியவில்லை தான்.

உங்கள் சாளரக்கதவை
மூடிய பிறகு
உங்கள் பின்னிருக்கைகாரருக்குக்
காற்று கூட
வரவில்லை தான்.

உங்கள் அமர்ந்துபோன
வண்டியை நகர்த்தாமல்
உங்கள் பின்னிருப்பவருக்கு
வழியில்லை தான்..

எப்பொழுதும் நீங்கள்
ஒதுங்கிக்கொள்ள
கேட்கப்படுகிறீர்கள்..

உங்களை ஒதுக்க
நீங்களே
எத்தனிக்கையில்
உங்கள் உயரமோ
உங்கள் ஆக்கிரமிப்போ
ஏதோ ஒன்றில்
தடுமாறி
திரும்பிப் பார்க்கிறீர்கள்....

அசாதாரணங்கள்
சூழ்ந்து நிற்கும்
உங்களின் பின்வரிசையில்
நெளிய நெளியக்
காத்திருக்கிறது
உங்களின் சாதாரணம்..

நீங்கள் எப்பொழுதும்
வளர்ந்துவிட்ட
ஒரு தடித்த
மரக்கிளையின்
தண்டைப் போல்
நிற்கிறீர்கள்..

பச்சையங்கள் அற்ற
வெற்று உலர்
பட்டைகளுடன்
நிமிர்ந்து நின்ற
உங்களுக்கு
ஒரு பின்வரிசை
தேவைப்படுகிறது
நீங்கள் கொஞ்சம்


துளிர்க்க...

பூக்கள் பூக்க
ஆரம்பிக்கும்
ஒரு தோட்டத்தில்
நிழல் கொண்டு
விரவும் மரங்களை
மன்றாட
முதல் பூ
தேவைப்படுதலைப் போல

ஒரு பின்வரிசையில்
உங்களுக்கென
ஒரு மன்றாடல்
மன்றாடப்படலாம்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....